வியாழன், 9 மார்ச், 2023

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் : அமைச்சர் சி.வி.கணேசன்

 

 சென்னை, செப்.28  குழந்தை தொழி லாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண் டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.  

சென்னை டி.எம்.எஸ்.வளா கத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடந்த தொழிலாளர் நலத் துறை தொடர் பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச் சர் சி.வி.கணேசன் பேசியதாவது,

தமிழ்நாடு  முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்களின் அரசு. தொழிலாளர்களுக்கான அரசு. இந்த அரசு தொழி லாளர் களின் விடியலுக்கான அரசு. இவ்வரசாங்க தொழிலாளர் துறை யானது சிறப்பான முறை யில் செயலாற்றி வருகிறது. இத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அனைத்து அலு வலர் களும் சிறந்த முறையில் இத்துறை செயல்பட நாம் அனைவரும் ஓர் உதாரணமாக இருக்க வேண்டும். தொழி லாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சினைகளுக்கு முழு மையாக தீர்வு காணும் நோக்கத்தி லும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது.தொழிற் தகராறுகள் சட்டம், 1947, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம், 1972, தோட்டத் தொழிலா ளர்கள் சட்டம், 1951, சட்டமுறை எடையளவு சட்டம், 2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலா ளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தி அதிகளவில் ஆய்வுகள் மேற்கொண்டு அவர் களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதன் மூலம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத்  தொழி லாளர்கள் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு  அமைச்சர் கூறினார்.

வெள்ளி, 3 மார்ச், 2023

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் தொழிலாளர் துறை அறிவிப்பு

 

சென்னை மார்ச் 3  'வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை அரசுக்குத் தெரிவிக்காத நிறுவனங்களின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது. 

தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் நசிமுதின், முதன்மை செயலர் அதுல் ஆனந்த், இணை ஆணையர் விமலநாதன் ஆகியோர் உத்தரவுப்படி, நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை, அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணி நிலைமை மற்றும் நலன்களை முறைப்படுத்தவும், பேரிடர் காலங்களில் அவர்களுக்கு உதவி அளிக்கவும் வேண்டியுள்ளது. அதேநேரம், அத்தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நிறுவனம் தரும் ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. 

மேலும், பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிய வருவாய், காவல், தொழிலாளர் துறை, குழந்தை தொழிலாளர் தடுப்புப் பிரிவு ஆகியவை, உணவகம், கடை, மருத்துவமனை உள்ளிட்டவற்றில் கூட்டாய்வு செய்கின்றன. இந்த காரணங்களுக்காக வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்கள் தேவைப்படுகின்றன. அதனால், வேலை வழங்கும் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பெயர், ஆதார் எண், மொபைல் போன் எண், சொந்த மாநில முகவரி ஆகியவற்றறை https://labourtn.go.in/ism  என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 1 மார்ச், 2023

உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்க!

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, ஜன.10 புத்தொழில் தொடர்பான தமிழ்நாடுஅரசின் முன் னோடி செயல்திட்டங்களை அனை வரும் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னையில் உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ் இணையதள தொடக்க விழா நடைபெற்றது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய, அமெரிக்க வாழ் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் ரூ.16.50 கோடி முதலீடுகளுக்கான விருப்பக் கடிதத்தை, அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் அளித்தனர்.

மாநாட்டில், இணையதளத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம் மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங் களில் நல்ல சூழலை உருவாக்க ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் புத்தொழில் முதலீடு களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. 2021ஆ-ம் ஆண்டை விட இது 70 சதவீதம் அதிகம்ஆகும். இது தமிழ்நாட்டின் மீது முதலீட் டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்தி ருப்பதைக் காட்டுகிறது. புத்தொழில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சி யிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.

புத்தொழில்களை உருவாக்கவும், வளர்க்கவும் பல்வேறு முன்னோடி செயல்திட்டங்களை அரசு வகுத் துள்ளது. அனைத்து விதமானதொழில் களும் வளர வேண்டும்.அது அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும். அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்கு பெற வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்குநர் சிவராஜா ராமநாதன், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை தலைவர் பாலா சாமிநாதன், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் கணபதி முருகேஷ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த முதலமைச்சர் சூளுரை

 

கோவை, மே 20  தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்முனைப் பொருளா தாரமாக மாற வேண்டும், அதுதான் எனது இலக்கு என தொழில் துறையினரிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங் களைச் சேர்ந்த தொழில் துறையினரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவையில் நேற்று (19.5.2022) நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கூட்டத்தில், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார். தொடர்ந்து 3 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறையினரிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்து, இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் அரசினுடைய லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும்.

அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா

தமிழ்நாட்டில் திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ) போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி, அறிவுசார் ஆராய்ச்சிப் பூங்கா ஒன்று கோவை பாரதியார் பல் கலைக்கழகத்தில் அமைக்கப்படும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை ரூ.69,375 கோடிஅளவுக்கு முதலீடுகளும், 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொடர்ந்து தொழில் வளர்ச்சிப் பெற்று அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் விதமாக 3 மண்டல அளவிலான புத்தொழில் மய்யங்கள் அமைக்கப்படும். ஈரோட்டில் மண்டல புத்தொழில் மய்யம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய மேம்பாட்டு முயற்சிகள்

மேற்கு மண்டல மாவட்டங்களில் இயற்கை இழைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியமான ஜவுளிகளின் ஏற்றுமதி அதிகளவில் உள்ள போதிலும், உலகளவில் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான தேவை மிக வேகமாகவும், சீராகவும் அதிகரித்து வருகிறது. எனவே,இவ்வாறான மதிப்புக்கூட்டு ஜவுளிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள தொழில் துறையினர் முன்வர வேண்டும்.

உலகம் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் மூழ்கி உள்ளது. சிப்' என அழைக்கப்படும் செமி-கண்டக்டர் இல்லாத மைக்ரோ எலெக்ட்ரானிக் சாதனமே இல்லை என்று சொல்லலாம். உலகளவில் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களும் தங்களது சிப்' தேவைக்காக சீனா, தைவான் போன்ற ஒருசில நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலைஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தச்சூழலை நன்கு பயன்படுத்தி தமிழ்நாட்டில் சிப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற்கொண்டு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு தொழில் துறையினர் பங்களிப்பினை மேலும் அதிகரிக்க வேண்டும்.

பலமுனை பொருளாதாரம்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்முனைப் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பதுதான் என் இலக்கு. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை தொழில் துறையினர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கி செயல்பட வேண்டும்.

உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இவை மேம்பட்டால், ஒரு மாநிலத்துக்கு ஒட்டுமொத்தமான வளர்ச்சி தானாக வந்து சேரும். இவை மூன்றையும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இது போன்ற சந்திப்புகளின் மூலமாகத்தான் பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

"திராவிட மாடலின்" பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டுக்கு 60 ஒப்பந்தங்கள் - ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு

 

சென்னை, ஜூலை 5  “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை தொடங்கிவைத்து, 22,252 கோடி ரூபாய் முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 4) சென்னையில் தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி  - தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டின் வாயிலாக மொத்தம் 60 திட்டங்களின் மூலம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது.

 தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31ஆம் நிதியாண்டிற்குள் தமிழகத்தினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.

டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் தொடக்கம்: மாநிலத்தில் நிதித் தொழில் நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ்  (TNTecxperience) திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் மூலம் தனிநபர்கள் / புத்தொழில் நிறுவனங்கள் / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம்.

மேலும், டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் திட்டத்திற்கான இணையதளத்தையும் (https://tntecxperience.com) தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில் நுட்ப முதலீட்டுக் களவிழா – TN PitchFest –தமிழகத்தில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழகத்தில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா (TN PtichFest), தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

வழிகாட்டி நிறுவனமும், StartupTN , நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன. இந்த நிகழ்விற்கான விவரங்களை https://tntecxperience.com/users/tnpitchfest  என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

நிதி தொழில் நுட்ப நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த நிகழ்வில், 11 நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகுப்புச் சலுகை: நிதி தொழில் நுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்புச் சலுகை வழங்குவதற்கு நிதி நுட்ப ஆட்சிமன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்புச் சலுகை அளிப்பதற்கான ஆணைகளை, தமிழ்நாடு முதலமைச்சர் அந்நிறுவனங்களுக்கு வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்ட 7 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

22,252 கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்

தமிழ்நாடு முதலமைச்சர் 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

1,497 கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டங்களை தொடங்கி வைத்தல்

தமிழ்நாடு முதலமைச்சர் மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் தொடங்கி வைத்தார்கள்.

இந்த திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருச்சிராப் பள்ளி, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, கோயம் புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022 வெளியீடு

2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் 

அறிவித்தவாறு, தமிழ்நாடு முதலமைச்சர் உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022-அய் வெளியிட்டார்.

தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 வெளியீடு

2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, தமிழ்நாடு முதலமைச்சர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப் படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-அய் வெளியிட்டார்.

 அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு முதலமைச்சர் பாராட்டு

முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் தங்கம் தென்னரசு. இந்த முறை அமைச்சரவையில் அவருக்கு அதே துறையை வழங்குவதா, வேறு துறையை வழங்குவதா என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தொழில்துறையை தேர்வு செய்தேன்.

கடந்த காலங்களில் மிகத் தொய்வாக இருந்த இந்த துறையை மீட்க ஆர்வமான, திறமையான, துடிப்பான பல்வேறு முயற்சிகளை துணிச்சலாக செய்யும் தங்கம் தென்னரசு இருந்தால்தான் சரியாக இருக்கும் என நினைத்து அவர் பெயரை டிக் செய்தேன். என்னுடைய தேர்வு சரியானது என்பதை நித்தமும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தமிழக தொழில்துறையை தங்கமாக மாற்றி வருகிறார். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.


 தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.25 கோடி ஆதார நிதி தொழில்முனைவோருக்கான கையேட்டையும் முதலமைச்சர் வெளியிட்டார்

சென்னை,டிச.31- பசுமைத் தொழில் நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்க ளுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேட்டை வெளியிட்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தொழில் ஆதார மானிய நிதியை வழங்கியதுடன், தொழில் முனைவோர்களுக்கான ‘வழி காட்டி மென்பொருள்’ இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ் வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணையில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய கையேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.12.2022) வெளியிட்டார்.

புத்தொழில் நிறுவனங்களுக்கு, டான்சீட் மானிய நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. தலா ரூ.5 லட்சம் வீதம் 3 தவணைகளில் இது வழங்கப்படும். 

ஒரு நிதியாண்டில் தேர்ந் தெடுக்கப் படும் நிறுவனங்களில் 25 விழுக்காடு பெண்களை முதன்மை பங்குதாரர் களாக கொண்ட நிறுவனங்கள், 10 விழுக்காடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் ஒதுக் கப்படும்.

மாநில அரசு உதவியுடன் இயங்கும் தொழில்வளர் காப்பகங்களில், பெண் களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உறுப்பினர் கட்ட ணம் மற்றும் ஓராண்டுக்கான வாடகைக் கட்டணம் ரூ.2 லட்சம் வரை கிடையாது. மேலும், பெண்கள் நலன் சார்ந்த தயாரிப்புகள், சேவைகளை வழங்கும் பெம்டெக் நிறுவனங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு தொழில் விரிவாக்க பயிற்சி, தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் தளம் வழியாக முதலீடு திரட்ட உதவிகள் என சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிலைத்த நீடித்த வளர்ச்சி, சுழற்சி பொருளாதாரம் சார்ந்து, வணிக ரீதியில் பயனளிக்கும் விதமான திட்டங் களுக்கு ‘பசுமை காலநிலை நிதி’ திட்டத்தின்கீழ் நிதி வழங்கப்படும். 

பசுமை தொழில்நுட்ப தயாரிப் புகள், சேவைகளை அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக ‘அரசு கொள்முதல் உதவி மய்யமானது’ தமிழ்நாடு புத் தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சென்னை மற்றும் மதுரை அலுவலகங் களில் அமைக்கப்படும்.

ஆண்டுக்கு 20 ‘பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு ஓராண்டு கால தொழில் விரைவாக்க பயிற்சி அளிக்கப் படும்.

தொடக்க நிலையில் உள்ள புத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க, தகுதி யான நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானிய நிதியாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 

இதுவரை நடைபெற்ற 3 கட்டங் களின்கீழ் 60 நிறுவனங்கள் தற்போது, 4 ஆவது கட்டமாக 25 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.1.25 கோடி மானிய நிதியை முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் வழங்கினார்.

மேலும், புதுயுக தொழில் முனைவு பயணத்தில் தகுந்த வழிகாட்டுதலை எதிர் பார்க்கும் தொழில் முனைவோர் களையும், வழிகாட்ட தயாராக இருக்கும் அறிவுரைஞர்களையும் இணைக்கும் ‘Mentor TN' என்ற வழி காட்டி மென்பொருள் இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறைசெயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? - அறிக்கை அனுப்ப துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை, மார்ச். 1- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பக் கோரி அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனுப்பப்பட்ட சுற்றிக் கையில், " கடந்த 2003ல் இருந்து தற்போது வரை, தமிழ் நாட்டு அரசின் அனைத்து துறைகளின் கீழ், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற உத்தரவு அளிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும்,  அரசாணைகள் வாயிலாகவோ,  அரசு விளக்கங்கள் வாயிலாகவோ, நீதிமன்ற உத்தரவு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் வாயிலாகவோ புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற விருப்பம் கோரும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், குறைந்தது 30 ஆண்டுகள் பணியில் இருந்த அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, அவர் பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.  இந்நிலையில், 2002-2003ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப் படுத்தியது. இந்த புதிய நடைமுறையின் கீழ், ஒன்றிய அரசில் 01-04-2003 ஆம் நாள் அன்றோ அதற்கு பின்னரே பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த பணியாளர்களின் அடிப் படை ஊதியம், அகவிலை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு அதற்குச் சமமான அளவு பங்குத் தொகையை செலுத்துகிறது. இந்த தொகை பல்வேறு நிதி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு, கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை பணியா ளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், பணி ஓய்விற்குப் பின் கிடைக்கும் ஓய்வூதியம் மிகக் குறைவாக இருக்கும் காரணத்தினால் அரசுப் பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம் செய்யக் கோரும் பணியாளர்கள் விவரங்கள் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.