சனி, 17 டிசம்பர், 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


சென்னை, டிச.16 தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியை 1.7.2016 முதல் உயர்த்தி வழங்கப்படும். திருத்திய ஊதியம் பெற்றுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கு 1.7.2016 முதல் 2 சதவீதம் எனவும், திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 7 சதவீதம் எனவும் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 1.7.2016 முதல் 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
இதன்படி, அகவிலைப்படி 125 சதவீதத்திலிருந்து 132 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும்  வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப் படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு 427/- ரூபாய் முதல் 5,390/- ரூபாய் வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 214/- ரூபாய் முதல் 2,695/- ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.
1.7.2016 முதல் 30.11.2016 வரை உள்ள காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும்.  இந்த மாதம் முதல்  இந்த அகவிலைப்படி உயர்வு  சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர்.  அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக 1,833 கோடியே 33 லட்சம் ரூபாயாக இருக்கும்.
இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-விடுதலை,16.12.16

ஞாயிறு, 6 நவம்பர், 2016

மகப்பேறு அடைந்ததற்காக ராணுவ மருத்துவப் பிரிவில் பெண்ணுக்கு பணி மறுக்கப்படக் கூடாது


பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றம்
சண்டீகர், பிப்.10_ மகப் பேறு அடைந்திருப்பதை காரணமாக முன்வைத்து, ராணுவ மருத்துவப் படைப் பிரிவில் பெண்ணுக்கு பணி மறுக்கப்படக் கூடாது என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ மருத்துவ படைப்பிரிவுக்காக பெண் ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டில் விண்ணப்பித்தி ருந்தார்.
இதுதொடர்பான தேர் வுகள், மருத்துவப் பரி சோதனைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றார். இதை யடுத்து, ராணுவ மருத்துவ படைப்பிரிவில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணிக்குச் சேரும் படி அவருக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. இத னிடையே, தேர்வுகளில் பங்கேற்றுவிட்டு பணி உத்தரவுக்காக காத்திருந்த காலத்தில் அவர் மகப்பேறு அடைந்தார். இதைப் பணிக் குச் சேர்ந்த நாளன்று அந் தப் பெண் தெரிவித்தார்.
இதனால், அவரை ராணுவ மருத்துவப் படைப் பிரிவில் சேர்த்துக் கொள்ள மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சண் டீகரில் இருக்கும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்குத் தொடுத் தார். இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்து, உயர்நீதிமன்ற நீதிபதி ஹரீந் தர் சிங் சித்து செவ்வாய்க் கிழமை தீர்ப்பு வழங்கினார். இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில்,
“மகப்பேறு அடை வதும், பணியாற்றுவதும் பெண் ஒருவரது தனிப் பட்ட உரிமைகள். அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும்படி பெண்ணைக் கட்டாயப்படுத்தும் முறைக்கு நவீன இந்தியாவில் இட மில்லை’ என்று தெரிவித்தார்.
-விடுதலை,10.2.16

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு ஊதிய நிர்ணயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, பிப்.1_ தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்ய குழு அமைத்து சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நாடு முழுவதும் தனி யார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர் களுக்கு குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயம் உள் ளிட்ட கோரிக்கைகளுக் காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தனியார் மருத்துவமனை செவிலியர் களுக்கான குறைந்த பட்ச சம்பள நிர்ணயம் செய்ய மத்திய அரசு 4 வாரத்தில் குழு அமைக்க வேண்டும்.
செவிலியர்களின் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு பரிசீலிக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை 6 மாதத்தில் சட்டமாக இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-விடுதலை,1.2.16

மகப்பேறு கால விடுப்பை நீடிக்கும் சட்டத்திருத்தம்


புதுடில்லி, பிப்12_ பணிக்கு செல்லும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மகப்பேறு கால ஊதியத்துடன்கூடிய விடுப்பில் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அச்சட்டத்திருத்தத்தில் அரசுப் பணி யாற்றும் பெண்களின்  விடுப்பு காலம் நீட்டிப்பு, வாடகைத்தாய், தத்து எடுக் கும் பெண்களுக்கும் விடுப்பு வாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பிள்ளைப்பேற்றின்போது பணியாற் றக்கூடிய பெண்களுக்கு நான்கு மாதங் கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அனுமதி அளிக்கப்படுகிறது.
தற்போது வாடகைத்தாய் மற்றும் பிறந்த குழந்தையைத் தத்து எடுக்கும் பெண்ணுக்கு மூன்று மாதம் ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது.
மகப்பேறு பயன் சட்டம் 1961 சட்டத்தில் திருத்தங்கள் பரிந் துரைக்கப் பட்டுள்ளன. அப்பரிந் துரையில் கருவுற்ற பெண்களுக்கு மூன்று மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதை ஆறரை மாதங்கள் அளிப்பதற்கான திருத்தங்கள் விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளது.
குழந்தைகள் மய்யம் கட்டாயம்
மேலும், சட்டத்திருத்தத்துக்கான பரிந்துரையில் 50 அல்லது 50க்கும் மேற் பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ள அலுவலகங்களில் குழந்தைகள் பராமரிப்பு மய்யம் கட்டாயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.  தொழிலாளர் துறை அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் கூறும்போது,
“மூன்று மாதம்வரை வயதுள்ள குழந்தைகளைத் தத்து எடுக்கும் பெண்களுக்கு அக் குழந்தையைப் பராமரித்திட 16 வாரங்கள் ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. வாடகைத்தாயாக இருப்பவர்களுக்கும் குழந்தையை ஈன்றளித்தபிறகு 16 வாரங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும்’’ என்று குறிப்பிட்டார்.
தனியார் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ வல்லுநர் மருத்துவர் சுசீலா குப்தா கூறும்போது, “இது பாராட்டத்தக்க முடிவாகும். ஆறரை மாதங்கள் என்பது  பெண்கள் குழந்தைப்பேறுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான சரியான கால அவகாசமாகும்.
ஏற்கெனவே பெண்களின் பங்களிப்புகளை  பணியிடங்களில் ஊக்கப்படுத்திட பல நிறுவனங்கள் மகப்பேறு விடுப்பை ஆறு மாதமாக உயர்த்தி உள்ளன’’ என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி மூன்று மாதங்களாக உள்ள மகப்பேறு விடுப்பை எட்டு மாதங்களாக உயர்த்திட வேண்டும் என்று கோரியுள்ளார்.  மகளிர் சங்கங்கள் அரசின் இந் நடவடிக்கை நல்ல தொடக்கம் என்று  வரவேற்றுள்ளதுடன், அமைப்புசாரா தொழிலாளார்களாக உள்ள பெண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜக்மதி சங்க்வான் கூறும்போது, “இது நேர்மறையாக எடுத்துவைத்துள்ள அடியாகும். அரசை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த பரிந்துரைக்கப்பட்டுள்ள பயன் பாடுகளில் எவ்வித நிபந்தனையையும் சேர்க்கக்கூடாது. இந்த பயன்கள் அமைப்பு சாராத பிரிவுகளுக்கும் முறை யாக சென்றடைய வேண்டும்’’ என்றார்.
2013ஆம் ஆண்டுவரை பன்னாட் டளவில் 98 நாடுகளில் மகப்பேறு கால விடுப்பாக 14 வாரங்கள் அனும திக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு தொழி லாளர் அமைப்பின் அறிக்கையில் மகப்பேறு மற்றும் குழந்தை பரா மரிப்பு பணிகள் என்கிற தலைப்பில் அளிக் கப்பட்டுள்ள அறிக்கையில் 42 நாடுகளில் 18 வாரங்கள் ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில்  அரசு அலுவலகங்களில் பணியாற்றும பெண்களுக்கு மத்திய சிவில் சேவை (விடுப்பு) விதிகள் 1972இன்படி ஆறு மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு  அளிக்கப் படுகிறது.
-விடுதலை,12.2.16

மதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்


- தந்தை பெரியார்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும், சடங்கு களையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்ததாகும். இக்கார ணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத் யோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர். பிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத் தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டு மென்னும் பிரச்சாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்துகொள்ளாமலும், நடுத் தெருவில் நின்றனர். இதன் பின் சில மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங் களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநே கர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத் தினால் தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.
சிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண் டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மா னங்களை ஒப்புக்கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபடவேண்டும் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத் தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளி யிடுகிறோம்.
முதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்தி ரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இக்கொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.
வகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாகவேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும், நமக்கும் எக்காலத் திலும் பகையில்லை. பார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம். பார்ப்பனீயத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப் பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல் லாம் நமது போராட்டம் சென்றுதான் தீரவேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.
சுயமரியாதை இயக்கம் இதுவரை யிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப் படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக் கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின் றனர். தேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின் றனர். இதற்கு காந்தி அவர்களின் ஹரிஜன இயக்கமும், இந்து மகாசபைப் பிரச்சாரமும் போதிய சான்றாகும். ஆகை யால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரச்சாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.
சமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவ சியம் என்பது ஆலோசிக்கத் தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங் களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடி யோடு போக்கி விடவோ புதிய காரி யங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்திவிடவோ எக்காலத்திலும் இயலாது. ஆதலால் சீர் திருத்தவாதிகளுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள் கைகள் செயலில் நடைபெற வேண்டு மானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப் போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுயமரியாதை இயக்கமானது நேர்முகமா கவோ, அல்லது மறைமுக மாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக்கொண்டு தீர வேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசிய மில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலைசெய்து வரும். பலாத்கார முறை யையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட் டத்தைக்கண்டு ஏன் பயப்படவேண்டும்?
(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப் பற்றும் வேலையையும் சுய மரியாதை இயக் கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வர லாமென அபிப்பிராயப்படு கின்றவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளை யும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா? என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும். தற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலை யிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப் பழக்க வழக்கங்களைப் போக்குவதும், அப்பழக்க வழக்கங்களில் வைத் துள்ள நம்பிக்கையை ஒழிப் பதும், புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும். இவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத் தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகி விடும். இவ்வளவே தான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத் திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்ற வில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை. சமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம். இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத் தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக் கத்தையும் கொண்டு தொடங்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியின் அக்காலநிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்ய முடியும். சமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ளுகின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது. சமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகா ரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்ய வேண்டுவது அவசியமல்லவா? என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.
பொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப் பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய கட்சி தற்பொழுது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாய கக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டி ருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம். இக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் யாராயிருப்பினும் நிற வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத் தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதர வளித்து வர வேண்டுமென் பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன் றாகக் கொள்ள வேண்டும். இதற் கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசிய மாகும். இந்த ஸ்தாபனத்தில் அரசியல் நிறம் வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டாமல் மதமற்றவர்கள் எல்லோ ரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்து வர வேண்டும்.
மேற்கூறிய இரு இயக்க ஸ்தாப னங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தா பனங்களின் கொள்கைகளுக்கு மாறு படாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு நடக் கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர் களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். நமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமா யிருப்பார்களாயின் அதைப் பொறுத்த வரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத் திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத் தினால் இயக்கம் வளருவதற்கே வழி யில்லாமற் போய்விடும். நமது கொள் கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது, நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்யமுடியும்? ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.
மேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுய மரியாதை இயக்கத் தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தா லொழிய உருப்படியான வேலை எதையும் செய்துவிட முடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்மக் கொள்கைகளையும், சுய மரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வ தற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம். ஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சினைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சினையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக் கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத் திற்கு சேர்த்துக் கொண்டு இப் பிரச் சினைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல் லாம், விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.
- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை, (விடுதலை, 11.7.1950 
-விடுதலை,31.1.16

வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் திரு.வி.க சு.குமாரதேவன்


எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டு எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கிய வாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற் றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் ‘‘தமிழ்த்தென்றல்’’ திரு.வி.கல்பாணசுந்தரம் ஆவார்.
திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க. 1883ஆம் ஆண்டு இதே நாளில் தற்போது தண்டலம் (திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அத்தனைத் தலைவர்களிடமும் அரசியல் வேறுபாடின்றி தொடர்பு வைத்திருந்தார்.
இளம் வயதில் சித்த வைத்திய மருந்து சாப்பிட்ட போது சாப்பிட்ட மருந்து பத்தி யம் இல்லாமல் போனதால் பக்கவிளைவு ஏற்பட்டு கை கால்கள் முடமாகிவிட, அதை சரி செய்தவர் அயோத்திதாசப் பண்டிதர்.
காந்தியார் சென்னைக்கு முதன்முத லாய் வந்தபோது அவரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்த்து அழகுத் தமிழில் விளக்கமளித்து காந்தியாரிடம் நற்பெயர் எடுத்தார்.1921இல் ‘‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’’ என்ற நூலினை எழுதி னார்.
சமயம், அரசியல்,இலக்கியம், கவிதை கள்,வரலாறு, தன் வரலாறு என்று அனைத் துத் தளங்களிலும் மூழ்கி ஆய்வு செய்து எழுதிய நூல்கள் மொத்தம் 56. தமிழக வரலாற்றில் அரிய செய்திகள், சிந்தனை கள் விரவிக் கிடக்கும் அந்த நூல்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றோர் பல ராவார்.
சட்டசபையில் தமிழில் பேச வற்புறுத்தி அதைத் தன் வாழ்நாளில் கண்ட தமிழறிஞர்.
மேடைப் பேச்சில் தனக்கென ஓர் பாணியை மேற்கொண்டு ஆற்றொழுக் கான தமிழ்ப்பொழிவை நிகழ்த்தியவர். ஒரு மணி நேரம் பேசினால் அதில் கடைசி பத்து நிமிடங்கள் இதுவரை தான் பேசியது என்ன என்பதை சுருக்கமாய்ப் பேசி முடிப்பார்.
திரு.வி.கவின் மேடைத் தமிழ், எழுத்து நடையைப் பலர் பின்பற்றினர்.
தற்போது அண்ணாசாலையில் உள்ள “Spencers” கட்டடத்தில் இருந்த நிறுவனத் தில் கணக்கு வழக்கு எழுதி வாழ்க்கை நடத்திய போது, அந்த உரிமையாளரிடம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக இவர் நடந்து வருவதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பணியை ராஜினாமா செய்தார்.
20.04.1918இல் வாடியாவுடன் இணைந்து தொழிலாளர்கள் நலன் காக்க திரு.வி.க. உருவாக்கியதே ‘‘சென்னை மாகாணத் தொழிலாளர் சங்கம்’’ என்பதாகும்.
1919 முதல் 1922 வரை எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் வேண்டி நடந்த பின்னி மில் வேலை நிறுத்தப் போராட்டம்தான் முதல் மாபெரும் தொழிலாளர்கள் போராட்டமாக வரலாறு பதிவு செய்து இருக்கிறது. அதை முன் னின்று நடத்தியவர் திரு.வி.க.
தொழிற்சங்கப் போராட்டம் தீவிரமாதல் கண்டு அவரை நாடு கடத்த ஆங்கில அரசு முற்பட்ட போது, அன்றைய நீதிக் கட்சித் தலைவர்களான சர்.பிட்டி தியாக ராயர். பனகால் அரசர் ஆகியோர் திரு.வி.கவை நாடு கடத்தினால் பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என்று கூறியதால் நாடு கடத்தும் பேச்சு முடி வுற்றது.
தேசபக்தன், நவசக்தி ஆகிய பத்திரிகை களை நிறுவி அதன் மூலம், தான் கொண்ட கொள்கைகளைப் பரப்பினார்.
1919இல் முதன் முதல் மேடையேறிப் பேசியது "திராவிடரும் காங்கிரசும்" என்ற தலைப்பில்,
1925இல் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் காண திரு.வி.க.வும் காரணம். பின்னாளில் பெரியார் கூட்டிய மாநாட்டில் பேசியபோது சுயமரியாதை இயக்கத்தின் தந்தை என் நண்பர் பெரியார் என்றால் தாய் நான்தான் என்றார்.
சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டில் திரு.வி.க. தொழிற்சங்கம் அமைத்துக் கம்யூனிசம் பேசுவார் என்று கருதிய காங் கிரஸ் அரசு, டிசம்பர் 9 வரை அவரை வீட்டுக்காவலில் வைத்தது.
எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரியாருடன் அவருக்கிருந்த நட்பின் தன்மை மாறாமல் இருந்தது. எனக்காகக் கண்ணீர் சிந்த இருக்கும் ஒரே நண்பர் நாயக்கர் தான் என்றார். அதன் படியே அவர் 17.09.1953 இல் மறைந்த போது வெளியூரில் இருந்த பெரியார் ஓடோடி வந்து இரங்கல் கூறி அவருக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்கு களையும் முன்னின்று அறிஞர் அ.ச.ஞான சம்பந்தம் மூலம் செய்தார்.
‘‘எனக்கு மீண்டும் பிறவி வேண்டும்; பிறந்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றவேண்டும்’’ என்று கூறிய திரு.வி.க., வள்ளலாரின் கொள்கை வழி நின்றவர்.
திரு.வி.க.நடத்திய நவசக்தியில் துணை ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தி அவர் மேல் கொண்ட பற்றால் "கல்கி" என்று அறியப்பட்டார்.
பல்வகையிலும் தமிழுக்கும் தமிழர்க் கும் தொண்டாற்றிய திரு.வி.க வின் நூற்றாண்டை 1983இல் அரசு கொண்டாடி விட்டு மறந்து விட்டது. அவர் நினைவாக, அவர் பிறந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசு அசைந்து கொடுக்க மறுப்பது கேவலம்.
தேனருவித் திரு.வி.க
செந்தமிழ்ப் பேச்சும் எழுத்தும் இன்பத்             தேனருவி திரு.வி.க...
பெண்ணின் பெருமையைத் தொழிலாளி             உரிமையைக்
கண்ணான தமிழின் கவினார்ந்த                 உண்மையைப்
புண்ணான இந்தி புகுத்தும் சிறுமையை             எண்ணிய
எண்ணத்தில் எழுந்த தமிழனைத்தும்             தேனருவித் திரு.வி.க...
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
வாழ்க தமிழ்த்தென்றல் திரு.வி.க.
-விடுதலை,ஞா.ம.,109.16

சனி, 29 அக்டோபர், 2016

தற்காலிகப் பணியாளர்களுக்கும், நிரந்தரப்பணியாளர்களின் ஊதியம்போல் சமமாக வழங்க வேண்டும்

சம வேலைக்கு சம ஊதியம்! தற்காலிகப் பணியாளர்களுக்கும், நிரந்தரப்பணியாளர்களின் ஊதியம்போல் சமமாக வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி, அக்.29 நிரந்தரப் பணி யாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப்போன்றே தற்காலிக பணியாளர்களுக்கும் வழங்க  வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடுமுழுவதும் அரசு மற்றும் அரசு சார் துறைகளில்  லட்சக்கணக்கில் தற்காலிகப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வரு கிறார்கள். சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கைக் கேற்ப, அரசுப்பணிகளில் நிரந் தரப் பணியாளர்களுக்கு அளிக் கப்படுகின்ற ஊதியத்தைப் போன்றே தற்காலிகப் பணியா ளர்களுக்கும் வழங்கிட வேண் டும் என உச்சநீதிமன்ற நீதி பதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கையின் அடிப் படையில் அனைத்து பணியா ளர்களுக்கும் சம அளவில் ஊதிய விகிதம் அளிப்பதுகுறித்த தெளிவான தீர்ப்பை ஜே.எஸ்.கேகர், எஸ்.ஏ.பாப்டி ஆகி யோரைக் கொண்ட அமர்வு அளித்துள்ளது.
இதில் எங்களுடைய பார் வையில், தொழிலாளர்களுக்கு சேர வேண்டியதைக் கொடுக்க மறுப்பது செயற்கைத்தனமான அளவீடுகளைக் கொண்ட ஒரு தவறான முடிவாகும் என்ப தாகும்.
ஒருவரைவிட அடுத்த வருக்கு குறைவாக ஊதியம்  கண்டிப்பாக வழங்கிடக் கூடாது. ஏனென்றால், இது மக்கள் நலன் காக்கின்ற அரசு ஆகும். இதுபோன்று வேறுபாடுகளு டன் இருப்பது மனிதகுலத்தின் பெருமையை சீர்குலைத்து விடும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.
நீதிபதிகள் கொண்ட அமர்வு இதுகுறித்து கொள்கை விளக்கத்தைத் தெளிவுபடுத்தி யுள்ளது.
ஒரேவிதமான பணியை பணியாற்றுவோரிடையே வழங்கப்படுகின்ற ஊதியத்தை ஒப்பிடும்போது குறைத்து வழங்கப்படுகிற செயலானது அடிமைத்தனத்தை கொண்டுள் ளதாக உள்ளது. பணியாற்று வோரிடையே இருவகைகளில் வேறுபடுத்துவதாக உள்ளது. அய்யத்திற்கிடமில்லாமல் அடக்குமுறை, ஒடுக்குமுறை களுடன் கட்டாயப்படுத்தி மக் களின் விருப்பத்துக்கு மாறாக அடிமைப்படுத்தி நிர்ப்பந் திக்கிறது’’ என நீதிபதி கேகர் குறிப்பிட்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் தற் காலிகப் பணியாளர்கள் அளித்த மனுவில் தற்காலிகப்பணியாளர் களின் ஊதியம்  நிரந்தரப் பணியாளர்களின் ஊதியத்துடன் வேறுபாடுகளைக் கொண்டுள் ளதுகுறித்து குறிப்பிட்டார்கள். குறைந்த பட்ச ஊதிய விகிதம் என்பதுகூட நிர்ணயம் செய்யப் படவில்லை என்றுகூறி  நீதி கோரி பஞ்சாப் மாநில தற்கா லிகப் பணியாளர்கள் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றம் மற் றும் உச்சநீதிமன்றத்தை நாடி னார்கள்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் குறிப்பிடும்போது பன்னாட்டளவில் பொருளா தாரம், சமூகம், கலாச்சார உரி மைகள் குறித்து  உடன்படிக்கை யில் கையொப்பமிட்டுள்ள நிலையில் சம வேலைக்கு சம ஊதியம்Õ என்பது  பின்பற்றப் படவேண்டும் என்று குறிப் பிட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பல் வேறு நிலைகளைக் குறிப்பிட்டு விட்டு, சம வேலைக்கு சம ஊதியம் என்பதிலிருந்து விலகிச் செல்ல முடி யாது. அரச மைப்புச் சட்டத்தின் பிரிவு 141இன்படி உச்சநீதிமன் றம் ஏற்கெனவே அளித்துள்ள சட்டப் படியான உத்தரவை பின்பற்ற வேண்டும்.
தற்காலிகப் பணியாளர் அல் லது நிரந்தரப்பணியாளர்  இடையே சம வேலைக்கு சம ஊதியம்Õ என்கிற கொள்கையை தெளி வாகவும், குழப்பமில்லாமலும், ஒவ்வொரு பணியாளர்களிடத் திலும் பின்பற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.

விடுதலை,29.10.16
-

புதன், 31 ஆகஸ்ட், 2016

வருமான உச்ச வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் கலைஞர் வலியுறுத்தல்

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு
கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பை
ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்
கலைஞர் வலியுறுத்தல் 

சென்னை, ஆக.31
 மத்திய அரசின் கல்வி மற்றும வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அதிக அளவில் பயன் அடையும் வகையில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வரு மான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (30.8.2016) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின்  கல்வி மற்றும்  வேலை வாய்ப் புகளில்  பிற்படுத்தப்பட்டோர்  இடஒதுக்கீட்டின் பலனைப் பெற, நடைமுறையில் இருந்து வரும்  வருமான வரம்பினை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக  செய்தி வந்துள்ளது.  மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில்  ஓ.பி.சி.  என்னும்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு  தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு ஓ.பி.சி.  சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின்  ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்குள் தான் இருக்க வேண்டும் என்று இதுவரை விதி முறையில் கூறப்பட்டுள்ளது.  தற்போதுள்ள சூழலில்  ஆண்டு வருமானம்  ரூ.6 லட்சம் என்ற வரையறைக்குள்  பெரும்பாலோர் வருவதில்லை.  இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் அனைத்தையும் நிரப்ப முடிவதில்லை.
எனவே தான்,  6.5.2015இல் நான் விடுத்த அறிக்கை யில், ஓ.பி.சி என்று அழைக்கப்படும்  இதர பிற் படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்  பயன்பெறும் வகையில், கிரீமிலேயர் உச்ச வரம்பை,  தற்போதுள்ள ரூ.6 லட்சம் என்பதிலிருந்து,  ரூ.10.50 லட்சமாக உயர்த்த வேண்டும்  என்று மத்திய அரசுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான  தேசியக் கமிஷன்,  வரவேற்கத்தக்க பரிந்துரை  செய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை  மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொண்டால், இதர பிற்படுத்தப்பட்ட சமு தாயங்களைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு,  மத்திய  அரசின்   வேலை வாய்ப்பு  மற்றும் கல்வியில்  மேலும் கூடுதலாக  இடஒதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்கும் என்பதால்,  மத்திய பாஜக அரசு உடனடியாக முன் வந்து  இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று,
இட ஒதுக் கீட்டிற்காகத்  தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கம்  திமுக என்ற முறையில் அதன்  சார்பில் வேண்டு கோள் விடுக்கிறேன் என்று கேட்டுக் கொண்டி ருந்தேன். இந்தப் பின்னணி யில்   தற்போது ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்பதை ரூ.8 லட்சம் என்ற அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறது.
இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக் கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக்  சைனி, வருமான வரம்பினை ரூ.15 லட்சம் அளவுக்கு  உயர்த்த வேண்டுமென்று சிபாரிசு செய்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.
எனவே  பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான  பா.ஜ.க. அரசு, இந்தியாவில் உள்ள  பிற் படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்னும் நோக்கில், அவர்களின் ஆண்டு வருமானம்  ரூ.6 லட்சம் என்பதை பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் பரிந்துரை செய்துள்ள ரூ.15 லட்சம் என்ற அளவுக்கோ அல்லது குறைந்தபட்சம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்த ரூ.10.50 லட்சம் அளவுக்கோ உயர்த்தி அறிவிக்க வேண்டு மென்று திமுக சார்பில் வலியுறுத்தி வேண்டுகிறேன்.
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
-விடுதலை,31.8.16

அரசு ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 42 சதவீதம் உயர்வு



புதுடில்லி, ஆக.31
 மத்திய அரசு,  ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சத வீதம் உயர்த்தி உள்ளது.
மத்திய அரசு பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,  செப்டம்பர் 2இல், நாடு தழுவிய வேலைநிறுத்தபோராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு,குறைந்த பட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள் ளது.
தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து, வேலைநிறுத்த போ ராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரி சீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு ஒப்பந்த ஊழி யர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், அமைச்ச கங்கள் இடையிலான குழு, கடந் தாண்டு அமைக்கப்பட்டது.
இக் குழு அளித்த பரிந்துரை களின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள் ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
-விடுதலை,31.8.16

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.15 இலட்சங்களாக உயர்த்திட பரிந்துரை

மத்திய அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் 
பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.15 இலட்சங்களாக உயர்த்திட 
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை
புதுடில்லி, ஆக.29 மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவ0லர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு அமைந்த போது மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

27 விழுக்காடு இட ஒதுக்கீடு


அதன்படி மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப் புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு 27 விழுக்காடு முழுமையாக நடை முறைப்படுத்தப்படாமல், வெறும் 12 விழுக்காட்டுக் குள்ளாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. அதற்கு காரண மாக ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சமாக இருந்ததுதான் என ஆய்வில் கண்டறியப்பட்டது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட  ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்று கூறி ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சத்துக்கும்மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.

வகுப்புவாரி உரிமையான இட ஒதுக்கீட்டில் பொரு ளாதார அளவுகோல் கூடாது என்று   வலியுறுத்தப்பட்டு வந்த அதேநேரத்தில், கிரீமிலேயர் நீக்கப்படும்வரை, ஆண்டு வருமான உச்சவரம்பை அதிகரிக்கக் கோரிதிராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் மத்திய அரசிடமும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டின் பலனை இதர பிற் படுத்தப்பட்டோர் பெறுவதற்கான வருமான வரம்பு உயர்த்தப்படுவதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெற வேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று விதிமுறை (கிரிமிலேயர்) வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய சூழலில், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்ற வரையறைக்குள் பெரும்பாலானோர் வருவதில்லை. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப முடிவதில்லை.

இட ஒதுக்கீட்டின்படி உரிமையைப் பெற முடியாத அவலம்

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந் தாலும், அவர்கள் இட ஒதுக்கீட்டின் சலுகையை பெற முடியாத அவல நிலை உள்ளது. இது நாடு முழுவதும் பரவலாக கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

இதனால் மத்திய அரசு பணிகளில் இதர பிற் படுத்தப்பட்டோருக்கானஒதுக்கீட்டுஇடங்கள்நிரப் பப்படாமல் ஏராளமாக காலியாக இருக்கின்றன.

வருமான வரம்பு உயர்கிறது

இந்த நிலையில், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்ற வருமான வரம்பினை ரூ.8 லட்சம் என்ற அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இப்படி உயர்த்தி விட்டால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலனை பலரும் பெறுகிற வாய்ப்பு உருவாகும். மத்திய அரசின் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

இது தொடர்பாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது. இது தொடர்பான அமைச்சரவையின் குறிப்பு விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

வருமான வரம்பு ரூ.15 இலட்சங்களாக உயர்த்தப் பரிந்துரை

இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக் கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக் சைனி கூறும்போது, ‘‘மத்திய அரசுப்பணிகள், கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆன பின்னரும், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 12 முதல் 15 விழுக்காட்டினர் மட்டுமே பலன் பெறுகின்றனர். நாங்கள் இது குறித்து ஆராய்ந்தபோது ஆண்டு வரு மான வரம்புதான் இந்த உரிமையைப் பெறுவதற்கு தடையாக அமைந்துள்ளது என்பதை கண்டறிந்தோம். எனவே, வருமான வரம்பினை ரூ.15 லட்சம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்’’ என கூறினார்.
-விடுதலை,29.8.16

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

பேறுகால சலுகைகள்: அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலனை


புதுடில்லி, ஆக.18 தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் 26 வார பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை அவசரச் சட்டமாக இயற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்களும், தனி யார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் களுக்கு அதிகபட்சமாக 12 வாரங்களும் (3 மாதங்கள்) தற்போது பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியார் துறை பெண்களுக்கும் 26 வார பேறுவிடுப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்து
விட்டது.

இந்நிலையில், இன்னும் 3 மாதங்கள் கழித்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரிலேயேஇந்த மசோதா, மக்களையில் தாக்கல் செய்யப் படும். ஆனால், அதற்குள் பலர் பயன டையும் வகையில், இந்த மசோதாவை அவசரச் சட்டமாக இயற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை (17.8.2016) கூறியதாவது:

இந்த மசோதா, மாநிலங்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மறு தினமே பேறுகால விடுப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்தன. அந்த மசோதா எப்போது நடைமுறைக்கு வரும்? பேறுகாலப் பலன்களை உடனடியாகப் பெற முடியுமா? என்கிற வகையில் அந்தக் கேள்விகள் இருந்தன. எனவே, கர்ப்பிணிகள் பலரும் பயன்பெறும் வகையில், இந்த மசோதாவை அடுத்த வாரத்தில் அவசரச் சட்டமாக இயற்றுவதற்கான பணிகளில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-விடுதலை,18.8.16

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்து
திராவிடர் கழகத்தின் சார்பில்
ஆகஸ்டு 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

விருத்தாசலம், ஆக. 13
 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரினை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து ஆகஸ்டு 22 ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று (13.8.2016) செய்தியாளர்களிடம் கூறிய விவரம் வருமாறு:
மறைமுகமாக தனியார் மயமாக்கவேண்டும் என்கிற முயற்சி...
நெய்வேலி நிலக்கரி பழுப்பு நிறுவனம் என்பது பல நூற்றுக்கணக்கான குடும்பங்களை புதுக்கூரப்பேட்டை என்ற பெயரில் அவர்கள் அகற்றியிருக்கிறார்கள். ஏற்கெனவே நிலங்களைக் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்கிற குறைபாடும் இருக்கிறது. அதோடு, இது மேலும் வளர்ந்து லாபம் தரக்கூடிய ஒரு நிலையில், அதனுடைய பங்குகளை அவ்வப்போது விற்று,
மறைமுகமாக தனியார் மயமாக்கவேண்டும் என்கிற முயற்சி தொடர்ந்து பல ஆண்டுகாலமாக நடந்துவருவதைக் கண்டித்து, திராவிடர் கழகமும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி, அதற்குப் பிறகு, தமிழக  அரசும் முன்வந்து, ஒரு பங்கை நாங்கள் வாங்குகிறோம் என்று சொல்லி, அது ஓரளவிற்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.
என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இந்த நிலையில், இப்பொழுது மறைமுகமாக வடபுலத்திலேயும், வேறு மாநிலங்களில் இருப்பவர் களைக் கொண்டு வந்து நிரப்பவும், குறைந்த சம்பளத் திற்கு - ஒப்பந்தக்காரர்களை, அவர்களுடைய பிரச்சி னைகளைத் தீர்க்காமல் இருப்பதற்காகவும், அதே நேரத்தில், நாங்கள் தனியார் மயமாக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு, அவுட் சோர்சிங் என்ற பெயரால், பிறருக்குக் கொடுத்து, அதன்மூலமாக அவர்கள் ஆள் வைக்கிறார்கள்,
அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று மறைமுகமாக தனியார் மயமாக்கக் கூடிய ஒரு சூழ்ச்சியான திட்டத்தை முறியடிப்பதற் காகவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் என்ற பெயர் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இருக்கக்கூடிய ஒரு நிலையில், அந்தப் பெயரை மாற்றி, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திராவிடர் கழகத்தின் சார்பில்
ஆகஸ்டு 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
அதற்காக ஒரு பெரிய  கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகமும், ஒத்தக் கருத்துள்ளவர்களும் வருகின்ற 22 ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தின்முன் நடத்துவார்கள்.
அந்த ஆர்ப்பாட்டத்தோடு, வடக்கே இருக்கின்றவர் களின் ஆதிக்கம்  - இதுபோன்று பல துறைகளில் இருக்கிறது - மொழித் திணிப்பும் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக - காலங்காலமாக நடந்துவருகிற - தமிழ் மொழியில் ஒலிபரப்புகின்ற மாநில செய்திகளையெல்லாம் ரத்து செய்யப் போகிறோம் என்று வந்திருக்கின்ற அறிவிப்பு- அதிர்ச்சிக்குரிய ஒரு அறிவிப்பாகும். அதனை அவர்கள் வாபஸ் வாங்கிவிட்டால், அதற்கான போராட்டம் நடைபெறாது. அதனை அவர்கள் திரும்பப் பெறாவிட்டால், இந்தப் போராட்டத்தோடு, அந்தக் கோரிக்கையும் சேர்த்துக் கொள்ளப்படும்.
வானொலியில்
தமிழ் மொழியில் செய்திகள் ரத்தா?
இங்கே மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறாது - தொடர்ந்து மத்திய அரசு அதில் பிடிவாதம் காட்டினால், எங்கெங்கெல்லாம் தமிழ்நாட்டில் வானொலி நிலை யங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அமைதியான முறையில் அறப்போராட்டங்களாக - திராவிடர் கழகத்தாலும், ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங் கிணைத்து நடத்துவோம். - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆர்ப்பாட்ட விவரம்

நாள்: 22.8.2016 திங்கள் காலை 10.30 மணி
இடம்: நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தின் முன்
தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர்),
அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), க.மு.தாஸ் (விழுப்புரம் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), சொ.தண்டபாணி (கடலூர் மண்டல செயலாளர், திராவிடர் கழகம்), அ.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), தென்.சிவக்குமார் (கடலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), சி.காமராசு (அரியலூர் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), இரா.இராசு (புதுச்சேரி மண்டல தலைவர், திராவிடர் கழகம்).

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை



நெய்வேலி, ஆக. 13 
இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் தனிச் சிறப்புடன் கடந்த 60 ஆண்டுகளாக நெய்வேலியில் என்.எல்.சி.எனஅழைக்கப்படும்நெய் வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயர் தற்போது என்.எல்.சி. இந் தியா லிமிடெட் என மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் இந்த உத்தவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் என்.எல்.சி. பெயர் மாற்றத்துக்கு அந்த பகுதி பொது மக் களும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீண்டும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) என பெயரை மாற்ற வேண்டும். இல் லையென்றால் பெயர் மாற்றத்தை கைவிடும் வரை போராட்டத்தில் ஈடு படுவோம் என அறிவித்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்மான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (தொ.மு.ச.) பொதுச் செயலாளர் சுகுமார் கூறியதாவது:-
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்று பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது.
ஆனால், மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனமானது மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானதாக இருப்பதால் இந்திய அளவில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விதத்தில் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. பாரம் பரியமிக்க பெயரை மாற்றி இருப்பதை அறிந்து இங்குள்ள தொழிற் சங்கங்கள் மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொ.மு.ச. சார்பிலும், தொழிலாளர் கள் சார்பிலும் மாநிலத்தின் பெருமையை காக்கும் வகையிலும் மீண்டும் என்.எல்.சி. நிறுவனம் என்று செயல்பட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
-விடுதலை,13.8.16

முறைசாரா தொழிலாளர்களுக்கும் மகப்பேறு கால சலுகைகள்


புதுடில்லி, ஆக. 16- முறைசாரா தொழிலாளர்களுக்கும் மகப் பேறு கால சலுகைள் வழங்கும் வகையில் அரசு புதிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக  தொழிலா ளர் துறை செயலர் தெரிவித்து உள்ளார்.
பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சட்ட  திருத்த மசோதா சமீபத்தில் மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டது.இந்நிலையில் முறைசாரா தொழிலாளர்களும் மகப்பேறு கால  சலுகைகள் வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தொழிலா ளர் துறை செயலர் சங்கர் அகர் வால் கூறியதாவது:
முறைசாரா தொழில்களில் உள்ள பெண்  தொழிலாளர்களும் மகப்பேறு காலத்தில் பயனடை யும் வகையில், அரசு மற்றும் அவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்கியோர் தரப்பில் ஒரு  குறிப் பிட்ட தொகை திரட்டப்படும். இந்த குறிப்பிட்ட தொகையை காட்டிலும் அதிகபட்ச தொகையை கூட அவர்கள் பங்களிப்பாக வழங்கலாம். இந்த பணம் டெபா சிட் செய்யப்பட்டு மகப்பேறு காலத்தில் வழங்கப்படும்.
இதற்கான வட்டி உள்ளிட்ட வையும் வழங்கப்படும்.  சம்பந் தப்பட்ட உறுப்பினர், குறிப் பிட்ட வயதுக்குள் குழந்தை பெறாத பட்சத்தில் அவரது  கணக்கில் உள்ள இந்த மகப்பேறு கால நிதியை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். முறை சாரா தொழிலாளர்களுக்கு அரசு 6 மாத  விடுப்பு வழங்க இய லாது என்பதால் அவர்கள் மகப் பேறு காலத்தில்  பயன்பெற இது போன்ற திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது.
-விடுதலை,16.8.16

வீட்டுப் பணியாளர்களுக்கு விரைவில் இஎஸ்அய் திட்டம்


அய்தராபாத், ஆக.16 அனைத்து மக்களுக் கும் ஆரோக்கிய காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் ஒரு பகுதியாக, தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தை (இஎஸ்அய்) வீட்டுப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்துவதற்காக, டில்லி, அய்தரா பாத் ஆகிய நகரங்களில் விரைவில் சோதனை முயற்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, அய்தராபாதில் செய் தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத் தில் வீட்டுப் பணியாளர்களையும் கொண்டு வரும் வகையில், புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.
இஎஸ்அய்-யின் வசதிகளை வீட்டுப் பணியாளர்களுக்கும் அளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். வீட்டுப் பணியாளர்களுக்கு மருத்துவ வசதி களை அளிப்பதற்காக, இந்தத் திட்டத் தின் கீழ் மாதந்தோறும் ரூ.200-அய் முத லாளிகள் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தை, டில்லி, அய்தரா பாத் ஆகிய நகரங்களில் முதலில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்த நடவடிக்கையில் தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்த உள் ளோம். மேலும், மாநில அரசு களுட னும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அனைத்து அமைப்பு சாரா தொழி லாளர்களையும் சமூகப் பாது காப்புத் திட்டங்களின் கீழ் கொண்டு வர மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 5 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதியையும் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தையும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளன.
மகப்பேறு விடுப்பு சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப் பட்டதன் மூலம், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதில் நார்வே, கனடா ஆகிய நாடுகளை அடுத்து மூன்றாவது இடத் துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. புதிய மசோதாவின் மூலம், 18 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
தொழிலாளர் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க, அர்ப்பணிப்பு கொண்ட குழுக்களை அமைக்க முயற் சித்து வருகிறோம் என்று பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
-விடுதலை,16.8.16

"குழந்தை பெற்றுத் தரும் இயந்திரங்களாக தாய்மார்களைப் பார்க்காதீர்கள்!"

மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. எச்சரிக்கை
புதுடில்லி, ஆக.12 "தாய்மார்களை குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள் என்றும் மத்திய அரசை நோக்கி" கழக மகளிரணிச் செயலாள ரும், மாநிலங்களவை தி.மு.கழகக் குழுத் தலைவரு மான கனிமொழி ஆவேசமாக தெரிவித்தார்.
பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை திருத்த மசோதா ஆகஸ்டு 11-ஆம் தேதி மாநிலங்களவையில் கொண்டு வரப் பட்டது.
இந்த திருத்த மசோதாவில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை ஆறுமாதமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், கருத்தரிக்க வாய்ப் பில்லாத பெண்களுக்காக... தங்களது கருவில் குழந்தையைத் தாங்கி பெற்றுத் தரும் தாய்மார்களுக்கு இந்த ஆறுமாத விடுமுறை இல்லை என்றும், 15 முதல் 20 நாள் வரையிலான சாதாரண விடுமுறைதான் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து மாநிலங்களவையில் கனிமொழி பேசியதாவது:-
"பெண்களை குழந்தை பெறும் இயந்திரங்களாகப் பார்க்கா தீர்கள். பெற்ற குழந்தையோடு இருக்க வேண்டிய அந்தத் தாய்க்கு மகப்பேறு விடுப்பு என்பது நியாயமானதாக இல்லை. குழந்தை பெறுதல் என்பது பெண்களுக்கு மறு பிறப்பு மாதிரி. பிரசவம் ஆன தாய் மார்கள் அனைவரும் மீண்டும் ஆரோக்கியமான உடல் நலம் பெற ஒய்வு தேவை. எனவே, அனைத்து வித தாய்மார்களுக்கும்.
ஒரே மாதிரியான விடுப்பு என்றே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். ஆனால் கனிமொழி எம்.பி.க்கு பதிலளித்த மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, "மற்றவர்களுக்காக தங்கள் கருவில் குழந்தைகளை சுமந்து பிரசவிக்கும் பெண்கள். குழந்தை பெற்ற பிறகு குழந்தையுடனே இருப்பதில்லை. அதனால் அவர்கள் இந்த மகப்பேறு விடுமுறை சலுகைக்குள் வரமாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
 -விடுதலை,12.8.16

திங்கள், 18 ஜூலை, 2016

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நெய்வேலி, ஜூலை 17
 பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழி லாளர்கள் நெய்வேலியில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி குடும்பத்துடன் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த தொழிலாளர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இந்த கோரிக்கையை நிறை வேற்ற மத்திய, மாநில அரசு கள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் உள்ள அம் பேத்கர் சிலை முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி போராட்டம் நடத் துவதற்காக நேற்று (16.7.2016) ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அம்பேத்கர் சிலை முன்பு கூடினர். இது பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி காவல் துறையினர் விரைந்து சென்று, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் களிடம் அரை நிர்வாண போராட் டத்துக்கு அனுமதி கிடையாது என்றனர்.
இதையடுத்து கோரிக்கை களை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க சிறப்பு தலைவர் ராம மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயலாளர் சேகர் கூறு கையில், என்.எல்.சி. நிறுவனத் தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தும் கூட, என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றால், காவல் துறை தடுக்கிறது.
எனவே ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து தலையிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந் தரம் செய்ய வேண்டும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வருகிற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தில் என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தர தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15ஆம் தேதி நெய் வேலியில் என்.எல்.சி. சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவை புறக்கணித்து ஒப் பந்த தொழிலாளர்கள் குடும்பத் துடன் ரயில் மறியல் போராட் டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,17.7.16

ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு 64 சதவீத ஊதிய உயர்வு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஜூலை 17- ஆயத்த ஆடை நிறுவன தொழி லாளர்களுக்கு 64 சதவீத ஊதிய உயர்வை 6 சதவிகித வட்டியுடன் 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் நலச்சட்டத் தின்படி ஒவ்வொருதுறை யிலும் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். இந்த குறைந்தபட்ச ஊதி யத்தை ஒவ்வொரு 5 ஆண் டுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கவேண்டும். ஆனால் திருப்பூரை மய்யமாகவைத்து தமிழகம் முழுவதும் செயல் படும் ஆயத்த ஆடை நிறுவ னங்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தங்களதுதொழி லாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய் யாமலும், ஊதிய உயர்வு வழங்காமலும் இழுத்தடித்து வந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஆயத்த ஆடை தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை 64 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அர சாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்துதனி யார் ஆயத்த ஆடைதயா ரிப்பு நிறுவனங்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றது.இந்த தடையை நீக்கக்கோரி அரசு தரப்பிலும், ஆயத்த ஆடை தொழிலாளர்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் `ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்து, ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வை 64 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2014 இல் பிறப்பித்த உத்தரவு செல்லும்.

கடந்த 2004 இல் இருந்து ஆயத்த ஆடை தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு வழங் கப்படாத காரணத்தால்இந்த உயர்வை தமிழக அரசு அளித் துள்ளது. இது நியாயமான உத்தரவுதான். எனவேஇந்த உத்தரவு முறைப்படி அறி விக்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியுடன் நிலுவைத் தொகையை 64 சதவிகித ஊதிய உயர்வை ஆயத்த ஆடை நிறுவனங்கள், தங்களது ஊழி யர்களுக்கு 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
-விடுதலை,17.
-

வெள்ளி, 8 ஜூலை, 2016

ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான உச்சவரம்பு முழுமையாக நீக்கம்


புதுடில்லி, ஜூலை 8 -பி.எப். திட்டத் தின் கீழ், ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்சவரம்பு முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது.

அதாவது ரூ. 15 ஆயிரம் வரையி லான சம்பளத்திற்கு மட்டுமே, நிறு வனங்கள் செலுத்தும் வருங்கால வைப்புநிதியிலிருந்து, 8.33 சதவி கிதத் தொகை பிடித்தம் செய்யப் பட்டு, அது சம்பந்தப்பட்ட தொழி லாளரின் ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது.

தற்போது ரூ. 15 ஆயிரம் என்ற சம்பள வரம்பு நீக்கப்பட்டு, இனிமேல் ஒரு தொழி லாளர் பெறும் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், அந்த முழுத் தொகை மீதும் ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு, பிடித்தம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதிச் சட்டப்படி, நிறு வனங்களில் பணியாற்றும் தொழிலாளர் களின் சம்பளத்தில் ஒரு பகுதி, வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட வேண்டும். அதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தொழிலாளர்களின் பெயரில் தங்களின் பங்களிப்புத் தொகை யாக செலுத்த வேண்டும். இதில், நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் 8.33 சதவிகிதத் தொகை மட்டும் தனி யாக கணக்கிடப்பட்டு, அது தொழிலாளியின் ஓய்வூதிய நிதிக் கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த நிதியிலிருந்து, 58 வயது நிறைவடைந்து பணி ஓய்வுபெறும் தொழிலாளிக்கு, அவரது இறுதிக்காலம் வரை மாதந்தோறும் ஓய்வூதியம் வழங் கப்படும்.கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட விதிகளில் 2 மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வுத்தொகையை ரூ.ஆயிரமாக நிர்ணயித் தும், சம்பளத் தொகையில் ரூ. 6 ஆயிரத்து 500-க்கு மட்டுமே 8.33 சதவிகிதம் ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும் என்பதை, ரூ. 15 ஆயிரம் வரையிலான சம்பளத் தில் 8.33 சதவிகிதம் என்று மாற் றியும் விதிகள் திருத்தப்பட்டன.

இதன்மூலம் மாதாந்திர ஓய் வூதியத் தொகை ரூ. 541 என்பதிலிருந்து, ரூ. 1250 ஆக உயர்ந் தது. அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 250 வரை ஓய்வூதியம் பெறலாம் என்றும் ஆனது.தற்போது, இந்த விதிகளிலும் திருத்தம் செய்து, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் புதிய அரசா ணையை ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இதன்படி, தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தில் ரூ. 15 ஆயி ரம் வரையிலான தொகைக்கு மட்டுமே, ஓய்வூதிய நிதி கணக் கிடும் என்பது மாற்றப்பட்டு, எவ்வளவுசம்பளம் பெற்றாலும் அந்த முழுத் தொகைக்கும் 8.33 சதவிகிதம் ஓய்வூதிய நிதிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,8.7.16