ஞாயிறு, 17 மே, 2015

உடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்?






















தந்தை பெரியார்
நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப்படி செய்யலாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான்  இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப்பான் இவையென்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம்.

இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லைஎது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே!  நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 1லு (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
ஆனால் இந்த 1லு வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 1லு வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரியங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?
தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந் தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?
இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள் முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.
இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜன நாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?
கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசி பாலிட்டிகளும்  கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர் களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்ற வர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப்பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.
இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?
என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.
இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண்டியின் மகன் பன்றி மேய்ப்பது  ஆகிய வேலைகளாகும்.
இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.
என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடு கிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்கமாக, சுதந்தரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயண மாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப் படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண் டவர்களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான்.
நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடுபடுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச்சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார்.  நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர் களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான் ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்கு பவர்களாக  இருக்கிறோம்.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலுழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்றோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது  சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.
நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப்படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான்  இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப்பான் இவையென்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலுழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்சாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப்பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும்.
அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள்  கீழ்சாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள்  ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள்  எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!
தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப்பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந்நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாதவர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப் பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!
வெள்ளைக்கார அந்நியன் 6000 மைலுக்கு அப்பால் வெகுதூரத்தில் இருந்ததால் , தன் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள, இந்த நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்தான் என்றாலும் நம்மை மனிதனாக நடத்தினான். நம் ஆட்களிடம் சாப்பிட்டான்; நம் ஆட்களைத் தொடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் பறையர்கள் என்று  இந்தப் பார்ப் பனர்களால்  அழைக்கப்படுகிற  மக்கள்தானே அவனுடைய  சமையல்காரர்களாக பட்லர்களாக இருந்தார்கள்?
ஆனால் இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம்  மக்கள்  தலையெடுக்கவிடாமல்  எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறைகளையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே!  ஆதலால் இப்படிப்பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?
இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?
வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட்டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ்டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!
இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.
ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே  தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்டவாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும்  யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நிய னுக்கா? இல்லையே! நமக்குத்தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.
பார்ப்பனர்களும் முடிவுகட்டிக் கொண்டார் கள், இரண்டி லொன்று  பார்த்துவிடுவது என்று. ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம் என்று. அப்படியென்றால் என்ன? ஆரிய - திராவிடப் போராட்டம் இராமாயணம் போல் துவங்கி விட்டதென்று  தானே பொருள்?
இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்  சிலர்தான் இதை இன்னும்  உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!
நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட  மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக்களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன்  என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.
இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள்  பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா? அவருக்கு ஏதோ இப்போது பல லட்சம் ரூபாய் இருக்கிறது என்கிறார்கள். ஆதலால் பணம் வேண்டும் என்பதற்காகப் பதவியில் இல்லை. அதுபோலவே அவர் பல பெரிய பெரிய பதவிகளில் எல்லாம்-கவர்னர்-ஜெனரல்-பதவிகளில் எல்லாம்  இருந்திருக்கிறார். ஆதலால் இது அவரைப் பொறுத்தவரையில் சாதாரணப் பதவிதான். அதுபோலவே தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் முதலியவைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்திலும் அல்ல அவர் பதவியிலிருப்பது.
அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும்.  சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின்  நன்மைக்கு  ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என்கிறார்களே!
நமக்கு இன உணர்ச்சி  கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.
தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப்பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி  நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத்தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதிராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் - என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக்கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு  பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.
நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது - நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?
பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான்
நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசுபவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய  தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப் பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக் கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும்  பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!
தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம்  எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும்  என்றெல்லாம்  சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.
இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு  வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக  எதிர்க்கிறார்கள். ஆனால் நம்மவருக்கு இந்த உணர்ச்சியே  இல்லையே! செருப்பால் அடித்தாலும் ஸ்ரீ பாதம் சடகோபம் என் கிறார்களே!
இன்று, திராவிட மக்களை அழித்து ஒழித்துக்கட்டுவதற்கு என்றே ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிற (இராசகோபால) ஆச்சாரியார் அவர்களைச் சுற்றிக்கொண்டும், அவருக்குத் ததாஸ்து பாடிக்கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே! நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப்பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்தான்.
இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்என்றைக்குத் தான்  நம்முடைய  இழிநிலைமை ஒழியும்எவ்வளவு கொடு மையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங்களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திராவிட மக்கள் இதை உணர வேண்டும்.
15-11-1953
இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: (விடுதலை 17-11-1953)
விடுதலை 17-5-15


வெள்ளி, 15 மே, 2015

ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்


- குடந்தை கருணா
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் காவலர் முயற்சியால், 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலு வலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?
1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட் டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
2. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.
3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தை களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.
4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?
1.   குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
2.   மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர் களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.      தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண் டுள்ளது.
இந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட் டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந் தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத் துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில்,   OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர்aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
-விடுதலை,14.5.15பக்-2

ஒரு கோடி கையெழுத்து இயக்கம் வங்கிப் பணியாளர்கள் கூட்டமைப்பின் சமூக நீதி கொள்கைக்கு தமிழர் தலைவர் ஆதரவு


சென்னை, ஏப். 29_ வங்கி பணியாளர்கள் கூட்ட மைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை தடை செய்யக் கோரியும், சுமார் 2.60 லட்சம் கோடி வாராக் கடனை வசூல் செய்ய வலியுறுத்தியும் மக்களுடைய பணம் சுமார் 90 லட்சம் கோடி சேமிப்புக் கணக்கில் உள்ளபடியால் வங்கிகளை தனியார்
மயமாக்கக் கூடாது, மேலும்
1. பொதுத்துறை வங்கிகளை வலிமைப்படுத்துக.
2. பொதுத்துறை வங்கிகளுக்கு உரிய மூலதனம் வழங்குக.
3. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டாம்.
4. வங்கித்துறையில் அந்நிய முதலீட்டினை அனுமதிக்க வேண்டாம்.
5. வங்கிகளில் மக்கள் நல சேவைத் திட்டங்களை குறைக்காதே.
6. விவசாயம் மற்றும் முன்னுரிமை கடன் திட்டங்களுக்கு மேலும் கடன் வழங்குக.
7. வங்கிச் சேமிப்பிற்கு வட்டி விகிதத்தினை அதிகப்படுத்துக.
8. பெரு முதலாளிகள் வங்கிகள் துவங்க அனுமதிக்க வேண்டாம்.
9. சிறிய தனியார் மற்றும் பேமென்ட் வங்கிகளை ஊக்குவிக்க வேண்டாம்.
10. நாடு முழுவதும் மேலும் பல பொதுத் துறை வங்கிக் கிளைகளைத் திறந்திடுக.
11. அனைத்துத் தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றிடுக.
12. ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்காதே.
13. பிராந்திய கிராம வங்கிகளை தனியார் மயப்படுத்த வேண்டாம்.
14. பிராந்திய கிராம வங்கிகளை அவற்றின் ஸ்பான்சர் வங்கியுடன் இணைத்திடுக.
15. கூட்டுறவு வங்கிகளுக்கு புத்துயிரூட்டி வலிமைப்படுத்துக.
16. வங்கிக்கடன் திருப்பிச் செலுத்தாதோர் பட்டியலை வெளியிடுக.
17. வாராக் கடனை வசூலிக்க கடுமையான சட்டங்களை இயற்றிடுக.
18. வங்கிக் கடனைத் திரும்பிச் செலுத்தாமையினை கிரிமினல் குற்றமாக அறிவித்திடுக.
19. வங்கிச் சேவையினை மக்களின் அடிப்படை உரிமையாக்குக.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலம் பேணும் வங்கித் துறை கொள்கைகள் வளமான இந்தியாவை உருவாக்கவும் நமது நாட்டின் வங்கிகள் மேலும் வலுப்பெறவும்,
நாட்டின் பொருளாதார வளச்சிக்கும் சாதாரண மக்களுக்கு வங்கிச் சேவைகள் சென்றடையவும் மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் ஆதரிக்கும் வண்ணம் ஏப். 20ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ஒரு கோடி கையெழுத்துப் பெற்று அவற்றை பிரதமர் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் இன்று காலை (29.4.2015) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சமூகநீதியின் அடிப்படையில் என்றைக்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அந்த வகையில் உங்களது கோரிக்கைகளுக்கு எங்களது ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு கையொப்பம் இட்டார்.
உடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இ.அருணாச்சலம், செயலாளர் ஆர்.விஜயகுமார், இணைச் செயலாளர் சஙகரவடிவேலு, மத்திய குழு உறுப்பினர் வெ.பாண்டு, அலுவலக பணியாளர் தென்சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

-விடுதலை,29.4.15

புதன், 13 மே, 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு


366 முதல் 4620 வரை சம்பளம் 


அதிகரிக்கும்:



தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

சென்னை:  மத்திய அரசு  அலுவலர்களுக்கு அகவிலைப் படி உயர்த்தியதை அடுத்து தமிழகத்திலும் அரசு  ஊழியர், ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்தி அரசு நேற்று   உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட  பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு தரப்பில் இது  குறித்து கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். இதனால் ஆசிரியர்கள் தங்கள்  போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கு பிறகும் ஆசிரியர்கள்  தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள நிலையில் அவர்களின் கோரிக்கைகளில்  ஒன்றான அகவிலைப் படியை உயர்த்தி தருவதில் அரசு தனது முடிவை மாற்றிக்  கொண்டுள்ளது. இதையடுத்து அகவிலைப் படியை மத்திய அரசுபோல 6 சதவீதம்  உயர்த்தி வழங்குவதாக அரசு நேற்று காலை அறிவித்தது. மத்திய அரசில்  பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.1.2015 முதல் அகவிலைப் படி உயர்த்தி  அறிவிக்கப்பட்டது. அதையொட்டி தமிழக அரசு அலுவலர்களுக்கும்,  ஆசிரியர்களுக்கும்  1.1.2015 முதல் 6 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய  அரசு ஊழியர்கள் போல தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1.1.2015 முதல் 6  சதவீத கூடுதல் அகவிலைப் படியை பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு  உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில்  பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணியாற்றும் கிராம  உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி  உதவியாளர்கள், எழுத்தர்கள், வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும்  அனைவருக்கும் பொருந்தும்., இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.336  முதல் ரூ.4620 வரை சம்பளம் அதிகரிக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள  அகவிலைப்படி 1.1.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த  உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு ஊதியம்  பெறுவோர் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக  ஆண்டுக்கு ரூ.1222.76 கோடி செலவாகும்.இவ்வாறு அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

-தினகரன்,23.4.15