சனி, 30 ஏப்ரல், 2016

கலைஞர் மேதின வாழ்த்து

சென்னை, ஏப்.30- தொழிலாளர் சமுதாயம் எல்லா வளங் களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டு மென இந்த மேதின நன்னாளில் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (30.4.2016) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
8 மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப்பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் இத் திருநாளில் தமிழக முன்னேற்றத்திற்காக நாளும் உழைத்திடும் தொழிலாளர் சமுதாய உடன்பிறப்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வந்துள்ளது.
1969இல் முதலமைச்சராகப்  பொறுப்பேற்றவுடன் தொழி லாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித் துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கியது;
1969ஆம் ஆண்டில் மே முதல் நாளை சம்பளத்தோடு கூடி பொது விடுமுறை
1969 ஆம் ஆண்டில் மே முதல் நாளை சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை  நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது;
1969இல் கணபதியாபிள்ளை பரிந்துரையை ஏற்று அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வகை செய்தது;
பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கற் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர் களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது;
குடியிருக்கும் வீட்டுமனை சொந்தம்
1971இல் குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம் கண்டு, 1,73,748 விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் குடியிருக்கும் வீட்டுமனையை அவர்களுக்கே சொந்தமாக்கியது;
15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்து; கிடைத்த உபரி நிலங்களை லட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கியது;
தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் பணிக்கொடை வழங்கும் திட்டத்தைச் செயல் படுத்தியது; விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவாரண நிதித் திட்டத்தை உருவாக்கியது;
மதுரை பால்வளத் துறை ஊழியர்களுக்காகச் சென்னையில் அனுதாப வேலை நிறுத்தம் செய்ததால் அதிமுக அரசினால் வேலை நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு பால்வள நிறுவனத்தின் 1095 ஊழியர்களை 1989இல் மீண்டும் பணியில் அமர்த்தியது;
1990இல் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தைத் தடுத்தது;
மேதினப் பூங்கா
மே தின நூற்றாண்டு விழாவினையொட்டி 1990இல் சென்னை நேப்பியர் பூங்கா விற்கு, மே தினப் பூங்கா எனப் பெயர் சூட்டி,  அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது; கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன் விவசாயத்  தொழி லாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம் உட்பட 2006-2011 ஆட்சிக் காலத்தில் 35 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை உருவாக்கி, கோடிக் கணக்கான ரூபாயை நலத்திட்ட உதவிகளாக வழங்கி, தொழி லாளர் சமுதா யத்தைக் காத்தது; காத்து வரு வது அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகமே என் பதை இத்தருணத்தில் நினைவு படுத்துகிறேன்!
அமைப்பு சாராத் தொழிலாளர் நலன்
அதே வேளையில், 35 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களையும் முடக்கிவிட்டு, தொழிலாளர் சமுதாயம் பெற்று வந்த பயன்கள் அனைத்தையும் தடுத்தது அதிமுக ஆட்சி. ஏழை எளியோருக்கு வழிகாட்டி துணைபுரிந்திட கழக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வேலை நீக்கம் செய்து, தற்போது நீதிமன்றங்களின் உத்தரவு களையும் மதிக்காமல் அவர்களின் குடும்பங்களைச் சித்ர வதைக்கு ஆளாக்கியுள்ளது அதிமுக ஆட்சி.
தொழிலாளர் விரோதப் போக்கு
நிர்வாகச் சீர்கேடுகளால் தொழில் வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தைக் கடைசி இடத்திற்குத் தள்ளிவிட்டு, ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையை ஏற்படுத்தி; பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்திடச் செய்து, தொழிலாளர் விரோதப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது அதிமுக ஆட்சியே என்பதைச் சுட்டிக்காட்டி;
தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக என்றும் விளங்குவது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை இத்தேர்தல் நேரத்தில் நினைவுபடுத்தி தொழிலாளர் சமுதாயம் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டுமென இந்த மே தின நன் னாளில் எனது நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
-விடுதலை,30.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக