ஞாயிறு, 31 அக்டோபர், 2021

தொழிலாளர் பணிக்கொடை பெறும் விதிமுறைகள்

 கி.பார்த்திபன்

Published : 07 Sep 2014 10:51 am

Updated : 07 Sep 2014 10:51 am


தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்ன விதமான பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

பணிக்கொடை, தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் மூலம் மருத்துவ வசதி போன்ற பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பணிக்கொடையை பொறுத்தவரை பயிற்சி தொழிலாளர் நீங்கலாக பிற தொழிலாளர்கள் தகுதியுடையவர்களாவர். சம்மந்தப்பட்ட தொழிலாளர் பெறும் மாத ஊதியத்தை அடிப்படையாக கொண்டு, ஆண்டுக்கு 15 நாள் ஊதியத்தை பணிபுரியும் நிறுவனம் வழங்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் ஐந்தாண்டு தொடர்ச்சியாக பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கொடை பெற தகுதியுடையவர்களாவர்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை எவ்வளவு ?

பணிக்கொடையை பொறுத்தவரை ஆண்டுக்கு 15 நாள் ஊதியம் வீதம் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை மட்டுமே நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். ஊழியர்களுக்கான பணிக்கொடையை காப்பீட்டு நிறுவனங்களில் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படும். பணிக்கொடை தொழிலாளர்களுக்கு வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அபராதத் தொகையை நிறுவனத்தினர் செலுத்தாதபட்சத்தில் தொழிலாளிக்கு பணிக்கொடையை பெற்றுத்தர என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்?

தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் ஆய்வின்போது ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தொகையை செலுத்த குறிப்பிட்ட கால அளவு உள்ளது. அந்த கால கெடுவுக்குள் அபராதம் செலுத்தாதபட்சத்தில், நாளொன்று ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) பயன் என்ன?

அனைத்து விதமான தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக விதிமுறை பொருந்தும். அதன்படி தொழிலாளர் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதனுடன் நிறுவன உரிமையாளர் குறிப்பிட்ட தொகை செலுத்துவர். அந்த தொகையை தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் பெற தகுதியுடையவர்களாவர். தொழிலாளர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுதல், பெண் தொழிலாளர் மகப்பேறு காலம் போன்றவற்றுக்கு அந்தந்த நிறுவனத்தின் மூலம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை வழங்கப்படும்.

- இந்து நாளேடு இணையம்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக