சனி, 12 அக்டோபர், 2024

ஊதியம் வழங்கும் சட்டம் - 1936 - கே.ஜி.சுப்பிரமணியன்

 தொழிலாளர் நலச் சட்டங்கள்-5

- கே.ஜி.சுப்பிரமணியன்

1. இச்சட்டமானது ஊதியம் கொடுப்பதைக் குறித்த சட்டம் 1936 எனப் பெயர் பெறும்.

2. இச்சட்டம் இந்தியா முழுவதும் செல்லத்தக்கதாகும்.

நோக்கங்கள்:-

ஊதியம் வழங்கப்பட வேண்டிய தகுதியை நிர்ணயம் செய்கிறது. ஊதியத்தில் பிடித்தங்கள் செய்வதை ஒழுங்குபடுத்துகிறது. ஊதியம் வழங்குவதில் உள்ள குறைபாடுகளைப் போக்க வகை செய்கிறது.

இச்சட்டம் தொழிற்சாலைகளிலும், இரயில்வே துறையில் பணி புரிபவர் களுக்கும், இரயில்வே நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளவர்க ளால் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும்.

தொழிலாளி:- தொழிலாளி" என்னும் சொல் இறந்துபட்ட தொழிலாளியின் சட்ட பூர்வமானவருக்கும் பொருந்தும்.

முதலாளி "முதலாளி" என்னும் சொல் இறந்துபட்ட முதலாளியின் சட்ட பூர்வமானவருக்கும் பொருந்தும்.

தொழிற்சாலை:- "தொழிற்சாலை" என்பது 1948-ம் ஆண்டில் தொழிற் சாலைகள் சட்டத்தில் கண்டு உள்ள விளக்கத்தைக் குறிக்கும்.

தொழில் நிறுவனம் என்பது பின் வருபவற்றைக் குறிக்கும்.

1. வாடகைக்கோ, வெகுமதிக்கோ பயணிகளை அல்லது சரக்குகளை சாலையில் ஏற்றிச் செல்லும் டிராம் அல்லது மோட்டார் போக்குவரத்து.

2. இராணுவத்திலும், சிவில் விமானத்துறையிலும் ஈடுபடாத இதர விமானப் போக்குவரத்துப்பணி.

3. கப்பல் துறை, கப்பல் தளம், கப்பல் தங்குமிடம்.

4. இயந்திரத்தால் இயக்கப்படும் உள்நாட்டுப் படகுகள்.

5. சுரங்கம், சுரங்கப்பகுதி, எண்ணெய் வயல்,

6. தோட்டத் தொழில்,

7. பொருட்களை பயன்படுத்துதல். வேறு இடங்களுக்கு அனுப்புதல், விற்பனை செய்தல், பொருள் உற்பத்தி அல்லது மாற்றியமைக்கும் தொழில் கூடம், அல்லது இதர நிறுவனம்.

8. கட்டடங்களைக் கட்டுதல், பாதுகாப்பு, அல்லது மேற்பார்வையிடுதல், சாலைகள், பாலங்கள், சிறுகால் வாய்கள், அல்லது கப்பல் போக்குவரத்து, விவசாயத்திற்கு நீர் வழங்குதல், அல்லது மின் சக்தி இயக்குதல், வழங்குதல், கொண்டு செல்லுதல் போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.

அ. சுரங்கம் என்பது 1952ஆம் ஆண்டின் சுரங்கச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பொருளையே உடையதாகும்.

ஆ. தோட்டம் என்பது 1951ஆம் ஆண்டின் தோட்டத் தொழிலாளர் சட் டத்தில் கூறப்பட்டுள்ள பொருளையே குறிப்பதாகும்.

இ. நிர்ணயிக்கப்பட்ட என்பது இச் சட்டத்தின்படி இயற்றப்பட்ட விதிகளினால் நிர்ணயிக்கப்பட்ட எனப் பொருள்படும்.

இரயில்வே நிர்வாகம் என்பது - 1890ஆம் ஆண்டின் இந்திய இரயில்வேக்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பொருள்களையே குறிக்கும்.

ஊதியம்: வேலை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதின் மூலமாக ஒரு வேலைக்கு அமர்த்தப்பட்ட நபருக்கு அவர் செய்த வேலைக்காக பணமாக மதிப்பிட்டுக் கொடுக்கப்படும் அல்லது மதிப்பிடக்கூடிய எல்லா வெருமதியும் 'ஊதியம்'' எனக் கருதப்படும்.

கீழ்க்கண்டவைகள் ஊதியம் என்ற
சொல்லில் அடங்கும் :-


1. இரு தரப்பினரிடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அல்லது நீதி மன்றத் தீர்ப்பின்படி அளிக்கப்படக் கூடிய எல்லா தொகையும்.

தொழிலாளி நியாயமாகப் பெறத்தக்க மிகை நேர ஊதியம், அல்லது விடுமுறை நாட்களுக்கு உரிய ஊதியம் அல்லது ஓய்வு நாட்களுக்கு உரிய ஊதியம்.

3. போனஸ் என்ற பெயராலோ அல்லது வேறு பெயராலோ வேலை நிபந்தனைகளின்படி கொடுக்கப்பட வேண்டிய தொகை.

4. வேலையிலிருந்து நீக்கப்படுவதினால் சட்டப்படி வழங்கவேண்டிய தொகை, ஒப்பந்தம் அல்லது பத்திரங்கள் மூலம் கொடுக்கப்ட வேண்டிய தொகை

5. அவ்வப்போது நடைமுறையில் உள்ள அந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப் படையில் வேலைக்கு அமர்த்தப்பட் டவருக்குக் கிடைக்க வேண்டிய தொகை

கீழ்க்கண்டவைகள் "ஊதியம்" என்ற
விளக்கத்தில் அடங்காது:-


1.வேலை ஒப்பந்தம், அவார்டு, இருதரப்பு ஒப்பந்தம், நீதிமன்ற உத்தரவு இவைகளில் கூறப்படாத இலாபப் பங்கீடு அல்லது வேறு விதமான போனஸ் இதில் அடங்காது.

2. மாநில அரசின் உத்தரவின்படி ஊதியத்தில் சேர்க்கப்பட்டக் கூடாது என விலக்களிக்கப்பட்ட, வீட்டு வசதி, விளக்கு வசதி, தண்ணீர் வசதி, மருத்துவ வசதி மற்றும் இதர வசதி அல்லது சேவைகளின் மதிப்பீடு இதில் அடங்காது.

3. ஓய்வு கால ஊதியம், வருங்கால வைப்பு நிதி இவற்றிற்காக வேலைக்கு அமர்த்துபவர் செலுத்தும் பங்கும் அதற்கான வட்டியும்.

4. பயணப்படி அல்லது பயண சலுகையின் மதிப்பு.

5. வேலையின் தன்மை கருதி 'வேலைக்கமர்த்தப்பட்டவருக்கு சிறப் பாகத் தரப்படும் செலவு தொகைகள்.

6. வேலை நீக்கம் செய்யப்படும் போது தரப்படும் பணிக்கொடை.

ஊதியம் கொடுப்பதற்கான
பொறுப்பு:-


ஒவ்வொரு முதலாளியும் அவரால் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகிற நபர்களுக்கு இச்சட்டத்தின் கொடுக்கப்பட வேண்டிய எல்லா ஊதியத்தையும் கொடுப்பதற்கும் பொறுப்பாளியாவார்.

ஊதிய கால வரம்பு:-

ஊதியம் வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளவர் முதலில் ஊதியம் வழங் குவதற்கான ஊதியக் காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் ஊதியக் காலம் என்பது ஒரு மாதத்திற்கு மேற்படக்கூடாது.

ஊதியம் வழங்கும் காலம்:-

ஒரு இரயில்வே நிறுவனம், தொழிற்சாலை, தொழில் நிறுவனம் இவற்றில் வேலைக்கமர்த்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை; 1000 தொழிலாளர்களுக்கு குறைவாக இருப்பின் ஊதிய காலத்தின் கடைசி தினத்திற்கு பின்னர் ஏழாவது தினம் முடியும் முன்னரும், 1000 தொழிலா ளர்களுக்கு மேற்பட்டிருப்பின், ஊதிய காலத்தின் கடைசி நாளிலிருந்து 10 நாட்கள் முடியும் முன்னரும் வழங்கப்பட வேண்டும்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு அவர் ஈட்டிய ஊதியத் தொகை, வேலை நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டாவது வேவை நாள் முடிவதற்குள் வழங்கப்பட வேண்டும்.

வேலை நாட்களில்தான் ஊதியம்
கொடுக்கப்படவேண்டும்.

ஊதியம் வழங்க வேண்டிய முறை:

ஊதியம் நடைமுறைச் செலாவணியிலுள்ள நாணயங்களாகவோ அல்லது தாள்களாகவோ அல்லது இரண்டும் கலந்தோ கொடுக்கப்படலாம்.

ஊதியத்திலிருந்து அனுமதிக்கப்
பட்ட பிடித்தங்கள்

இச்சட்டத்தினால் அங்கீகரிக்கப்படாத எந்தப் பிடித்தமும் ஊதியத்தில் செய்யக்கூடாது. வேலைக்கமர்த்தப் பட்டுள்ள நபர் வேலைக்கமர்த்துபவ ருக்குச் செலுத்தும் எந்தத் தொகையும் இச்சட்டத்தின்படி ஊதியப் பிடித்தமாகக் கருதப்படும். ஆனால், மாநில அரசு இயற்றியுள்ள விதிகளுக்கு உட்பட்டு வருடாந்திர உயர்வு, அல்லது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுதல், கீழ் பதவிக்கு இறக்குதல், குறைந்த ஊதியத்திற்கு பதவி இறக்கம் செய்தல், தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கி வைத்தல் ஆகிய தண்டனைகள் போதுமான காரணங்களுக்காக விதிக்கப்படும்போது ஊதியம் இழப்பு இச்சட்டதின் கீழ் ஊதியப் பிடித்தமாகக் கருதப்பட மாட்டாது.

தொழிலாளி ஒருவருடைய ஊதியத்திலிருந்து இச்சட்டத்தின் விதிகளை அனுசரித்துத்தான் தொகைகள் பிடித்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். அத்தொகைகள் பின்வரும் பிரிவுகளைச் சார்ந்தவையாக மட்டுமே இருக்கலாம்: அவையாவன:-

அ. அபராதத் தொகைகள்.

ஆ. வேலைக்கு வராமலிருந்ததற்காக கழித்துக்கொள்ளப்படுகின்ற தொகைகள்

பொருட் சேதம்:-

வேலையில் அமர்த்திக் கொள்ளப் பட்டவரிடம் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காகவே ஒப்படைக்கப்பட்ட பொருள்களுக்கு ஏற்பட்ட சேதம் அல்லது நஷ்டம் அல்லது அவர் கணக்குக் கொடுக்கவேண்டிய பணத்தின் நஷ்டம் அவரது கவனக்குறைவினால் அல்லது தவறுதலினால் நேரடியாக ஏற்பட்டதெனச் சொல்லக் கூடியதாயிருந்தால் மேற்படி சேதம் அல்லது நஷ்டத்துக்காகப் பிடித்துக் கொள்ளப்படுகின்ற தொகைகள்.

வீட்டு வசதி:-

நடைமுறையிலுள்ள சட்டப்படி ஏற்படுத்தியுள்ள முதலாளி அல்லது அரசு அல்லது வீட்டு வாரியம் முதலி யவைகளினால் ஏற்படுத்திக் கொடுத் திருக்கிற வீட்டு வசதிக்காகப் பிடித்தம் செய்து கொள்ளப்படும் தொகைகள் (அது அரசு அல்லது வாரியம்) அல்லது மாநில அரசிதழில் மாநில அரசின் சார்பாக குறைந்த அளவில் அரசு உதவியுடன் குறைந்த வாடகைக்கு வீடு வழங்கும் தொழில் புரிகின்ற நிறுவனம்.

(2) மாநில அரசு (அல்லது அதன் சார்பில் நியமிக்கப்படுகின்ற அலுவலர்) அதிகாரம் கொடுக்ககூடிய வகையில் முதலாளி ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளுக்காகவும் சேவைகளுக்காக வும் கழித்துக் கொள்ளப்படும் தொகைகள்.

விளக்கம்:-


இந்த உட்பிரிவில் "சேவை" என்று கூறப்படுகின்ற சொல்லில் தொழிலின் பொருட்டு வழங்கப்படுகிற ஆயுதங்களையும், மூலப் பொருள்களையும் கொடுப்பது என்பது அடங்காது.

முன்பணம்:

முன் பணமாகக் கொடுக்கப்பட்ட எந்த தொகையும் (பிரயாணப்படி அல்லது வாகனப்படிகள் உள்பட) அதற்குறிய வட்டி; அல்லது அதிகப்படியாகக் கொடுக்கப்பட்ட ஊதியத்தைச் சரிக்கட்டுவதற்காகக் கழித்துக் கொள்ளப்படும் தொகைகள்.

கடன்கள்:

மாநில அரசு அங்கீகாரம் வழங்கியுள்ள தொழிலாளர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள கடன்கள் அவைகளுக்குறிய வட்டிகள் ஆகியவைகள்.

வீடு கட்ட கடன்

மாநில அரசு அங்கீகரித்த வீடுகட்டுவதற்கு உரிய கடன்கள், அல்லது மற்ற திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தொகைகளும் அவைகளுக்கு உரிய வட்டியும் பிடித்தம் செய்து கொள்ளப்படும் தொகைகள்.

நீதிமன்ற உத்தரவு:-

நீதிமன்றத்தின் ஆணையினால்
அல்லது அத்தகைய உத்தரவினைப் பிறப்பிப்பதற்குத் தகுதி பெற்றுள்ள அதிகாரச் சபையின் உத்தரவினால் பிடித்தம் செய்து கொள்ளப்பட வேண்டிய தொகைகள்,

வருமானவரி

வேலைக்கமர்த்தப்பட்டவர் செலுத்த வேண்டிய வருமான வரியை அவரது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யலாம்.'

வருங்கால வைப்பு நிதி


வருங்கால வைப்பு நிதிக்காகப் பெறப்படும் சந்தாக்கள் அல்லது அந்- நிதியிலிருந்து கொடுத்துள்ள கடன் களை திருப்பிப் பிடிப்பதற்கான பிடித் தங்கள்.

கூட்டுறவு

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களும் அல்லது இந்திய தபால் அலுவலகங்களால் நிர்வகிக்கப்படும் காப்பீட்டுத் திட்டத்திற்கும் செலுத்த வேண்டிய தொகைகளைப் பிடித்தம் செய்தல்.

ஆயுள்காப்பீடு:-

தொழிலாளியின் ஒப்புதல் பேரில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்குச் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை இந்திய அரசின் கடன் பத்திரங்களுக்கான தொகை, அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேமிப்புத் திட்டப்படி தபால் அலுவலக சேமிப்பு வங்கியில் செலுத்தவேண்டிய தொகை.

தொழிற்சங்க சந்தா

செக் ஆப் மூலமாக ஊதியத்திலிருந்து தொழிற்சங்கத்திற்கான சந்தாவை பிடித்தம் செய்தல்.

- உண்மை இதழ், 01-15.7.1998

வெள்ளி, 11 அக்டோபர், 2024

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)

தொழிலாளர் நலச் சட்டங்கள் - 4

- கே.ஜி. சுப்பிரமணியன்

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946

ஒரு தொழிற் துவக்கிய பிறகு முறையாகத் தொழிற்சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட பின் அந்தத் தொழிற்சங்கமானது அதல் தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிலையாணைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்குமிடையே பலப் பிரச்சினைகள், குறிப்பாக வேலை நிபந்தனைகள் பற்றி அடிக்கடி இருதரப்பிலும் தொழில் தகராறுகள் ஏற்படும். அப்படிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கு ஆணை சட்டம் பெரிதும் பயன்படுகிறது. பம்பாய் தொழிற் தகராறுகள் சட்டம் 1938-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பின்னர் 1943, 1944, 1945-ஆம் ஆண்டுகளில் முத்தரப்பு அமைப்பாகிய இந்தியத் தொழிலாளார் மாநாடுகளில் விவாதித்து தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் 1946-ஆம் ஆண்டு நிலையானைகள் சட்டம் இயற்றப்பட்டது.

சட்டத்தின் நோக்கங்கள்

தொழிற்சாலை நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு எடுத் துக் கொள்வதற்குரிய நிபந்தனைக ளைத் தெளிவுபடுத்துவதற்கும் ஏற்க னவே அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் மேற்கண்ட நிபந்தனைகளைத் தெரி யப்படுத்துவதும் இச்சட்டத்தின் நோக்கமாகும்.

2. வேலை நீக்கம், தொழிலாளர்கள் செய்யும் தவறான செயல்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் இவைகள் பற்றிய விளக்கம்.

3.நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் எல்வா தொழிலாளர்களுக்கும் ஒரு மாதிரி வேலை நிலைகளை உருவாக் குதல்

4. நிர்வாகம் தொழியாளர்கள் இருவர்களின் உரிமைகளையும் பொறுப்புக்களையும் விளக்குதல்,

தொழில் நிறுவனம்

1. 1948-ஆம் ஆண்டின் தொழிற் சட்டத்தின் பிரிவு (ளம்) குறிப்பிட்டுள்ள தொழிற் சாலைகள்,

2. 1800-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே சட்டப் பிரிவு 2(4)கீழ் வருகிற இரயில்வே நிறுவனங்கள்

3. பொது மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்.

4 சரங்கங்கள், பாலங்கள், எண்ணெய்க் கிணறுகள்.

5. உள்துறை நீர்வழிப் போக்கு ரத்துக் கழகங்கள்.

6. துறைமுகங்கள், கப்பல் துறைகள், கப்பல் தங்குமிடங்கள்.

7. மலைத் தோட்டங்கள்.

8. கால்வாய்கள், மற்றும் கட்டிடம் கட்டும் நிறுவனங்கள்.

9. மின் உற்பத்தி மற்றும் அதைப் பங்கீடு செய்யும் நிறுவனங்கள்.

10. தொழில் நிறுவன உரிமையாள ரிடம் நிறுவனத்தின் வேலையை முடிப்பதற்குத் தேவையாக வேலை யாட்களை வேலைக்குச் சேர்ந்துக் கொள்ளும் ஒப்பந்தக்காரரின் நிறுவனங்கள்.

11. 1955-ஆம் ஆண்டு சட்டத்தின் பத்திரிகை நிருபர்கள் (லேவை அமைப்பு, நிபந்தனைகள் மற்றும் பல தரப்பட்ட அமைப்புகள்) சட்டம் செயல்படுத்தப்படும் பத்திரிகை நிறு வனங்கள்.

12: 50 பணியாட்களுக்கும் அதற்கு மேலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பீடி மற்றும் சுருட்டுத்தொழில் நிறுவனங்களையம் குறிக்கும்

"வேலையளிப்பவர்"  ஒரு தொழிற்சாலையில் உரிமையாளரா கவோ அல்லது முதலாளியாகவோ இருக்கின்றவரையும் அல்லது அரசு நிறுவனங்களைப் பொருத்தவரையில் அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரையோ அல்லது அப்படி அலுவலர் இல்லாத இடத்தில் அந்தத்துறையின் தொழில் நிறுவனத்தில் உரிமையாளரின் மேற்பார்வைப் பொறுப்பேற்றுள்ள யரையும் குறிக்கும்.

வேலையாள்: 1. ஒரு தொழில் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மேற் பார்வையாளர், எழுத்தர், தொழில் நுட்ப பணியாளர்களும் இச்சட்டத்தின் படி வேவையால் எனப்படுவர் 

2. மாதச் சம்பளம் ரூ.500/- மேல் பெறும் மேற்பார்வையாளர்களும் நிர்வாகிகளும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும், சிவில் சட்ட விதிகளுக்கு உட்பட்ட அரசு இலாக்காக்களிலும் துறைகளிலும் பாதுகாப்புத் துறைகளிலும் இரயில்வே சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டவர்களும் தொழிலாளாகளாக கருதப்படமாட்டார்கள்.

நிலையாணைகள்: தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிபந்தனைகள் பற்றிய விதிகள் தான் நிலையாணைகள் ஆகும். பணி நிபந்தனைகளின் தன்மை கீழ்க்கணடவாறு தெளிவாக்கப்பட்டுள்ளது.

1. தொழிலாளர்களின் வகைகள் நிரந்தரம், தற்காலிகம், வேலை கற்பவர், மாற்றாள் முதலியன

2. வேலைக்காலம் விடுமுறைகள் ஊதிய விகிதங்கள், ஊதியும் வழங்கும் நாட்கள்

3. ஷிட்டு வேலைமுறை

4.வேலைக்கு வருதல், தாமதமாக வருதல்

5. விடுப்பு எடுப்பது நிபந்தனைகள், முறைகள்,

6. ஆலையின் நுழை வாயிலில் வேலைக்குச் செல்லும்போதும் ஆலையிலிருந்து வேலை முடித்து வரும் வழியில் சோதனைகள் செய் தல்,

7. சில பகுதிகளை தற்காலிகமாக நிறுத்துதல், திறத்தல், இவைகள் 'சம்பந்தமாக எழுகின்ற பிரச்சினைகள்.

8. வேலை நீக்கம் - வேலையை விட்டுச் செல்லுதல்

9. தவறான செயல்களுக்கு காரணமான சூழ்நிலை, அதற்கான தண்டனைகள்,

10.தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்குப் பரிகாரம்,

11.அரசால் குறிப்பிடக் கூடிய இதர விசயங்கள்.

தொழிலாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள், அங்கு தொழிற்சங்கம் செயல்பட்டால் அதன் பெயரையும் தெரிவித்து இச்சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாக நிர்வாகம் தனது நிறுவனத்திற்கான நிலையாணைகளை தயாரித்து 5 நகல்களை சான்று அளிக்கும் அதிகாரிக்கு அனுப்பவேண்டும்.

சான்று அளிக்கும் முறை

நிர்வாகத்தினரிடமிருந்து பெற்ற 5 நகல்களில் ஒன்றை, அங்கு தொழிற் சங்கம் செயல்பட்டால் அதற்கு அனுப்பி வைப்பார். சங்கம் இல்லையெனில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நகல் ஒன்றை சான்றளிக்கும் அதிகாரி அனுப்பிவைப்பார். 15 நாட்களுக்குள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். ஏதாவது ஆட்சேபம் இருந்தால் சான்று அளிக்கும் அதிகாரி இருதரப்பினரது கருத்துக்களையும் அறிந்த பின்னர் மாதிரி நிலையாணைகளின் அடிப்படையில் உள்ளதா என அறிந்த பின்னர் தேவையான மாற்றங்களை செய்து நேர்மையான நிபந்தனைகளா மற்றும் நியாயமானதா என்று சீர்தூக்கிப் பார்த்து சான்று அளிப்பார். நிலையாணைகள் சான்றளித்த 7 நாட்களுக்குள் அதன் நகல்களை நிர்வாகம், மற்றும் தொழிற்சங் கங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

மேல் முறையீடு:

இத்தகைய சான்று அளித்ததினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் 30 நாட்க ளுக்குள் மேல்முறையீடு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு அதிகாரி சம்பந்தப்பட்ட அரசுகளினால் நியமிக்கப்படலாம். மேல் முறையீடு அதிகாரியின் முடிவு இறுதியானது. அவர் சான்றளிக்கும் அதிகாரியின் உத்தரவை உறு திப்படுத்தியோ அல்லது மாற்றங்கள் செய்தோ உத்தரவு இடுவார். இந்த உத்தரவு செய்த 7 நாட்களுக்குள் சான்று வழங்கும் அதிகாரிக்கும் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் மேல் முறையீடு அதிகாரி அனுப்பி வைப்பார்.

மேல் முறையீடு செய்யப்படாவிடில் சான்று அளிக்கும் அதிகாரிகள் உத்தரவு கிடைத்த 30 நாட்கள் முடிவடைந்த பிறகு சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கும். மேல் முறையீட்டு அதிகாரியின் உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குப் பிறகு அல்லது உத்தரவின் படி செயல்படத் தொடங்கும்.

சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் நகலை யாரும் நகல் பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு அதிகாரியிடமிருந்து பெறலாம்.

நிலையாணைகளில் மாற்றம் செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கை

சான்று அளிக்கும் அலுவலர் சான்ற ளித்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பின் நிறுவனமோ அல்லது தொழிற் சங்கமோ அல்லது ஒரு தொழிலாளியோ மேற்கண்ட சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளில் மாற்றம் செய்ய விரும்பினால், சான்றளிக்கும் அலுவலருக்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு. சான்றளிக்கும் அலுவலர் ஏற்கனவே முறையாக என்னென்ன நடைமுறைகளை கடைப்பிடித்தாரோ அதே முறைகளைக் கடைப்பிடித்து நிலையாணைகளை மாறுதல் செய்யும் நடவடிக்கையில் செயல்படுவார். சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

நிலையாணைகளை நடைமுறைப் படுத்துவதில் நிறுவனத்தினருக்கோ அல்லது தொழிலாளருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். நீதிமன்றம் இரு தரப்பினரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும். இந்தத் தீர்ப்பு இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும்.

நிர்வாகத்தின் கடமை: நிலையா ணைகளை ஆங்கிலத்திலும் பெரும் பாலான தொழிலாளர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலும் நன்கு தெரியும்படி விளம்பரப் பலகையில் எழுதி அனைத்துத் தொழிலாளர்களும் நுழையும் இடத்தில் நிறுவனத்தினுள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

சான்றளிக்கும் அலுவலர்கள்: சென் னையில் தொழிலாளர் நலத் துணை ஆணையர்கள் 1ஆவது வட்டம் மற்றும் 2-ஆவது வட்டமும், தொழிலாளர் நல துணை ஆணையாளர் திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் பணிபுரிபவர்கள் தொழிற்சங்கப் பதிவாளராகவும் சான்றளிப்பவர்களாகவும் இயங்கி வருகின்றனர்.

தண்டனைகள்: ஒரு நிறுவனமானது' நிலை ஆணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றளிக்கும் அதிகாரிக்கு அனுப்பி சான்றினைப் பெறாவிட்டாலும், சான்று பெற்ற நிலையாணைகளை குறிப்பிட்டபடி விளம்பரப்படுத்தாமல் இருந்தாலும், சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலும் அதிகபட்ச தண்டனையாக ரூ.5000/- அய்யாயிரம் வரை அபராதமாக நிர்வாகத்தினர் மேல் விதிக்கலாம்.

உண்மை இதழ் 16-30-6-1998

சனி, 7 செப்டம்பர், 2024

மருத்துவத்துறையில் 6,744 பேருக்கு பணி ஆணை தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை!


விடுதலை நாளேடு

 எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை, செப்.7- மருத்துவத்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் 6,744 மருத்துவ பணியாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாக எடப் பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிர மணியன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்

கூறியிருப்பதாவது:-
தண்டனை இடமாற்றம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பேசுவது அவசியம். கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு மருத் துவத்துறையில் பொறுப்பேற் கும் போது குளறுபடிகளும், குழப்பங்களும் மிகப்பெரிய அளவில் இருந்தது. 354 என்கின்ற அரசாணையை அமல்படுத்தக்கோரி மருத்துவர்கள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடத்திய போராட்டங்களை யாரும் மறுத்து விட முடியாது.
போராட்டங்கள் நடத்தினார்கள் என்பதற்காக 116 மருத்துவர்களுக்கு தண்டனை இடமாற்றத்தை தந்தனர். இதனால், லட்சுமி நரசிம்மன் என்ற மருத்துவர் மன அழுத்தத்தின் காரணமாக இறந்தே போனார். இதுவரை எந்த அரசும் செய்யாத ஒரு கொடும் காரியம் அது.

தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பிறகு 293, 354 ஆகிய 2 அரசாணைகள் பற்றி மருத்துவர்களுக்கு மாறுபட்ட கருத் துகள் இருந்தது. அந்த மாறுபட்ட கருத்துகளை களைவ தற்கு 2 சங்கங்களை கலந்து பேசி அவர்களுக்குள் ஒரு மித்த கருத்தை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
மேலும், முதல்முறையாக 1,021 மருத்துவர்களுக்கும், 977 செவிலியர்களுக்கும் முதல் பணியாணை தருகிற போதே கலந்தாய்வு நடத்தி அவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணி ஆணை கள் தரப்பட்டது.

புதிய பணி ஆணை
கடந்த 20 நாட்களுக்கு முன்பு 946 மருந்தாளுனர்கள், 523 உதவியாளர்கள் என்று 1,523 பேருக்கு கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகளை தந்துள்ளோம். மேலும், மருத்துவ பணியாளர் தேர்வா ணையத்தின் சார்பில் 1,947 உதவி மருத்துவர்கள், 1,291இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 977 தற்காலிக செவிலியர்களை நிரந்தரப்படுத்தி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல. 946 மருந்தாளுனர்கள், 127 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று 5,288 புதிய பணி நியமன ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மருத்துவத் துறைக்கு தேவையான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள். சுகாதார ஆய்வாளர்கள் போன்ற பணியி டங்கள் 1,583 நிரப்பப்பட்டு உள்ளது.
மருத்துவத்துறையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 6,744 மருத்துவத்துறை பணியாளர்களுக்கு புதிய பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது.
கலந்தாய்வுகளின் மூலம் இது வரை 12,147 மருத்துவர்கள், 9,535 செவிலியர்கள், 14,783 மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என மொத்தம் 36,465 பேர் பணியிட மாற்றம் பெற்றுள் ளார்கள். இந்த தகவல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை தெரிந்து கொள்ளாமல் பணி நியமனங்கள் இல்லை என்கின்ற ஒரு தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி செய்திருப்பாரா?
எடப்பாடி பழனிசாமி 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இப்படி எத்தனை பணியிட மாற்றங்களை வெளிப்படையாக செய்துள்ளார் என்ற தகவலை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங் கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இதுபோல, ஏதாவது ஒன்றை தன்னுடைய ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்திருப்பாரா என்று சொல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 2 செப்டம்பர், 2024

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் – பேச்சுவார்த்தை தொடக்கம்!

 

விடுதலை நாளேடு

சென்னை, ஆக. 28- தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையை அரசு தொடங்கி யுள்ளது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் ஓய்வூதியர்களின் பிரச்சினையை பேச வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சு வார்த்தையானது, சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மய்ய வளாகத்தில் நேற்று (27.8.2024) நடைபெற்றது.

இதில், அரசு தரப்பில் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, நிதித்துறைச் செயலர் அருண் சுந்தர் தயாளன், ஒப்பந்த கூட்டுநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோரும், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட 84 தொழிற்சங்கங்கள் சார்பில் கி.நடராஜன், தர்மன், ஆர்.கமலகண்ணன், தாடி ம.இராசு, கே.ஆறுமுகநயினார், வி.தயானந்தம், ஆர்.ஆறுமுகம், முருகராஜ், கே.வெங்கடேசன், டி.வி.பத்மநாபன், திருமலைச் சாமி, வெ.அர்ச்சுணன் உள்ளிட் டோரும் பங்கேற்றனர்.

இதில் விவாதிக்கப்பட்டவை குறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:

“முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அறிமுகக் கூட்டமாக நடைபெற்றது. எனினும், சங்கங் களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக முன்வைத்தோம். பெரும்பான்மையான சங்கங்கள் கையெழுத்திட்டால் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது விதிமுறை. கடந்த முறை 60-க்கும் மேற்பட்ட சங்கங் கள் பேச்சு வார்த்தைv, தற்போது சங்கங்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது. எனவே, மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை தொமுச உள்ளிட்ட சங்கங்கள் வலி யுறுத்தின.

இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளும் அண்ணா தொழிற் சங்கம் தலைமையிலான கூட்டமைப்பால் முன்வைக்கப் பட்டது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கு விரைவில் அழைப்பதோடு, அதில் முதன் மையாக ஓய்வூதியர்களின் அக விலைப்படி உயர்வு உள்ளிட்ட விஷயங்களை பேசி தீர்க்க வேண்டும் என சிஅய்டியு உள்ளிட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலி யுறுத்தப்பட்டது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பேச்சு வார்த்தையில் பொது வான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்த கூட்டங்களில் தொழிற்சங்கங்களின் கோரிக் கைகள் குறித்து விரி வாக விவாதிக்கப்பட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையின் சாதனைகள்!


விடுதலை நாளேடு

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன்

காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்”

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழி லாளர்கள் வாழ்வின் அவல நிலையைச் சுட்டிக் காட்டி அவர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற் சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழி லாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.
தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலா ளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நலத் துறைக்குத் தனி அமைச்சகம்.

1969இல் முதலமைச்ச ராகப் பொறுப்பேற்ற கலைஞர் தலைமையில் அமைந்த திராவிட முன் னேற்றக் கழக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது

மே நாளுக்கு ஊதியத் துடன் விடுமுறை 1969ஆம் ஆண்டில் மே முதல் நாளை ஊதியத்துடன் கூடியபொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி தொழி லாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது.
விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக்  கூலி நிர்ணயம்

1969-இல் கணபதியா பிள்ளை பரிந்துரையை ஏற்று, அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப் பட்டது. பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்ப ளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழி லாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

விவசாயத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு இலவச மனைப் பட்டா

விவசாய நிலங்களில் குடிசைகள் போட்டு வாழ்ந்த தொழிலாளர்கள் நிலச் சொந்தக்காரர்களால் எந்த நேரத்திலும் வெளி யேற்றப்படும் அவலமான சூழ்நிலையில் வாழ்ந்தனர்.

அவர்கள் நலன் காத்திட 1971இல் “குடியிருப்பு அனுபோக தாரர்கள் சட்டம்” கொண்டு வந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 748 விவசாயத் தொழிளர் களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனை களை அவர்களுக்கே சொந்தமாக்கி இலவச மனைப் பட்டா வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

நாங்கள் இரத்தம் சிந்தியும் நிறைவேற்ற முடியாத இந்தச் சாத னையை கலைஞர் ஒரே ஒரு சொட்டு மையினால் நிகழ்த்தியுள்ளார் என்று முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மணலி கந்தசாமி கலைஞரை பாராட்டினார்.

15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம்

15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து, கிடைத்த உபரி நிலங்களை இலட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர் களுக்கு வழங்க வழிவகை செய்தது; தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல், “பணிக் கொடை” வழங்கும் திட்டம் கண்டது; விபத்து களால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைக் காப்பதற்காகத் தொழில் விபத்து நிவாரண நிதி திட்டம் உருவாக்கியது; குடும்பங்கள் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது.

மே நாள் நூற்றாண்டு விழாவும் மே தினப் பூங்காவும்

மே நாள் நூற்றாண்டு விழாவினையொட்டி 1990இல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மே தினப் பூங்கா” எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது முதலான பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்த திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறை வேற்றி வருகிறேன்.

ரூ.1,551 கோடியில் 20 நல வாரியங்கள் மூலம் நலத் திட்ட உதவிகள்

20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 16 இலட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்யப் பட்டுள்ளனர். மொத்தம் 18 இலட்சத்து 46 ஆயிரத்து 945 தொழிலாளர்களுக்கு 1,551 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளன.

ரூ.14.99 கோடியில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் நலத் திட்ட உதவிகள்
தமிழ்நாடு தொழிலா ளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 26 ஆயிரத்து 649 தொழிலாளர்களுக்கு 14 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப் பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளன.