செவ்வாய், 10 டிசம்பர், 2019

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

அ.குமரேசன்

இரவிலும் தூங்கா நகரம் என்று முன்னொரு காலத்தில் பெயர் பெற்றிருந்தது மதுரை. மாலையில் கல்யாணம் நிச்சயித்து, இரவிலேயே அனைத்துப் பொருட்களும் வாங்கி, விடிகிறபோது திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என்பார்கள். அந்த அளவுக்குப் பல்வேறு வகைப்பட்ட பொருட்களை விற்கிற கடைகளில் வகைக்கு ஒரு கடையாக இரவில் திறந்திருக்கும். கடைக்காரர்கள் சுழற்சி முறையில் இரவில் மாறி மாறிக் கடை திறந்து வைப்பார்களாம். நகரின் மையப் பகுதியில் ஒரு மருந்துக் கடை ஆண்டு முழுக்க இரவில் திறந்திருக்கும். திடீர் மருந்துத் தேவை ஏற்படுகிறபோது அந்தக் கடைக்கு நம்பிச் செல்லலாம். இப்போதும் அந்தக் கடை அங்கே அதேபோல் செயல்படுகிறதா என்பது தெரியவில்லை.
வணிக வளாகங்கள், கடைகளை இனி 24 மணிநேரமும் திறந்து வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு ஏற்ப இதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செய்தியைப் பார்த்ததும் இந்த மதுரை அனுபவம் நினைவுக்கு வந்தது.
இனி இரவிலும் வணிக வளாகங்களில், கடைகளில் விற்பனை இருக்குமென்பதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுவார்கள், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், வணிகச் சுழற்சி விரிவடைவதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும் என்று பல கோணங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
சிறிய கடைகளுக்கு அனுமதி இல்லை
அதே வேளையில் இதில் சில நிபந்தனைகளும் உள்ளன. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய கடைகள் மட்டுமே இரவில் திறந்திருக்க அனுமதிக்கப்படும். ஒரே ஒருவர் அல்லது இரண்டு பேர் இருக்கக்கூடிய கடைகளுக்கு இந்த அனுமதி கிடையாது. அதாவது சிறிய டீக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள், பெட்டிக் கடைகள், பழச்சாறு கடைகள், சிறு மருந்துக் கடைகள், சலவைக் கடைகள், மளிகைக் கடைகள், எழுதுபொருள் கடைகள் உள்ளிட்டவை பகலில் மட்டுமே இயங்க முடியும்.
தொழில் முறைகள், வேலைத் தன்மைகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியவை மாற்றமடைந்துள்ள சூழலில் வணிக ஏற்பாடுகள் மட்டும் மாறாமல் முன்போலவே இருக்க முடியாது. அந்த வகையில் கடைகளும் இதர வணிக வளாகங்களும் நாள் முழுக்கச் செயல்படுவது வரவேற்கத்தக்க மாற்றம்தான். ஆனால், சிறிய கடைகள் செயல்பட முடியாது என்கிறபோது, கார்ப்பரேட் குழுமங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் கிளைகள்தாம் எந்நேரமும் திறந்திருக்கும். இது படிப்படியாக சிறிய வணிகர்களின் வாழ்வாதாரம் அரிக்கப்படுவதில் போய் முடியும்.
இரவில் கடைகளைத் திறப்பது வணிகர்களைவிட, நள்ளிரவிலும் அதிகாலையிலும் வேலை முடித்து வீடு திரும்புகிறவர்களுக்கே கூடுதலாகப் பலனளிக்கும். மளிகைகள், ஆடைகள், காலணிகள், பயணப் பெட்டிகள், மருந்துகள், உணவு வகைகள், பல்வேறு நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நள்ளிரவிலும் கடைகளுக்குச் சென்று வாங்கிக்கொள்ள முடியும். அதிகாலை வண்டியில் ஊருக்குப் புறப்படுகிறவர்களின் அவசரத் தேவைகளை - அட ஒரு மொபைல் போன், சார்ஜர், பவர் பேங்க், இயர்போன் போன்றவை உட்பட - நிறைவேற்றிக்கொள்ள உதவும். இரவில் பல்வலி ஏற்பட்டுத் துடிப்பவர்கள், ஓர் உடனடி வலி நிவாரணி மாத்திரை வாங்குவதானால்கூட விடிந்து வெகுநேரம் கழித்துத்தான் மருந்துக் கடைகள் திறக்கும் என்ற நிலையில் கூடுதல் சோர்வுக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு இனி இரவிலேயே அந்த மாத்திரையை வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கையே பெரிய வலி போக்கியல்லவா?
ஆனால், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய கடை மூடியிருக்கும் என்பதால், 10 பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய மருந்துக் கடை எங்கே இருக்கிறது என்று தேடிச் சென்று கண்டுபிடித்து வாங்க வேண்டியிருக்கும்.
பகல் நேர விற்பனையின் நெருக்கடி குறையும் என்பதால், இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பொருள் வாங்க வருவோருக்குச் சிறப்புத் தள்ளுபடிகளைக் கடைக்காரர்கள் அறிவிக்கக்கூடும். இரவு ஷிப்டுகளில் வேலை செய்வதற்கென கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் அத்தகையோருக்கும் அவர்களது கண்காணிப்பாளர்களுக்கும் என வேலைவாய்ப்புகள் சற்றே அதிகரிக்கிற வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. கூடுதல் சம்பளம் என ஆசை காட்டி, பகல் நேரப் பணியாளர்களையே இரவிலும் கூடுதல் நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துகிற, அல்லது அதிகாலையிலேயே வந்துவிடச் சொல்கிற உழைப்புச் சுரண்டல்களைத் தொழிலாளர் துறை அதைக் கண்காணித்துத் தடுக்கும் என்று நம்புவோமாக.
8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கக் கூடாது, கூடுதல் பணி நேரத்துக்கான கூடுதல் ஊதியத்தைத் தொழிலாளர் வங்கிக் கணக்கில் சேர்த்துவிட வேண்டும், வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும், வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை என்பன போன்ற விதிகள் எந்த அளவுக்குக் கறாராகப் பின்பற்றப்படுகின்றன, அதிகாரிகள் எந்த அளவுக்கு நேர்மையாகக் கண்காணித்து உறுதிப்படுத்தப்போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு?
இரவில் கடைகளுக்குச் செல்கிறவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, பாதுகாப்பு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. இரவில் கடைகள் திறந்திருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பும் அதிகரிக்கும், காவல் துறையின் நடவடிக்கைகளும் அதற்கேற்பத் திட்டமிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பு என்பது பெண்களை சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சமுதாயத்தில் வலுவாகப் பரப்புவதோடு சம்பந்தப்பட்டது. இரவிலும் கடைகளா, அய்யய்யோ பெண்களின் நிலை என்னாவது என்று பதறிப்போய்க் கேட்கிறவர்கள், பாலினச் சமத்துவத்துக்கான இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டால் நல்லது.
இரவில் தேநீர் கிடைக்குமா?
இரவில் 11 மணிக்கு மேல் தேநீர்க் கடைகளைத் திறக்கக் கூடாது என்ற தடை சென்னையிலும் மற்ற பெரிய நகரங்களிலும் இருக்கிறது. திரையரங்குகளோடு கூடிய வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களும் தேநீர்க் கடைகளும் திறந்திருக்கலாம், அங்கிருந்து வெளியே வருகிறவர்கள் டீ குடிக்க நினைத்தால் சாலையோரக் கடைகள் எதுவும் திறந்திருக்காது என்பது பெரிய பாகுபாடு. பேருந்து நிலையம் போன்ற இடங்களில் இரவில் கடை திறக்க அனுமதி உண்டு என்றாலும், எல்லாக் கடைகளையும் திறக்க முடியாது, அதற்கெனச் சிறப்பு அனுமதி பெற்ற கடைகளைத்தான் திறந்து வைக்க முடியும்.
தற்போதைய முடிவால் சிறிய தேநீர்க் கடைகளுக்கு எந்த ஆதாயமும் இல்லை. அத்தகைய கடைகளை நாடக்கூடிய வாடிக்கையாளர்களுக்கும் பயனில்லை. இந்தத் தடையாணை அரசாங்கத்தால் அறவிக்கப்பட்டதல்ல, சட்டம் ஒழுங்கின் பெயரால் காவல் துறையாலும் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களாலும் கொண்டுவரப்பட்டது என்பதால் தடை தொடரும் எனத் தெரிகிறது. தடையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தேநீர்க் கடை உரிமையாளர் சங்கத்தினர் தங்கள் மாநாடுகள் மூலம் தொடர்ந்து வலியிறுத்தி வருகிறார்கள்.
பொருளாதாரமே மேம்படுமா?
இந்த வணிக நேர நீட்டிப்பால், ஒட்டுமொத்த வர்த்தகம் அதிகரிக்கும், பணச் சுழற்சி கூடுதலாகும், நாட்டின் பொருளாதாரமே மேம்பட்டுவிடும் என்றெல்லாம் அடுத்த கட்டக் கனவுகளுக்கு முன்னுரை எழுதப்படுகிறது.
பகலோ, இரவோ வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கப் போகிறவர்கள் என்னவோ அதே மக்கள்தாம். இரவில் பொருட்கள் வாங்குவோர் மக்கள்தொகை இதனால் அதிகரித்து விடப்போவதில்லை. குறிப்பிட்ட நாளில் பகலில் கடைக்குப் போனவர்கள் இப்போது இரவில் தாங்கள் விரும்புகிற நேரங்களில் செல்வார்கள் அவ்வளவுதான். அதற்காக, பகலில் ஒரு டூத் பேஸ்ட் வாங்குகிறவர்கள் இரவில் இரண்டு பேஸ்ட்டுகள் வாங்க மாட்டார்கள். பகலில் 20 கிலோ அரிசி வாங்குகிறவர்கள் இரவில் 40 கிலோ வாங்க மாட்டார்கள்.
ஆக, வணிகர்களின் மொழியில் சொல்வதானால் “சரக்குகளின் அழிவு” அப்படியேதான் இருக்கப்போகிறது. ஆக, பெரும்பாலும் இந்த நிலைமைதான் இருக்கும் என்கிறபோது ஒட்டுமொத்த வர்த்தகம் எப்படி அதிகரிக்கும்? பணச் சுழற்சி எப்படிக் கூடுதலாகும்? நாட்டின் பொருளாதாரம் எப்படி மேம்படும்?
மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்தால்தான், அற்ப சொற்ப ஊதியத்துக்கு வேலை என்ற காண்டிராக்ட் முறை ஒழிந்தால்தான், சம வேலைக்குச் சம ஊதியம் என்பது மெய்யான நடப்பாக மாறினால்தான், எவ்வளவு நல்ல சம்பளமானாலும் உள்நாட்டு / பன்னாட்டு கார்ப்பரேட் நிர்வாகங்கள் எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கிவிடும் என்ற நிலைமை தடுக்கப்பட்டால்தான் இதிலே மாற்றம் வரும். அப்போதுதான் கூடுதல் பொருட்களில் மக்கள் முதலீடு செய்வார்கள். அப்போதுதான் வர்த்தகம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் நிகழும்.
மக்களின் வருவாய் நிலை உறுதிப்படுகிறபோதுதான், அவர்களுடைய வேலைவாய்ப்புகள் பெருகுகிறபோதுதான் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இருக்கிற வேலை வாய்ப்புகளுக்கும் மூடுவிழா நடத்துகிற கொள்கைகள் மக்கள் தலையில் சுமத்தப்படுகிறபோது அவர்களின் வாங்கும் சக்தியாவது அதிகரிப்பதாவது?
இனி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கப் போகிறவர்கள், இந்தச் சிந்தனையையும் கொள்முதல் செய்து வைத்துக்கொள்வார்களானால் பொழுது விடிவதற்கான வெளிச்சம் பிறக்கும்.

அனைத்துத் தொழில் நிறுவனங்களில் இரவு நேர பணிகளில் பெண்கள் பணியாற்ற கருநாடகா அரசு அனுமதி

பெங்களூரு, நவ.21, இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் ஏராளமான அய்.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பெண் ஊழியர்கள் மீதான குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஆராய கருநாடக அரசு சட்டப்பேரவை கடந்த 2017ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இக்குழு அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரையில், கருநாடகாவில் உள்ள அய்.டி., நிறுவனங்களில் இனி பெண் ஊழியர்களுக்கு இரவுநேர பணி வழங்க  வேண்டாம் என தெரிவித்தது.
மேலும், அய்.டி. மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு காலை அல்லது மதிய பணியை வழங்கவும், ஆண் களுக்கு மட்டும் இரவுப் பணி வழங்கலாம் என்றும் பரிந்துரை  செய்தது.
அத்துடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றும் கருநாடக சட்டப்பேரவை குழுவின் அறிக் கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பெண் சிசு கொலை செய்யும் மருத்துவர்கள்,  செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கருநாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களில் இரவு நேரப்பணிகளில் (இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) பணிபுரிய பெண்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பிற நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் இரவு நேரப்பணிகளில் பெண்கள் பணியாற்ற அணுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கருநாடக மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அனைத்து தொழிற் சாலைகளிலும் இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான இரவு நேரப்பணிகளில் பெண்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்ததாவது,
தொழில் நிறுவனங்கள் அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளை பின்பற்றி தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை இரவு சிப்ட்களில் முழு நேரமாகவோ,  பகுதி நேரமாகவோ பணியமர்த்திக் கொள்ளலாம்.
ஆனால், பெண் ஊழியர்களை வற் புறுத்தி வலுக்கட்டாயமாக பணிபுரிய நிர்ப்பந்தப் படுத்தக் கூடாது.
இரவு சிப்ட்களில் பணிபுரிய விருப்பமுள்ள பெண் ஊழியர்களிடம் எழுத்துப் பூர்வமாக அனுமதி  பெற்ற பின்னரே அவர்களை இரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு 21 11 19

பின்னலாடை தொழிலாளர்களுக்கு வசதிகள்

பின்னலாடை தொழிலாளர்களுக்கு வசதிகள்
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு திட்டம்
திருப்பூர், அக்.12  பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகள், திருப்பூரில் நேற்று ஆய்வு நடத்தி, தொழில் அமைப்பு, தொழிற் சங்கத்தினருடன் கலந்துரையாடினர்.திருப்பூரில், உள் நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு; ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன.
பின்னலாடை துறை சார்ந்து, குறு, சிறு தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.ஆடை உற்பத்தி சார்ந்த குறுந் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச சம்பளம், பணி பாதுகாப்பு உட்பட அனைத்து அம்சங்களும் கிடைக்க செய்ய, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (அய்.எல்.ஓ.,) திட்டம் வகுத்துள்ளது.
இந்நிலையில், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகள் பல்லவி மான்சிங், பாரதி பிர்லா இருவரும் நேற்று திருப்பூர் வந்தனர். ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் மற்றும் ஏ.அய்.டி.யு.சி., பனியன் சங்க நிர்வாகிகளை சந்தித்து, தொழில் நிலை, தொழிலாளர் நிலைகள் குறித்து கலந்துரையாடினர்.
பின்னலாடை துறை குறுந்தொழிலாளர்களை சந்தித்து, பணிச்சூழல், உரிய சம்பளம் கிடைக் கிறதா, பணி பாதுகாப்பு, பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இது குறித்து, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:ஆடை உற்பத்தி துறை சார்ந்து, ஏராளமான குறு, சிறு தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களை அடுத்த நிலைக்கு உயர செய்வது, விதிகள்படி, தொழிலாளர்களுக்கு அனைத்து அம்சங்களும் கிடைக்க செய்யவதற்காக, அய்.எல்.ஓ., திட்டம் வகுத்துள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தற்போது அந்த அமைப்பு பிரதிநிதிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.தொழிலாளர், தொழில்முனைவோருக்கு, ஒன்பது மாதங்கள், குறுந்தொழிலாளர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.
இதற்காக, ஏற்றுமதியாளர் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அனைத்து தொழில் அமைப்புகள், தொழிற்சங்கத்தினரையும் இதில் ஈடுபடுத்த உள்ளனர்.
ஆடை உற்பத்தி துறையினர், தற்போது, தொழிலாளர் நலன், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சான்றுகள் பெறவேண்டியுள்ளது. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, ஒரே சான்று பெறும் நடை முறையை உருவாக்கவும், அய்.எல்.ஓ., பிரதிநிதிகளிடம் கருத்து தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு, 12.10.19

வருங்கால வைப்பு நிதிக்கு 8.65% வட்டி மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு


புதுடில்லி, செப்.25 தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளுக்கு (பிஎஃப்)  8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2018-19 நிதியாண்டுக்கு 8.65 சதவீத வட்டி வழங்க கடந்த பிப்ரவரி மாதம் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் கடந்த 19-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அதற்கான அறிவிக்கையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
வருங்கால வைப்பு நிதிக்குக் கூடுதல் வட்டி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர். இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் வெளியிட்ட அறிக்கையில், ""தொழிலா ளர்களின் வருங்கால வைப்பு நிதிக்குக் கூடுதல் வட்டி வழங்கு வதற்கான அறிவிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர். இதனால், அரசுக்கு ரூ.54,000 கோடி செலவாகும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
- விடுதலை நாளேடு 25 9 19

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு



புதுடில்லி, அக். 10- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் மத்திய  அமைச்சரவை கூட் டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக  5 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டது.
இது குறித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்,  ஜூலை மாத தவணையான 12 சதவீதத்துடன் சேர்த்து 17 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். ஒரே நேரத்தில் 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பய னடைவார்கள். இந்த 17 சதவீதம் ஜூலை மாத முன் தேதியை கணக் கிட்டு வழங்கப்படும். இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16  ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும்.
மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ஆண் டுக்கு ரூ.6,000 நிதி உதவி பெற  ஆதாரை இணைப்பதற்கான கெடு நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, வரும் ரபி பருவ பயிர்காலத்தையொட்டி விவசாயி களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 7 கோடி விவசாயிகள்  ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகவிலைப்படி என்பது விலை வாசி உயர்வை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு வழங்கப்படும் நிதியாகும். இது 7ஆவது ஊதியக் குழுவின் பரிந் துரைகளின் அடிப்படையில் ஒவ் வொரு  ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதம் நிர்ணயம் செய்யப்படும். கடந்த ஜூலை மாதம் 12 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் கூடுதலாக 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 10 .10. 19

திங்கள், 7 அக்டோபர், 2019

தேசிய ஊரக வேலைத் திட்டம் 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் பணியாளர்கள் அவதி

ஈரோடு, அக்.7 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் (100 நாள் வேலை) பணியாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கிராமப்புற ஏழை விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களின் தற்காலிக நிவாரணமாகவும் அவர்களின் முக்கிய வேலை வாய்ப்பாகவும் இருப்பது 100 நாள் வேலை திட்டம்தான்.  இந்தத் திட்டத்தின் மூலம் ஓராண்டில் ஒரு நபருக்கு 100 நாள்கள் மட்டுமே வேலை அளிக்கப்படுகிறது.
இந்த வேலையில் பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ. 148. அதாவது, 1.20 கன மீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ. 148 கிடைக்கும். அதன்படி ஏரி, குளம் தூர் வாருதல், நீர் வழித்தடங்களை புனரமைப்பு செய்தல், புதிய பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வன வளத்தைப் பெருக்கும் வகையில் மரக்கன்று நடுதல் ஆகிய வேலைகளைச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவது மட்டுமின்றி இயற்கை வளமும் நீர் ஆதாரமும் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதில் எதுவும் நடந்தபாடில்லை.
மேலும், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 50 நாள்கள் வேலையைச் சேர்த்து 150 நாள்கள் வேலை வழங்க மத்திய அரசு அனுமதியளித்தது. கிராமப்புறங் களில், மாணவர்கள் காலையிலேயே பள்ளிக்குச் செல்வதுபோல் 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள் அணிவகுத்துச் செல் வதைக் காண முடியும். இவர்கள் வேலை செய்வதற்கான ஊதியத்தை மூன்று, நான்கு மாதங்களாக தரவில்லை. ஒரு சிலருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலான ஊதியத் தொகை இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மலைவாழ் மக்கள் நல்வாழ்வு சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் 75 சதவீதம் அள வுக்கு விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலையின்றி தவித்த பெண்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை நாடியுள்ளனர். மத்திய அரசு 100 நாள் வேலையை 150 நாள் வேலையாக மாற்றியமைத்தது. ஒவ்வொரு நபருக்கும் ரூ.120 முதல் ரூ. 150 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்களுடைய கைக்கு வேலை செய்ததற்கான ஊதியம் சென்று சேரவில்லை. விவசாயம் இன்றி வயிற்றுப் பிழைப்புக்காக அனைவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வேலை பார்த்து வரும் நிலையில், அர சாங்கம் இந்த குறைந்த ஊதியத்தைக் கூட 3 மாதங்களுக்குமேல் தராமல் இருப்பது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.
- விடுதலை நாளேடு,7.10.19

திருமணமான பெண்ணாக இருந்தாலும் கருணை அடிப்படையில் வேலை தருவதை மறுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை, அக். 3- திருமண மான காரணத்துக்காக, பெண்ணுக்கு கருணை வேலை மறுக்கப்பட்டதை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விண்ணப்பத்தை பரிசீலிக் கும்படி, கூட்டுறவு வங்கி தலைவருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
கடலூர் மாவட்டம், பென்னாடத்தில், மாளிகை கோட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு, இரவு காவலராக பணியாற்றி வந்தவர், 2011 நவம்பரில் மரணம்அடைந்தார். கருணை வேலை கேட்டு, அவரது மகள் சித்ரா தேவி விண்ணப்பித்தார். எந்த நட வடிக்கையும் எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தகுதி அடிப் படையில், விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. பின், விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது.
தந்தையின் மரணத்துக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன், மகளுக்கு திருமணம் நடந்து விட்டதால், கருணை அடிப் படையில் வேலை கோரியது நிராகரிக்கப்படுவதாக, வேளாண் கூட்டுறவு வங்கி யின் தலைவர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, மீண்டும் உயர்நீதிமன்றத்தில், சித்ரா தேவி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதி பதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆஷா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
மகளுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற ஒரே கார ணத்துக்காக, கருணை அடிப் படையில் வேலை தருவதை மறுக்கக் கூடாது என, இந்த நீதிமன்றம் அவ்வப்போது தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த வழக்கைப் பொறுத் தவரை, திருமணமான ஒரே காரணத்துக்காக, கருணை வேலை நிராகரிக்கப்பட்டு உள்ளது. எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. கருணை வேலை கோரிய விண்ணப் பத்தை, தகுதி அடிப்படையில், சட்டப்படி பரிசீலிக்க வேண் டும். நான்கு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்.
இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.
 - விடுதலை நாளேடு, 3.10.19

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்

புதுடில்லி,ஆக.25, பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய அறங்காவலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் அய்தராபாத்தில் நடைபெற்றது. இதில்  பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் 1995ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் பகுதியளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும். இந்த திட்டம் 2009ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில் 2009க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் முன்பணம் எடுக்கும் வசதிக்கு ஈபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதிய தொகை  அடுத்த 15 ஆண்டுகளுக்கு மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படும். 15 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் அவர்கள் முழு ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.
- விடுதலை நாளேடு, 25 .8 .19

வாகன தொழிற்சாலை பணியாளர் ஊதிய உயர்வு ஒப்பந்த உடன்பாடு

சென்னை, செப். 15- இந்திய யமஹா மோட்டார்(IYM)    நிறுவனம் தனது உள்ளக தொழிற்சங்கமான ‘இந்திய யமஹா மோட்டார் தொழி லாளர் சங்கத்துடன்’ நீண்ட கால ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது.
யமஹாவில் உள்ள ஒவ் வொரு தொழிலாளாரும் ஆரோக்கியமான பணிச் சூழலை ஏற்படுத்துவதற்காக IYM
நிர்வாகம் மற்றும் உள் ளக தொழிற்சங்கம் இரண் டினாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை உரு வாக்குவதற்கும், ஒரு நல்லு றவைப் பேணுவதற்கும், ஒரு கூட்டு அணுகுமுறையைப் பின் பற்றுவதற்கும் தொடர்ச்சி யான முயற்சிகளின் விளை வாக இந்த ஒப்பந்தம் ஏற் படுத்தப்பட்டுள்ளது.
“இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தங்களின் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய தற்காக மாநில அரசு, தொழி லாளர் துறை மற்றும் எங்கள் தொழிலாளர்கள் அனைவ ருக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது நிறுவனத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும் மற்றும் எங்கள் தொழி லாளர்களின் நம்பிக்கைக் கான ஒரு பெரிய ஊக்குவிப் பாகும்.
யமஹா எப்போதுமே தனது பணியாளர்களுடனான உறவை மதிப்பிடுவதோடு, அவர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய் துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறுவனத்திற்குள் ஒரு ஆரோக்கியமான பணிபுரி யும் சூழலை உருவாக்குவதற் கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்க ளின் தலைவரான மோட்டோ ஃபூமிஷிதாரா தெரிவித்து உள்ளார்.
- விடுதலை நாளேடு, 15.9.19

ஞாயிறு, 21 ஜூலை, 2019

கரும்புத் தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வுத்தகவலைக்கொண்டு, பிபிசி தமிழ் இணையம் பணிபுரியும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எடுத் துக்காட்டியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
சமீபத்திய மாதங்களில் பணிக்கு செல் லும் பெண்கள் மற்றும் மாதவிடாய் தொடர் பாக வந்த இரண்டு செய்திகள் நம்மை வருத்தமடைய செய்வதாக உள்ளன.
இந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் அதிகம் பேசப்படாத ஒரு விஷய மாகவே உள்ளது. மாதவிடாய் காலப் பெண் கள் அழுக்கானவர்களாகவே கருதப்படு கின்றனர். மேலும் சமுக மற்றும் சமய நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் தள்ளியே வைக்கப்படுகின்றனர்.
சமீப வருடங்களில் இந்த நடைமுறைகள் நகர்ப்புற படித்த பெண்களால் சற்று தளர்த் தப்பட்டு வருகிறது என்று சொல்லலாம்.
இருப்பினும் அந்த சமீபத்திய இரண்டு செய்திகள் மாதவிடாய் தொடர்பாக இந்தியாவில் நிலவும் பிரச்சினைக்குரிய சூழலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
பெரும்பாலான பெண்கள், குறிப்பாக கல்வி கற்காத ஏழை குடும்பத்து பெண்கள் தங்களின் உடல்நலத்திலும், வாழ்க்கை முறைகளிலும் நீங்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
முதலாவது, இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்களின் கருப்பைகளை அகற்றுகின்றனர் என இந்திய ஊடகங்களில் வந்த செய்தி.
அதில் பெரும்பாலானோர்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அவ்வா றான அறுவை சிகிச்சைகளை செய்திருக் கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மகாராட்டிரா வின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் மாவட்டத்தில் இருந்து பிழைப்பு தேடி கரும்பு பயிரிடும் பகுதியான மேற்கு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக் கான குடும்பங்கள் வருகின்றன. அந்த கரும்புத் தோட்டங்களில் ஆறுமாத காலம் தங்கி அறுவடை வேலைகளை அவர்கள் செய்வதற்காக அங்கு வருகின்றனர்.
அவர்கள் அங்கு பணிக்கு வந்ததும், பேராசை மிக்க ஒப்பந்தக்காரர்கள் அனைத்து விதமான சந்தர்ப்பங்களிலும் அவர்களிடமிருந்து அதிகப்படியான வேலைகளை வாங்கிக் கொள்கின்றனர்.
முதலில் இவர்கள் பெண்களை பணிக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஏனென் றால் கரும்பு வெட்டுதல் ஒரு கடினமான பணி. மேலும் மாதவிடாய் காரணங்களால் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் பணிக்கு வரமுடியாமல் போகலாம் என்பதும் அவர்களின் தயக்கத்துக்கு ஒரு காரணம். அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.
பணியிடங்களில் தங்கும் நிலை மிக மோசமான ஒன்று. கரும்புத் தோட்டங் களுக்கு அருகாமையில் கூடாரங்களிலோ அல்லது சிறிய குடிசைகளிலோ அவர்கள் வசிக்க வேண்டியுள்ளது. அங்கு கழிப் பறைகள் இருக்காது. கரும்பு அறுவடை சில நேரங்களில் இரவு நேரங்களில் கூட நடை பெறும். எனவே தூங்குவதற்கோ அல்லது தூக்கத்திலிருந்து எழுவதற்கோ குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அது மிகவும் கடினமான ஒரு காலமாக அமைந்துவிடும்.
எனவே மோசமான சுகாதார சூழலால் அங்குள்ள பெண்கள் பல நோய் தொற்று களுக்கு ஆளாகின்றனர். அந்த பகுதியில் பணிபுரியும் ஆர்வலர்கள், `மனசாட்சியற்ற` சில மருத்துவர்கள், மருந்துகளில் குண மடையக்கூடிய வகையில் உள்ள சிறிய பிரச்சினைகளுக்குக் கூட கருப்பையை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணமா னவர்கள். அவர்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்ளாக திருமணமாகி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளன. எனவே கருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் சரியாக விளக்காததால் அவர்கள் கருப் பையை எடுப்பது சரி என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள பல கிராமங்கள் `கருப்பையற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக` உள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக கடந்த மாதம் மகாராட்டிர மாநில சட்டசபை உறுப் பினர் நீலம் கோர்ஹே கேள்வி எழுப்பிய போது, "மூன்று வருடங்களில் பீட் மாவட்டத் தில் மட்டும் 4,605 கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன." என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏக்நாத் சிண்டே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது அனைத்தும் கரும்புத் தோட் டங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நடத்தப்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான பல வழக்குகள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பீட் மாவட்டத்தில் உள்ள வஞ்சர்வாடி கிராமத்திற்கு, என்னுடன் பணிபுரியும் பிபிசி மராத்தி சேவையை சேர்ந்த சக பத்திரிகையாளர், ப்ரஜக்தா துலப் பயணம் செய்தார். ஒவ்வொரு வருடமும் அக்டோ பரிலிருந்து மார்ச் மாதம் வரை 80 சதவீத கிராம மக்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அங்கிருந்து இடம் பெயர்வதாக அவர் தெரிவிக்கிறார்.
அந்த கிராமத்தில் உள்ள பாதி பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சையை செய்து கொண்டனர் என்றும் அதில் பலர் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும், இன்னும் சிலர் தங்களின் இருபதுகளில்தான் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறார் ப்ரஜக்தா.
பல பெண்கள் அந்த அறுவை சிகிச் சைக்கு பிறகு தங்களின் உடல்நலம் மேலும் மோசமடைந்துவிட்டதாக தெரிவிக்கின்ற னர். அதில் ஒரு பெண் இந்த அறுவை சிகிச்சையால் தனக்கு தொடர்ந்து முதுகு வலி, கழுத்து வலி மற்றும் முட்டி வலி ஏற் படுவதாக தெரிவித்தார். மேலும் காலையில் எழுந்தவுடன் தனது கைகள், முகம் மற்றும் பாதங்கள் வீங்கிவிடுவதாக அவர் தெரி வித்தார். மற்றொரு பெண் தனக்கு தொடர்ந்து மயக்க நிலை ஏற்படுவதாகவும், சிறிய தொலைவில் கூட நடந்து செல்ல முடியவில்லை என்றும் கூறுகிறார். எனவே இதன் காரணமாக இருவரும் இனி கரும்புத் தோட்டங்களில் அவர்களால் பணி புரிய இயலாது.
தேசிய மகளிர் ஆணையம், மகாராட்டி ராவில் நிலவும் நிலையை "பரிதாபகரமான மற்றும் மோசமான" ஒன்று என தெரிவித்து உள்ளது.
மேலும் இம்மாதிரியான "கொடுமைகள்" எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
பாலினங்களுக்கு ஏற்ற கொள்கைகளை கொண்டு உலகம் முழுவதும் பணியிடங் களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தருணத்தில் இந்த செய்திகள் வெளியாகி யுள்ளன.
- கீதா பாண்டே,
பிபிசி தமிழ் இணையம், 8.7.2019
-  விடுதலை ஞாயிறு மலர், 13.7.19

மாதவிடாய் விடுப்பை பறிக்கும் வலி மாத்திரைகள்

திருப்பூர் தொழிலாளர்களின் வேதனைக் குரல்
அகிலா இளஞ்செழியன்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டே பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக இயற்கையான உடல் உபாதைகள், மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது சமுகம் அவர்களை மனிதத் தன்மையுடன் அணுகாமல் வெறும் தொழிலாளியாக மட்டுமே அணுகுவதாக பணிபுரியும் பெண்கள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் பிபிசி தமிழ் இணையத்தில் வெளியாகியுள்ள தகவல் வருமாறு:
தமிழகத்தில் உள்ள சில ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அவர்களின் உடல்நலத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என கூறப்படுகிறது.
தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலைகள் குறிப்பாக நூற்பாலைகள் அதிகம். வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் வந்து தங்கி பணிபுரிகின்றனர், அதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலிக்காக வலி நிவாரண மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன.
மாதவிடாய் நாட்களில் விடுப்போ, ஓய்வோ எடுக்க வாய்ப்பு இல்லாததால், அந்த சமயங்களில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம், மில்லில் பணிபுரியும் பெண்களுக்கு பரவலாக இருக்கிறது. தகுதியான மருத்துவர்களின் அறிவுரையின்றி முறை யற்று வழங்கப்படும் இந்த மாத்திரைகளால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பல விதங்களில் பாதிக்கப்படுகிறது என தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் சில பெண்களிடம் பேசியது பிபிசி தமிழ். 26 வயதான ஜெனி, திண்டுக்கல் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். நூற்பாலையில் பணிபுரிகிறார். இவர், எனக்கு பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி வரும். எனவே, மாதவிடாய் ஏற்பட்ட உடனேயே மில்லில் வழங்கப்படும் மாத்திரை களை வாங்கி சாப்பிட்டு விடுவேன். வெளியில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை வாங்கியும் சாப்பிட்டுள்ளேன். ஆனால், மில்லில் வழங்கப்படும் மாத்திரைகள் போல அவை உடனடியாக வலி நிவாரணம் அளிக்காது.
"எனவே, மில்லில் தரப்படும் மாத்திரைகளைத்தான் அதிகம் சாப்பிடுவேன். இப்பொழுதெல்லாம் எனக்கு மாதவிடாய் நேரத்தில் இரத்தப்போக்கு மிகவும் குறைந்து விட்டது, வழக்கமாக மூன்று நாட்கள் இருக்கும், இப்பொழுது ஒரு நாளில் நின்று விடுகிறது. எனவே, இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு , மருத்துவர் அறிவுரையின் படி சிகிக்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன்" என்கிறார்.
"வயிற்றுவலிக்கு மில்லில் தரப்படும் மாத்திரைகள் மீது மேலுறை இருக்காது, அதனால் எங்களுக்கு பெயர் எல்லாம் தெரியாது. வேலைக்கு சென்ற பின்பு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் திரும்பி வீட்டிற்கு வர இயலாது. திரும்பினால், அன்றைய கூலி 300 ரூபாய் போய்விடும். ஓய்வு எடுக்கவும் வாய்ப்பில்லை. மெஷினை நிறுத்த முடியாது. அதனால் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு வேலையினை தொடரத்தான் முயற்சி செய்வேன்" என்கிறார் கமலஜோதி.
"என்னுடன் வேலை பார்க்கும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு ஏற் படுவது போன்ற சிக்கல்கள் உள்ளன, இந்த மாத்திரைகளால் தான் இந்த பிரச்சினைகள் வருகின்றனவா என்று எங்களுக்கு தெரியாது. இதனால் இருக் குமோ என்று பயமாக இருக்கின்றது. அதனால் நான் இப்பொழுது மாத் திரைகள் எடுப்பதை பெரும்பாலும் குறைத்துக் கொண்டேன்.
இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் இரத்தப்போக்கு குறைந்து விடுகிறது. பொதுவாக 3, 4 நாட்கள் இருக்கும் ரத்தப்போக்கு இரண்டு நாட்களில் நின்று விடும். என்னுடன் வேலை செய்யும் திருமணமாகாத இளம் பெண்கள் இந்த மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொள்கின்றனர், பின் விளைவுகள் குறித்து அவர்கள் சிந்திப்பது இல்லை, அப்போதைக்கு விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து விட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். வார விடுமுறை தவிர எல்லா நாள்களும் விடுப்பு எடுக்காமல் வந்தால் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்கும். ஊக்கத்தொகை, அன்றைய தினக்கூலி இரண்டையும் இழந்து விடக்கூடாது என்பதால் வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது" என்கிறார் அவர்.
இந்த சமயங்களில் ஓய்வு அளிப்பது போல் மாற்று ஏற்பாடுகள் கொண்டு வந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது குறையும் என்பது அவரது கருத்து.
வீட்டில் இருந்து வேலைக்கு செல்பவர்களை விடவும் விடுதியில் தங்கி இருப்பவர்கள் நிலை மோசம். அவர்கள் விடுமுறை எடுக்க வாய்ப்பே இல்லை என்பதால் இந்த சமயங்களில் கட்டாயமாக மாத்திரை களை எடுத்துக்கொள்கின்றனர். "இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்பொழுது சில நேரங்களில் நான்கைந்து மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில்லை. அய்ந்து மாதங்கள் கழித்து மாதவிலக்கு ஏற்படும் போது அதிக ரத்தப் போக்கும், தாங்கமுடியாத வலியும் வருகிறது. அதனால் பயந்துகொண்டு மாத்திரை வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். ஒரு நாள் விடுமுறை எல்லாம் வேண்டாம், வலி அதிகமாக இருக்கும் சமயங்களில் ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்தாலே போதும்" என்று கூறும் 21 வயதான விமலா, கடந்த மூன்று மாதங்களாகத்தான் தங்கள் மில்லில் மாத்திரைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்.
இதுகுறித்து பேசும் தமிழ்நாடு ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் திவ்யா, பல நாட்களாகவே மில்லில் இது போன்ற மாத்திரைகள் அளிக்கும் வழக்கம் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆனால், இப்பொழுதுதான் இதன் விளைவுகள் தெரிய வருகின்றன. மருந்துகள் வழங்கும் இடத்தில் மருந்து குறித்த அறிவுடையவர்கள் நியமிக்கப்படுவதில்லை. மேலும், மாத்திரைகளின்மீது பெயர் பொறித்த உறைகள் இல்லாமல் வெறும் மாத்திரைகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுமே தவறானது. அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் நேரத்து உடல் தொந்தரவுகள் வருவதில்லை. அப்படி பிரச்சினைகள் ஏற்படும் சில பெண்களுக்கு, ஷிப்ட் மாற்றி கொடுப்பது போன்ற மாற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததால் அவர்கள் மறைமுகமாக மாத்திரைகள் சாப்பிடும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.
ஓய்வோ, விடுமுறையோ கேட்கும் பொழுது மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு விட்டு வேலை பார்க்கலாம் என்றுதான் பெரும்பாலும் அவர்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது. எங்கள் சங்கச் செயலாளர், குழந்தைப் பேறு இல்லாத சிக்கலுக்காக மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார், அவர் அடிக்கடி மில்லில் வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரை களை எடுத்துக்கொண்டிருந்தவர். இப்பொழுது அதனால்தான் குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என்று பயப்படுகிறார். பெரும்பாலும் மில்லில் பணிபுரியும் பெண்கள் இரத்த சோகை, ஊட்டசத்துக் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இது போன்று தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மேலும் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்கிறார் அவர்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (Southern India Mills Association - SIMA) தலைவர் செல்வராஜிடம் இது பற்றிக் கேட்டபோது "மாதவிடாய் காலங்களில் பெண்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பது குறித்த உயர்நீதிமன்ற விதிமுறைகள் உள்ளன. தமிழக அரசு, அதிகாரிகளும் சைமா, டாஸ்மா போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து இதனை பணியாளர்களிடம் வலியுறுத்துகின்றனர். யாரும் அதனை மீற முடியாது. அவ்வாறு மீறி நடந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இவை நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படி இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரச்சினைகள் குறித்து எங்களிடம் பேச விரும்பினால், நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இந்த பிரச்சினைகள் குறித்த கட்டுரையினை வெளியிட்ட தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம், இந்த மாத் திரைகளை ஆய்வுக்குட்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இதில் பெயர்கள் குறிப்பிடாததால், ஆலைகளில் பணிபுரியும் பெண்கள் சிலரிடம் இருந்து மாத்திரைகளை வாங்கி ஆய்வு செய்த பொழுது இதில் NSAID வகையினை சார்ந்த ibuprofen போன்ற மூலக்கூறுகள் உள்ளதாக தெரியவந்துள்ளதாக இந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
ஸ்டிராய்டு அல்லாத வலிநிவாரண மாத்திரைகளான இவற்றை எடுத்துக் கொள்வதால் பெண்களுக்கு கருவுறுதலில் சிக்கல் வரையிலான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என, கோவையில் உள்ள மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் ரஜனியிடம் கேட்டது பிபிசி தமிழ். "வலி நிவாரணிகள் உட்கொள்வதால் நேரடியாக மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது எனக் கூற முடியாது. எந்த NSAID (ஸ்டிராய்ட் அல்லாத வலி நிவாரணி) எடுத்துக் கொண்டாலும் மாதவிடாய் உதிரப் போக்கு குறைய வாய்ப்புள்ளது" என்றார்.
"வலி வந்த பின்பு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் குறித்து பேசுகிறோம். முதலில் ஏன் வலி வருகிறது? இந்த மாதிரி பணிபுரியும் பெண்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். இதுவும் மாதவிடாய் நேரத்து வலிக்கு ஒரு காரணம். கோவையில் அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதில் பணிபுரியும் பெண்கள் சிகிக்சைக் காக அதிகம் வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் காலை உணவு உண்பதில்லை. ஒரு டீயும் சில பிஸ்கட்டுகளும்தான் இவர்களின் காலை உணவு. பிஸ்கட்டில் மைதாவும் சர்க்கரையும் உள்ளன. ஊட்டச் சத்து இல்லை. பணி புரியும் இடங்களில் நெருக்கடி, பொருளாதார சிக்கல்கள் என பல வாழ்வியல் அழுத்தங்களை இவர்கள் சந்திக்கின்றனர். இதுவே அவர்களின் பல உடலியல் சிக்கல்களுக்கு காரணமாகிறது.எனவே பெண்களின் சமுக, உளவியல் சிக்கல்களை புரிந்துகொண்டு இப்பிரச் சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கிறார் ரஜனி.
நன்றி:  பிபிசி தமிழ் இணையம், 9.7.2019


- விடுதலை நாளேடு, 11.7.19

செவ்வாய், 2 ஜூலை, 2019

பெண்கள் இரவுப் பணிக்கு செல்ல கோவா அரசு ஒப்புதல்

கோவா, ஜூன் 30  தொழிற் சாலைகளில் இரவு நேரங் களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத் துக்கு கோவா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் படும்.

இந்தச் சட்டத் திருத்தத்துக்கு இந்த வாரம் மாநில அமைச்சரவை ஒப் புதல் வழங்கியது. இதனை, பெண்கள் உரிமை ஆர்வலர்கள் வர வேற்றுள்ளனர். இதன்மூலம், கோவாவில் பெண்கள் அதிக எண்ணிக் கையிலான வேலைவாய்ப் புகளை பெற முடியும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 30. 6 .19

சம ஊதியம் கேட்டு பெண்கள் போராட்டம்

ஜெனிவா, ஜூன் 6- சுவிட்சர் லாந்தில் ஆண்களுக்கு நிக ராக பெண்களுக்கு சம ஊதி யம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14ஆம் நாள் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பெண் கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்தும் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இப்போராட்டம் நடந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற் சங்கங்களும் பெண்கள் உரி மைகள் அமைப்பும் தெரிவிக் கின்றன.

‘சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலி யுறுத்தி மீண்டும் போராட் டம் நடத்த நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தயாராகி வருகின்றனர். வரும் 14-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் பெண் களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறை வாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந் தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே உள்ளது.

கடந்த ஆண்டு சுவிட்சர் லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.அய்.ஏ. வெளியிட்ட அறிக் கையில், கல்வித்தகுதியும், துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் அவ ரது வேலைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் ஊதியம் வாயிலாக 300000 ப்ரான்க் (இந்திய மதிப்பில் ரூ.2.09 கோடி) இழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை, பெண் களின் வேலைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் மரியாதை உள்ளிட்ட பல கோரிக்கைக ளையும் போராட்டக்குழுவி னர் வலியுறுத்த உள்ளனர்.

- விடுதலை நாளேடு, 6 .6.2019

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம்

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும்

திறந்து வைக்கலாம்:  தமிழக அரசு அனுமதி

சென்னை, ஜூன் 7 தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  வரும் ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த அரசாணையின்படி 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது.

பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை தவிர கூடுதல் நேரமோ பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணியாளர் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கிக் கணக்கில் தான் அந்த பணத்தை சேர்க்க வேண்டும்.

ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு, நிறுவனத்தின் முக்கிய நுழைவு வாயில் வரையில் வாகன வசதிகளை கட்டாயம் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும்.

பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதற்காக நிறுவனத்தில் கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் யார் யார் இன்று வேலைக்கு வருவார்கள் யார் யாருக்கு விடுமுறை என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும்.

இந்த புதிய அரசாணை அடுத்த 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 7.6.19

வெள்ளி, 31 மே, 2019

பி.எஃப். அலுவலகத்தில் ஜூன் 10-இல் குறைதீர் கூட்டம்

சென்னை, மே 29  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான குறைதீர் கூட்டம் முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பி.எஃப். மண்டல ஆணையர் சைலேந்திரசிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37 என்ற முகவரியில் ஜூன் 10-ஆம் தேதி  காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- விடுதலை நாளேடு, 29.5.19

ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததால் நகரங்களில் குடியேறும் கிராம மக்கள் கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை, மே 29 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் முறையாக வேலை வழங்காததால் கிராமப்புறங்களில் இருந்து வேலைக் காக மக்கள் நகரங்களில் குடியேறி வருகின்றனர். எனவே, இத்திட்டத்தில் முறைகேடுகளைக் களைந்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விவசா யிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ள னர்.

இந்தியா முழுவதும் கடந்த 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயப் பணிகள் இல்லாத காலங்களில் கிரா மப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில், நாள் கூலியாக ரூ.224 வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி முறை கேடுகள் நடப்பதாகவும், சரிவர வேலை வழங்குவதில்லை எனவும் கூறி, பல்வேறு அரசு அலுவலகங்களில் கிராமத் தொழிலாளர்கள் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் குரவீந்திரன் கூறியதாவது: இத்திட் டத்தின் படி அடையாள அட்டை வைத்துள்ள குடும்பத்துக்கு 100 நாட் கள் வேலை வழங்க வேண்டும். அப் படி வேலை வழங்காத நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண் டும். ஆனால், அதிகாரிகள் இவ்வாறு வழங்குவதில்லை. இது சட்டவிரோதமாகும்.

இத்திட்டத்தில் இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை . ஆனால், சில இடங்களில் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை பயன் படுத்தி முறைகேடு நடந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து நிதி வரவில் லையென எனக் கூறி, தற்போது, 5 சதவீத பணியாளர்களுக்கு கூட வேலை வழங்குவதில்லை . மத்திய அரசு இத்திட்டத்துக்கான நிதியை குறைக்கா மல் வழங்கவேண்டும். முழுமையான கூலி ரூ.224 வழங்க வேண்டும். இத்திட்டத்தில் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி. பெரு மாள் கூறும்போது, "100 நாள் திட்டத்தில் வேலை இல்லாததால் மக்கள் கிராமங்களில் இருந்து வேலைக்காக நகரங்களில் குடியேறி வருகின்றனர். இத்திட்டத்தை முடக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டு, முறையாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.

ஊரக வளர்ச்சித்துறை அதி காரிகள் கூறும்போது, "இத்திட்டத் தில் அனைத்தும் ஆன்லைன் முறை யில் மேற்கொள்வதால் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் புதிய நிர்வாக ஒப்புதல் கிடைத்துவிடும். அதுவரை இருக்கும் நிதியைக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்பதால் சில இடங்களில் இருப்புத் தொகைக்கு ஏற்ப வேலை வழங்கப்படுகிறது" என்றனர்.

-  விடுதலை நாளேடு,29.5.19