நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஜனவரி, 2026

ஓய்வூதியதாரர்களது குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50000 குறித்து புதிய அரசாணை

 சென்னை, டிச. 28– அரசு ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்கள் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு நிதித்துறை ஒரு முக்கியமான அரசாணை வெளி யிட்டு உள்ளது. ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund – FSF) வழங்கும் அதிகாரத்தை ஓய்வூதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓய்வூதியதாரர்கள் குடும்பங்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளது.

குடும்ப பாதுகாப்பு நிதி
என்றால் என்ன?

பொதுவாக தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund) என்ற திட்டத்தை செயலபடுத்தி வருகிறது. அதா வது ஓய்வூதியதாரர்கள் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத் துக்கு உடனடியாக நிதி உதவியா ரூபாய் 50,000 வழங்கப்படும். இதற்காக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மாதம் மாதம் ரூ.150 பங்களிப்பாக ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

குடும்ப பாதுகாப்பு நிதி பழையமுறை

இதில் சிக்கல் என்னவென்றால், ஒருவேளை ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, தமிழ்நாடு அரசு ஓய்வூதிய தாரர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ், இந்த பணம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட கருவூலங்கள் மற்றும் கணக்குகள் இயக்குநர், அந்த விண்ணப்பத்தை சென்னையில் இருக்கும் ஓய்வூதிய இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். அங்கிருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே நிதி உதவி கிடைக்கும்.

குடும்ப ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை

இதற்கு கால தாமதம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என தொடர்ந்து புகார்கள் ஓய்வூதியதாரர் குடும்பத்திடம் இருந்து  வந்தது. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், உடனடியாக அவர்களின் குடும்பத்துக்கு குடும்ப பாதுகாப்பு நிதி கிடைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை

இதைக்கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. புதிய அரசாணை G.O. 267 படி, இனி அலைச்சல் இருக்காது மற்றும் தாமதம் இருக்காது. ஓய்வூதியர் குடும்பத்துக்கு சரியான நேரத்தில் நிதி உதவி கிடைக்கும்.

குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் அதிகாரம்

அதாவது அரசாணையில், ‘இனிமேல் குடும்ப பாதுகாப்பு நிதி கோரிக்கைகள்’ அனைத்தும் சென்னைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த மாவட்டத்தில் செயல்படும்  சென்னை ஓய்வூதியப் பட்டுவாடா அதிகாரி (PPO), மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் துணைக் கருவூல அதிகாரிகளுக்கே இத் தொகையை வழங்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாநில ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நடைமுறை?

அதேநேரம் மாநிலத்திற்கு வெளியே ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் தொடர்பான குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்குவதற்கான தற்போதைய நடைமுறை, சென்னை கருவூலங்கள் மற்றும் கணக்குகள் இயக்குநர் அலுவலகத்தில் தொடர்ந்து பின் பற்றப்படும் என கூறப்பட்டு உள்ளது.

குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் நோக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு ஓய்வூ தியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதி யதாரர்கள் மற்றும் அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்குவதற்காக 01.01.1997 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் பங்களிப்பு எவ்வளவு?

முன்னதாக தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்திற்காக மாதந்தோறும் ரூ.20/- பங்களிப்பாக ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு 01.07.2021 முதல் மாதம் பிடித்தம் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டது.

குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியுதவி எவ்வளவு?

மாதந்தோறும் பிடித்தம் ரூ.20, ஒரு ஆண்டு பங்களித்த பிறகு ஓய்வூதியதாரர் இறந்தால் ரூ.25,000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. அதுவே  குடும்பப் பாதுகாப்பு நிதித் தொகை காலப்போக்கில் உயர்த்தப்பட்டு, ரூ.25,000/-லிருந்து ரூ.35,000/- ஆகவும், ரூ.35,000/-லிருந்து தற்போது ரூ.50,000/- ஆகவும் வழங்கப்படுகிறது.இத்தொகையைப் பெற, ஓய்வூதியதாரர் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இத்திட்டத்திற்குப் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு நிதி
யாருக்கு வழங்கப்படும்?

ஓய்வூதியதாரரின் வாழ்க் கைத் துணைக்கு (மனைவி/கணவர்) முன்னுரிமை வழங்கப்படும். வாழ்க்கைத் துணை உயிருடன் இல்லாத பட்சத்தில், ஓய்வூதியதாரரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு (Nominee) வழங்கப்படும். ஒருவேளை நாமினி பரிந்துரை செய்யப்படவில்லை எனில், அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

-விடுதலை நாளேடு,28.12.25

- விடுதலை

வியாழன், 15 மே, 2025

நீண்ட போராட்டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2999 கோடி அறிவிப்பு


விடுதலை நாளேடு


 சென்னை, மே.2- நீண்ட போராட் டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டம்

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிப்பதை உறுதி செய்யும் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வும், வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குடும்ப அட்டைக்கு, ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப் படும். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் 13.42 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 91 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

ரூ.336 கூலி

இந்த வேலைக்கு ஒரு நாள் கூலியாக ரூ.50-இல் தொடங்கி தற்போது ரூ.374 வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு இந்த தொகை மாறுபடுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஒரு நாள் கூலியாக ரூ.319 வழங்கப் பட்டு வந்த நிலையில் ரூ.17 உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரூ.336 ஆக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் பணியாற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத் துக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.

முதலமைச்சர் கடிதம்

இந்த திட்டத்துக்கான நிதி ஒன்றிய அரசால் முறையாக ஒதுக்கப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் குற்றம் சாட்டின.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருந் தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.இதுதவிர அமைச்சர் தங்கம் தென்னரசு, கனி மொழி எம்.பி. ஆகியோர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தும் பேசி னார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி.,

100 நாள் வேலை திட்டம் தொடர் பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். அதேபோன்று தி.மு.க. எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதே கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினர்.

ரூ.2,999 கோடி விடுவிப்பு

ஒன்றிய அரசு நிதி வழங்காத காரணத்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பல மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தாகவும், இதனால் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்தநிலையில் தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ரூ.2 ஆயிரத்து 999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெள்ளி, 31 மார்ச், 2023

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

 

புதுடில்லி, நவ.27 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டு பட்ஜெட் டில் ரூ.73 ஆயிரம்கோடி ஒதுக் கப்பட்டது. இந்த நிதி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியை இந்த மாத தொடக்கத்தில் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

இந்ததிட்டத் துக்கான ஊதியம் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்காக எப்போதெல்லாம் கூடுதல் நிதி தேவைப்படுகிறதோ, அப் போதெல்லாம் ஒன்றிய நிதிய மைச்சகத்தின் மூலம் தேவை யான நிதி பெறப்பட்டு வழங் கப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2020-2021ஆம் நிதியாண்டிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.61,500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில், பின் னர் ரூ.1,11 லட்சம் கோடியாக இந்த நிதி மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் நாடுகளின்

எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சென்னை, நவ.27 இந்திய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டுக்கொண்டு சான்றிதழ் பெற்றவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என பல நாடுகள் பச்சைக்கொடி காட்டி உள்ளன. இதுதொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் 15 நாடுகள் இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்து, இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்த நாடுகள் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பெலாரஸ், ஜார்ஜியா, ஈரான், கஜகஸ்தான், லெபனான், நேபாளம், நிகரகுவா, பிலிப்பைன்ஸ், சான்மெரினோ, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகும். இந்திய தடுப்பூசி சான்றிதழுடன் இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த 22 நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ்களை இந்தியாவும் அங்கீகரித்துள்ளது.

இந்த தகவல்களை ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.