புதுடில்லி, ஜன.4 கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்குகிறது.
இதுதொடர்பாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களது பணிகால ஊதிய இழப்பீட்டை கருத்தில் கொண்டு, ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதனால் குழந்தையை பிரசவிப்பதற்கு முன்பும், குழந்தையை பிரசவித்த பிறகும் போதிய காலத்துக்கு அவர்களால் ஓய்வு எடுக்க முடியும். கர்ப்ப காலம் மற்றும் குழந்தைக்கு முதல் 6 மாத காலம் பாலூட்டும் நேரத்தில் தனது உடல்நலத்தை தாய்மார்கள் மேம்படுத்திக் கொள்வதுடன், ஊட்டச் சத்தையும் அதிகரிக்க முடியும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் தவிர்த்து, அனைத்து கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் முதல் 2 பிரசவங்களுக்கு இந்த ஊக்கத் தொகையைப் பெறலாம். ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை, 3 பிரிவுகளாக கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களின் வங்கிக் கணக்கு அல்லது அஞ்சல் சேமிப்பு கணக்கில் அரசால் செலுத்தப்படும். அதாவது, கர்ப்ப காலத்தில் முதல் தொகையாக ரூ.3 ஆயிரமும், குழந்தை பிரசவித்த உடன் ரூ.1,500-ம், பிரசவத்துக்கு 3 காலத்துக்குப் பிறகு ரூ.1,500-ம் அளிக்கப்படும்.
இந்த ஊக்கத் தொகை ஆதார் எண் அடிப்படையில், அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இதனால் நாடு முழுவதும் ஆண்டுக்கு 51.70 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், மத்திய-மாநில அரசுகளின் கூட்டுத் திட்டமாகும்.
-விடுதலை,4.1.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக