கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு
சென்னை, ஆக.27_ கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா அறிவித்தார். சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் கோகுல இந்திரா நேற்று (26.8.2015) வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் செயல்பட்டுவரும் 1163 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் களாக உள்ள கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் 2015 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அடிப்படைக் கூலியில் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும். கைத்தறி குழுமத் திட்டம்: திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அந்தப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நெசவாளர்களின் திறனை மேம்படுத்தவும் திருச்சியில் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டம் ரூ.49.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசின் பங்காக ரூ.9.50 கோடி வழங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலையின் பதனிடும் திறனை அதிகரிக்க வேண்டி, ஆலையின் இயந்திரங்களை நவீனப்படுத்த அரசு ரூ.5.82 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆலையைப் புதுப்பிக்க ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
குறு-சிறு தொழில் நிறுவனங்களின் வசதிக்கு மாநிலத் தொழில் மய்யம்
சென்னை ஆக.27_ குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வசதிக்காக, மாநிலத் தொழில் மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் ப.மோகன் வெளியிட்ட அறிவிப்புகள்: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான வசதிகள்-சேவைகளை சிட்கோ, டான்சி போன்ற நிறுவனங்களிடம் இருந்து எளிதில் பெறும் வகையில், சென்னை கிண்டியில் மாநிலத் தொழில் மையம் அமைக்கப்படும். டான்சியின் தொழிற்கூடங்களை புதிய பயன் பாட்டுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு கணினிமய மாக்கப்படும். தமிழகத்தில் இப்போது 15 மாவட்டங் களில் சிட்கோவின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 17 மாவட்டங் களிலும் அவற்றின் கிளைகள் அமைக்கப்படும். திருவண்ணாமலை, சேலம், திருவாரூர், புதுக் கோட்டை மாவட்டங்களில் புதிய தொழிற்பேட் டைகள் அமைக்கப்படும். மேலும், குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பில் தனியாகவோ, கூட்டு முயற்சியாகவோ தனியார் தொழிற்பேட்டைகளை அமைக்க தொழில் முனைவோர்கள் முன்வந்தால் சிட்கோ நிறுவனம் அவர்களுடன் இணைந்து புதிய தொழிற்பேட்டை களை உருவாக்கும் என்று அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒன்பது புதிய தொழில் பிரிவுகள்
சென்னை, ஆக.27_ எட்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 9 புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர்-வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் மோகன் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பைத் தரும் புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளது. அதன்படி, கடலூரில் மெரைன் இன்ஜின் பிட்டர் பிரிவும், கோவையில் டிஜிட்டல் போட்டோ கிராபர், பரமக்குடியில் சூரிய சக்தி சாதனங்கள் பராமரிப்பு-மகளிருக்கென துணி வெட்டுதல்-தைத்தல் பிரிவுகள், போடியில் எலக்ட்ரீசியன் பிரிவும், அரக்கோணத்தில் மொபைல் போன் தொழில் பிரிவும், திண்டுக்கல்லில் ஏ.சி. தொழில் பிரிவும், திருச்சியில் மின்தூக்கி தொழில் பிரிவும், சேலத்தில் வர்ணம் பூசுபவர் தொழில் பிரிவும் தொடங்கப்படும் என்று அமைச்சர் மோகன் அறிவித்தார்.
-விடுதலை,27.8.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக