செவ்வாய், 2 ஜூலை, 2019

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம்

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும்

திறந்து வைக்கலாம்:  தமிழக அரசு அனுமதி

சென்னை, ஜூன் 7 தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  வரும் ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த அரசாணையின்படி 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது.

பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை தவிர கூடுதல் நேரமோ பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணியாளர் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கிக் கணக்கில் தான் அந்த பணத்தை சேர்க்க வேண்டும்.

ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு, நிறுவனத்தின் முக்கிய நுழைவு வாயில் வரையில் வாகன வசதிகளை கட்டாயம் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும்.

பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதற்காக நிறுவனத்தில் கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் யார் யார் இன்று வேலைக்கு வருவார்கள் யார் யாருக்கு விடுமுறை என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும்.

இந்த புதிய அரசாணை அடுத்த 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 7.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக