100 நாள் வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
100 நாள் வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 மே, 2025

நீண்ட போராட்டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2999 கோடி அறிவிப்பு


விடுதலை நாளேடு


 சென்னை, மே.2- நீண்ட போராட் டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டம்

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிப்பதை உறுதி செய்யும் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வும், வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குடும்ப அட்டைக்கு, ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப் படும். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் 13.42 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 91 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

ரூ.336 கூலி

இந்த வேலைக்கு ஒரு நாள் கூலியாக ரூ.50-இல் தொடங்கி தற்போது ரூ.374 வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு இந்த தொகை மாறுபடுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஒரு நாள் கூலியாக ரூ.319 வழங்கப் பட்டு வந்த நிலையில் ரூ.17 உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரூ.336 ஆக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் பணியாற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத் துக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.

முதலமைச்சர் கடிதம்

இந்த திட்டத்துக்கான நிதி ஒன்றிய அரசால் முறையாக ஒதுக்கப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் குற்றம் சாட்டின.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருந் தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.இதுதவிர அமைச்சர் தங்கம் தென்னரசு, கனி மொழி எம்.பி. ஆகியோர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தும் பேசி னார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி.,

100 நாள் வேலை திட்டம் தொடர் பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். அதேபோன்று தி.மு.க. எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதே கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினர்.

ரூ.2,999 கோடி விடுவிப்பு

ஒன்றிய அரசு நிதி வழங்காத காரணத்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பல மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தாகவும், இதனால் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்தநிலையில் தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ரூ.2 ஆயிரத்து 999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதன், 29 மே, 2024

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 


விடுதலை நாளேடு

சென்னை, மே 19 மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொண்ட வர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும் பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுந்து வந்தது. இந்த நிலையில் மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. அப்போது மக்களவை தேர்தல் நடத்தை அமலில் இருந்ததால் உடனடியாக அமல்படுத்த முடியாமல் போனது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்க ளவை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2023-2024 நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசாணை யின் மூலம் தற்போது 2024-2025 நிதி ஆண்டுக்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இது 8.5 சதவீத உயர்வு ஆகும். ரூ.25 கூடுதலாக அளிக் கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1229 கோடி ஒதுக்கீடு செய்தும் ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

வறியவர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தில் ஓராண்டில் 5 கோடி பேர் நீக்கம்

 

 புதுடில்லி, ஜூலை 26 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புஉறுதித் திட்டத்திலிருந்து(MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தகவலை எழுத்துப் பூர்வ பதிலாகத் தெரிவித்துள்ளார். இது கடந்த 2021- _2022 நிதியாண்டை ஒப்பிடுகையில் 247% அதிகம் என்பது தெரியவந்துள்ளது. கிராமப்புற மக் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட் டத்தின்கீழ் பதிவு செய்து கொண்ட வர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத் துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப் படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் பல கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன. இந் நிலையில், 2022- _2023 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து (MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme ) 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கவுரவ் கோகோய், விகே சிறீகாந்தன் ஆகியோர் 2022-_2023 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டோர் எண் ணிக்கை 244.3 சதவீதம் அதிகரித் துள்ளதாக   பத்திரிகையில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கிரிராஜ் சிங் இந்தப் பதிலை அளித்துள்ளார்.

ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில் ஆதார் எண்ணுடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டையை இணைக்க வலியுறுத்தியதும், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை ஆதார் அடிப்படை பணம் செலுத் துதல் முறைக்கு மாற்றியதுமே பணியாளர்கள் வெகுவாகக் குறையக் காரணம் என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. 2023 தொடங்கி ஜூன் மாதம் 23 ஆம் தேதி வரை 61 லட்சம் பதிவு செய்யப்பட்ட பணியாட்களின் பெயர் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக வும் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ஆதார் - ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு 4ஆவது முறையாக ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. இது இத்திட்டத்தின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதையும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் கேள்வியில் சுட்டிக்காட்டியிருக்க அதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த அமைச்சர் கிரிராஜ் சிங், "ஆதார் - ஊரக வேலை அட்டை இணைப்பை முறைப்படுத்தி உறுதி செய்தல் மாநில அரசுகளின் பொறுப்பு" என்று கூறியிருக்கிறார். மேற்குவங்க மாநிலத்துக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முற்றிலுமாக ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. திட் டத்தை முறையாகப் பின்பற்றாததால் நிதியை நிறுத்தியதாக ஒன்றிய அரசு காரணம் கூறியுள்ளது. 

அடுத்தபடியாக தெலங்கானாவில் 2727%, ஆந்திரப் பிரதேசத்தில் 1147%, என எதிர்கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தொடர்ந்து பயனா ளிகள் நீக்கப்பட்டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட் டத்தின் பயணாளர்கள் நீக்கம் 247% ஆக அதிகரித்துள்ளதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.   தாழ்த்தப் பட்ட பழங்குடின மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிறுபான்மையினர் நூறுநாள் வேலை திட்டத் தினால் சிறு வருமானம் பெற்று  பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


திங்கள், 12 ஜூன், 2023

100 நாள் வேலை திட்டம் : முதலமைச்சர் நேரில் விசாரிப்பு


 25

திருச்சி, ஜூன் 10- திருச்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி னார். அப்போது, கூலி எவ்வளவு கிடைக்கிறது? எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்? என்று அந்த பெண்களுடன் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச் சியாக உரையாடினார்.

திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.6.2023) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, லால்குடி அருகே உள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டும் பணிகளை செய்துகொண்டிருந்த பெண்க ளிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையா டினார்.

அப்போது, முதலாவதாக அந்த பெண்களிடம் மு.க.ஸ்டாலின் ஊர் பெயரை கேட்டார். அதற்கு பெண்கள் தங்களுடைய ஊர் பெயர் ஆலங்குடி என்று கூறினார்கள். கூலி எப்படி கிடைக்கிறது? தொடர்ந்து, 100 நாள் வேலை திட்ட பெண்களிடம், மு.க.ஸ்டா லின் உரையாடினார்.

அந்த உரையாடல் வருமாறு:-

மு.க.ஸ்டாலின் கேள்வி:- கூலி, சம்பளம் எல்லாம் எப்படி கிடைக்கிறது?

பெண்கள் பதில்:- ரூ.285 கொடுக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்:- பணம் எப்படி கொடுக் கிறார்கள்? வங்கி மூலம் கொடுக்கிறார் களா?

பெண்கள்:- வங்கி மூலமாக வருகிறது.

மு.க.ஸ்டாலின்:- உங்களுடைய சூப்பர் வைசர் யார்? அவர் மூலமாக பணம் வருகிறதா?

பெண்கள்:- ஆமாம்... 

மு.க.ஸ்டாலின்:- எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்?

பெண்கள்:- தொடர்ந்து வேலை செய்கி றோம்.

மு.க.ஸ்டாலின்:- தொடர்ந்து என்றால் எத்தனை நாட்கள் என்று சொல் லுங்கள்?

பெண்கள்:- 100 நாட்கள் வேலை செய்கிறோம் சார்.

மு.க.ஸ்டாலின் (சிரித்தவாறு):- 100 நாட்கள் எப்படி வேலை செய்யமுடியும்!

 பெண்கள்:- உங்களை இதுவரை நேரில் பார்த்ததே இல்லை சார். இப்போது, உங்களை பார்த்ததில் ரொம்ப சந் தோசம். 

மு.க.ஸ்டாலின்:- ஆட்சி திருப்தியாக இருக்கிறதா?

பெண்கள்:- ரொம்ப சந்தோசமாக இருக்குது சார்.

மு.க.ஸ்டாலின்:- ஏதாவது குறை இருந் தால் சொல்லுங்கள்.

பெண்கள்:- குறை எதுவும் இல்லை. நினைத்ததை நிறைவேற்றிவிட்டீர்கள் சார். மிகவும் சந்தோசம். சொன்னதை எல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

மு.க.ஸ்டாலின்:- எத்தனை பேர் இங்கு வேலை செய்கிறீர்கள்?

பெண்கள்:- 75 பேர் வேலை செய்கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- இந்த வேலையை எத் தனை நாளாக செய்கிறீர்கள்?

பெண்கள்:- இன்று (நேற்று) முதல் செய் கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- இன்றைக்கு தான் ஆரம்பித்தீர்களா? ஏற்கெனவே எங்கு வேலை செய்தீர்கள்?

பெண்கள்:- பக்கத்துல இருக்கும் இடத் தில் வேலை பார்த்தோம்.

மு.க.ஸ்டாலின்:- சரிம்மா, சந்தோசம்., வரட் டுமா....

இவ்வாறு உரையாடல் நடந்தது. இதையடுத்து, பள்ளி சென்று திரும்பு வதற்கு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது கிராமங் களில் பேருந்து வசதி இல்லை, வீடு கட்டுவதற்கு இட வசதி தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை அந்த பெண்கள் உள்பட விவசாய தொழிலாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து விட்டு, நிறைவேற்றி தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.


வெள்ளி, 31 மார்ச், 2023

100 நாள் வேலைத் திட்டம் : ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த நிலையிலும் - பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்தியவர் முதலமைச்சர்! - அமைச்சர் இ.பெரியசாமி

 

12

சென்னை, மார்ச். 25- சட்டப்பேரவையில் நேற்று, நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் பங்கேற்றுப் பேசியபோது, குறுக்கிட்டு விளக்கமளித்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, "ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த போதிலும், பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியவர் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை தி.மு.கழக அரசு திறமையாகச் செயல்படுத்தும்!” என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி குறிப்பிட்டதாவது:- 

ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்ற அடிப் படையில் ஒதுக்கீடு செய்வதைக் குறைத்து, 24 கோடி மனிதத்திறன்வேலை நாட்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியிருக்கிறது. இது வளர்ச்சியடைந்த மாநிலம். பிற்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக ஒதுக்குகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து, நம்முடைய மாநிலத்திற்கு கடந்த முறை, 24 இலட்சம், 25 இலட்சத்தைத் தாண்டவில்லை. இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற தற்குப் பிறகு, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, கிட்டத்தட்ட வேலை நாட்களைப் பார்த்தீர்களென்றால் பல இடங்களிலெல்லாம் 20 நாட்கள் தாண்டாமல் இருந்தது. 20 நாட்கள், 30 நாட்கள் இருந்தது.கடந்த 4 மாதங்களில் எடுத்த நடவடிக்கைகளில் வேலை நாட்கள், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் 60, 70 நாட்களைத் தாண்டி, வேலை நாட்கள் ரூ.32 கோடியை இன்றைக்கு workers budget அய் 25 கோடி என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக் கியிருந்தாலும், நாங்கள் அதையெல்லாம் எதிர்பார்க் காமல், 32 கோடி அளவிற்கு மனித திறன் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவைக்கு பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். வருகிற ஆண்டுகளில் அந்த கோடி என்பதை 35 கோடி என்று, நீங்கள் நிதிநிலை அறிக்கையை படித்துப் பாருங்கள். மனித வேலை நாட்களை 35 கோடிக்கு உயர்த்துவோம் என்று சொல்லியிருக்கிறோம். வேலைத்திறன் நாட்களை 25 கோடியிலிருந்து 35 கோடி ஆக்குவோம் என்று சொல்லியிருக்கிறோம். இதுவே 35 கோடி நாட்கள் என்று சொன்னோமென்றால், 35 கோடியைத் தாண்டி, 40 கோடிக்கு மேலும் உயரும் என்று நிச்சயமாகச் சொல் கிறேன், இன்னும் சொல்லப் போனால், எல்லா கிராமங் களுக்கும் இந்த வேலைத் திட்டம் போய்ச் சேர வேண்டும். Cluster என்று பார்த்தால், கடந்த ஆட்சிக் காலத்தில் 20,000 clusters தான் இருந்தது. ஆனால், தற்போது கிராமங்களை இணைக்கக் கூடிய இந்த வேலைத்திறன் clusters, கடந்த இரண்டாண்டு காலத்தில் சுமார் 3,000 clusters  கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வருகிற காலத்தில் அதை 30,000 ஆக உயர்த்தி, வேலைத் திறன் நாட்களை உயர்த்தி, ஊதியத்தையும் அவர்களுக்குக் குறைவில்லாமல் கொடுப்பதற்கு எங்களுடைய இந்த அரசு முதலமைச்சர் அவர் களுடைய வழிகாட்டுதலில் நிச்சயம் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றும். 

 பேரவைத் தலைவர் அவர்களே, 100 நாள் வேலைத் திட்டம், அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பொறுத்தளவில், அதற்கான நிதியை 100 சதவிகித நிதியை முழுமையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஆனால், எங்கள் முதல்வர் தளபதியார் அவர்கள், பேரூராட்சிக்கும் அதை விரிவுபடுத்துவேன் என்று சொல்லி, கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் Pilot Scheme போன்று ஒவ்வொரு மாவட்டத் திலும் ஒரு பேரூராட்சியைத் தேர்ந்தெடுத்து அந்தத் திட்டத்தை பேரூராட்சிகளி லும் செயல்படுத்திய அரசு எங்களுடைய அரசு என்பதை   உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இவ்வாறு அமைச்சர் இ. பெரியசாமி குறிப்பிட்டார்.