பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஏப்ரல், 2025

10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்

 

விடுதலை நாளேடு

சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும் அனைத்து நிறுவ னங்களிலும் உள்ளக புகார் குழுக்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

உள்ளூர் புகார் குழுக்கள்

பெண்களின் பாதுகாப் புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மூலம் ‘உள்ளூர் புகார் குழு’ அமைக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற வற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன் புறுத்தல்களை தடுக்க ‘உள்ளக புகார் குழுக்கள்’ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இக்குழுவை குறைந்த பட்சம் 4 உறுப்பி னர்களை கொண்டு அமைக்க வேண்டும். அதில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நிறுவனங்களி லும் பெண்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும். புகார் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை

இந்த குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் புகார் குழுவை அமைக்காமல் இருந்தாலோ, புகாரின் அடிப்படையில் நடவ டிக்கை மேற்கொள்ளப் படாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழுவை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத் தியுள்ளார்.


புதன், 22 மார்ச், 2023

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தவறாம்!

 

சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு பிரத்யேகமாக 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2016ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதன்படி, 30 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். எஞ்சிய 70 விழுக்காடு இடங்களிலும் தகுதியான பெண்களை தேர்வு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம்: 

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப் படையிலேயே பெண்களுக்கு இடஒதுக் கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க அரச மைப்பு சட்டமும் வழிவகை செய்துள் ளது. எனவே, தமிழ்நாடு அரசு பணி யாளர் (பணி நிபந்தனை) சட்டத்தின்படி 30 விழுக்காடு இடங்களை பெண் களுக்கு ஒதுக்குவதில் எந்த தவறும் இல்லை. அது சட்டவிரோதமும் இல்லை.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.சிங்கார வேலன், நளினி சிதம்பரம், வழக்குரைஞர் தாட்சாயினி ரெட்டி:

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதனுடன் இந்த 30 விழுக்காடும் சேர்ந்தால், மொத்த இடஒதுக்கீடு 99 விழுக்காடு ஆகிவிடும். ‘இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரிதாக கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கலாம்’ என்று உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு கடந்த 1992ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த தீர்ப்புதான் தற்போதுவரை அமலில் உள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட் டில் நடைமுறையில் உள்ள சமூக ரீதி இடஒதுக்கீடான 69 விழுக்காடுத்தி லேயே, பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் வழங்க முடியும். ஆனால், இந்த இடஒதுக்கீட்டை தனி யாக வழங்க முடியாது. வேலைவாய்ப் பில், பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண் களுக்கு மெரிட் அடிப்படையில் 2 இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்றால், 30 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப் படையிலும் பெண்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கினால் மொத்தம் அவர்களுக்கு 4 இடங்கள் ஆகிவிடும். இது சட்ட விரோதம் என்பதால், 30 விழுக்காடு ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாதங்களை கேட்ட பிறகு நீதி பதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பு: ‘சமூக ரீதியான இடஒதுக்கீட்டுக்குள்தான் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை தாண்டி இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதற்கு எதிராக தமிழ்நாடு அரசும், டிஎன்பிஎஸ்சியும் பெண் களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது கெட்ட வாய்ப்பானது தவறானது.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முதலில் இந்த 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை பூர்த்தி செய்துவிட்டு, அதன் பிறகுசமூக ரீதியிலான இடஒதுக்கீட்டுக்குள் சென்றுள்ளது. இதனால்,அரசுத் துறை களில் ஏராளமான பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதே நேரம், தகுதியானவர்களுக்கான வேலை வாய்ப்பை ஒருபோதும் மறுக்க கூடாது.

முதலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நீங்கலாக உள்ள 31 விழுக்காடுபொது பிரிவில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த 69 விழுக்காட்டுக்குள்தான் பெண் களுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீடும் இருக்க வேண்டுமே தவிர, தனியாக கொடுக்க கூடாது.

30 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் இதுவரை பணியில் சேர்ந்த பெண்களின் பணி நியமனத்தை ரத்துசெய்ய விரும் பவில்லை. 

இனிமேல்,இடஒதுக்கீடு தொடர் பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நடைமுறையை பின்பற்றி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கேற்ப, திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கு களை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

அனைத்துத் தொழில் நிறுவனங்களில் இரவு நேர பணிகளில் பெண்கள் பணியாற்ற கருநாடகா அரசு அனுமதி

பெங்களூரு, நவ.21, இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் ஏராளமான அய்.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பெண் ஊழியர்கள் மீதான குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஆராய கருநாடக அரசு சட்டப்பேரவை கடந்த 2017ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இக்குழு அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரையில், கருநாடகாவில் உள்ள அய்.டி., நிறுவனங்களில் இனி பெண் ஊழியர்களுக்கு இரவுநேர பணி வழங்க  வேண்டாம் என தெரிவித்தது.
மேலும், அய்.டி. மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு காலை அல்லது மதிய பணியை வழங்கவும், ஆண் களுக்கு மட்டும் இரவுப் பணி வழங்கலாம் என்றும் பரிந்துரை  செய்தது.
அத்துடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றும் கருநாடக சட்டப்பேரவை குழுவின் அறிக் கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பெண் சிசு கொலை செய்யும் மருத்துவர்கள்,  செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கருநாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களில் இரவு நேரப்பணிகளில் (இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) பணிபுரிய பெண்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பிற நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் இரவு நேரப்பணிகளில் பெண்கள் பணியாற்ற அணுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கருநாடக மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அனைத்து தொழிற் சாலைகளிலும் இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான இரவு நேரப்பணிகளில் பெண்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்ததாவது,
தொழில் நிறுவனங்கள் அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளை பின்பற்றி தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை இரவு சிப்ட்களில் முழு நேரமாகவோ,  பகுதி நேரமாகவோ பணியமர்த்திக் கொள்ளலாம்.
ஆனால், பெண் ஊழியர்களை வற் புறுத்தி வலுக்கட்டாயமாக பணிபுரிய நிர்ப்பந்தப் படுத்தக் கூடாது.
இரவு சிப்ட்களில் பணிபுரிய விருப்பமுள்ள பெண் ஊழியர்களிடம் எழுத்துப் பூர்வமாக அனுமதி  பெற்ற பின்னரே அவர்களை இரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு 21 11 19

ஞாயிறு, 21 ஜூலை, 2019

கரும்புத் தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வுத்தகவலைக்கொண்டு, பிபிசி தமிழ் இணையம் பணிபுரியும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எடுத் துக்காட்டியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
சமீபத்திய மாதங்களில் பணிக்கு செல் லும் பெண்கள் மற்றும் மாதவிடாய் தொடர் பாக வந்த இரண்டு செய்திகள் நம்மை வருத்தமடைய செய்வதாக உள்ளன.
இந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் அதிகம் பேசப்படாத ஒரு விஷய மாகவே உள்ளது. மாதவிடாய் காலப் பெண் கள் அழுக்கானவர்களாகவே கருதப்படு கின்றனர். மேலும் சமுக மற்றும் சமய நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் தள்ளியே வைக்கப்படுகின்றனர்.
சமீப வருடங்களில் இந்த நடைமுறைகள் நகர்ப்புற படித்த பெண்களால் சற்று தளர்த் தப்பட்டு வருகிறது என்று சொல்லலாம்.
இருப்பினும் அந்த சமீபத்திய இரண்டு செய்திகள் மாதவிடாய் தொடர்பாக இந்தியாவில் நிலவும் பிரச்சினைக்குரிய சூழலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
பெரும்பாலான பெண்கள், குறிப்பாக கல்வி கற்காத ஏழை குடும்பத்து பெண்கள் தங்களின் உடல்நலத்திலும், வாழ்க்கை முறைகளிலும் நீங்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
முதலாவது, இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்களின் கருப்பைகளை அகற்றுகின்றனர் என இந்திய ஊடகங்களில் வந்த செய்தி.
அதில் பெரும்பாலானோர்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அவ்வா றான அறுவை சிகிச்சைகளை செய்திருக் கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மகாராட்டிரா வின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் மாவட்டத்தில் இருந்து பிழைப்பு தேடி கரும்பு பயிரிடும் பகுதியான மேற்கு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக் கான குடும்பங்கள் வருகின்றன. அந்த கரும்புத் தோட்டங்களில் ஆறுமாத காலம் தங்கி அறுவடை வேலைகளை அவர்கள் செய்வதற்காக அங்கு வருகின்றனர்.
அவர்கள் அங்கு பணிக்கு வந்ததும், பேராசை மிக்க ஒப்பந்தக்காரர்கள் அனைத்து விதமான சந்தர்ப்பங்களிலும் அவர்களிடமிருந்து அதிகப்படியான வேலைகளை வாங்கிக் கொள்கின்றனர்.
முதலில் இவர்கள் பெண்களை பணிக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஏனென் றால் கரும்பு வெட்டுதல் ஒரு கடினமான பணி. மேலும் மாதவிடாய் காரணங்களால் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் பணிக்கு வரமுடியாமல் போகலாம் என்பதும் அவர்களின் தயக்கத்துக்கு ஒரு காரணம். அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.
பணியிடங்களில் தங்கும் நிலை மிக மோசமான ஒன்று. கரும்புத் தோட்டங் களுக்கு அருகாமையில் கூடாரங்களிலோ அல்லது சிறிய குடிசைகளிலோ அவர்கள் வசிக்க வேண்டியுள்ளது. அங்கு கழிப் பறைகள் இருக்காது. கரும்பு அறுவடை சில நேரங்களில் இரவு நேரங்களில் கூட நடை பெறும். எனவே தூங்குவதற்கோ அல்லது தூக்கத்திலிருந்து எழுவதற்கோ குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அது மிகவும் கடினமான ஒரு காலமாக அமைந்துவிடும்.
எனவே மோசமான சுகாதார சூழலால் அங்குள்ள பெண்கள் பல நோய் தொற்று களுக்கு ஆளாகின்றனர். அந்த பகுதியில் பணிபுரியும் ஆர்வலர்கள், `மனசாட்சியற்ற` சில மருத்துவர்கள், மருந்துகளில் குண மடையக்கூடிய வகையில் உள்ள சிறிய பிரச்சினைகளுக்குக் கூட கருப்பையை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணமா னவர்கள். அவர்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்ளாக திருமணமாகி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளன. எனவே கருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் சரியாக விளக்காததால் அவர்கள் கருப் பையை எடுப்பது சரி என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள பல கிராமங்கள் `கருப்பையற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக` உள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக கடந்த மாதம் மகாராட்டிர மாநில சட்டசபை உறுப் பினர் நீலம் கோர்ஹே கேள்வி எழுப்பிய போது, "மூன்று வருடங்களில் பீட் மாவட்டத் தில் மட்டும் 4,605 கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன." என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏக்நாத் சிண்டே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது அனைத்தும் கரும்புத் தோட் டங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நடத்தப்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான பல வழக்குகள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பீட் மாவட்டத்தில் உள்ள வஞ்சர்வாடி கிராமத்திற்கு, என்னுடன் பணிபுரியும் பிபிசி மராத்தி சேவையை சேர்ந்த சக பத்திரிகையாளர், ப்ரஜக்தா துலப் பயணம் செய்தார். ஒவ்வொரு வருடமும் அக்டோ பரிலிருந்து மார்ச் மாதம் வரை 80 சதவீத கிராம மக்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அங்கிருந்து இடம் பெயர்வதாக அவர் தெரிவிக்கிறார்.
அந்த கிராமத்தில் உள்ள பாதி பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சையை செய்து கொண்டனர் என்றும் அதில் பலர் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும், இன்னும் சிலர் தங்களின் இருபதுகளில்தான் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறார் ப்ரஜக்தா.
பல பெண்கள் அந்த அறுவை சிகிச் சைக்கு பிறகு தங்களின் உடல்நலம் மேலும் மோசமடைந்துவிட்டதாக தெரிவிக்கின்ற னர். அதில் ஒரு பெண் இந்த அறுவை சிகிச்சையால் தனக்கு தொடர்ந்து முதுகு வலி, கழுத்து வலி மற்றும் முட்டி வலி ஏற் படுவதாக தெரிவித்தார். மேலும் காலையில் எழுந்தவுடன் தனது கைகள், முகம் மற்றும் பாதங்கள் வீங்கிவிடுவதாக அவர் தெரி வித்தார். மற்றொரு பெண் தனக்கு தொடர்ந்து மயக்க நிலை ஏற்படுவதாகவும், சிறிய தொலைவில் கூட நடந்து செல்ல முடியவில்லை என்றும் கூறுகிறார். எனவே இதன் காரணமாக இருவரும் இனி கரும்புத் தோட்டங்களில் அவர்களால் பணி புரிய இயலாது.
தேசிய மகளிர் ஆணையம், மகாராட்டி ராவில் நிலவும் நிலையை "பரிதாபகரமான மற்றும் மோசமான" ஒன்று என தெரிவித்து உள்ளது.
மேலும் இம்மாதிரியான "கொடுமைகள்" எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
பாலினங்களுக்கு ஏற்ற கொள்கைகளை கொண்டு உலகம் முழுவதும் பணியிடங் களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தருணத்தில் இந்த செய்திகள் வெளியாகி யுள்ளன.
- கீதா பாண்டே,
பிபிசி தமிழ் இணையம், 8.7.2019
-  விடுதலை ஞாயிறு மலர், 13.7.19

மாதவிடாய் விடுப்பை பறிக்கும் வலி மாத்திரைகள்

திருப்பூர் தொழிலாளர்களின் வேதனைக் குரல்
அகிலா இளஞ்செழியன்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டே பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக இயற்கையான உடல் உபாதைகள், மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது சமுகம் அவர்களை மனிதத் தன்மையுடன் அணுகாமல் வெறும் தொழிலாளியாக மட்டுமே அணுகுவதாக பணிபுரியும் பெண்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் பிபிசி தமிழ் இணையத்தில் வெளியாகியுள்ள தகவல் வருமாறு:
தமிழகத்தில் உள்ள சில ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அவர்களின் உடல்நலத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என கூறப்படுகிறது.
தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலைகள் குறிப்பாக நூற்பாலைகள் அதிகம். வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் வந்து தங்கி பணிபுரிகின்றனர், அதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலிக்காக வலி நிவாரண மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன.
மாதவிடாய் நாட்களில் விடுப்போ, ஓய்வோ எடுக்க வாய்ப்பு இல்லாததால், அந்த சமயங்களில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம், மில்லில் பணிபுரியும் பெண்களுக்கு பரவலாக இருக்கிறது. தகுதியான மருத்துவர்களின் அறிவுரையின்றி முறை யற்று வழங்கப்படும் இந்த மாத்திரைகளால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பல விதங்களில் பாதிக்கப்படுகிறது என தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் சில பெண்களிடம் பேசியது பிபிசி தமிழ். 26 வயதான ஜெனி, திண்டுக்கல் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். நூற்பாலையில் பணிபுரிகிறார். இவர், எனக்கு பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி வரும். எனவே, மாதவிடாய் ஏற்பட்ட உடனேயே மில்லில் வழங்கப்படும் மாத்திரை களை வாங்கி சாப்பிட்டு விடுவேன். வெளியில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை வாங்கியும் சாப்பிட்டுள்ளேன். ஆனால், மில்லில் வழங்கப்படும் மாத்திரைகள் போல அவை உடனடியாக வலி நிவாரணம் அளிக்காது.
"எனவே, மில்லில் தரப்படும் மாத்திரைகளைத்தான் அதிகம் சாப்பிடுவேன். இப்பொழுதெல்லாம் எனக்கு மாதவிடாய் நேரத்தில் இரத்தப்போக்கு மிகவும் குறைந்து விட்டது, வழக்கமாக மூன்று நாட்கள் இருக்கும், இப்பொழுது ஒரு நாளில் நின்று விடுகிறது. எனவே, இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு , மருத்துவர் அறிவுரையின் படி சிகிக்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன்" என்கிறார்.
"வயிற்றுவலிக்கு மில்லில் தரப்படும் மாத்திரைகள் மீது மேலுறை இருக்காது, அதனால் எங்களுக்கு பெயர் எல்லாம் தெரியாது. வேலைக்கு சென்ற பின்பு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் திரும்பி வீட்டிற்கு வர இயலாது. திரும்பினால், அன்றைய கூலி 300 ரூபாய் போய்விடும். ஓய்வு எடுக்கவும் வாய்ப்பில்லை. மெஷினை நிறுத்த முடியாது. அதனால் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு வேலையினை தொடரத்தான் முயற்சி செய்வேன்" என்கிறார் கமலஜோதி.
"என்னுடன் வேலை பார்க்கும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு ஏற் படுவது போன்ற சிக்கல்கள் உள்ளன, இந்த மாத்திரைகளால் தான் இந்த பிரச்சினைகள் வருகின்றனவா என்று எங்களுக்கு தெரியாது. இதனால் இருக் குமோ என்று பயமாக இருக்கின்றது. அதனால் நான் இப்பொழுது மாத் திரைகள் எடுப்பதை பெரும்பாலும் குறைத்துக் கொண்டேன்.
இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் இரத்தப்போக்கு குறைந்து விடுகிறது. பொதுவாக 3, 4 நாட்கள் இருக்கும் ரத்தப்போக்கு இரண்டு நாட்களில் நின்று விடும். என்னுடன் வேலை செய்யும் திருமணமாகாத இளம் பெண்கள் இந்த மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொள்கின்றனர், பின் விளைவுகள் குறித்து அவர்கள் சிந்திப்பது இல்லை, அப்போதைக்கு விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து விட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். வார விடுமுறை தவிர எல்லா நாள்களும் விடுப்பு எடுக்காமல் வந்தால் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்கும். ஊக்கத்தொகை, அன்றைய தினக்கூலி இரண்டையும் இழந்து விடக்கூடாது என்பதால் வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது" என்கிறார் அவர்.
இந்த சமயங்களில் ஓய்வு அளிப்பது போல் மாற்று ஏற்பாடுகள் கொண்டு வந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது குறையும் என்பது அவரது கருத்து.
வீட்டில் இருந்து வேலைக்கு செல்பவர்களை விடவும் விடுதியில் தங்கி இருப்பவர்கள் நிலை மோசம். அவர்கள் விடுமுறை எடுக்க வாய்ப்பே இல்லை என்பதால் இந்த சமயங்களில் கட்டாயமாக மாத்திரை களை எடுத்துக்கொள்கின்றனர். "இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்பொழுது சில நேரங்களில் நான்கைந்து மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில்லை. அய்ந்து மாதங்கள் கழித்து மாதவிலக்கு ஏற்படும் போது அதிக ரத்தப் போக்கும், தாங்கமுடியாத வலியும் வருகிறது. அதனால் பயந்துகொண்டு மாத்திரை வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். ஒரு நாள் விடுமுறை எல்லாம் வேண்டாம், வலி அதிகமாக இருக்கும் சமயங்களில் ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்தாலே போதும்" என்று கூறும் 21 வயதான விமலா, கடந்த மூன்று மாதங்களாகத்தான் தங்கள் மில்லில் மாத்திரைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்.
இதுகுறித்து பேசும் தமிழ்நாடு ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் திவ்யா, பல நாட்களாகவே மில்லில் இது போன்ற மாத்திரைகள் அளிக்கும் வழக்கம் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆனால், இப்பொழுதுதான் இதன் விளைவுகள் தெரிய வருகின்றன. மருந்துகள் வழங்கும் இடத்தில் மருந்து குறித்த அறிவுடையவர்கள் நியமிக்கப்படுவதில்லை. மேலும், மாத்திரைகளின்மீது பெயர் பொறித்த உறைகள் இல்லாமல் வெறும் மாத்திரைகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுமே தவறானது. அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் நேரத்து உடல் தொந்தரவுகள் வருவதில்லை. அப்படி பிரச்சினைகள் ஏற்படும் சில பெண்களுக்கு, ஷிப்ட் மாற்றி கொடுப்பது போன்ற மாற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததால் அவர்கள் மறைமுகமாக மாத்திரைகள் சாப்பிடும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.
ஓய்வோ, விடுமுறையோ கேட்கும் பொழுது மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு விட்டு வேலை பார்க்கலாம் என்றுதான் பெரும்பாலும் அவர்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது. எங்கள் சங்கச் செயலாளர், குழந்தைப் பேறு இல்லாத சிக்கலுக்காக மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார், அவர் அடிக்கடி மில்லில் வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரை களை எடுத்துக்கொண்டிருந்தவர். இப்பொழுது அதனால்தான் குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என்று பயப்படுகிறார். பெரும்பாலும் மில்லில் பணிபுரியும் பெண்கள் இரத்த சோகை, ஊட்டசத்துக் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இது போன்று தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மேலும் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்கிறார் அவர்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (Southern India Mills Association - SIMA) தலைவர் செல்வராஜிடம் இது பற்றிக் கேட்டபோது "மாதவிடாய் காலங்களில் பெண்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பது குறித்த உயர்நீதிமன்ற விதிமுறைகள் உள்ளன. தமிழக அரசு, அதிகாரிகளும் சைமா, டாஸ்மா போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து இதனை பணியாளர்களிடம் வலியுறுத்துகின்றனர். யாரும் அதனை மீற முடியாது. அவ்வாறு மீறி நடந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இவை நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படி இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரச்சினைகள் குறித்து எங்களிடம் பேச விரும்பினால், நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இந்த பிரச்சினைகள் குறித்த கட்டுரையினை வெளியிட்ட தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம், இந்த மாத் திரைகளை ஆய்வுக்குட்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இதில் பெயர்கள் குறிப்பிடாததால், ஆலைகளில் பணிபுரியும் பெண்கள் சிலரிடம் இருந்து மாத்திரைகளை வாங்கி ஆய்வு செய்த பொழுது இதில் NSAID வகையினை சார்ந்த ibuprofen போன்ற மூலக்கூறுகள் உள்ளதாக தெரியவந்துள்ளதாக இந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
ஸ்டிராய்டு அல்லாத வலிநிவாரண மாத்திரைகளான இவற்றை எடுத்துக் கொள்வதால் பெண்களுக்கு கருவுறுதலில் சிக்கல் வரையிலான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என, கோவையில் உள்ள மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் ரஜனியிடம் கேட்டது பிபிசி தமிழ். "வலி நிவாரணிகள் உட்கொள்வதால் நேரடியாக மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது எனக் கூற முடியாது. எந்த NSAID (ஸ்டிராய்ட் அல்லாத வலி நிவாரணி) எடுத்துக் கொண்டாலும் மாதவிடாய் உதிரப் போக்கு குறைய வாய்ப்புள்ளது" என்றார்.
"வலி வந்த பின்பு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் குறித்து பேசுகிறோம். முதலில் ஏன் வலி வருகிறது? இந்த மாதிரி பணிபுரியும் பெண்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். இதுவும் மாதவிடாய் நேரத்து வலிக்கு ஒரு காரணம். கோவையில் அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதில் பணிபுரியும் பெண்கள் சிகிக்சைக் காக அதிகம் வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் காலை உணவு உண்பதில்லை. ஒரு டீயும் சில பிஸ்கட்டுகளும்தான் இவர்களின் காலை உணவு. பிஸ்கட்டில் மைதாவும் சர்க்கரையும் உள்ளன. ஊட்டச் சத்து இல்லை. பணி புரியும் இடங்களில் நெருக்கடி, பொருளாதார சிக்கல்கள் என பல வாழ்வியல் அழுத்தங்களை இவர்கள் சந்திக்கின்றனர். இதுவே அவர்களின் பல உடலியல் சிக்கல்களுக்கு காரணமாகிறது.எனவே பெண்களின் சமுக, உளவியல் சிக்கல்களை புரிந்துகொண்டு இப்பிரச் சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கிறார் ரஜனி.
நன்றி:  பிபிசி தமிழ் இணையம், 9.7.2019


- விடுதலை நாளேடு, 11.7.19

செவ்வாய், 2 ஜூலை, 2019

பெண்கள் இரவுப் பணிக்கு செல்ல கோவா அரசு ஒப்புதல்

கோவா, ஜூன் 30  தொழிற் சாலைகளில் இரவு நேரங் களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத் துக்கு கோவா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் படும்.

இந்தச் சட்டத் திருத்தத்துக்கு இந்த வாரம் மாநில அமைச்சரவை ஒப் புதல் வழங்கியது. இதனை, பெண்கள் உரிமை ஆர்வலர்கள் வர வேற்றுள்ளனர். இதன்மூலம், கோவாவில் பெண்கள் அதிக எண்ணிக் கையிலான வேலைவாய்ப் புகளை பெற முடியும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 30. 6 .19

புதன், 31 அக்டோபர், 2018

முன்மாதிரி திட்டம் பெண் தொழிலாளர்கள் மதிப்பை உறுதிப்படுத்த உட்காரும் உரிமை-அவசர சட்டம் அமல்!

திருவனந்தபுரம், அக்.27- பெண் தொழிலாளிகளின் மதிப்பையும், பாதுகாப்பையும் உறுதிப் படுத்த உதவும் வகையில் கடைகள், வணிக நிறுவனங்களில் பணியிடங்களில் உட்காரும் உரிமை குறித்து கேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் நாட்டுக்கே மற்றுமொரு முன்மாதிரியாகி உள்ளது. இது தொடர்பான அவசரசட்டம் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலாகத் தொடங்கியுள்ளது.
1960ஆம் வருடத்திய கேரள கடைகளும் வணிக நிறுவனங்களும் சட்டத்தில் தொழி லாளிகளுக்கு சாதகமானதிருத்தங்கள் செய் வது தொடர்பான மசோதாவின் அவசர முக்கியத்துவம் கருதி ஆளுநர் இதுதொடர்பான அவசரசட்டத்தை பிறப்பித்துள்ளார்.
எல்டிஎப்அரசின்தொழிலாளர்நல நடவடிக்கைகளில் முக்கியமான மைல்கல் லாக இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந் துள்ளது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.வி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சட்டத் திருத்தத்தை உடனடியாக அமலாக்க தொழிலதிபர்களையும், இதுதொடர்பான உரிமைகளை உறுதிப்படுத்த தொழிலா ளிகளையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
துணிக்கடைகள், நகைக்கடைகள், உண வகங்கள் போன்ற வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்டோரின் நீண்டகால கோரிக்கை வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. பெண்களின் மரியா தையை உயர்த்தும் வகையில் அவர்கள் பணி யாற்றும் இடங்களில் பாலின சமத்துவம் கடைப்பிடிக்கப்படும் என எல்டிஎப் அரசின் தொழில் கொள்கையில் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் மாலையில் பணிமுடியும்வரை பெண் தொழிலாளர்களுக்கு உட்கார உரிமை இல்லாத நிலையே நீடித்து வந்தது. மிக கடினமான தொழில் சூழ்நிலையை அவர்கள் நேரிட்டு வந்தனர். பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்கவேண்டும் என பல்வேறு மய்யங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டக் களம் கண்டனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு சட்டப்பூர்வமாக இருப்பிடத்தை உரிமையாகமாற்றியிருக்கிறது.எல்டிஎப் அரசு. பத்தாயிரக்கணக்கான பெண் தொழி லாளர்களின் மரியாதையும், மனித உரிமை களும் பாதுகாக்கப்படும் முடிவை அரசு எடுத்துள்ளது.
சட்டத் திருத்தத்தில் வழிவகை
பணியிடங்களில் இருக்கை வழங்கப்படா தது குறித்து நீண்டகாலமாக புகார் இருந்து வந்தது. சட்டத்திருத்தத்தின்மூலம் இருக்கை அவர்களது உரிமையாக மாறிவிட்டது. மாலை ஏழு மணிமுதல் காலை ஆறு மணிவரை பெண்களை வேலை வாங்கக் கூடாது என்பதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு ஒன்பது மணிவரை வேலைசெய்யும் வகையில் பெண் தொழிலாளிகளை நியமனம் செய்ய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடுபோதுமானபாதுகாப்பு,குடி யிருக்கும் பகுதிக்கான பயண வசதி போன்ற வற்றை உறுதி செய்து ஒன்பது மணிவரை பெண்களை அவர்களது அனுமதியோடு பணிக்கு நியமனம்செய்யலாம். இரவு ஒன்பது மணிக்குமேல் 2 முதல் 5 பெண்கள் கொண்ட குழுவாக மட்டுமே பணிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். வாரத்தில் ஒருநாள் கடைகள் மூடப்பட வேண்டும் என்கிற நிபந்தனை கைவிடப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கவேண்டும் என்கிற நிபந் தனை சேர்க்கப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் உள்ளிட்டோர் எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் தொழிலாளி என்கிற வரையறைக்கு அவர்களை உட்படுத்த அரசுக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டமீறல்களுக்கான தண்டனை சட்டத்திருத்தத்தில் அதிகரிக்கப் பட்டுள்ளது.
சட்ட விதிகளை மீறும் தொழிலதிபர்களுக் கானஅபராதம்ஒவ்வொருபிரிவுக்கும்அய்ந் தாயிரம் ரூபாய் என்பதுஒரு லட்சம்ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்ட மீறலில் ஈடு படுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பதினாயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கேரள கடைகளும், வணிக நிறுவனங்களும் சட்டத்தின்படி நிறுவன உரிமையாளர்கள் பதிவேடுகளை மின்னணு வடிவத்தில் பரா மரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1960 இன்படி மூன்றரை லட்சம் நிறுவனங்கள் உள்ளதாகவரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 35 லட்சம் தொழிலாளர்கள் இந்த சட்டத்தின் வரம்புக்குள் வருவார்கள்.
- விடுதலை நாளேடு, 27.10.18