25.03.1934- புரட்சி - தலையங்கத்திலிருந்து...
இந்திய நாட்டின் தொழிலாள வகுப்பார்கள் தங்கள் அடிமைச் சங்கிலிகளை அறவே தகர்த்தெறிய, பரிபூரணமாக இன்னும் முற்படவில்லை என்றாலும், ஓர் அளவிற்கு அவர்கள் சமீப காலத்தில் விழிப்படைந்திருக்கிறார்கள் என்பது மாத்திரம் மறுக்க முடியாத உண்மையாகும்.
தொழிலாளர்களுடைய விழிப்பிற்குக் காரணம், அவர் களுடைய சகிக்க முடியாத கொடிய துன்பங்களும் கஷ்டங் களுமேயாகும்.
தொழிலாளர்களுக்கு, முதலாளிகளாலோ, அரசாங்கத் தாலோ இன்றைய தினம் கிருபா கடாட்சம் காட்டப் படுகின்றதென்று சொன்னால், அது அந்தத் தொழிலாளிகளின் உழைப்பின் பயனாகவே, நியாயமாக கிடைக்க வேண்டிய வரும்படியிலிருந்து கொஞ்சம் கொடுத்து,
தொழிலாளர்கள் வயிறு ஒட்டி, வாடி வதங்கிச் சாகாமலிருக்கச் செய்து, மீண்டும் சாவதமாக தங்களுக்கே ஊழியம் செய்து கொண்டிருப்பதற்கே தவிர, மற்றபடி நியாய புத்தியையோ, கருணைப் பிரவாகத் தையோ பச்சாதாப இரக்க புத்தியையோ, கொண்டதல்ல வென்று துணிந்து கூறுவோம்.
இன்றைய தினம் முதலாளியானவன், ஒரு தொழிலாளி யைப் பற்றி எப்பேர்க்கொத்த மனோநிலையைக் கொண்டி ருக்கிறான் என்று முடிவு கட்டுவதற்கு, அவனுடைய நடைமுறை வாழ்க்கையைப் பரிசீலனை செய்யுங்கள்.
ஒரு முதலாளிக்கு, அவனுடைய நாய்க்குட்டியோ, மைனாக் கிளியோ, எருமை மாடோ, செத்துப் போனால், அதை நஷ்ட மாகக் கருதி துக்கப்படுகிறான். ஆனால், ஒரு தொழிலாளி செத்துப் போனால், அந்தப்படி கூட துக்கப்படுவதைக் காணோம். தொழிலாளர்களுடைய இந்தப் பரிதாப நிலை மைக்கு யார் என்ன சமாதானம் கூறக் கூடும்?
தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள, இன்னும் தக்க சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஆங்காங்கே தொழிலாள சமுக விழிப்பின் காரணமாக, சில தொழிற் சங்க தாபனங்களும், டிரேட் யூனியன் சங்கங்களும் தாபிக்கப்பட்டு வந்திருக்கின்றன, வருகின்றன.
இவற்றில் சில முதலாளிமார்களின் சூழ்ச்சிக்கு அடங் கியதும், தொழிலாளர்களை வஞ்சித்து துரோகம் செய்வது மாகும். இதுபோன்ற தாபனங்கள் நாட்டில் புதிய அரசியல் சீர்திருத்தங்கள் வழங்க உத்தேசிக்கப்படும் காலம் முதல், ஒரு சில சுயநலப்பித்தர்களால் உண்டாக்கப்படுவது சர்வ சாதா ரணமாகும்.
இதைத்தக்கவாறு, தொழிலாளத் தோழர்கள் கவனித்து - பிறர் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. (தொழி லாளர்களாகிய) தங்களின் ஆதிக்கத் தையே பரப்பப் பெரிதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுகிறோம்.
முதலாளி வகுப்பின் ஆதிக்கம் ஒழிந்தாலொழிய, தொழிலாளி விடுதலை பெற மார்க்கமில்லை என்பதை இன்றைய தினம் யாரும் ஆட்சேபணையின்றி ஒப்புக் கொள்வர்.
அதோடு ஜாதி அபிமானத்தாலோ மத அபிமானத்தாலோ தேசாபிமானத் தாலோ, கடவுளபிமானத்தாலோ, தொழிலாளர் களுடைய முற்போக்கு கிஞ்சிற்றும் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதும், சமீப காலத்தில் நாம் அனுபவ பூர்வமாகக் கூட கண்டறிந்த உண்மையாகும்.
உதாரணமாக இந்தத் தத்துவத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடிய அகில இந்திய டிரேட் யூனியன் காங்கிரசானது ஓர் அளவிற்கு நன்கு உணர்ந்து கொண்டது குறிப் பிடத்தக்கது. தொழிலாளர்களுடைய சரித்திரத்திலேயே மிகவும் சிலாகிக்கத் தக்க ஒரு விசேஷ சம்பவமும் இந்த மகாநாட்டில் நிறை வேறியது.
அதாவது மகாத்மா காந்தி உள்ளிட்ட மாபெரும் தேசியத் தலைவர்களெல்லாம் நாட்டின் முற்போக்கிற்கு தீங்கு விளைக் கும் தேசத் துரோகிகள் என்று பகிரங்கமாகவும், வன்மை யாகவும், ஆத்திரத் தோடும் எடுத்துக்காட்டப்பட்டுக் கண்டிக் கப்பட்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களுடைய விழிப்பு நிலை. ஒருவாறு இவ்விதமாக இருப்பதால், தொழிலாள தோழர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டு இதனை முடித்துவிடுகின்றோம். அதாவது தொழிலாளியின் முன்னேற் றத்திற்குத் தொழிலாளி களையே நம்புங்களென்பதேயாகும்.
-விடுதலை,30.4.16