செவ்வாய், 10 டிசம்பர், 2019

அனைத்துத் தொழில் நிறுவனங்களில் இரவு நேர பணிகளில் பெண்கள் பணியாற்ற கருநாடகா அரசு அனுமதி

பெங்களூரு, நவ.21, இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் ஏராளமான அய்.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பெண் ஊழியர்கள் மீதான குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஆராய கருநாடக அரசு சட்டப்பேரவை கடந்த 2017ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இக்குழு அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரையில், கருநாடகாவில் உள்ள அய்.டி., நிறுவனங்களில் இனி பெண் ஊழியர்களுக்கு இரவுநேர பணி வழங்க  வேண்டாம் என தெரிவித்தது.
மேலும், அய்.டி. மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு காலை அல்லது மதிய பணியை வழங்கவும், ஆண் களுக்கு மட்டும் இரவுப் பணி வழங்கலாம் என்றும் பரிந்துரை  செய்தது.
அத்துடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றும் கருநாடக சட்டப்பேரவை குழுவின் அறிக் கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பெண் சிசு கொலை செய்யும் மருத்துவர்கள்,  செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கருநாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களில் இரவு நேரப்பணிகளில் (இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) பணிபுரிய பெண்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பிற நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் இரவு நேரப்பணிகளில் பெண்கள் பணியாற்ற அணுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கருநாடக மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அனைத்து தொழிற் சாலைகளிலும் இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான இரவு நேரப்பணிகளில் பெண்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்ததாவது,
தொழில் நிறுவனங்கள் அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளை பின்பற்றி தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை இரவு சிப்ட்களில் முழு நேரமாகவோ,  பகுதி நேரமாகவோ பணியமர்த்திக் கொள்ளலாம்.
ஆனால், பெண் ஊழியர்களை வற் புறுத்தி வலுக்கட்டாயமாக பணிபுரிய நிர்ப்பந்தப் படுத்தக் கூடாது.
இரவு சிப்ட்களில் பணிபுரிய விருப்பமுள்ள பெண் ஊழியர்களிடம் எழுத்துப் பூர்வமாக அனுமதி  பெற்ற பின்னரே அவர்களை இரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு 21 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக