புதன், 27 பிப்ரவரி, 2019

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம்: பொது சேவை மய்யங்களில் விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி, பிப். 19- மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான பிரத மரின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அமைப்புசாரா தொழிலா ளர்கள், நாடெங்கிலும் உள்ள 3.13 லட் சம் பொது சேவை மய்யங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத் துக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 48 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்கள் இத் திட்டத்தில் இணைய தகுதியுடைய வர்கள் ஆவர். அவர்கள் மாதந்தோறும் ஒரு பங்களிப்புத் தொகையை அளித்து வருவதன் மூலமாக, 60 வயதுக்குப் பிறகு ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

மொத்தமுள்ள 3.13 லட்சம் பொது சேவை மய்யங்களில் 2.13 லட்சம் மய் யங்கள் கிராமப்புற பஞ்சாயத்துகளில் இயங்குகின்றன. ஒவ்வொரு திட்டத் தையும், அதற்குத் தகுதியான மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பொது சேவை மய்யங்கள்தான் பெரும் உதவிகரமாக உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களி லும், வளரும் நகர்ப்புறங்களிலும் மத் திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் பொது சேவை மய்யங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

ஓய்வூதியத் திட்டத்தில் இணைப வர்கள், வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும். பொது சேவை மய்யங்கள் வங்கிச் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியத் திட்டத்தில் இணைபவர்கள், வங்கிக் கிளைகளுக்கு செல்லாமலேயே, பொது சேவை மய்யங்களில் நேரடியாக வங் கிக் கணக்குகளையும் தொடங்க மு யும்.

அதே சமயம், இனி வரும் காலத் தில், பிரதமரின் ஓய்வூதியத் திட்டத் துக்கான பிரத்யேக இணையதளத்திலும், அது சார்ந்த செல்லிடப்பேசி செயலியி லும், பயனாளர்கள் நேரடியாக தங்களை இணைத்துக் கொள்ளும்படியான வசதி கள் மேம்படுத்தப்படும். ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அதில் தெரிவித்து ஓய்வூதியத் திட்டத் தில் இணைந்து கொள்ளலாம் என்றார் அந்த அதிகாரி.

மாதந்தோறும் ரூ.15,000-க்கும் குறை வான ஊதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது.

அதன்படி, இத்திட்டத்தில் இணை யும் 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலா ளர் மாதந்தோறும் ரூ.55 செலுத்த வேண் டும். 29 வயதுக்கு மேற்பட்ட தொழிலா ளர் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். 40 வயது தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.200 செலுத்த வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வாறு பங்களிப்பை அளிக்கும் தொழி லாளர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதந் தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக கிடைக் கும்.

- விடுதலை நாளேடு, 19.2.19

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி, பிப்.20 மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதிய தாரர் களுக்கும் 3 சதவீதம் அக விலைப்படி உயர்த்தப்பட்டுள் ளது.

இதன்மூலம், 1.1 கோடி பேர் பயன்பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்ச ரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக் கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 9 சதவீத அகவிலைப்படி வழங் கப்படுகிறது. கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.

அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதி யிட்டு வழங்கப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை களின் அடிப்படையில் அக விலைப்படி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது என்று ஜெட்லி தெரிவித்தார்.

 
- விடுதலை நாளேடு, 20.2.19

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்


சென்னை, பிப்.20 தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள் ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பில் முதலமைச்சர் கோப்பைக் கான மாநில அளவிலான கூடைப்பந்து மற்றும் மேசைப் பந்து விளையாட்டுப் போட்டி தொடக்க விழா டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்தது:

விளையாட்டுத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு வேலை வாய்ப்புகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்காக 24 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பணி களை மேற்கொண்டுள் ளனர். மேலும் விளையாட்டு வீரர் களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கல்லூரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை அரசு தேர்வு செய்து கல் லூரிகளிடம் பட்டியலை வழங்கும். அந்த பட்டியலின் அடிப்படையில் சிறந்த விளை யாட்டு வீரர்களை கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை இலவசமாக அளிக்கும்.

மேலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியையும் அளிக் கும். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழகம் விளை யாட்டுத் துறையில் மிகப்பெரிய சாதனையை புரியும் என்றார்.

- விடுதலை நாளேடு, 20.2.19

முன்னேறிய ஜாதியினர் காலம் காலமாக நம்மைச் சுரண்டியவர்களே! நாம் பின்தங்கியவர்கள் அல்லர்; பிற்படுத்தப்பட்டவர்கள்!

 மதுரை, பிப். 26-  முன்னேறியவர்கள் காலம் காலமாக சுரண்டி யவர்கள், நாமோ நாமாகப் பின்தங்கியவர்கள் அல்லர் - பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவோம் என்றர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட சமூக ஊழியர் நலச் சங்கத்தின்  25 ஆம்ஆண்டு  விழா

9.2.2019 அன்று  மதுரையில் நடைபெற்ற யூனியன் வங்கி யின் 25 ஆம் ஆண்டு  விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: மகிழ்ச்சியோடு, எழுச்சியோடு நடைபெறக்கூடிய யூனியன்  பேங்க் ஆஃப் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட சமூக ஊழியர்கள் நலச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு விழா - வெள்ளி விழாவாக நடைபெறக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நல்ல வாய்ப்பு; முதலாவது ஆண்டு விழா - தந்தை பெரியாரைத் தந்த ஈரோட்டு மண்ணிலே நடைபெற்றது. அந்த விழாவில் நான் கலந்துகொண்டேன். 25 ஆண்டுகள் கழித்து மதுரையில் வெகுசிறப்பாக நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச் சியிலும் கலந்துகொள்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன்.

இந்த அமைப்பு என்பது ஏன் தேவைப்படுகிறது?

இந்த அமைப்பு என்பது ஏன் தேவைப்படுகிறது? என் பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். நமக்குள் பிரிவினைகளை உண்டாக்குவதோ அல்லது பேதத்தை உண்டாக்குவதற்காகவோ அல்ல. சமூகநீதி யாருக்கு மறுக்கப் பட்டதோ அவர்களுக்காகத்தான்.

இந்திய அரசியல் சட்டத்தில்...

இந்திய அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவு -

The Directive Principles of State Policy என்பது இருக்கிறதே, that gives the Directive, how the Government  should move, In what directions the Government must move.

எந்த துறையை நோக்கி, எந்த இலக்கை நோக்கி அரசுகள் நடக்கவேண்டும் என்பதை இந்திய அரசியல் சட்டத்தில் விளக்கியிருக்கிறார்கள். அதிலே ஒரு பகுதி 46 ஆவது பிரிவு

All the weaker section,
Particularly the scheduled caste, scheduled tribes and other weaker sections, who must be protected from the exploitation may vary from different places in different  sectors. From the Social injustice these are the words that were used in the constitution of Indian. சமுக அநீதியிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் particularly the scheduled caste, scheduled tribes and other weaker sections,
என்று சொல்லும்பொழுது, தெளிவாகவே அதில் அவர்கள் சமூகநீதியினுடைய அடிப்படை என்ன என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் பிச்சை கேட்கவில்லை

எனவேதான், இந்த அமைப்புகள் உருவாவதே, சமூக அநீதியிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக - நம்முடைய உரிமைகளை நாம் சொல்லிக் கொடுப்பதற்காக. அதோடு ஒன்றை நம்முடைய தோழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நாம் பிச்சை கேட்கவில்லை; இட ஒதுக்கீடு என்பதை நிறைய பேர் ஒரு சலுகை போன்று நினைக்கிறார்கள்.

It is not a concession; we don't want charity; we want parity. That is more important.

சமத்துவத்தை மற்றவர்களோடு சமமாக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்.

We are most obedient to the constitution of India; Infact we are the only people who are obedient to the constitution of India 

அரசியல் சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று கேட்பதற் காக நாம் இருக்கிறோம். இது  கேட்காமலேயே செய்யப்பட வேண்டியது.

புலி வெளியே இருக்கக்கூடாது; கூண்டுக்குள் இருக்க வேண்டும் சர்க்கஸ் கம்பெனிகளில் ரிங் மாஸ்டர் கையில் சாட்டை வைத்திருப்பார்; சில நேரங்களில் புலி வெளியே வந்து, கூண்டுக்குள்ளே போய்விடவேண்டும். சர்க்கஸ் நடை பெறும் பொழுது  புலியின்மேல்,  ஆட்டுக்குட்டி  ஏறி நிற்கும்.  உடனே ஆட்டுக்குட்டியும், புலியும் கூட்டணி போட்டு விட்டது என்று நினைத்து, அவைகளை அப்படியே விட்டு விட்டுப்  போனால், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, ஆட்டுக் குட்டிப் பாதுகாப்பாக இருக்காது; ஆட்டுக்குட்டி எங்கே பாதுகாப்பாக இருக்கும் என்றால், புலியின் வயிற்றுக்குள்! அதுபோன்று இருக்கக்கூடியதுதான்  இன்றைய சூழல்.

வங்கி ஊழியர்களாக இருக்கக்கூடிய நம்முடையவர்கள், மிகத் தெளிவாக, அவர்களுடைய உரிமைகளை எல்லைக்குள் பாதுகாத்துக் கொள்வதற்குத்தான் மண்டல் ஆணையம், இட ஒதுக்கீடு போன்றவையெல்லாம்.

25 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல்...

நம் நாட்டில் சாதாரணமாக அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்'' என்று சொல்வார்கள். அதுபோன்ற அளவிற்கு, நமக்கு ஒரு பெரிய வாய்ப்பை, நீங்கள் எல்லோரும் அமைப்பு ரீதியாக உருவாக்கி இருப்பதற்காகவும், தொடர்ந்து   இந்த நலச் சங்கத்தினை 25 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்திக் கொண்டு வருவது மகிழ்ச்சி தரக்கூடிய தாகும். எங்களுடைய அமைப்பைப்பற்றி சொல்லும்பொழுது,  தந்தை பெரியார் அவர்கள் வேடிக்கையாக சொல்வார், எந்த ஊரிலாவது ஒரு கிளைக் கழகம் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், அதை செயல்படாமல் ஆக்குவ தற்கு வேறொன்றும் செய்யவேண்டியதில்லை, நிகழ்ச்சி நடத்திவிட்டு, 2000 ரூபாயை மிச்சப்படுத்தி விட்டால் போதும் என்பார்.

பொன்விழாவில் நானும் பங்கேற்பேன்!

ஆனால், 25 ஆண்டுகளாக இந்த நலச் சங்கம், எல்லோ ரையும் ஒரு குடும்பம் போல் நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய சாதனையாகும். இந்த நலச் சங்கம் பொன்விழா காணவேண்டும்; நிச்சயம் காணும். அந்த விழாவில் நாங்களும் கலந்துகொள்ளவேண்டும் என்றார் கருணாநிதி அவர்கள். நிச்சயம் கலந்துகொள்வோம், அதி லொன்றும் சந்தேகமேயில்லை.

இன்றைய காலம் அறிவியல் உலகம்; எலக்ட்ரானிக் ஏஜ் இது. முன்பெல்லாம் சராசரி வயது மனிதனுக்கு 29, 30, 40 ஆக இருந்தது; இன்றைய காலகட்டத்தில் 69, 70 வயதாக உயர்ந்திருக்கிறது. அதிலும் மகளிர் அதிகமாக இருக்கிறார்கள். ஆண்கள், ஒரு வயது, இரண்டு வயது குறைவாக இருக் கிறார்கள் சராசரியாக.

எத்தனை ஆண்டுகள் நாம் வாழ்கிறோம் என்பது முக்கிய மல்ல; எத்தனை ஆண்டுகள் இப்படிப்பட்ட உணர்வோடு இருக்கிறோம்; மற்றவர்களுக்குத் தொண்டு செய்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். அதற்காக இந்த நலச் சங்கத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு ஆணைகள்

சிறப்புத் தலைவர் எங்களுடைய சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் சொன்னார். இங்கே வெளியிடப் பட்ட மலர்  இருக்கிறதே, அதற்கு  ஷீஸ்மீஸீவீக்ஷீ என்று பெயர் போட்டாலும், இது,

Wonderful company of all G.O.s very ready reckoner  போன்றது. இந்த மலரைக் கொண்டு வந்த கருணாநிதி அவர்களுக்கும், அய்யா பார்த்தசாரதி அவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரம்பத்தில் கிடைக்காத அத்துணை அரசு ஆணை களும் இந்த மலரில் இருக்கிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால், அரசு ஆணைகளை மீறுகிறவர்கள் சிலர் இருப் பார்கள்; ஆனால், சட்டத்தை, அரசுக்கு நினைவூட்டுவதற்காக இந்த மலரை வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் சட்டம் இருக்கிறது, அதன்படி செய் யுங்கள் என்று கேட்பதற்காக. இது நம்முடைய வேலையல்ல. அரசாங்கத்தினுடைய வேலையாகும். அரசாங்கம் தவறுகின்ற நேரத்தில், இதுபோன்ற வாய்ப்புகளை நாம் செய்கிறோம்.

அதோடு இன்னொரு செய்தி என்னவென்றால், வங்கி களைப் பொறுத்தவரையில், அய்யா தந்தை பெரியார் அவர்கள், சமூகநீதிக்காக பெரியார் பாடுபட்டார்; சமூகப் புரட்சியாளர் என்பதற்காக அய்யாவை நீங்கள் அடையாளப் படுத்துகின்றீர்கள் என்பதைவிட, இன்னொரு செய்தியை, வங்கியில் பணியாற்றக்கூடிய தோழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாருடைய சிக்கனம்; தமிழ்நாட்டின் பொக்கிஷம்

ஒரு நல்ல அளவிற்குப் பெரியார் அவர்கள், ஆரம்பத்தி லிருந்தே வங்கியைப் பயன்படுத்துவதில் ஒரு எடுத்துக் காட்டானவர். பணத்தை கைகளில் வைத்திருக்க மாட்டார்; உடனே வங்கியில் போட்டுவிடுவார். பெரியாருடைய சிக்கனம்; தமிழ்நாட்டின் பொக்கிஷம் என்பது பல பேருக்குத் தெரியும்.

தந்தை பெரியார் அவர்கள், 90 ரூபாய் சேர்ந்தவுடன், யோசனை செய்வார்;  மணியம்மையாருக்குத் தெரியும்; அருகில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும். 10 ரூபாய் இருக்காப்பா என்று கேட்பார். பத்து ரூபாய் கொடுத்தவுடன், நூறு ரூபாய் நோட்டாக மாற்றி, உடனே வங்கியில் போட்டுவிடுவார்.

பெரியாருடைய பணப் பரிமாற்றம் என்பது காசோலை தான் (செக்). சிறு தொகையாக இருந்தாலும் ரூ.15, ரூ.25 ஆக இருந்தாலும் செக் எழுதித்தான் கொடுப்பார். பழைய காசோலை முறைபற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்; கவுண் டர் பைல் வைத்துத்தான் காசோலை இருக்கும்.   இப்பொழு தெல்லாம் கவுண்டர் பைல் கிடையாது.

அய்ந்து, ஆறு செலான் புத்தகத்தை வாங்கி அதை நூல் போட்டுத் தைத்துக் கொடுக்கச் சொல்வார். இன்னொரு பக்கம் அதிகமான செக் லீப் இருக்கும் செக் புக் வாங்கி வரச் சொல்வார்.

அந்தக் காசோலையில் அய்யாவின் கைப்பட எழுதிக் கொடுப்பார். எதற்காக காசோலை கொடுக்கப்பட்டது என்பதை கவுண்டர் பைலின் பின்பகுதியில், வீரமணிக்காக ரூ.25 ரூபாய், புத்தகம் வாங்குவதற்காக என்று தகவல்கள் இருக்கும்.

இவையல்லாமல், அவருடைய டைரியில் அன்றைக்கு வரவு - செலவுகளைக் குறித்து வைப்பார்.

அறக்கட்டளையை ஒழிக்கவேண்டும் என்று முயற்சி செய்து வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்தது தந்தை பெரியாருக்கு. அவருடைய காலத்தில் 15 லட்சம் ரூபாயாக இருந்தது; பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையேற்ற காலத்தில், 60 லட்சம் ரூபாயாக ஆனது. நான் பொறுப்பேற்ற பிறகு, 80 லட்சம் ரூபாயாக ஆனது. அதனை எதிர்த்து நாங்கள் வழக்கு நடத்தினோம். Income Tax Appellate Tribunal என்பதற்கு அடுத்து, உயர்நீதிமன்றம்தான். மூன்று, நான்கு கட்டங்கள் தாண்டி, அதற்கெல்லாம் வட்டி போட்டு சொன்னார்கள். கடைசி நேரத்தில், மறைக்கப்பட்ட வருமானம் (Undisclosed Income) என்ற குற்றச்சாட்டினை வைத்தார்கள்.

அந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் சரியாக சொன்னார்; பெரியார் ஒரு தேசிய தலைவர்; அவருக்கு மத்திய அரசாங்கமே  ஸ்டாம்ப் வெளியிட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தலைவர், 1920 ஆம் ஆண்டிலேயே வியாபாரத்தை விட்டுவிட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்து விட்டார். அப்படி வந்த நேரத்தில், அவர் வியாபாரமே செய்யவில்லை; அவருக்கு வந்த பணத்தையெல்லாம் வங்கி யில் செலுத்தியிருக்கிறார். வங்கியிலிருந்துதான் செலவு செய்திருக்கிறார். சிறிய தொகைக்குக்கூட காசோலைதான் வழங்கியிருக்கிறார். அவருடைய டைரியைப் பாருங்கள் என்று சொன்னார். இரண்டு நீதிபதிகள், அந்த டைரியைப் பார்த்தார்கள். அதற்கடுத்ததாக, செக் கவுண்டர் பைல் மிகவும் உதவிகரமாக இருந்தது. அய்யா - அம்மா இல்லாததால்,  அந்தப் பழைய செக் கவுண்டர் பைல் எல்லாவற்றையும் நாங்கள் தேடி எடுத்துக்கொண்டு போய் அந்த வழக்கிற்காக கொடுத்தோம்.

பெரியாருடைய டைரியை நீதிபதிகளிடம் கொடுத்தார்

எங்களுக்காக வாதாடிய வழக்குரைஞர், அவ்வளவு பெரிய தலைவரை கொச்சைப்படுத்தக் கூடாது; வருமானத்தை மறைத்திருக்கிறார் என்று சொல்லக்கூடாது. அவருடைய டைரியில் எழுதி வைத்திருப்பதைப் பாருங்கள். திருமணம் நடத்தி வைப்பதற்காக வழிச்செலவிற்காக ரூ.20, ரூ.50 கொடுத் திருக்கிறார்கள் என்பதையும் எழுதி வைத்திருக்கிறார். செல வுக்காக கொடுத்த விவரத்தையும் எழுதி வைத்திருக்கிறார். மிச்சமான பணத்தை அப்படியே வங்கியில் செலுத்தியிருக் கிறார். அந்த வங்கிக் கணக்குகளும் தெளிவாக இருக்கின்றன. இதில் மறைக்கப்பட்ட வருமானம் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்று சொல்லி, பெரியாருடைய டைரியை நீதிபதிகளிடம் கொடுத்தார்.

பெரியார் எழுதிய டைரியைப் படித்துக் காட்டினேன்

நானும் நீதிமன்றத்தில் இருந்தேன்; பெரியாருடைய எழுத்துப் புரியவில்லை என்றனர் நீதிபதிகள். பெரியாருடைய உதவியாளர் இங்கே இருக்கிறார் என்று வழக்குரைஞர் சொன்னவுடன், என்னை அழைத்து அதில் என்ன எழுதி யிருக்கிறது என்று நீங்கள் படித்துச் சொல்லுங்கள் என்றனர் நீதிபதிகள். அதை நான் படித்தவுடன், ஆச்சரியப்பட்டனர்.

வருமான வரித் துறைக்கு 80 லட்சம் ரூபாய் கட்டவேண்டும் என்பது தள்ளுபடி செய்யப்பட்டு, பெரியார் அறக்கட்டளை அந்தஸ்து என்று சொல்லக்கூடிய அந்தஸ்து வந்ததற்குக் காரணம்,  பெரியார் அவர்கள், டைரியில் எழுதி வைத்திருந்த தினால், வங்கிப் பணப் பரிமாற்றத்தின் மூலமாகத்தான். வங் கிப் பழக்க வழக்கம் என்பது மிகவும் நியாயமானது, தேவை யானது என்பது மிக முக்கியமாகும்.

நம்முடைய தோழர்களைப் பொருத்தவரையில் மூன்று அம்சங்கள்.

ஒன்று,  அதிகாரிகள், இன்னொன்று, பணியாளர்களாக இருக்கக்கூடிய தோழர்கள், மூன்று, வாடிக்கையாளர்கள்.

இந்த மூன்று பேரும் முக்கோணம் போன்றவர்கள். பிதா கரஸ் தியரி போன்று. மேற்கண்ட மூன்று பேரும், அடிப்படை யில் ஒரு நல்ல உறவோடு இருக்கக்கூடிய அமைப்பாக, இந்த அமைப்பு இருப்பதற்கு, இந்த நலச்சங்கம் தன்னுடைய பணியை செய்து கொண்டிருப்பதற்காக வாழ்த்துகள்.

பெரியார் அவர்களுடைய கருத்துகளைப் பின்பற்றினால்...

பெரியார் அவர்களுடைய கருத்துகளைப் பின்பற்றினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். இன்றைக்குப் பல துறைகள் பின்தங்கியிருப்பதன் அடிப்படை என்னவென்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அய்யா சொன்னார்,

முதலாளி - தொழிலாளி என்ற வார்த்தை இருக்கக்கூடாது; பங்காளி என்ற வார்த்தைத்தான் இருக்கவேண்டும்.'' முதலாளி முதல் போடுகிறார்; தொழிலாளி உழைப்பை கொடுக்கிறார். இரண்டு பேருக்கும் இரண்டு பங்கு. லாபம் என்கிற குழந்தை இதிலிருந்துதான் பிறக்கிறது. எனவே, லாபம் என்கிற குழந்தை இரண்டு பேருக்கும் உரியதே தவிர, ஒருவரே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

எல்லோருக்கும் லாபம் பகிர்ந்தளிக்கப்படும்!

சில இடங்களில் முதலாளி என்ற இடத்தில், அரசாங்கம் இருக்கிறது. அரசாங்கம் இருந்தாலும்கூட, அதனுடைய அடிப்படை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சொல்லி, 1910 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய தொழில் அமைப்புகளில், மஞ்சள் மண்டி தொழிலில், தொழிலாளர்களுக்கு என்று ஒரு பங்கு வைத்து, அவர்களை ஒரு பங்காளியாக நடைமுறைப்படுத்தினார்.

அப்படி இருந்தால், வேலை நிறுத்தங்களுக்குக்கூட அவசியம் இருக்காது. ஒரு புரிதல் உணர்வு இருக்கும். எல்லோருக்கும் லாபம் பகிர்ந்தளிக்கப்படும். எனவேதான், முதலாளி - தொழிலாளி என்ற அந்த வார்த்தைகளே கூட, உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்கிற எண்ணத்தை உண்டாக்கு கிறது. சமத்துவத்தை உண்டாக்குவதற்காக முதலாளி - பங்காளி என்று இருக்கவேண்டும்.

முன்னுரிமை கொடுப்பது முக்கியம்!

யார் மிகவும் பசியோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை; யார் வயதானவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை. விருந்தில் முன்னுரிமை கொடுப்பதுபோலவே, உத்தியோகங்களிலும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதுதான் இதனுடைய அடிப்படை.

எனவே, சமூகநீதிக்காக இது அளிக்கப்பட்டு இருக்கிறது. சமூகநீதி என்பது அரசியல் சட்டத்தில் அதனுடைய கொள் கையாகவே உருவாக்கப்பட்ட ஒன்று. எனவே, இதுபோன்ற வங்கிக் கூட்டமைப்புகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர், ஒடுக்கப்பட்டோர் போன்ற அமைப்புகள் என்பது மிகவும் முக்கியம். உங்களுடைய ஒற்றுமை, உங்களுடைய உழைப்பு, உங்க ளுடைய நல்ல அன்பு, பாசத்தோடு கட்டி அமைத்திருக்கின்ற இந்தக் கட்டமைப்பு வளரவேண்டும் என்ற வாழ்த்துதலோடு ஒன்றைச் சொல்கிறேன்.

பின்தங்கியோர் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தாதீர்கள்!

பின்தங்கியோர், பின்தங்கியோர் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தாதீர்கள். யாரும் பின்தங்கவில்லை. நாம் ஒன்றும் நொண்டியடித்துக் கொண்டு பின்னால் செல்லவில்லை. பிற்படுத்தப்பட்டோர் என்றால், வரிசையில் நின்றோம்; இரண்டு இடி இடித்ததால், நாம் பின்னால் சென்றுவிட்டோம்; இடித்தவன் வசதியானவன்; நாம் நோஞ்சான்; இரண்டு இடி இடித்ததால், நாம் பின்னால் சென்றுவிட்டோமே தவிர வேறொன்றுமில்லை. அதனால்தான் பிற்படுத்தப்பட்டோர் என்ற சொல்லாட்சியைத்தான் பயன்படுத்தவேண்டும்.

அதேபோன்று தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லும் பொழுது, அதில் ஒன்றும் அவமானமில்லை. மற்றவர்கள் மேலே ஏறி, உட்கார்ந்ததினால் தாழ்த்தப்பட்டோர்களே தவிர, அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல.

பிற்பட்டவர் என்கிற சொல்லாட்சியையும் பயன்படுத்தா தீர்கள்; பிற்பட்டோர் என்றால், நாம் ஏதோ பின்தங்கி விட் டோம் என்று அர்த்தம். நாம் யாரும் பின்தங்கவில்லை; நாம் ஒழுங்காகத்தான் சென்றுகொண்டிருக்கின்றோம்.

பின்தங்கியோரும் அல்ல; பிற்பட்டோரும் அல்ல!

ஆகவே, பின்தங்கியோரும் அல்ல; பிற்பட்டோரும் அல்ல; பிற்படுத்தப்பட்டோர் என்றுதான் சொல்லவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் என்றால், நன்றாகச் சென்று கொண்டி ருந்த நம்மை, கொஞ்சம் வலிமையான ஆள், குண்டாக இருந்த ஆள் நம்மை ஒரு இடி இடித்ததினால், பிற்படுத்தப் பட்டோம்.  ஆகவேதான், நாம் எல்லோரும் சமத்துவம் உள்ள வர்களாக, சகோதரத்துவம் உள்ளவர்களாக, அதேநேரத்தில், நம்முடைய உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கவேண்டும்.

யார் பங்கையும் நாம் எடுத்துக்கொள்வது கிடையாது!

மற்றவர்களுடைய பங்களிப்பை நாம் கேட்கவில்லை. இன்னுங்கேட்டால், இந்த அரசு ஆணைகளைப் பார்த்தீர்களே யானால் உங்களுக்குத் தெரியும் - ஆரம்பத்தில் வகுப்புவாரி உரிமை என்பது - எல்லோருக்கும் அதில் பங்கு உண்டு. யார் பங்கையும் நாம் எடுத்துக்கொள்வது கிடையாது. முற்பட்ட ஜாதியினராக இருந்தாலும், அவர்களுக்கும் கொடுக்கட்டும்; அவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவு கொடுக்கட்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை. அவர் களுடைய எண்ணிக்கை போன்று 10 மடங்கு, 20 மடங்கு வாங்கினால், அது தவறுதானே!

மனிதனுடைய சுபாவமே அதுதான். ஆகவே, அதனை எதிர்த்துத்தான் நாம் போராடவேண்டும். மதுரையில் ரயில் வண்டி புறப்படுகிறது; காலியாக இருக்கும் அன்ரிசர்வ் கம்ப்பார்ட்மெண்ட்டில் ஒருவர் காலை நீட்டிக் கொண்டு படுக்கிறார். அடுத்ததாக கொடை ரோடு வருகிறது; ரிசர்வ் டிக்கெட் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஏறுகிறார்கள்; இன் னும் சிலர் அன்ரிசர்வ் கம்ப்பார்ட்மெண்ட்டில் ஏறுகிறார்கள்; ஏற்கெனவே காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவரை, அய்யா, காலை மடக்கிக் கொள்ளுங்கள்; நான் உட்கார வேண்டும்'' என்று சொன்னால்,

காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்கிறார்; ஒரு அரை மணிநேரம் வசதியாக காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தவர், யோவ், வேற கம்ப்பார்ட் மெண்டிற்குச் செல்லலாமே; என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்'' என்பார்.

ஏனென்றால், அரை மணிநேரம் படுத்து அனுபவித்த சுகத்தினை இழப்பதற்கு அவருக்கு மனதில்லை. எதையோ இழந்ததைப் போன்றுதான் அவர் காலை மடக்கிக் கொள்வார். அடுத்தவர்களுடைய உரிமையை மதிக்கவேண்டும் என்பதற் காக அவர் காலை மடக்கி உட்கார மாட்டார்.

அதுபோன்றுதான், இன்றைக்கு முற்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய முன்னேறிய ஜாதிக்காரர்கள், காலங்காலமாக அனுபவித்தவர்கள். அவர்களை நாங்கள் ஒன்றும் சொல்ல வில்லை. அய்யா நாங்களும் பயணச்சீட்டு வாங்கியிருக்கி றோம்; எங்களுக்கும் உரிமை இருக்கிறது; கொஞ்சம் எழுந் திருங்கள் என்றவுடன், படுத்திருந்தவர், எதையோ இழந்தது போன்று கூக்குரல் எழுப்புகிறார்.

எங்களுடைய உரிமைகளை நீங்கள் அங்கீகரியுங்கள்!

இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் வசதியை அனுபவித்தவருக்கே அவ்வளவு இழப்பு உணர்ச்சி இருந்தால், ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அனுபவித்தவர்களே கொஞ்சம் உங்களுடைய உரி மைகளைவிட்டு, எங்களுடைய உரிமைகளை நீங்கள் அங்கீ கரியுங்கள் என்று சொன்னால், சுலபமாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

எனவே, இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உரிமைக்குக் குரல் கொடுக்கத் தயங்கக்கூடாது. அதற்காக நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

கடவுளைப்பற்றி சொல்லும்பொழுது என்ன சொல்லி யிருக்கிறார்கள், தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்'' என்றுதானே. தட்டுங்கள் திறக்கப்படும் என்றால், மூடியிருக்கிறது என்று அர்த்தம்; திறந்திருக்கும் இடத்திற்குச் சென்று தட்டவேண்டிய அவசியமில்லை. தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னார்கள்; தட்டிக் கொண்டே இருந்தோம் என்றால், ஒரு காலகட்டத்தில் உடைக்க வேண்டியதுதான் வரும். அந்த அளவிற்குப் போகாமல் இருப்பதற்காகத்தான், இப்படிப்பட்ட ஒரு அமைப்புகள்.

எனவே, சட்ட ரீதியாக பெறவேண்டியவைகளை நாம் பெறவேண்டும்; தர வேண்டியவர்கள் தராவிட்டாலும், உணர்ச்சிகளை உருவாக்கவேண்டும். அதற்கு ஒற்றுமை மிக அவசியம்.  சிறந்த முறையில் இதுபோன்ற உங்கள் சங்க அமைப்புகளை உருவாக்கவேண்டும். நல்ல அளவிற்குப் பயிற்சிகளைக் கொடுக்கிறீர்கள். இந்த சங்கம் பல பேரை வங்கிக்காக தயாரிக்கும்பொழுதும், வங்கி  ஊழியர்களின் தேர்வுக்காக கருணாநிதி போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து நல்ல பயிற்சிகளைக் கொடுக்கிறீர்கள். அதற்கும் பாராட்டு.

இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய நலச் சங்கம் வளர்க! வாழ்க!

எனவே, இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும்; அப்படிப்பட்ட நலச் சங்கம் வளர்க, வாழ்க என்றுகூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, எந்த நிலையிலும் போராடுவோம் - வெற்றி பெறுவோம்!

சட்ட ரீதியாக என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க இந்த அமைப்பு! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்
-  விடுதலை நாளேடு, 26.2.19