சனி, 29 ஆகஸ்ட், 2015

இணையம் மூலம் தொழிலாளர் நல வாரியப் பதிவு: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, ஆக.27_ இணையதளம் மூலமாக, தொழிலாளர் நல வாரியங் களில் பதிவு செய்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும் என்று தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ப.மோகன் அறிவித்தார். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன் கிழமை நடைபெற்ற விவா தங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறி விப்புகள்: அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியங்களில் பதிவு செய்தல், புதுப்பித்தல், மனுக்களை சமர்ப்பித்தல் போன்ற பணிகளுக்காக மாவட்டத் தலைநகரங் களில் உள்ள சமூக பாது காப்புத் திட்ட அலுவல கங்களுக்கு தொழிலாளர் கள் வந்து செல்ல வேண் டும். அதிலுள்ள சிரமங் களைக் குறைக்கும் வகையில், இந்தப் பணிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும். விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, அவற் றின் நிலை குறித்து தொழி லாளர்களின் செல்லிடப் பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் தெரி விக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள்-வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களை வாரியங்களில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், நலத்திட்ட உதவிகள், பதிவு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள், புகார்கள் ஆகியவற்றைத் தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்ணுடன் கூடிய பலமொழி உதவி மையம் உருவாக்கப்படும். தொழிலாளர்களின் பதிவு எண்ணிக்கை கன்னியா குமரி, வேலூர், திரு வள்ளூர் மாவட்டங் களில் அதிகரித்து வருகிறது. எனவே, மனுதாரர்கள் பதிவு செய்ய காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவிகளை தாமத மின்றி வழங்கவும் மூன்று மாவட்டங்களிலும் அலு வலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.
-விடுதலை,27.8.15
கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு
சென்னை, ஆக.27_ கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா அறிவித்தார். சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் கோகுல இந்திரா நேற்று (26.8.2015) வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் செயல்பட்டுவரும் 1163 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் களாக உள்ள கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் 2015 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அடிப்படைக் கூலியில் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும். கைத்தறி குழுமத் திட்டம்: திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அந்தப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நெசவாளர்களின் திறனை மேம்படுத்தவும் திருச்சியில் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டம் ரூ.49.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசின் பங்காக ரூ.9.50 கோடி வழங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலையின் பதனிடும் திறனை அதிகரிக்க வேண்டி, ஆலையின் இயந்திரங்களை நவீனப்படுத்த அரசு ரூ.5.82 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆலையைப் புதுப்பிக்க ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
குறு-சிறு தொழில் நிறுவனங்களின் வசதிக்கு மாநிலத் தொழில் மய்யம்
சென்னை ஆக.27_ குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வசதிக்காக, மாநிலத் தொழில் மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் ப.மோகன் வெளியிட்ட அறிவிப்புகள்: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான வசதிகள்-சேவைகளை சிட்கோ, டான்சி போன்ற நிறுவனங்களிடம் இருந்து எளிதில் பெறும் வகையில், சென்னை கிண்டியில் மாநிலத் தொழில் மையம் அமைக்கப்படும். டான்சியின் தொழிற்கூடங்களை புதிய பயன் பாட்டுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு கணினிமய மாக்கப்படும். தமிழகத்தில் இப்போது 15 மாவட்டங் களில் சிட்கோவின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 17 மாவட்டங் களிலும் அவற்றின் கிளைகள் அமைக்கப்படும். திருவண்ணாமலை, சேலம், திருவாரூர், புதுக் கோட்டை மாவட்டங்களில் புதிய தொழிற்பேட் டைகள் அமைக்கப்படும். மேலும், குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பில் தனியாகவோ, கூட்டு முயற்சியாகவோ தனியார் தொழிற்பேட்டைகளை அமைக்க தொழில் முனைவோர்கள் முன்வந்தால் சிட்கோ நிறுவனம் அவர்களுடன் இணைந்து புதிய தொழிற்பேட்டை களை உருவாக்கும் என்று அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒன்பது புதிய தொழில் பிரிவுகள்
சென்னை, ஆக.27_ எட்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 9 புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர்-வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் மோகன் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பைத் தரும் புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளது. அதன்படி, கடலூரில் மெரைன் இன்ஜின் பிட்டர் பிரிவும், கோவையில் டிஜிட்டல் போட்டோ கிராபர், பரமக்குடியில் சூரிய சக்தி சாதனங்கள் பராமரிப்பு-மகளிருக்கென துணி வெட்டுதல்-தைத்தல் பிரிவுகள், போடியில் எலக்ட்ரீசியன் பிரிவும், அரக்கோணத்தில் மொபைல் போன் தொழில் பிரிவும், திண்டுக்கல்லில் ஏ.சி. தொழில் பிரிவும், திருச்சியில் மின்தூக்கி தொழில் பிரிவும், சேலத்தில் வர்ணம் பூசுபவர் தொழில் பிரிவும் தொடங்கப்படும் என்று அமைச்சர் மோகன் அறிவித்தார்.
-விடுதலை,27.8.15
Like   Comment   
  • Godrej Dwu
    Write a comment...
மத்திய அரசு ஊழியர்களுக்கான
7ஆவது ஊதியக் குழு
கால அவகாசம் நீட்டிப்பு 
புதுடில்லி, ஆக.28_ 7ஆவது ஊதியக் குழுவின் கால அவகாசத்தை, வரும் டிசம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக ஊதியக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தனது சுட்டுரையில் (டுவிட்டர்) புதன்கிழமை வெளியிட்ட பதிவில், "7ஆவது ஊதியக் குழுவின் கால அவகாசத்தை, வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது' என்று தெரிவித் துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியங் களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தியமைக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 7ஆவது ஊதியக் குழுவை அமைத்தது.  குழுவின் அறிக்கையை, வரும் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கால அவகாசம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,28.8.15

மூட்டு எலும்புகள் பலம் பெற
10 நிமிட சூரிய ஒளி அவசியம் 

சென்னை, ஆக.28_ மூட்டு எலும்புகள் பலம் பெறுவதற்கு ஒரு நாளைக்கு பத்து நிமிட சூரிய ஒளி உடலில் படுவது அவசியம் என ராயப்பேட்டை மருத்துவமனையின் மூடநீக்கியல் நிபுணர் மருத்துவர் நசீர் அகமது தெரிவித்தார். எலும்பு மூட்டு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவர் நசீர் அகமது பேசியதாவது: எலும்பு வலுவிழத்தல் நோய், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் தாக்குகிறது.
ஆண்களைவிட பெண்களையே இந்தப் பிரச்சினை அதிகம் பாதிக் கிறது. கால்சியம், வைட்டமின் டி3 குறைபாடுகளே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.  கால்சியம் சத்துக்களைப் பெறுவதற்கு கேழ்வரகை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி3 சத்துக்களைப் பெறுவதற்கு, காலை 10 மணி முதல் 4 மணி வரை ஒரு நாளைக்கு பத்து நிமிடம் சூரிய ஒளி உடலில் படுவது அவசியம் என்றார் அவர். எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 350 பேருக்கு எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்யப்பட்டது.

தொழிலினால் ஜாதி கற்பிப்பது பொருந்துமா?


(இது சென்னை லவுகீக சங்கத்தில் ஒருவராகிய ம.மாசிலாமணியவர்களால் இயற்றப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் (1905) அச்சிடப்பட்டு வெளிப்படுத்தப் பட்டிருக்கும் “வருண பேதவிளக்கம்” என்னும் பழைய புத்தகத்தில் உள்ள 4ஆவது அதிகாரம்)
வேதம் ஓதுபவர்களை வேதியர் எனவும், சாத்திரம் சாதிப்பவர்களை சத்திரியர் எனவும், வேளாண்மை வாணிபம் முதலியவற்றைப் புரிவோரை வைசியர் எனவும், மற்றைய தொழில்களை இயற்றுவோரைச் சூத்திரர் எனவும் இவ்வாறு தொழிலினாலே வருண பேதம் ஏற்பட்டதெனின், இந்நாற்கிரியைகளையும் இயற்றுவோர் மற்றெல்லாத் தேசங்களிலும் இருக்க அவ்விடங்களில் ஏன் வருணபேதம் ஏற்படுத்தப்படவில்லை?
மேலும் வேதங்களை ஒழுங்குபடுத்தின வலைச்சியின் புத்திரராகிய வியாசரும், இந்திரலோகத்துப் பொதுமகளாகிய ஊர்வசியின் கெர்ப்பத்தினின்று உதித்த அருந்ததி யென்னும் மாதை மணம்புரிந்த வசிட்ட முனியும், சத்திரியகுல மரபின ருக்கு சண்டாளச்சி கெர்ப்பத்தினின்று உதித்துத் தமது தபோ பலத்தினால் திருசங்கு மகாராஜனை ஸ்தூல தேகத்துடனே சொர்க்கத்திற்கனுப்ப அங்ஙனமே அவன் தூல தேகத்துடனே செல்ல,
அச்சொர்க்க வாசிகள் மண்ணுலகினின்று இவ்விடம் வருகின்றவன் யாரெனச் சினந்து அவனைத் தலைகீழாகத் தள்ள, தள்ளுண்ட அவர் அபயம்! அபயம் என ஓலமிட்டுக் கொண்டு அந்தரத்தில் வருவதை நோக்கிக் கோபித்து அனுஷம், கேட்டை, மூலம், பூராடம்,
உத்திராடம் ஆகிய தேவர்கள் என்னும் இந்நட்சத்திரங்களைப் பிடுங்கித் தென்றிசையில் நாட்டித் திருசங்கு சொர்க்கமென்னும் ஓர் நவீன சொர்க்கத்தையமைத்த விசுவாமித்திரனும், தொழிலி னால் பிராமணர் ஆனது போல் சூத்திரருக்கு சமையல் செய்யும் பிராமண சுயம்பாகிகளும், கள் விற்கும் பிராமணர்களும் சூத்திரர்களாக வேண்டுமே?
மேலும் பிராமணர் மது மாமிசங்கள் அருந்தாதிருப்ப தனால் உயர்த்தப்பட்டார்கள் எனின், பூர்வகாலத்தில் அனேக பசுக்களைக்கொன்று விற்று ஜீவனம் செய்துவந்த பிராமணகுலத்தில் தோன்றிய அலீகர்த்தன் என்னும் முனியும்,
நாயின் மாமிசத்தைப் புசித்த பிராமணராகிய வர்ம தேவரும், விருதுவென்னும் தச்சனிடத்தில் அனேக பசுக்களை விலைக்கு வாங்கியுண்ட பிராமணராகிய பரத்துவாச மகாமுனியும், சண்டாளன் வீட்டில் செத்துக் கிடந்த நாயின் மாமிசத்தைக் கேட்டு வாங்கிப்புசித்த விசுவாமித்திரரும் சூத்திரர்களாக வேண்டுமே?
பூர்வ காலத்தில் உண்டு வந்தார்களேயன்றி இக்காலத்தில் உண்பதில்லை எனின், இக்காலத்தில் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், மாட்டின் மாமிசத்தால் செய்து வரும் பானங்களையும் உண்ணுகிறார்களே!
அன்றியும் மாமிசத்தின் சாரமாகிய பால், தயிர், வெண்ணெய், நெய் முதலியவற்றை உண்பதும் அன்றி யாகம் செய்து செய்து அஸ்வம் (குதிரை) முதலியவற்றின் உடலையும் உண்டு வருகிறார்களே!
பிராமணர், பால் கறந்து கொள்வது ஜீவ வதை அல்லவென்றும், மாமிச போஜனம் செய்வது ஜீவ வதையென்றும், பால், ஊன் இனத்தைச்சேர்ந்ததல்லவென்றும் சொல்லின், கன்றுக்காக சுரக்கும் பாலை கன்றை வஞ்சித்துக் கறந்து கொள்வதும்,
தங்கள் சுகத்தையேயன்றி மற்ற பிராணி களின் சுகத்தைக் கருதாது வனங்களில் சுயேச்சையாக தன்னிஷ்ட ஆகாரத்தை யுண்டு ஓடி உலாவித்திரிந்து வரும் விலங்குகளைப்பிடித்து தங்களிஷ்டப்படி ஒழுக வண்டியிற் பூட்டி தங்களைச் சுமந்து செல்லும்படி ஒடுக்கி நடத்துவதும் ஜீவஹிம்சை யல்லவா?
பால் கறந்து கொள்ளு வதற்கும், சுமைகளைச் சுமப் பித்துக் கொள்ளுவதற்கும் பிரதி யாக அவற்றிற்கு வேண்டிய ஆகாரத்தை வருத்திச் சம்பாதித்தது அளிப்பது கறந்து கொண்ட பாலுக்கும் பெற்றுக்கொண்ட வருத்தத்திற்கும், அவ்வாகாரம் பிரதிபலனாவதால் அது குற்றம் அல்ல எனின், அவ்விலங்குகள் தங்கள் பாலையும், வருத்தத்தையும் பெற்றுக் கொண்டு தங்களுக்கு ஆகாரம் அளிக்கும்படி வேண்டிக் கொள்ள வில்லையே?
மேலும் பால், ஊன் இனத்தைச் சேர்ந்ததும் அல்ல, தாவர இனத்தைச் சேர்நததும் அல்லவெனின், அதுபிறிது என்ன இனத்திற் சேர்ந்தது? அதனில் ஜீவன் இல்லை எனின், கோழி முதலியவற்றின் அண்டங்களிலும் (முட்டை) ஜீவன் இல்லையே! ஆகவே அவற்றினை ஏன் உண்பதில்லை?
ஆகையால் அமிர்தம் அவற்றின் ஆகாரத்தின் அளவே அதிகரித்தும், குறைந்தும் இருப்பதால் அது மாமிசத்தின் ஓர் கூறு என்றும், பிராமணரும் மாமிச போஜனர்களேயென்றும் தெளிவாக விளங்குவதும் அன்றி பூர்வகாலந்தொடங்கி பிராமணர் சோமபானமும் செய்து வருவதாக அவர்கள் வேதாகமங்களினாலே தெளிவாவதால் அவ்வகுப்பினரை மட்டும் போஜனத்தினால் உயர்ந்த ஜாதியார் என விசேஷித்துப் பேச வேண்டியது என்ன?
புளிப்பும், நாரும் உள்ள சிறு மாங்கொட்டையை நாட்டி, அது மூன்று, நான்கு அடி உயரம் வளர்ந்த பின் அதனை மற்றொரு மரத்துடன் ஒட்டுவதனால் அக்கனியின் நிறம், மணம் பருமன் முழுதும் மாறிவேறுபடுவது போல,
பிராமணர் உதித்த ஐந்தாம் வயது வரையில் சூத்திரராக இருந்து ஆறாம் வயதில் செய்விக்கப்படும் உபநயனத்திற்குப் பின் பிராமணர்கள் ஆகிறார்கள் எனின், ஒட்டுமாங்கனியின் குணங்கள் யாவும் வேறுபட்டிருப்பது போல உபநயனம் பெற்ற பிராமணருக்கும் புலன் பொறிகளிலும் அகக்கருவி, புறக்கருவிகளிலும் ஏ«னும் பேதம் இருக்க வேண்டுமே?
அதன்றி ஐந்து வயது வரையில் சூத்திரராக இருக்கும் பிராமணப்பிள்ளைகள் உபநயனத்திற்குப் பின்பிராமணர் ஆகிறார்கள் எனின், ஆறுவயதிற்குட்பட்ட சூத்திரப்பிள்ளை களையும் உபநயனம் செய்து ஏன் பிராமணர் ஆக்குவ தில்லை?
பிராமணச் சிறுவர்களே உபநயனம் செய்து பிராமணர் ஆக்கப்படுவர் எனின், அது ஜாதி அபிமானம் அன்றோ?
சூத்திர குலத்தினராக உதித்த ஆண் பாலருக்கு உபநயனம் செய்து பிர்மகுலத்தினர் ஆக்குவது போல, பிராமண ஸ்திரீகளுக்கு உபநயனஞ்செய்து பிரம்ம குலத்தினர் ஆக்குவதில்லையே! ஆகையால் அவர்கள் சூத்திர குலத்தினராக வேண்டுமே?
பிராமண ஸ்திரீகள் உபநயனத்தினரால் அல்ல, பிரம்ம குலத்தினராகவே உதித்து மாத சூதகம் ஆகும் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் சூத்திரகுலத்தினராக மாறி, மாதசூதமான அய்ந்தாம்நாள் செய்யும் ஸ்நானத்தினால், சூத்திரத்துவம் மாறி மீளவும் பிராமணர் ஆகிறார்கள் எனின், ருதுவதியான நாள்முதல், முப்பது வருடகாலம் அல்லது ஸ்திரீக்கு 44, 50 வரைக்கும் வியக்கத்தக்க கிரமமாய் ஒவ்வொரு மாதமும் மாத சூதகம் கண்டுகொண் டேயிருக்கும், இம்முப்பது வருட காலமும் நகமும் சதையும் போல சூத்திரத்துவம் பிராமண ஸ்திரீகளை விட்டுப்பிரியாது இருக்கின்றதே!
மேலும் பிர்மகுலத்தினராகவே யுதித்த பிராமண ஸ்திரீ களுக்கு பாப சம்பந்தமாகிய சூத்திரத்துவம் பற்றினது எவ்வாறு? மாத சூதகமாகிய இழிவு பிராமண ஸ்திரீகளிடத்தில் அபின்ன    மாகவே இருக்கிறதெனின், அசுத்தமும் ஈனமும் பொருந்திய மாத சூதகத்தையுடைய பிராமண ஸ்திரீகளை பரிசுத்த தேகத்தையுடைய பிராமணர் அங்கீகரித்துக் கொள்வது எப்படி?
ஆகையால் பிராமணர் அவர்களைத் தீண்டாமலும், அவர்கள் யாகம் செய்யும் போஜனத்தை உண்ணாமலும் அல்லவோ  இருத்தல் வேண்டும், அவ்வாறு அன்றி பிராமணர், மாதரைத் தங்களுக்குச் சமப்படுத்தி இருப்பதால் (யாதொரு பொருளின் கூறுகள் நம் முதற் பொருளின் லட்சணமுடையன வாயிருப்பது பிரத்தியட்சமாயிருப்பது போல) உபநயனத்திற்கு முன் பிராமணரும், மாதந்தோறும் பிராமண ஸ்திரீகளும் சூத்திரராகவே இருப்பதால் அவர்களையும் சூத்திரர்கள் என்றே அங்கீகரிக்க வேண்டும். அல்லவெனின் சூத்திரராக இருக்கும் பிராமண ஸ்திரீகளுடன், பிர்ம குலத்தைச் சேர்ந்த பிராமணர் சேந்திருப்பது எங்கனம்? நீரோடுநீர் சேர்வதன்றி நெய் சேராதே.
பருத்தி நூலை முப்பிரிவாகக் கத்தரித்துப் பூண்டிருக்கும் பூநூலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், வள்ளுவர் கோமுட்டிகள், வணிகர், கம்மாளர் முதலியவர்களும் பூண்டிருக்கிறார்களே! ஆகவே பிராமணர்களுக்கு மட்டும் பூநூலினால் உயர்வு எப்படி உண்டாகும்?
பிராமணர் வேதம் ஓதுதலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், இக்காலத்தில் பறையர் முதலிய சர்வ ஜாதியாரிலும் அனேகர் சுற்றியிருப்பதும் அன்றி மாக்ஸ்முல்லர், சர், உவில்யம் ஜோன்ஸ் முதலியவரும் சதுர்வேதங்கள் முழுவதையும் சுற்றிருக்கிறார்களே! பிரம்மக்கியானந்து பிராமண என்னும் வாக்கியத்தின்படி பிரமத்தியானம் உள்ளவர்களாக இருக்கும் மற்றய மூவினத்தவரையும் ஏன் பிராமணர் எனவும் பிரமத்தியான மற்றவர்களாயிருக்கும் பிராமணரைச் சூத்திரர் எனவும் மொழிவதில்லை?
ஆகையால் பூலோகத்தில் உள்ள சமஸ்த மாந்தரும், ஏக ஜாதியாராக இருக்க இத்தேசத்தவர்கள் மட்டும் தொழிலினால் ஏற்றத்தாழ்வான நால்வகைச் சாதியாராக கடவுளால் உருவாக்கப்பட்டார்களெனச் சாதிப்பது தாஷ்டாந்த திருஷ்டாந்த வழுவாய் சமரசப்படாது ஆதலின் அச்சாதனை யைக் கொண்டு வருண பேதம் உண்டு என்று சாதித்தல் கூடாது. ஆகையால் அது சாதனை வழுவேயாம்.
(குடி அரசு - 1935)
-விடுதலை,28.8.15

நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது


நெய்வேலி, ஆக.28_ ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறாத நிலையில், என்.எல்.சி., தொழிலா ளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், நேற்று (27.8.2015) விலக்கிக் கொள்ளப்பட்டது.
என்.எல்.சி., நிரந்தர தொழிலாளர்களுக்கு, 2012 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து வழங்க வேண் டிய ஊதிய உயர்வு குறித்து, அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள், நிர்வாகத்துடன் நடத்திய பல கட்ட பேச்சில், சுமுக முடிவு எட்டப்பட வில்லை; மண்டல தொழி லாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சும் தோல்வி அடைந் தது; இதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க, தொழிலாளர் நல ஆணை யகம் தயாரானது.
அப்படி அறிவித்தால், ஊதிய மாற்று ஒப்பந்த விவகாரம், நடுவர் மன்றத் துக்கு செல்லும் நிலை ஏற் படும். இதனால், தொழிற் சங்க நிர்வாகிகளுடன் என்.எல்.சி., நிர்வாகம், நேற்று முன்தினம், சென் னையில், மண்டல தொழி லாளர் நல ஆணையர் முன்னிலை யில், மீண்டும் பேச்சு நடத்தியது. அப் போது எடுக்கப்பட்ட முடிவுகள், பெரும்பாலான தொழிலாளர்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற் படுத்தியது.
இதைத் தொடர்ந்து, நேற்று மதியம், 12 மணி யளவில், நெய்வேலி, அய்.என்.டி.யு.சி., தொழிற் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தொ.மு.ச., பொதுச்செய லாளர் ராசவன்னியன் பேசுகையில்,
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை களை என்.எல்.சி., நிர் வாகம் நிறைவேற்றித் தர, ஒரு வாரம் அவகாசம் தருகிறோம்; அதற்குள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என அறிவித்து, போராட்டத்தைத் திரும் பப் பெறுகிறோம்.
இன்று (நேற்று) இரவு, 10 மணிமுதல் அனைத்து நிரந்தர தொழிலாளர் களும் பணிக்குச் செல்ல வேண்டும், என்றார். இதையடுத்து, 39 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் பணிக் குத் திரும்பினர்.
-விடுதலை,28.8,15

அய்ரோப்பிய தொழிலாளர் போராட்டங்களும் பெரியாரும்

- ஆ.இரா.வேங்கடாசலபதி

பெரியாரின் அய்ரோப்பிய சுற்றுப்பயணம்
பெரியார் ஈ.வெ.ராமசாமி 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அய்ரோப்பிய சுற்றுப்பயணமாகப் புறப்பட்டுச் சென்றார். அடுத்த ஒராண்டில் சோவியத்ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின்,  போர்ச்சுகல், இங்கிலாந்து முதலான அய்ரோப்பிய நாடுகளில் எல்லாம் பயணம் மேற் கொண்டார். அக்காலத்தில் ஓங்கியிருந்த பல முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பு கொள்வதற்கு இந்தச்சுற்றுப் பயணம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. உலகமே பொருளாதார மந்தத்தில் சிக்கித்தவித்து வந்த சமயத்தில், தொழில்துறையிலும் சமூகக்களத்திலும் சோவியத் குடியரசு நிகழ்த்தியிருந்த சாதனைகளை, அவர் அந்நாட்டில் தங்கியிருந்த மூன்று மாதங்களில் கண்ட பெரியாருக்கு அந்நாட்டைப் பற்றிய ஒரு பெருமிதமான உணர்வை அளித்தது. காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகெங் கும் நேரு உள்ளிட்ட தேசியவாதி களிடையே உணர்வை ஊட்டி வளர்த்து வந்த கம்யூனிசக் கொள்கைகளால் கவரப்பட்ட, முதலாளித்துவத்திற்கு எதிரான என்ற லீக் ஆகெய்ன்ஸ்டு இம்பீரியலிஸ்டு அமைப்பினரை பெரியார் ஜெர்மனியில் சந்தித்தார். மேலும் இந்தப்பயணத்தின்போது, நிர்வாணிகள், சுதந்திரச் சிந்தனையாளர்கள், நாத்தி கர்கள், புலம்பெயர்ந்த புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் என்று பற்பலரைப் பெரியார் சந்தித்தார்.. இச் சந்திப்புகள் மனக்கிளர்ச்சி தருபவையாக இருந்தன என்பதில் அய்யமேதுமில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் போதுதான் முதன் முதலாக இனப்பிரச்சினையைப் பற்றி பெரியார் எதிர்கொள்ள நேர்ந்தது என்பது இதுவரை எவரும் அறியாதது.
இங்கிலாந்து நாட்டில் பெரியார்
1932 ஆம்ஆண்டு கோடைகாலத்தில் இங்கிலாந்தில் 20 நாட்கள் பெரியார் தங்கி இருந்தபோது, இங்கிலாந்து நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப் பினரான ஷாபூர்ஜிசக்லத்வாலா அவர் களையும்,  இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யில் பங்காற்றிய செல்வாக்கு செலுத்திய புகழ் பெற்ற ரஜனிபாமிதத் என்பவரின் அண்ணனும், இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவ ருமான க்ளமென்ஸ்பாமிதத் என்ப வரையும் பெரியார் சந்தித்தார். முதலாளித் துவத்திற்கு எதிரான கூட்டமைப்பு,  தொழிலாளர்களுக்கான அனைத்துலக நிவாரண சங்கம், இங்கிலாந்து கம்யூனிஸ் கட்சியின் நாளிதழான டெய்லி வொர்க்கர் அலுவலகம் போன்ற பல்வேறுபட்ட கம் யூனிச அமைப்புகளின் அலுவலகங்களுக் கும் பெரியார் சென்றிருந்தார்.
இங்கிலாந்தில் காலடி எடுத்துவைத்த நான்காவது நாள் பெரியார் (பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்) சக்லத்வாலாவைச் சந்தித்தார். அதுமுதற் கொண்டு, போலீஸ் கெடுபிடியால் இங்கிலாந்தை விட்டு வெளியேறும்வரை பெரியார் சக்லத் வாலாவுடனேயே தனது பெரும் பகுதி நேரத்தைச் செலவழித்தார். ஒருமாபெரும் தொழிலாளர் பேரணியில் பேசிய பெரியார் இங்கிலாந்து தொழிற்கட்சியின் தலைவர் ஜார்ஜ்லேஸ்ட்பரியைக் கடுமையாகச் சாடி விமர்சித்தார்.
இங்கிலாந்தில் பெரியார் தங்கியிருந்த இந்தக் குறுகியகாலத்தில்தான், புகழ்பெற்ற ஸ்காட்ஸ்பரோ சிறுவர் வழக்கைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. டூ கில் எ மாக்கிங் பேர்டு என்ற ஹார்பர்லீயின் புகழ்பெற்ற புதினத்தை எழுதுவதற்கு இந்தவழக்குதான் தூண்டுதலாக அமைந்தது என்று கூறப் படுகிறது.
அநீதிக்கு உள்ளான அமெரிக்க கருப்பின இளைஞர்கள்
அமெரிக்க நாட்டு டென்னசி மாநிலத் தின் சட்டனூகாரயில் நிலையத்தில் இருந்து 1931 மார்ச் 25 அன்று ஒன்பது ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்கள் ரயில் ஏறினர். ஆண்களைப்போல் உடைஉடுத்தி பராரி யான இரண்டு வெள்ளைப் பெண்களைக் கற்பழித்த குற்றத்திற்காக விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இனப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்தக் கால கட்டத்தில் நீதிபதி வெள்ளையர்; ஜூரிகள் அனைவரும் வெள்ளைக்காரர்கள்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருப்பினத்தவரானால வழக்கு ஜோடிக்கப்படுவது வழக்கம். நீதிமன்ற வாசலில் கருப்பின கைதிகள் அடித்துக் கொல்லப்படுவது சாதாரணம். இந்த வழக்கில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டது. என்றாலும், இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க கம்யூனிஸ்டுகட்சி தண்டனை வழங்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதற்காக பெரும் பங்காற்றியது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரான 14 வயது ராய், 17 வயது ஆண்டி ஆகி யோரின் தாய் ஆடாரைட் என்ற பெண் மணியை அணுகிய கம்யூனிஸ்டு கட்சி, நீதிமன்றத்தில் சட்டப்படியான போராட் டத்தை மேற்கொள்ள துணை நின்றது. மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவியஒரு மாபெரும் பிரச்சாரம் துவக்கப்பட்டது. ஸ்காட்பரோவிலிருந்து முனிச்வரை - 1930 களில் இங்கிலாந்தில் நிலவிய இன, அரசியல் கலாச்சாரம் என்ற நூலில் இதை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் சூசான்டி. பென் னிபேக்கர் இதை விரிவாகப் பகுத்தாய்வு செய்திருக்கிறார். இந்தப் பிரச்சாரத்தின் நட்சத்திரமாக ரைட் அம்மையார் அமைவார் என்று எவருமே கருதியிருக்க மாட்டார்கள். 1890 பிறந்த அவர் ஒரு அடிமையின் பேத்தியா வார். ஹார்பர்லீயின் புதினத்தில் வரும் கல்புரினாபோல இவரும் வீட்டு வேலைக் காரியாவார். ஆழ்ந்த கிறித்துவமதப்பற்று கொண்டவர். அதுவரை அரசியல் என்றால் என்ன என்பதையே அறிந்திராதவர். சூழ லின் கட்டாயத்தின் காரணமாக, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்தவரும், அதுவரை சொந்த மாகாண எல்லையைக் கூடததாண்டியிராதவருமான அந்த அம்மையார் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம்மேற்கொள்ளத் தொடங் கினார். இங்கிலாந்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தகாலத்தில்,  அவருக்கு ஆதரவளிக்க இங்கிலாந்து கம்யூனிஸ்டு கட்சிபல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்தது. சக்லத்வாலா இதில் முக்கியப் பங்காற்றினார்;  பென்னிபேகர் தனது நூலில் அவருக்கென ஒருதனி அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார். 1932மே 7 அன்று ஸ்காட்ஸ்பரோநாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று டெய்லி வொர்க்கர் நாளிதழில் ரைட்அம்மையார் வருகை தருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே செய்தி வெளியிடப்பட்டது. ஜூன் 19 ஆம் தேதியன்று டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டது.  நீக்ரோநலவாழ்வு சங்கம், முதலாளித்துவத் திற்கு எதிரானகூட்டமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்களும் இப்பேரணியில் பங்கேற்க விருந்தனர். ஆனால், ரைட் அம்மை யாரினால் அவ்வளவு எளிதாக இங்கிலாந்து மண்ணில்காலடி வைக்க முடியவில்லை. முதலில் அனுமதி மறுத்த அயல் துறை அதிகாரவர்க்கத்தினர் பின்னரே மனமிள கினர். கடைசியில் 10 நாள் விசா மட்டும் வழங்கப்பட்டது.
பெரியார் இங்கிலாந்திலிருந்த கால கட்டத்தில் தான்ரைட் அம்மையாருக்கு விசாவழங்கப்பட்ட பத்துநாட்களும் அடங்கி இருந்தன. பாரிசிலிருந்துரைட் அம்மையார் இங்கிலாந்து வந்தவுடனேயே, ஸ்காட்ஸ் பரோ சிறுவர்களுக்கு ஆதரவாக ஒரு தொழி லாளர் கூட்டம் லண்டன்க்ளர்கன்வெல் பகுதியில் இருந்த க்ளப்அன்ட் இன்ஸ்டிடி யூட் மன்றத்தில்  1932 ஜூன் 28 இல் நடத்தப்பட்டது. ரைட் அம்மையார் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய போது, மனதைநெகிழச் செய்யும்பல காட்சிகள் நடந்தேறின. பேசுவதற்காக மேடைக்கு அவர் சென்றபோது, அவருக்கு பாதுகாப்பாகக் கருப்பின மக்களும், இந்தியர்களும் உடன்சென்றனர். பெரும் உணர்ச்சிவயப்பட்ட பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று வெகு நேரத்துக்கு கரவொலி எழுப்பியதுடன், சர்வதேசத் தொழிலாளர் கீதத்தைப்பாடத் துவங்கினர். உழைத்து ஓடாகிப்போன அந்த கருப்பின அம்மையார், ஒரு தாயார் என்ற நிலையில் தனது கதையை மனம் உருகும் படி கூறினார். வீட்டில் சாதாரணமான ஒருவாழ்க்கை, வேலை தேடி மகன்கள் சென்றது, அவர்கள் அநியாயமாக சிறையில் இடப்பட்டது, அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மரணதண்டனை என்ப தாக அவர் கதை விரிந்தது.
500 பேருக்கும் மேலானவர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் 53 வயது பெரியார்,  சக்லத்வாலாவுடன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசப் பட்ட ஒவ்வொரு சொல்லையும் அவர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. ரைட்அம்மை யாரின் தனது மென்மையான, இழுத்து இழுத்து அமெரிக்க தென்பகுதியினரின் பாங்கில் பேசியதில்இருந்து பெரியார் எவ்வளவு புரிந்து கொண்டிருப்பார் என்பது தெரியவில்லை.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எனது இருமகன்களையும் அவர்களுடன் தண்டிக்கப்பட்ட ஏழுபேரையும் விடுவிக்க இன்றிரவு இங்கு கூடியிருக்கும் நீங்கள், உங்களால் இயன்ற உதவியைச்செய்ய வேண்டும்என்று வேண்டிக்கொள்கிறேன்; ஸ்காட்பரோ சிறுவர்களுக்காக நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் போது,  உலகெங்கும் உள்ளவர்க்கப் போர்க் கைதிகளுக்காகப் போராடிக் கொண்டிருக் கிறீர்கள் என்று ரைட்அம்மையார் பேசியது பார்வையாளர்கள் மனத்தை வெகுவாகநெகிழச் செய்தது.
ஸ்காட்பரோவுக்கு இணையான இந்தியப் போராட்டங்கள்
சக்லத்வாலா அக்கூட்டத்தில் உரை யாற்றும் போதுஸ்காட்பரோவைப் போன்ற பல ஸ்காட்பரோக்கள் (போராட்டங்கள்) இந்தியாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். கறுப்பினத் தொழிலாளர் களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளாத அமெரிக்க தொழிற்சங்கங் களை வெகுவாகச் சாடிய அவர்,  இனவேறுபாடு இன்றி அனைத்துத் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் சேர்த்து வருவது பற்றிப் பெருமையுடன் பேசினார். இங்கிலாந்து கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்தவர்கள் பலரும் அக்கூட்டத்தில் பேசினர். இக்கூட்டத்தின் தீர்மானத்தைத் தெரியப்படுத்துவதற்காக அமெரிக்க தூதரகத்திற்கு செல்வதற்காக ஒரு பிரதிநிதிக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு பேசிய அனைவரது பேச்சுக் களிலும், அனைத்துலக தொழிலாளர் நிவாரணஅமைப்பின் இசபெல்பிரவுன் அவர்களதுபேச்சே பெரியாரை வெகு வாகக் கவர்ந்தது. இப்போராட்டத்தை தொழிற்சங்கங்களால் எத்தகைய நடை முறை சாத்தியமான முறைகளில் மேற் கொள்ள இயலும் என்பதை அடிக் கோடிட்டுக்காட்டி அவர் தனது உரையை முடித்தார்.
அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய லண்டன் கருப்பின கடற்பணியாளர்கள் அமைப்பின் ஜிம்ஹீட்லி, ரைட் அம்மை யாரின் போராட்டத்திற்கான நிதி வழங்கு மாறு கோரிக்கை ஒன்றை விடுத்தார். மொத்தம் 13 கினியாக்கள் நன்கொடை கிடைத்தது. அதனைத்தொடர்ந்து பொருள்கள் ஏலம் விடப்பட்டன. எப்போதுமே செலவு செய்வதில் மிகுந்த சிக்கனமாக இருக்கக்கூடிய பெரியார்கூட ஜெர்மானிய வெள்ளிச் சங்கிலி ஒன்றை அரை பவுனுக்கு ஏலம் எடுத்தார்.
உலகெங்கும் உள்ள முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பு கொள் வதன்மூலம், புதியதாகத் துவங்கப் பட்டுள்ள தனது சுயமரியாதை இயக் கத்திற்கு வளம் சேர்க்கும் நோக்கத்தி லேயே இந்த அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தைப் பெரியார் மேற் கொண்டார். ஆனால், ரைட் அம்மை யாருடனும் மற்றும் ஸ்காட்பரோ சிறுவர்களின் வழக்குடனும் பெரியார் தொடர்பு கொள்ள நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்ததேயாயினும் இந்த உலகைத் துன்புறுத்திக் கொண் டிருந்த சமத்துவமின்மை களைப் பற்றி மற்றொரு கோணத்தைப் பெரியார் புரிந்துகொள்வதற்கு இது வாய்ப்பளித்தது.
நன்றி: தி ஹிந்து (ஆங்கில நாளேடு)  22-8-2015
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
-விடுதலை,28.8.15

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நெசவாளர் விருதுக்கான தேர்வு - நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

சென்னை, ஆக.24_ மத்திய அரசு நெசவாளர் களுக்கு வழங்கும் விருதுக் கான தேர்வில் வெளிப் படைத் தன்மை வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் (சிஅய்டியூ) வலியுறுத்தியுள்ளது.
மத்திய ஜவுளித்துறை சார்பில் தேசிய கைத்தறி தின விழா கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ஆகஸ்ட் 7-ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தார். நெசவுத் தொழிலில் தொடர்புடைய 74 பேருக்கு விருதுகளை வழங்கினார். மேலும் நெசவாளர்களுக் கான பல்வேறு அறிவிப்பு களையும் வெளியிட்டார்.
அந்த நிகழ்வில் நெசவா ளர்களுக்கான புதிய அறி விப்புகள் இல்லை; விருதுக் கான தேர்வில் வெளிப் படைத் தன்மை இல்லை என்று நெசவாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ் நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன (சிஅய்டியூ) மாநில பொதுச் செயலர் ஏ.முத்துகுமார் கூறியதாவது:
ஆகஸ்ட் 7ஆ-ம் தேதி நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வில் தேசிய கைத்தறி தின அறிவிப்பு மட்டுமே புதியது. தொழிலாளர்களுக்கான விபத்துக் காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.
ஏற்கெனவே மத்திய அரசின் வட்டி மானியம், கடன் தள்ளுபடி மானியம் ஆகியவற்றை வங்கிக் கணக்கு மூலமாக பெற்று வரும் நிலையில், எல்லா மானியமும் வங்கிக் கணக்கு மூலமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவிக்கிறார்.
கைத்தறி குழுமத்துக் கான நிதி ரூ.60 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். குறைந்த பட்சம் 1000 உறுப்பினர் களைக் கொண்ட, பதிவு பெற்ற குழுமத்துக்கே அது பொருந்தும். அத்தகுதி யுடைய குழுமம் தமிழ கத்தில் இல்லை.
நெசவாளரின் வறுமை ஒழிக்கும் திட்டம், வீடு வழங்கும் திட்டம், வேலைக்கு ஏற்ற கூலி சட்டம், பஞ்சப்படி, சமூக பாதுகாப்பு சட்டம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.
சேலை நெய்யும் நெச வாளிக்கு கூலி மற்றும் விற்பனை செய்யப்படும் சேலையில் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதத்தை வழங்கும் நடைமுறை நெச வாளர் கூட்டுறவு சங்கங் களில் உள்ளது. தனியாரில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதை முறைப்படுத்தும் அறிவிப்பும் இல்லை.
விருது பெற்றுள்ளவர் களில் பலர் சேலை வடி வமைப்பாளர்கள். நெசவு செய்பவர்கள் மட்டுமே நெசவாளர்கள். நெசவாளர் விருது என்றால் அவர் களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
வடிவமைப்பாளர் களுக்கு என்று தனி விருது வழங்குவதில் எந்த ஆட்சே பனையும் இல்லை.
இந்த விருதுகளுக்கான தேர்வு எந்த அளவுகோலில் நடைபெறுகிறது என்பதும் தெரியவில்லை. இத் தேர்வில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,24.8.15

நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்

நெய்வேலி, ஆக.24_ நெய்வேலி, என்.எல்.சி. தொழிலாளர்களின் போ ராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கக் கூட்ட மைப்பினர் தெரிவித்தனர்நெய்வேலி, என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரத்தை ஞாயிற்றுக்கிழமை வெளி யிட்டு, வேலைநிறுத்தத் தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுத்தது.
இதைத் தொடர்ந்து, ஹெச்.எம்.எஸ். தொழிற் சங்க அலுவலக வளாகத் தில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பி னரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், நிர்வாகம் வெளியிட்ட சம்பள விகிதம் அறிக்கை குறித்து விவாதிக்கப் பட்டது.
அதன் பின்னர், செய்தி யாளர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:  என்.எல்.சி. நிர்வாகம் ஊழியர்களின் சம்பளம் குறித்து தவறான தகவல் களை கொடுத்து வரு கின்றது. நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றும் தொழிலாளிக்குகூட ரூ.75,000 சம்பளம் வழங்கப் படவில்லை. 4,200 அதிகாரி கள், பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.850 கோடி சம்பளமாக வழங்கப்படு கிறது. ஆனால், 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,300 கோடி சம்பளமாக வழங்கப்படுகின்றது.
கடைநிலைத் தொழி லாளிக்கு அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, பஞ்சப்படி சேர்ந்து சம்பள மாக ரூ.19,277 கிடைக்கிறது. 35 வருடம் பணி முடித்தத் தொழிலாளிக்கு சம்பள மாக ரூ.53,110 கிடைக்கிறது. நிர்வாகம் 10 சதவீதம் உயர்வு வழங்கும் பட்சத்தில் கடைநிலைத் தொழி லாளிக்கு ரூ.20,820-ம், 35 வருடம் பணி முடித்த தொழிலாளிக்கு ரூ.57,340 மட்டுமே கிடைக்கும்.  ஆனால், புதிதாக பணியில் சேரும் தொழிலாளிக்கு சம்பளமாக ரூ.23,569-ம், அதிகாரிக்கு ரூ.59,885-ம் சம்பளமாக கிடைக்கிறது.
அதுவே, 35 வருடம் பணி முடித்த தொழி லாளிக்கு ரூ.72,150-ம், அதிகாரிக்கு ரூ.1,82,375 மொத்த சம்பளமாக கிடைக்கிறது. இந்தியாவில் வேறு எந்த பொதுத் துறை நிறுவனத்திலும் இல்லாத அளவிற்கு 3 தொழி லாளிக்கு 1 அதிகாரி என்ற விகிதத்தில் பணியாற்றும் நிலைமை என்.எல்.சி. நிறு வனத்தில்தான் உள்ளது என்று தொழிற்சங்க நிர்வா கிகள் தெரிவித்தனர்.
மேலும், அனைத்துத் தொழிற்சங்கங்களின் மத்திய நிர்வாகிகள் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில், சுமூக முடிவு ஏற்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
-விடுதலை,24.8.15