கடை திறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடை திறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மே, 2022

இரவு நேரத்தில் செயல்படும் உணவகங்களை விரைவாக மூடும்படி கட்டாயப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரமில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

 

சென்னை, பிப்.24  இரவு நேர உணவகங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் விரைவாக மூடும் படி கட்டாயப்படுத்த காவல் துறையினருக்கு அதிகார மில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள இரவுநேர துரித உணவகத்தின் அன்றாடசெயல்பாடுகளில் காவல்துறையினர் குறுக்கிட்டு இடையூறு செய்வதாகவும், இது தங்களது அடிப்படை உரிமை யைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி அந்த உண வக உரிமையாளர் எஸ்.குண ராஜாஎன்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

அதில், கடந்த 11 ஆண்டு களாக இப்பகுதியில் இரவுநேர சைவ துரித உணவகம் நடத்தி வருகிறேன். ஆனால் கடந்த சில மாதங்களாக  காவல்துறையினர் இரவு 10.30 மணிக்குள் எனது உணவகத்தை மூடும்படி கட்டாயப்படுத்துகின்றனர். அதற்கு மேல் உணவகத்தை திறக்கக்கூடாது என கடுமை யான சொற்களால் வாடிக்கை யாளர்களின் முன்னிலையி லேயே எச்சரித்துசெல்கின் றனர். காவல்துறையினரின் தொந்தர வால் எனது வணிகம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனது கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் நள்ளிரவு நேரங்களில்தான் வருகின்றனர். எனவே அதிகாலை 1.30 மணி வரைஎனது கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக் கும்படி காவல்துறை உயரதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எனது இரவுநேரதுரித உணவகத்தை அதிகாலை வரை திறந்து வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கடையை மூடும்படி காவல்துறையினர் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக் குரைஞர் ராமும், அரசு தரப்பில் வழக்குரைஞர் எம்.ஷாஜகானும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அரசு தரப்பில் இரவு நேரங்களில் சட்டம் - ஒழுங்குபிரச்சினை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இரவு நேரங்களில் உணவகங்கள் உள் ளிட்ட கடைகளை விரைவாக மூடும்படி காவல்துறையினர் எச்சரித்து அறிவுறுத்துகின்றனர். இந்த உத்தரவும் வாய் மொழி யாகவே பிறப்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப் பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தடுத்து பொதுமக்களுக்கு உரிய பாது காப்பு அளிக்க வேண்டிய கட மையும், பொறுப்பும் காவல் துறையினருக்கு உள்ளது. ஆனால் அதையே காரணம் காட்டி இரவு நேரங்களில் உணவகம் நடத்தி பிழைப்பு நடத்தும் வியாபாரிகளை, கடையை மூடும்படி மிரட்டுவது ஏற்புடையதல்ல.

பொதுமக்கள் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை எந்நேரமும் சாப்பிட அவர் களுக்கு அரசமைப்பு சட்டப் பிரகாரம் பிரிவு 21-இன் கீழ் அடிப்படை உரிமை உள்ளது. எனவேஇரவு நேரங்களை மய்யமாக வைத்து வியாபாரம் செய்யும் உணவகங்களை விரை வாக மூடும்படி காவல்துறையினர் கட்டாயப்படுத்த முடி யாது. அவ்வாறு கட்டாயப் படுத்த காவல்துறையினருக்கு அதிகாரமில்லை.

ஏனெனில் சட்டப்பிரிவு 19(1)(ஜி) பிரகாரம் ஒருவருக்கு தனது கடையைத் திறந்து வைக்கும் சுதந்திரமும், அதை அணுகும் உரிமை பொதுமக்களுக்கும் உள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டப்படி உணவகங்கள் திறக்க வேண்டிய மற்றும் மூட வேண்டிய நேரத்தை காவல் துறையினர் தீர்மானிக்க முடி யாது. அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. அரசு அறிவிப்பின்படி உணவகங்கள் தொடர்ந்து செயல்பட எந்த தடையும் இல்லை.

இரவு நேரங்களில் பணிக்குச் செல்லும் தனியார் நிறுவன ஊழியர்கள், இரவு காவலர்கள், வாகனஓட்டிகளின் உணவுத் தேவையைபூர்த்தி செய்யவே இரவு நேரக்கடைகள் செயல் படுகின்றன.

சட்டம் - ஒழுங்கு பிரச்சி னையைக் காரணம் காட்டி அந்த உணவகங்களுக்கு காவல்துறையினர் தொந்தரவு செய்யக் கூடாது. அதேநேரம் இரவு நேர உணவகங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடை பெற்றால் காவல்துறையினர் உரிய நட வடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது. 

செவ்வாய், 10 டிசம்பர், 2019

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

அ.குமரேசன்

இரவிலும் தூங்கா நகரம் என்று முன்னொரு காலத்தில் பெயர் பெற்றிருந்தது மதுரை. மாலையில் கல்யாணம் நிச்சயித்து, இரவிலேயே அனைத்துப் பொருட்களும் வாங்கி, விடிகிறபோது திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என்பார்கள். அந்த அளவுக்குப் பல்வேறு வகைப்பட்ட பொருட்களை விற்கிற கடைகளில் வகைக்கு ஒரு கடையாக இரவில் திறந்திருக்கும். கடைக்காரர்கள் சுழற்சி முறையில் இரவில் மாறி மாறிக் கடை திறந்து வைப்பார்களாம். நகரின் மையப் பகுதியில் ஒரு மருந்துக் கடை ஆண்டு முழுக்க இரவில் திறந்திருக்கும். திடீர் மருந்துத் தேவை ஏற்படுகிறபோது அந்தக் கடைக்கு நம்பிச் செல்லலாம். இப்போதும் அந்தக் கடை அங்கே அதேபோல் செயல்படுகிறதா என்பது தெரியவில்லை.
வணிக வளாகங்கள், கடைகளை இனி 24 மணிநேரமும் திறந்து வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு ஏற்ப இதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செய்தியைப் பார்த்ததும் இந்த மதுரை அனுபவம் நினைவுக்கு வந்தது.
இனி இரவிலும் வணிக வளாகங்களில், கடைகளில் விற்பனை இருக்குமென்பதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுவார்கள், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், வணிகச் சுழற்சி விரிவடைவதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்று பல கோணங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
சிறிய கடைகளுக்கு அனுமதி இல்லை
அதே வேளையில் இதில் சில நிபந்தனைகளும் உள்ளன. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய கடைகள் மட்டுமே இரவில் திறந்திருக்க அனுமதிக்கப்படும். ஒரே ஒருவர் அல்லது இரண்டு பேர் இருக்கக்கூடிய கடைகளுக்கு இந்த அனுமதி கிடையாது. அதாவது சிறிய டீக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள், பெட்டிக் கடைகள், பழச்சாறு கடைகள், சிறு மருந்துக் கடைகள், சலவைக் கடைகள், மளிகைக் கடைகள், எழுதுபொருள் கடைகள் உள்ளிட்டவை பகலில் மட்டுமே இயங்க முடியும்.
தொழில் முறைகள், வேலைத் தன்மைகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியவை மாற்றமடைந்துள்ள சூழலில் வணிக ஏற்பாடுகள் மட்டும் மாறாமல் முன்போலவே இருக்க முடியாது. அந்த வகையில் கடைகளும் இதர வணிக வளாகங்களும் நாள் முழுக்கச் செயல்படுவது வரவேற்கத்தக்க மாற்றம்தான். ஆனால், சிறிய கடைகள் செயல்பட முடியாது என்கிறபோது, கார்ப்பரேட் குழுமங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் கிளைகள்தாம் எந்நேரமும் திறந்திருக்கும். இது படிப்படியாக சிறிய வணிகர்களின் வாழ்வாதாரம் அரிக்கப்படுவதில் போய் முடியும்.
இரவில் கடைகளைத் திறப்பது வணிகர்களைவிட, நள்ளிரவிலும் அதிகாலையிலும் வேலை முடித்து வீடு திரும்புகிறவர்களுக்கே கூடுதலாகப் பலனளிக்கும். மளிகைகள், ஆடைகள், காலணிகள், பயணப் பெட்டிகள், மருந்துகள், உணவு வகைகள், பல்வேறு நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நள்ளிரவிலும் கடைகளுக்குச் சென்று வாங்கிக்கொள்ள முடியும். அதிகாலை வண்டியில் ஊருக்குப் புறப்படுகிறவர்களின் அவசரத் தேவைகளை - அட ஒரு மொபைல் போன், சார்ஜர், பவர் பேங்க், இயர்போன் போன்றவை உட்பட - நிறைவேற்றிக்கொள்ள உதவும். இரவில் பல்வலி ஏற்பட்டுத் துடிப்பவர்கள், ஓர் உடனடி வலி நிவாரணி மாத்திரை வாங்குவதானால்கூட விடிந்து வெகுநேரம் கழித்துத்தான் மருந்துக் கடைகள் திறக்கும் என்ற நிலையில் கூடுதல் சோர்வுக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு இனி இரவிலேயே அந்த மாத்திரையை வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கையே பெரிய வலி போக்கியல்லவா?
ஆனால், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய கடை மூடியிருக்கும் என்பதால், 10 பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய மருந்துக் கடை எங்கே இருக்கிறது என்று தேடிச் சென்று கண்டுபிடித்து வாங்க வேண்டியிருக்கும்.
பகல் நேர விற்பனையின் நெருக்கடி குறையும் என்பதால், இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பொருள் வாங்க வருவோருக்குச் சிறப்புத் தள்ளுபடிகளைக் கடைக்காரர்கள் அறிவிக்கக்கூடும். இரவு ஷிப்டுகளில் வேலை செய்வதற்கென கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் அத்தகையோருக்கும் அவர்களது கண்காணிப்பாளர்களுக்கும் என வேலைவாய்ப்புகள் சற்றே அதிகரிக்கிற வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. கூடுதல் சம்பளம் என ஆசை காட்டி, பகல் நேரப் பணியாளர்களையே இரவிலும் கூடுதல் நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துகிற, அல்லது அதிகாலையிலேயே வந்துவிடச் சொல்கிற உழைப்புச் சுரண்டல்களைத் தொழிலாளர் துறை அதைக் கண்காணித்துத் தடுக்கும் என்று நம்புவோமாக.
8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கக் கூடாது, கூடுதல் பணி நேரத்துக்கான கூடுதல் ஊதியத்தைத் தொழிலாளர் வங்கிக் கணக்கில் சேர்த்துவிட வேண்டும், வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும், வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை என்பன போன்ற விதிகள் எந்த அளவுக்குக் கறாராகப் பின்பற்றப்படுகின்றன, அதிகாரிகள் எந்த அளவுக்கு நேர்மையாகக் கண்காணித்து உறுதிப்படுத்தப்போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு?
இரவில் கடைகளுக்குச் செல்கிறவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, பாதுகாப்பு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. இரவில் கடைகள் திறந்திருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பும் அதிகரிக்கும், காவல் துறையின் நடவடிக்கைகளும் அதற்கேற்பத் திட்டமிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பு என்பது பெண்களை சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சமுதாயத்தில் வலுவாகப் பரப்புவதோடு சம்பந்தப்பட்டது. இரவிலும் கடைகளா, அய்யய்யோ பெண்களின் நிலை என்னாவது என்று பதறிப்போய்க் கேட்கிறவர்கள், பாலினச் சமத்துவத்துக்கான இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டால் நல்லது.
இரவில் தேநீர் கிடைக்குமா?
இரவில் 11 மணிக்கு மேல் தேநீர்க் கடைகளைத் திறக்கக் கூடாது என்ற தடை சென்னையிலும் மற்ற பெரிய நகரங்களிலும் இருக்கிறது. திரையரங்குகளோடு கூடிய வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களும் தேநீர்க் கடைகளும் திறந்திருக்கலாம், அங்கிருந்து வெளியே வருகிறவர்கள் டீ குடிக்க நினைத்தால் சாலையோரக் கடைகள் எதுவும் திறந்திருக்காது என்பது பெரிய பாகுபாடு. பேருந்து நிலையம் போன்ற இடங்களில் இரவில் கடை திறக்க அனுமதி உண்டு என்றாலும், எல்லாக் கடைகளையும் திறக்க முடியாது, அதற்கெனச் சிறப்பு அனுமதி பெற்ற கடைகளைத்தான் திறந்து வைக்க முடியும்.
தற்போதைய முடிவால் சிறிய தேநீர்க் கடைகளுக்கு எந்த ஆதாயமும் இல்லை. அத்தகைய கடைகளை நாடக்கூடிய வாடிக்கையாளர்களுக்கும் பயனில்லை. இந்தத் தடையாணை அரசாங்கத்தால் அறவிக்கப்பட்டதல்ல, சட்டம் ஒழுங்கின் பெயரால் காவல் துறையாலும் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களாலும் கொண்டுவரப்பட்டது என்பதால் தடை தொடரும் எனத் தெரிகிறது. தடையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தேநீர்க் கடை உரிமையாளர் சங்கத்தினர் தங்கள் மாநாடுகள் மூலம் தொடர்ந்து வலியிறுத்தி வருகிறார்கள்.
பொருளாதாரமே மேம்படுமா?
இந்த வணிக நேர நீட்டிப்பால், ஒட்டுமொத்த வர்த்தகம் அதிகரிக்கும், பணச் சுழற்சி கூடுதலாகும், நாட்டின் பொருளாதாரமே மேம்பட்டுவிடும் என்றெல்லாம் அடுத்த கட்டக் கனவுகளுக்கு முன்னுரை எழுதப்படுகிறது.
பகலோ, இரவோ வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கப் போகிறவர்கள் என்னவோ அதே மக்கள்தாம். இரவில் பொருட்கள் வாங்குவோர் மக்கள்தொகை இதனால் அதிகரித்து விடப்போவதில்லை. குறிப்பிட்ட நாளில் பகலில் கடைக்குப் போனவர்கள் இப்போது இரவில் தாங்கள் விரும்புகிற நேரங்களில் செல்வார்கள் அவ்வளவுதான். அதற்காக, பகலில் ஒரு டூத் பேஸ்ட் வாங்குகிறவர்கள் இரவில் இரண்டு பேஸ்ட்டுகள் வாங்க மாட்டார்கள். பகலில் 20 கிலோ அரிசி வாங்குகிறவர்கள் இரவில் 40 கிலோ வாங்க மாட்டார்கள்.
ஆக, வணிகர்களின் மொழியில் சொல்வதானால் “சரக்குகளின் அழிவு” அப்படியேதான் இருக்கப்போகிறது. ஆக, பெரும்பாலும் இந்த நிலைமைதான் இருக்கும் என்கிறபோது ஒட்டுமொத்த வர்த்தகம் எப்படி அதிகரிக்கும்? பணச் சுழற்சி எப்படிக் கூடுதலாகும்? நாட்டின் பொருளாதாரம் எப்படி மேம்படும்?
மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்தால்தான், அற்ப சொற்ப ஊதியத்துக்கு வேலை என்ற காண்டிராக்ட் முறை ஒழிந்தால்தான், சம வேலைக்குச் சம ஊதியம் என்பது மெய்யான நடப்பாக மாறினால்தான், எவ்வளவு நல்ல சம்பளமானாலும் உள்நாட்டு / பன்னாட்டு கார்ப்பரேட் நிர்வாகங்கள் எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கிவிடும் என்ற நிலைமை தடுக்கப்பட்டால்தான் இதிலே மாற்றம் வரும். அப்போதுதான் கூடுதல் பொருட்களில் மக்கள் முதலீடு செய்வார்கள். அப்போதுதான் வர்த்தகம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் நிகழும்.
மக்களின் வருவாய் நிலை உறுதிப்படுகிறபோதுதான், அவர்களுடைய வேலைவாய்ப்புகள் பெருகுகிறபோதுதான் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இருக்கிற வேலை வாய்ப்புகளுக்கும் மூடுவிழா நடத்துகிற கொள்கைகள் மக்கள் தலையில் சுமத்தப்படுகிறபோது அவர்களின் வாங்கும் சக்தியாவது அதிகரிப்பதாவது?
இனி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கப் போகிறவர்கள், இந்தச் சிந்தனையையும் கொள்முதல் செய்து வைத்துக்கொள்வார்களானால் பொழுது விடிவதற்கான வெளிச்சம் பிறக்கும்.

செவ்வாய், 2 ஜூலை, 2019

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம்

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும்

திறந்து வைக்கலாம்:  தமிழக அரசு அனுமதி

சென்னை, ஜூன் 7 தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  வரும் ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த அரசாணையின்படி 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது.

பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை தவிர கூடுதல் நேரமோ பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணியாளர் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கிக் கணக்கில் தான் அந்த பணத்தை சேர்க்க வேண்டும்.

ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு, நிறுவனத்தின் முக்கிய நுழைவு வாயில் வரையில் வாகன வசதிகளை கட்டாயம் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும்.

பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதற்காக நிறுவனத்தில் கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் யார் யார் இன்று வேலைக்கு வருவார்கள் யார் யாருக்கு விடுமுறை என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும்.

இந்த புதிய அரசாணை அடுத்த 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 7.6.19