புதன், 13 பிப்ரவரி, 2019

சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்


உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.5 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் “தமிழ்நாடு சிறை விதி- 481’, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு விவரம்:

தமிழக சிறைகளில் கைதிகளின் திறன் அடிப்படையில் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஒதுக்கப்படும். இப்பிரிவினருக்கு முறையே ரூ. 100, 80, 60 ஊதியமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் 50 சதவீதம் அவர்களின் உணவு மற்றும் உடைக்காகவும், 20 சதவீதம் சம்பந்தப்பட்ட கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு வதற்கான நிவாரணத்தில் செலுத்தப்பட்டு, எஞ்சிய 30 சதவீத தொகை மட்டும் சிறைக் கைதிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

சிறை விதிப்படி சிறைவாசிகளின் ஊதியம் 5 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படவேண்டும். அதன்படி தமிழக சிறைவாசிகளின் ஊதியத்தை முடிவு செய்ய 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குழு அமைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஊதிய உயர்வுக் குழு அமைக்கப்படவில்லை. சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் குறைந்தபட்ச ஊதிய சட்டத்துக்கு எதிரானது.

புதுச்சேரி சிறைகளில் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. அங்கு அதிதிறன்மிக்கவர்களுக்கு ரூ. 180-ம், திறன்மிக்கவர்களுக்கு ரூ. 160-ம், திறன் குறைந்தவர்களுக்கு ரூ. 150-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது.  கேரளத்தில் சிறைவாசிகளின் ஊதியம், பிடித்தம் இல்லாமல் வழங்கப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் விதியை சட்டவிரோதம் என அறிவித்து, கைதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கி, மொத்த ஊதியத்தில் 75 சதவீத தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பணம் பிடித்தம் செய்வதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்.

50 சதவீத பிடித்தம் என்பது நியாயமானதாக இல்லை.  ஒருவரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்துவிட்டு, அதற்கு உரிய ஊதியம் வழங்காததை ஏற்க முடியாது. தமிழகத்தில் சிறைக் கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்கப் படவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

எனவே, கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகைச் செய்யும் “தமிழ்நாடு சிறை விதி- 481’, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளின் ஊதியத்திலிருந்து உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

- விடுதலை நாளேடு, 5.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக