வெள்ளி, 6 ஜனவரி, 2017

போக்குவரத்து  ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

அகவிலைப்படி நிலுவைத்தொகையை 
வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை
போக்குவரத்து  ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

திண்டுக்கல், ஜன.2 'போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி தொகையை வங்கி கணக்கில் செலுத்தாமல் தமிழக அரசு ஏமாற் றுகிறது' என, போக்குவரத்து ஊழியர் முன்னேற்றச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடப்பு விலைவாசி நிலவரங் களை வைத்து ஆறு மாதங் களுக்கு ஒருமுறை அகவிலைப் படி வழங்கப்படுகிறது. இத னால் போக்குவரத்துத் துறை யில் பணிபுரிந்த முதல்நிலை ஊழியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பயனடைந் தனர்.

முதல்வர் பன்னீர் செல்வம் கடந்த டிச., 15இல், 'அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். டிசம்பர்க்கான அகவிலைப்படி உயர்வு ஜன.,1 லும், ஜூலை முதல் நவம்பர் வரை அய்ந்து மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு அவ ரவர் வங்கி கணக்கில் செலுத் தப்படும்' எனவும், அறிவித்தார்.

ஆனால், தமிழக போக்கு வரத்துத்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான அக விலைப்படி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் நவம்பர் வரையான 5 மாதங்களுக்கான அகவிலைப் படி உயர்வு வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை' என தமிழ்நாடு போக்குவரத்து ஊழி யர்கள் முன்னேற்றச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந் திரக்குமார் கூறியதாவது: போக் குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன் மாதங் களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது 5 மாதங்களுக்கான தொகையும் வங்கிகளில் வரவு வைக்கவில்லை.இதுதவிர விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், 2016 செப்., 1இல் ஊதிய உயர்வு தாமதம், வருங்கால வைப்பு நிதிக்கடன், ஊதியத்தில் பிடித் தம் செய்யப்படும் காப்பீட்டு தொகை, உடல்நிலைக்கான காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட 13 வகையான பணப்பலன்கள் முறையாக ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை.

மேலும் ஊதிய உயர்வுக்கு உண்டான பணப்பலன்கள் வழங்கப்படுவதிலும் பெருமள வில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
-விடுதலை,2.1.17

புதன், 4 ஜனவரி, 2017

பாலூட்டும் தாய்மார்களுக்கு  ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை 


புதுடில்லி, ஜன.4 கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்குகிறது.
இதுதொடர்பாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களது பணிகால ஊதிய இழப்பீட்டை கருத்தில் கொண்டு, ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதனால் குழந்தையை பிரசவிப்பதற்கு முன்பும், குழந்தையை பிரசவித்த பிறகும் போதிய காலத்துக்கு அவர்களால் ஓய்வு எடுக்க முடியும். கர்ப்ப காலம் மற்றும் குழந்தைக்கு முதல் 6 மாத காலம் பாலூட்டும் நேரத்தில் தனது உடல்நலத்தை தாய்மார்கள் மேம்படுத்திக் கொள்வதுடன், ஊட்டச் சத்தையும் அதிகரிக்க முடியும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் தவிர்த்து, அனைத்து கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் முதல் 2 பிரசவங்களுக்கு இந்த ஊக்கத் தொகையைப் பெறலாம். ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை, 3 பிரிவுகளாக கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களின் வங்கிக் கணக்கு அல்லது அஞ்சல் சேமிப்பு கணக்கில் அரசால் செலுத்தப்படும். அதாவது, கர்ப்ப காலத்தில் முதல் தொகையாக ரூ.3 ஆயிரமும், குழந்தை பிரசவித்த உடன் ரூ.1,500-ம், பிரசவத்துக்கு 3 காலத்துக்குப் பிறகு ரூ.1,500-ம் அளிக்கப்படும்.

இந்த ஊக்கத் தொகை ஆதார் எண் அடிப்படையில், அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இதனால் நாடு முழுவதும் ஆண்டுக்கு 51.70 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், மத்திய-மாநில அரசுகளின் கூட்டுத் திட்டமாகும்.
-விடுதலை,4.1.17

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கருணை அடிப்படையில் வேலை கோரி 35 ஆண்டுகளாக போராடியவருக்கு வேலை உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை, செப்.4_ நில அளவைத்துறையில் பணியின் போது தந்தை இறந்ததால்,  கருணை அடிப்படையில் வேலை கேட்டு 35 ஆண்டாக போராடியவருக்கு வேலை வழங்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. சிவகங்கை, மணிமேகலை தெருவை சேர்ந்த கார்த்திகேயன் உயர் நீதிமன்ற  மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு: எனது தந்தை குருசாமி கடலூர்  மாவட்ட நில அளவைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கள  உதவியாளராக பணி யாற்றினார்.

பணியில் இருந்தபோது கடந்த  6.1.1979இல் இறந்தார். இதனால் கருணை அடிப் படையில் வேலை கேட்டு எனது தாய் 4.7.1979இல் விண்ணப்பித்தார். இதற்கு நீண்ட காலமாக  அதி காரிகள் பதிலளிக்காமல் காலம் தாழ்த்தினர். இறுதி யில் என்  தந்தையின் பணி, வரன்முறை செய்யப் படாததால், கருணை  அடிப்படையில் பணி வழங்க முடியாது என கூறி என் தாயின்  விண்ணப் பத்தை நிராகரித்தனர்.

இதுதொடர்பான வழக்கில், என்  தந்தையின் பணியை வரன்முறைப் படுத்த 2009ஆம் ஆண்டு தொழிலாளர்  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் எனக்கு பணி கேட்டு  விண்ணப்பித்தேன்.

3 ஆண்டிற்குள் தான் பணி கேட்டு விண்ணப்பிக்க  முடியும். மிகவும் கால தாமதமாக வந்துள்ளதால் பணி வழங்க முடியாது  எனக்கூறி என் மனுவையும் நில அளவைத்துறை இயக் குநர் மற்றும்  உதவி இயக்குநர் நிராகரித்தனர். என் தந்தையின் பணியை  வரன்முறைப்படுத்தாமல் விட்டது அரசு மற்றும் அதிகாரிகள் தவறு.  எனவே, எனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட  வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:  மனுதாரரின் தாயும் இதே கோரிக்கைக்காக 1979ஆம் ஆண்டே  விண்ணப்பித் துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கும் மேலாகி விட்டது.  ஆனாலும் அதி காரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்த ஒரு  காரணத்திற் காகவே மனுதாரருக்கு வேலை கொடுக்கலாம். அவரது  இளமைக்காலமே போய் விட்டது. மிகவும் காலதாமதமாக  நிராகரித் துள்ளனர். பணி கேட்ட வுடன் நிராகரித்திருந்தால், அவர்  நீதிமன்றத்தில் பரிகாரம் தேடி இருப்பார்.

அல்லது வேறு வேலைக் காவது  சென்றிருப்பார். சரியான நேரத்தில் முடிவு எடுப்பது மிகவும் முக்கியம்.  சரியான முடிவை உரிய காலத்தில் எடுக்காமல் இருந்தாலும், தவறான  முடிவை காலம் தாழ்த்தி எடுத்தாலும் பாதிப்புதான் ஏற்படும்.

அந்த  வகையில் மனுதாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடி யாது. எனவே  இன்னும் காத்திருக்க செய்யாமல் மனுதாரருக்கு 4 வாரத் திற்குள் பணி  வழங்க வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு நீதி கிடைத் தாலும்,  இத்தனை ஆண் டுகள் வழக்கை நடத்தியதே அவருக்கு பெரும்  தண்ட னைதான். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரருக்கு வேலை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அரசுக்கு சில  பரிந் துரைகளை கூறியுள்ளார். அதில், இந்த வழக்கில் அதிகாரிகள்  அலட்சியத் துடன் நடந்துள்ளது தெரி கிறது. பொதுமக்களின் எந்த மனுவாக  இருந்தா லும், கவனத்துடன் செயல் பட்டு குறையை போக்க வேண்டும்.  ஊழியர்கள் தனது கடமையை குறிப் பிட்ட காலத்திற்குள் முடிப் பதை  கண்காணிக்கும் வகையில் அரசு கொள்கை களை உருவாக்க வேண்டும்.  அரசு அதிகாரிகளின் மெத் தனத்திற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்.

அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்படா விட்டால், ஜாதி சான்று,  வருமான சான்று, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவை  கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.  குறிப் பிட்ட காலத்திற்குள் பணி யை முடித்து கொடுக்க அரசு உத்தரவிட  வேண் டும், என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

-விடுதலை,4.9.14

விவசாயத் தொழிலாளர்களுக்கு  குறைந்தபட்ச தினக்கூலி 

விவசாயத் தொழிலாளர்களுக்கு 
குறைந்தபட்ச தினக்கூலி 
ரூ.350 ஆக நிர்ணயம்  
மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி, அக்.29 மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “விவசாய கூலி தொழிலா ளர்களின் (சி பிரிவு) தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

இது சர்வதேச அடிப்படையிலானது. இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது” என கூறினார்..

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிக்கை, நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அனைத்து பிரிவிலான தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மேலும் கூறியதாவது:-

சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துவதற்கான மசோதா கொண்டு வரப்படும். அதற்கு முன்பாகவே சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்து மாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை கூறப்படும். அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் எனது தலைமையில் அமைக்கப் பட்டுள்ள குழு கவனித்து வருகிறது. நாங்கள் சந்தித்து இதுபற்றி விரிவாக ஆராய்ந்தோம். அதில்தான், ஒரு குழுவை நியமிக்க முடிவு எடுத்தோம். அந்த அடிப்படையில்தான் இப் போது குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணை செயலாளர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் ஆகியோரை கொண்டுள்ள குழு, தனது அறிக்கையை தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளரிடம் வழங்கும். அவர் அதன் பேரில் தனது பரிந்து ரைகளை அரசுக்கு வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

-விடுதலை,29.10.16

தற்காலிகப் பணியாளர்களுக்கும், சம வேலைக்கு சம ஊதியம்!

சம வேலைக்கு சம ஊதியம்! தற்காலிகப் பணியாளர்களுக்கும், நிரந்தரப்பணியாளர்களின் ஊதியம்போல் சமமாக வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி, அக்.29 நிரந்தரப் பணி யாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப்போன்றே தற்காலிக பணியாளர்களுக்கும் வழங்க  வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் அரசு சார் துறைகளில்  லட்சக்கணக்கில் தற்காலிகப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வரு கிறார்கள். சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கைக் கேற்ப, அரசுப்பணிகளில் நிரந் தரப் பணியாளர்களுக்கு அளிக் கப்படுகின்ற ஊதியத்தைப் போன்றே தற்காலிகப் பணியா ளர்களுக்கும் வழங்கிட வேண் டும் என உச்சநீதிமன்ற நீதி பதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கையின் அடிப் படையில் அனைத்து பணியா ளர்களுக்கும் சம அளவில் ஊதிய விகிதம் அளிப்பதுகுறித்த தெளிவான தீர்ப்பை ஜே.எஸ்.கேகர், எஸ்.ஏ.பாப்டி ஆகி யோரைக் கொண்ட அமர்வு அளித்துள்ளது.

இதில் எங்களுடைய பார் வையில், தொழிலாளர்களுக்கு சேர வேண்டியதைக் கொடுக்க மறுப்பது செயற்கைத்தனமான அளவீடுகளைக் கொண்ட ஒரு தவறான முடிவாகும் என்ப தாகும்.

ஒருவரைவிட அடுத்த வருக்கு குறைவாக ஊதியம்  கண்டிப்பாக வழங்கிடக் கூடாது. ஏனென்றால், இது மக்கள் நலன் காக்கின்ற அரசு ஆகும். இதுபோன்று வேறுபாடுகளு டன் இருப்பது மனிதகுலத்தின் பெருமையை சீர்குலைத்து விடும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.

நீதிபதிகள் கொண்ட அமர்வு இதுகுறித்து கொள்கை விளக்கத்தைத் தெளிவுபடுத்தி யுள்ளது.

ஒரேவிதமான பணியை பணியாற்றுவோரிடையே வழங்கப்படுகின்ற ஊதியத்தை ஒப்பிடும்போது குறைத்து வழங்கப்படுகிற செயலானது அடிமைத்தனத்தை கொண்டுள் ளதாக உள்ளது. பணியாற்று வோரிடையே இருவகைகளில் வேறுபடுத்துவதாக உள்ளது. அய்யத்திற்கிடமில்லாமல் அடக்குமுறை, ஒடுக்குமுறை களுடன் கட்டாயப்படுத்தி மக் களின் விருப்பத்துக்கு மாறாக அடிமைப்படுத்தி நிர்ப்பந் திக்கிறது’’ என நீதிபதி கேகர் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் தற் காலிகப் பணியாளர்கள் அளித்த மனுவில் தற்காலிகப்பணியாளர் களின் ஊதியம்  நிரந்தரப் பணியாளர்களின் ஊதியத்துடன் வேறுபாடுகளைக் கொண்டுள் ளதுகுறித்து குறிப்பிட்டார்கள். குறைந்த பட்ச ஊதிய விகிதம் என்பதுகூட நிர்ணயம் செய்யப் படவில்லை என்றுகூறி  நீதி கோரி பஞ்சாப் மாநில தற்கா லிகப் பணியாளர்கள் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றம் மற் றும் உச்சநீதிமன்றத்தை நாடி னார்கள்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் குறிப்பிடும்போது பன்னாட்டளவில் பொருளா தாரம், சமூகம், கலாச்சார உரி மைகள் குறித்து  உடன்படிக்கை யில் கையொப்பமிட்டுள்ள நிலையில் சம வேலைக்கு சம ஊதியம்Õ என்பது  பின்பற்றப் படவேண்டும் என்று குறிப் பிட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பல் வேறு நிலைகளைக் குறிப்பிட்டு விட்டு, சம வேலைக்கு சம ஊதியம் என்பதிலிருந்து விலகிச் செல்ல முடி யாது. அரச மைப்புச் சட்டத்தின் பிரிவு 141இன்படி உச்சநீதிமன் றம் ஏற்கெனவே அளித்துள்ள சட்டப் படியான உத்தரவை பின்பற்ற வேண்டும்.

தற்காலிகப் பணியாளர் அல் லது நிரந்தரப்பணியாளர்  இடையே சம வேலைக்கு சம ஊதியம்Õ என்கிற கொள்கையை தெளி வாகவும், குழப்பமில்லாமலும், ஒவ்வொரு பணியாளர்களிடத் திலும் பின்பற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.

_விடுதலை,29.10.16

கல்வித் தகுதியை மறைப்பதும்  பணி நடத்தை விதிமீறல்தான்   உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சென்னை, ஜன.1 கல்வித் தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதி மீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீக்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பி.சுடலைமுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் திருந்த மேல்முறையீட்டு மனு வில், ‘‘நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன்.

கடந்த 2008-ஆம் ஆண்டு கல்வித்தகுதியை மறைத்து நான் வங்கிப் பணியில் சேர்ந்ததாகக் கூறி வங்கி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் என்னை பணிநீக்கம் செய்தது சரியானதுதான் என தனி நீதி பதி உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்  என்று கோரி யிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலு வாடி ஜி.ரமேஷ் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

எந்த ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ, தங்களது பணி யாளர்களை தேர்வு செய்ய தங் களுக்கென தனிப்பட்ட விதி முறைகளை வகுத்து வைத் துள் ளன. பணியாளர்களின் கல்வித் தகுதியும் அதில் முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப் பாக அந்த கல்வித் தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல,

சட்டப்படியானதும் கூட. மனு தாரர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பகுதிநேர பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணிக்கு கடந்த 2008இ-ல் விண்ணப்பித்துள்ளார். அந்த வேலைக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது எட் டாம் வகுப்பில் தோல்வியுற்ற வர்கள் விண்ணப்பிக்க வங்கி நிர் வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

அதன்படி, மனுதாரர் தான் 8ஆ-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்ற உண்மையை மறைத்து, 5-ஆம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக மாற்றுச் சான் றிதழைக் காட்டி பணிக்கு சேர்ந் துள்ளார்.

அதன்பிறகு வங்கி நிர்வாகம் அதே ஆண்டு பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு செய்த போது, இதே மனுதாரர் தான் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனக்கூறி அந்த பணிக்கும் விண் ணப்பித்துள்ளார். வங்கி நிர்வாகம் உண்மையைக் கண்டு பிடித்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

மனுதாரர் உண்மையை மறைத்து பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணிக்கு சேர்ந்ததால் அந்த பணியிடம் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அரசு அல்லது வங்கி பணிகளில் உண்மையை மறைப்பது என்பது நடத்தை விதிமீறல்தான்.

எனவே மனுதாரரை பணி நீக்கம் செய்தது சரியானதுதான். தனி நீதிபதி சரியான உத்தர வைத்தான் பிறப் பித்துள்ளார் என்பதால் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
விடுதலை,1.1.17
-

சனி, 17 டிசம்பர், 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


சென்னை, டிச.16 தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியை 1.7.2016 முதல் உயர்த்தி வழங்கப்படும். திருத்திய ஊதியம் பெற்றுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கு 1.7.2016 முதல் 2 சதவீதம் எனவும், திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 7 சதவீதம் எனவும் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 1.7.2016 முதல் 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
இதன்படி, அகவிலைப்படி 125 சதவீதத்திலிருந்து 132 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும்  வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப் படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு 427/- ரூபாய் முதல் 5,390/- ரூபாய் வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 214/- ரூபாய் முதல் 2,695/- ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.
1.7.2016 முதல் 30.11.2016 வரை உள்ள காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்தப்படும்.  இந்த மாதம் முதல்  இந்த அகவிலைப்படி உயர்வு  சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர்.  அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக 1,833 கோடியே 33 லட்சம் ரூபாயாக இருக்கும்.
இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-விடுதலை,16.12.16