திங்கள், 10 ஆகஸ்ட், 2026

விபி ஜி ராம் ஜி திட்டம் அறிமுகமான முதல் மாதத்திலேயே சரிவைச் சந்தித்த வேலைவாய்ப்பு!

 

புதுடில்லி, ஆக. 10- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விபி ஜிராம் ஜி  திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, ஊரகப் பகுதிகளுக்கான வேலைநாட்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 15.33 கோடி வேலைநாட்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், நடப்பு 2026 ஜூலை மாதத்தில் விபி ஜிராம் ஜி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வேலைநாட்களின் எண்ணிக்கை 7.67 கோடியாகச் சரிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டின் ஜூலை மாத ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் வேலைநாட்களின் எண்ணிக்கை 49.94 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே பணிநாட்கள் இந்த அளவுக்குக் குறைந்துள்ளது ஊரகப் பகுதி தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


- விடுதலை நாளேடு, 10.08.2026

சனி, 18 ஜூலை, 2026

பெருக்குபவருக்கான குறைந்த அளவு ஊதியம் - ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை அரசு ஆணை

 01.04.2025 முதல் நடைமுறைக்கு வரும் பெருக்குபவருக்கான குறைந்த அளவு ஊதியம் வழங்கக் கூறும் ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை அரசு ஆணை



செவ்வாய், 7 ஜூலை, 2026

உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!



 புதுடில்லி, ஜூலை 4- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வுக் காலத்துக்காக வருங்கால வைப்பு நிதி (பிஎப்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய மற்றும் சேமிப்புத் திட்டம் ஆகும்.

கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 31.83 லட்சம் பிஎப் கணக்குகளில் ரூ.10,181 கோடி உரிமை கோரப்படாமல் இருந்தது. ஒன்றிய அரசு தற்போது ‘‘உங்கள் பணம், உங்கள் உரிமை’’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்படி உரிமை கோரப்படாத பிஎப். தொகை, வங்கி கணக்கு டெபாசிட், காப்பீட்டு தொகை, ஈவுத் தொகை, பிற நிதி சொத்துகள் உரியவர்களிடம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த ஓராண்டில் பல்வேறு பிஎப் கணக்குகளில் முடங்கி இருந்த ரூ.851 கோடி உரியவர்களிடம் அளிக்கப்பட்டது. தற்போதைய புள்ளி விவரங்களின்படி நாடு முழுவதும் சுமார் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎப் கணக்குகளில் ரூ.9,330 கோடி முடங்கியுள்ளது.

இந்த தொகையை உரியவர்களிடம் திருப்பி அளிக்க அதிதீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிஎப் கணக்குகளில் முடங்கியிருக்கும் ரூ.9,330 கோடி நிதி மூலம் 3 அய்அய்டி கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

-விடுதலை நாளேடு, 4.7.26

புதன், 11 பிப்ரவரி, 2026

நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் ஒரு பார்வை

 சமூக ஊடக செயற்பாட்டாளர் குழு(SMAG), வழக்குரைஞர் பு. பாலகோபால் அறக்கட்டளை  இணைந்து நடத்திய

நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் 07.02.2026ஆம் நாள் நடைபெற்றது.

வழக்குரைஞர் தளபதி பாண்டியன்  (செயலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு ) வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) அவர்கள் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு (வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை)  தொடக்க உரையாற்றினார். திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி) தலைமையில் இந் நகழ்ச்சி நடைபெற்றது. : தொ.மு.ச, ஏ.அய்.டி.யு.சி, சி.அய்.டி.யு, அய்.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.அய்.எல்.எப், ஏ.ஏ.எல்.எப், எம்.எல்.எப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர். கருப்பட்டி சிவா (தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை) நன்றி உரையாற்றினார்.

கருத்தரங்கில் முழுமையாக பங்கேற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தொழிலாளர் நல சட்டங்களிலிருந்து 29 சட்டங்களை திருத்தி நான்கு தொகுப்பு சட்டங்களாக ஒன்றிய அரசு 21.11.2025 ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. 

1. ஊதிய சட்டம் - 2019 
2. தொழில் உறவு சட்டங்கள் -2020
3. சமூக பாதுகாப்பு சட்டம் - 2020
4. பணியிட பாதுகாப்பு சட்டம் மற்றும் பணிச் சூழல் சட்டம் - 2020

இட் சட்டங்கள் குறித்த நன்மை தீமைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது. 

புதிய நான்கு சட்டங்களில் உள்ள சில பகுதிகளை பற்றி பார்ப்போம்: 

1. ஊதியம் 
'அனைத்து தொழிலாளர்களுக்கும் 'குறைந்தபட்ச ஊதியம்'  உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று கூறுகிறது. 
1(அ) அடிப்படை ஊதியம் 
'மொத்த சம்பளத் தொகையில் அடிப்படை ஊதியம் 50 விழுக்காடு இருக்க வேண்டும்'. 
இது தீர்ப்புகளில் சொல்லப்பட்டது தான். அதை சட்டமாக மாற்றி உள்ளனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியம் நடைமுறையில் உள்ளது. 
தொழிற்சாலை பணியாளர்களுக்கு மட்டும்தான் குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. சேர்க்கை ஆணை மடல் 
தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும்போது 'பணி நியமன ஆணை'வழங்கப்பட வேண்டும்' என்று சொல்கிறது. 
பொதுவாக தொழிற்சாலைகளில் முதலில் தற்காலிக தொழிலாளர்களாக சேர்ந்து கொள்கின்றனர். பிறகு தனக்கு ஏற்புடையவராக இருந்தால் தொழில் பழகுநர் கடிதம் கொடுத்து; பிறகு நிரந்தரப்படுத்தி கொள்கிறார்கள். 
ஆனால் இந்த சட்டத்தில் தொழிற்சாலைக்குள் வேலைக்காக சேர்க்கப்பட்டவர்கள்; தற்காலிக தொழிலாளர்களோ, பதிலியோ, தொழில் பழகுநரோ, ஒப்பந்த தொழிலாளரோ யாராகயிருந்தாலும் அவர்களுக்கு 'சேர்க்கை ஆணை மடல்' வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

3. சம வேலைக்கு சம ஊதியம் 
'ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்' என்று கூறுகிறது. 
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 

4. இரவுப் பணியில் பெண்கள்
இரவு நேரத்திலும் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறது இந்த சட்டம். 
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 
முதலில் சில துறைகளுக்கு மட்டும் இரவு பணியில் பெண்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிறகு 10 பேர் சேர்ந்து ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்தால் பாதுகாப்புடன்; அதாவது வீடு வரை பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வண்டி ஏற்பாடு செய்து தர வேண்டுமென இருந்து வருகிறது. 
இது தீர்ப்பின் மூலம் நடைமுறையில் இருந்து வந்தது. 
அதை சட்டமாகவே மாற்றியிருக்கிறார்கள். 

5. பணிக்கொடை 
அய்ந்து ஆண்டுகள் பணி முடித்தால்தான் பணிக்கொடை கிடைக்கும் என சட்டம் இருந்தது. அதை ஓராண்டாக மாற்றி உள்ளனர்.

6. பொது மருத்துவ பரிசோதனை
40 தொழிலாளர்களுக்கு மேல் பணி செய்யும் இடங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

7.PF, ESI, காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு சலுகை 
இவை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. 
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் தான்.
முதல் நாளிலிருந்தே வழங்கப்பட  வேண்டும் என்று தற்போது கூறுகிறது.

சட்டவிரோதமாக பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இச் சலுகைகளை வழங்காமல் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

8. இரட்டிப்பு ஊதியம் 
அனுமதி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் மணி நேரங்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வழிவகை செய்கிறது. 
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டம் தான். 

9. அபாயகரமான துறைகளில் நூறு விழுக்காடு பாதுகாப்பு. இதுவும் ஏற்கனவே உள்ளது தான்.

10. 500 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். 

11. பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு 
பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்; அதில் பெண் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். 

இது ஏற்கனவே தீர்ப்பின் மூலம் 2013ஆம் ஆண்டுசட்டம் நடைமுறையில் உள்ளது. அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

12. தொழிற் சங்கங்கள் தொடங்க வேண்டுமானால் தொழில் 
நிறுவனத்தின் அனுமதி வேண்டும். 

இது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகும்.

13. தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு 
100 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற முறை மாற்றப்பட்டு 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.

14. குறைதீர் குழு (Grievance Redressal Committee): 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் கட்டாயமாகப் பணியாளர் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். 

100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளில் வேலைக் குழு (Works Committee) சட்டப்படி அமைக்கப்பட வேண்டும் என்று இருந்தது. 
இதைத்தான் 'குறைதீர் குழு' என்ற பெயரில் மாற்றி அமைத்துள்ளது.

தொழிற் சங்கங்கள் தொடர்பான சட்டங்களை(தொழிற்சங்கங்கள் சட்டம் மற்றும் தொழிற் தகராறு சட்டம்), தொழிலாளர்களை மிகுதியாக பாதிக்கும் வகையில் திருத்தியுள்ளனர் என்பது தான் அனைவருடைய கவலையும் ஆகும்.
ஆகையினால் தான் தொழிலாளர்கள் இச் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள். 

முக்கிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த நூல்கள் வருமாறு
தமிழில் தொழிலாளர் சட்டங்கள் அடங்கிய நூல்
தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் சட்டம் (அரசு உரிமம் பெற்ற நூல்)
தொழிற்சாலைகள் சட்டம் (ஒன்றிய அரசே 1954 இல் வெளியிட்ட தமிழ் நூல்)
மாதிரி நிலையானைகள் சட்டம்

திங்கள், 12 ஜனவரி, 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!

 சென்னை, ஜன.12- தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு (1.4.2004-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்கள்) ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (டிஏபிஎஸ்) என்ற புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை, தமிழ்நாடு நிதித் துறைச் செயலர் த. உதயசந்திரன் நேற்று முன்தினம் (10.1.2026) வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாணையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், ஜன.1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த அரசாணையின்படி, ஓய்வூதியா்களின் கடைசி மாத ஊதியத்திலிருந்து 50 சதவீதம் ஓய்வூதியம், ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, ஃபோட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்றும், ஒன்றாம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான புதிய திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டம் ஜன. 1ஆம் தேதிக்கு முன்பு காலாவதியாகிவிட்டது. ஏற்கெனவே முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், 10.1.2026 அன்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகளை வழங்க அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்தாா். இந்த குழுவின் பரிந்துரை மற்றும் அரசின் நிதிநிலை உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கிடைத்து வந்த பல்வேறு பலன்களைத் தொடா்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு அலுவலா்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இவ்வாறு 50 சதவீதத்துக்கு உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளா்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்துக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலா்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரா் இறந்துவிட்டால், அவா் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினா்களுக்கு அவா் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும்போதும், பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக் காலத்துக்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில் இதற்குப் பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சோ்ந்து, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னா் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவா்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஜன. 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை தெரிவித்துள்ளது.

- விடுதலை நாளேடு, 12.01.25

வெள்ளி, 9 ஜனவரி, 2026

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’’ செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 


தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான 

சென்னை, ஜன.3 தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (3.1.2026) வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்பதில் அக்கறை காட்டும் ‘திராவிட மாடல்’ அரசு!

ஆட்சி என்கிற வாகனத்தின் சக்கரங்களாக இருக்கக்கூடி யவர்கள் அரசு அலுவலர்கள். அந்தச் சக்கரங்கள், மக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை கடைகோடி மனிதர் வரை கொண்டு சேர்க்கப் பயணிக்கின்றன. அதை உணர்ந்துள்ள அரசுதான் முத்தமிழறிஞர் கலைஞர் வழிவந்த ‘திராவிட மாடல்’ அரசு. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்பதில் கலைஞர் வழியில் எப்போதும் அக்கறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்லும் மகத்தான பணியை மேற்கொண்டு, அரசின் கரங்களாக விளங்கக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

தொடர்ந்து குறைக்கப்படும் ஒன்றிய அரசின் வரிப்பகிர்வு, திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி குறைக்கப்படுவது அல்லது முறையாக விடுவிக்கப்படாமல் இருப்பது, தமிழ்நாடு முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சியை எட்டியி ருப்பினும், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. மாற்றங்களால் குறைந்து வரும் மாநிலத்தின் வரி வருவாய், உயர்ந்து வரும் நலத்திட்டச் செலவுகள் போன்றவற்றால் ஏற்படும் நிதிச்சுமைகளையும் தாண்டி,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைத் தொடர்ந்து காத்து வருகிறார்.

அந்தவகையில்,

கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 2022ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசிற்கு இணையாக உயர்த்தி வழங்கியதோடு, ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமத மின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 01.10.2025 முதல் அரசுப் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் அரசு செயல்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள், விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால், ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 இலட்சம் ரூபாயும், ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.  பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ரூபாய் அய்ந்து இலட்சம் முதல் ரூபாய் 10 இலட்சம் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில ரூபாய் 10 இலட்சம் வரை நிதி யுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு இலட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து  ரூபாய் 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம்  10 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளன்று தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வு பெற அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியப் பணிக்கொடை ரூபாய் 20 இலட்சத்திலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவர்க ளுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் அய்நூறிலிருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்க ளாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் தொடர் கோரிக்கை!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதலமைச்சர் தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம் கோடி ரூபாய்ச் செலவில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த இருபது ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

தகுந்த பரிந்துரைகளை வழங்கிட குழு அமைத்தது!

அவர்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கைகள் என்பது ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தி னரின் வாழ்க்கையுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் தொடர்புடையது என்பதை உணர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, இவற்றின் மீது முழுக்கவனம் செலுத்தியதுடன், இக்கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையையும் பெற்றுள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் உண்மையான அக்கறை கொண்ட இந்த அரசு, அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் நிதிச் சூழலில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதியமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் முதலமைச்சர் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அந்த ஆலோசனையின் போது, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அவர்கள், நிதித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அளித்த முக்கியக் கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்விதத் தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்:-

கூடுதல் நிதி முழுவதையும்
தமிழ்நாடு அரசே ஏற்கும்!

மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக
13 ஆயிரம் கோடி ரூபாய்!

மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.  இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.

இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றம்!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும், நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும்,  பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த TAPS திட்டத்தினை,  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

- விடுதலை நாளேடு,3.1.26

வியாழன், 8 ஜனவரி, 2026

1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

 


சென்னை, டிச.26- 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

செவிலியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, மருத்துவம் –- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் முதலமைச்சர் அறிவுறுத்தல்களின்படி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் செய்யும்பொருட்டு, நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தர பணியிடங்களில் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்தகால ஆட்சியில் 2015-ஆம் ஆண்டு பணிநியமனம் பெற்ற 6,395 ஒப்பந்த செவிலியர்களில், 1,871 செவிலியர்கள் மட்டுமே 2020-ஆம் ஆண்டு வரை பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தி.மு.க. ஆட்சி பதவியேற்ற 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ½ வருடங்களில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு (2024) மட்டும் மொத்தம் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊதியத்துடன் கூடிய
மகப்பேறு விடுப்பு

தற்போது, செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. ஆயினும் மகளிர் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள இவ்வரசு, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு ஒன்றிய அரசின் மகப்பேறு சட்டம், 1961-இன் படி ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தேசிய நலவாழ்வுக் குழும் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.

கோவிட் செவிலியர்களுக்கு பணி ஆணை

கரோனா காலத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 செவிலியர்களில் பணியில் சேராத  390 பேர் நீங்கலாக, 2146 செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு, தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.  மீதமுள்ள 724 செவிலியர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இவ்வரசு பொறுப்பேற்றவுடன், ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக மே-2021 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வூதிய உயர்வு ஒருசில ஒப்பந்த செவிலியர்களுக்கு சில நிர்வாக காரணங்களால் பெற இயலாமல் உள்ளனர் என அறிய வருகிறது.  அவர்களுக்கு விரைவில் இவ்வூதிய உயர்வுத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைளின் காரணமாக ஒப்பந்த செவிலியர்கள் அரசின் முதற்கட்டமாக 1000 நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் முடிவினை ஏற்று, தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

- விடுதலை நாளேடு,26.12.25

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.