சனி, 7 செப்டம்பர், 2024

மருத்துவத்துறையில் 6,744 பேருக்கு பணி ஆணை தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை!


விடுதலை நாளேடு

 எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை, செப்.7- மருத்துவத்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் 6,744 மருத்துவ பணியாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாக எடப் பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிர மணியன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்

கூறியிருப்பதாவது:-
தண்டனை இடமாற்றம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பேசுவது அவசியம். கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு மருத் துவத்துறையில் பொறுப்பேற் கும் போது குளறுபடிகளும், குழப்பங்களும் மிகப்பெரிய அளவில் இருந்தது. 354 என்கின்ற அரசாணையை அமல்படுத்தக்கோரி மருத்துவர்கள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடத்திய போராட்டங்களை யாரும் மறுத்து விட முடியாது.
போராட்டங்கள் நடத்தினார்கள் என்பதற்காக 116 மருத்துவர்களுக்கு தண்டனை இடமாற்றத்தை தந்தனர். இதனால், லட்சுமி நரசிம்மன் என்ற மருத்துவர் மன அழுத்தத்தின் காரணமாக இறந்தே போனார். இதுவரை எந்த அரசும் செய்யாத ஒரு கொடும் காரியம் அது.

தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பிறகு 293, 354 ஆகிய 2 அரசாணைகள் பற்றி மருத்துவர்களுக்கு மாறுபட்ட கருத் துகள் இருந்தது. அந்த மாறுபட்ட கருத்துகளை களைவ தற்கு 2 சங்கங்களை கலந்து பேசி அவர்களுக்குள் ஒரு மித்த கருத்தை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
மேலும், முதல்முறையாக 1,021 மருத்துவர்களுக்கும், 977 செவிலியர்களுக்கும் முதல் பணியாணை தருகிற போதே கலந்தாய்வு நடத்தி அவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணி ஆணை கள் தரப்பட்டது.

புதிய பணி ஆணை
கடந்த 20 நாட்களுக்கு முன்பு 946 மருந்தாளுனர்கள், 523 உதவியாளர்கள் என்று 1,523 பேருக்கு கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகளை தந்துள்ளோம். மேலும், மருத்துவ பணியாளர் தேர்வா ணையத்தின் சார்பில் 1,947 உதவி மருத்துவர்கள், 1,291இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 977 தற்காலிக செவிலியர்களை நிரந்தரப்படுத்தி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல. 946 மருந்தாளுனர்கள், 127 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று 5,288 புதிய பணி நியமன ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மருத்துவத் துறைக்கு தேவையான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள். சுகாதார ஆய்வாளர்கள் போன்ற பணியி டங்கள் 1,583 நிரப்பப்பட்டு உள்ளது.
மருத்துவத்துறையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 6,744 மருத்துவத்துறை பணியாளர்களுக்கு புதிய பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது.
கலந்தாய்வுகளின் மூலம் இது வரை 12,147 மருத்துவர்கள், 9,535 செவிலியர்கள், 14,783 மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என மொத்தம் 36,465 பேர் பணியிட மாற்றம் பெற்றுள் ளார்கள். இந்த தகவல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை தெரிந்து கொள்ளாமல் பணி நியமனங்கள் இல்லை என்கின்ற ஒரு தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி செய்திருப்பாரா?
எடப்பாடி பழனிசாமி 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இப்படி எத்தனை பணியிட மாற்றங்களை வெளிப்படையாக செய்துள்ளார் என்ற தகவலை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங் கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இதுபோல, ஏதாவது ஒன்றை தன்னுடைய ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்திருப்பாரா என்று சொல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 2 செப்டம்பர், 2024

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் – பேச்சுவார்த்தை தொடக்கம்!

 

விடுதலை நாளேடு

சென்னை, ஆக. 28- தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையை அரசு தொடங்கி யுள்ளது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் ஓய்வூதியர்களின் பிரச்சினையை பேச வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சு வார்த்தையானது, சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மய்ய வளாகத்தில் நேற்று (27.8.2024) நடைபெற்றது.

இதில், அரசு தரப்பில் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, நிதித்துறைச் செயலர் அருண் சுந்தர் தயாளன், ஒப்பந்த கூட்டுநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோரும், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட 84 தொழிற்சங்கங்கள் சார்பில் கி.நடராஜன், தர்மன், ஆர்.கமலகண்ணன், தாடி ம.இராசு, கே.ஆறுமுகநயினார், வி.தயானந்தம், ஆர்.ஆறுமுகம், முருகராஜ், கே.வெங்கடேசன், டி.வி.பத்மநாபன், திருமலைச் சாமி, வெ.அர்ச்சுணன் உள்ளிட் டோரும் பங்கேற்றனர்.

இதில் விவாதிக்கப்பட்டவை குறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:

“முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அறிமுகக் கூட்டமாக நடைபெற்றது. எனினும், சங்கங் களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக முன்வைத்தோம். பெரும்பான்மையான சங்கங்கள் கையெழுத்திட்டால் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது விதிமுறை. கடந்த முறை 60-க்கும் மேற்பட்ட சங்கங் கள் பேச்சு வார்த்தைv, தற்போது சங்கங்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது. எனவே, மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை தொமுச உள்ளிட்ட சங்கங்கள் வலி யுறுத்தின.

இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளும் அண்ணா தொழிற் சங்கம் தலைமையிலான கூட்டமைப்பால் முன்வைக்கப் பட்டது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கு விரைவில் அழைப்பதோடு, அதில் முதன் மையாக ஓய்வூதியர்களின் அக விலைப்படி உயர்வு உள்ளிட்ட விஷயங்களை பேசி தீர்க்க வேண்டும் என சிஅய்டியு உள்ளிட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலி யுறுத்தப்பட்டது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பேச்சு வார்த்தையில் பொது வான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்த கூட்டங்களில் தொழிற்சங்கங்களின் கோரிக் கைகள் குறித்து விரி வாக விவாதிக்கப்பட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையின் சாதனைகள்!


விடுதலை நாளேடு

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன்

காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்”

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழி லாளர்கள் வாழ்வின் அவல நிலையைச் சுட்டிக் காட்டி அவர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற் சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழி லாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.
தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலா ளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நலத் துறைக்குத் தனி அமைச்சகம்.

1969இல் முதலமைச்ச ராகப் பொறுப்பேற்ற கலைஞர் தலைமையில் அமைந்த திராவிட முன் னேற்றக் கழக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது

மே நாளுக்கு ஊதியத் துடன் விடுமுறை 1969ஆம் ஆண்டில் மே முதல் நாளை ஊதியத்துடன் கூடியபொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி தொழி லாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது.
விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக்  கூலி நிர்ணயம்

1969-இல் கணபதியா பிள்ளை பரிந்துரையை ஏற்று, அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப் பட்டது. பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்ப ளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழி லாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

விவசாயத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு இலவச மனைப் பட்டா

விவசாய நிலங்களில் குடிசைகள் போட்டு வாழ்ந்த தொழிலாளர்கள் நிலச் சொந்தக்காரர்களால் எந்த நேரத்திலும் வெளி யேற்றப்படும் அவலமான சூழ்நிலையில் வாழ்ந்தனர்.

அவர்கள் நலன் காத்திட 1971இல் “குடியிருப்பு அனுபோக தாரர்கள் சட்டம்” கொண்டு வந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 748 விவசாயத் தொழிளர் களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனை களை அவர்களுக்கே சொந்தமாக்கி இலவச மனைப் பட்டா வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

நாங்கள் இரத்தம் சிந்தியும் நிறைவேற்ற முடியாத இந்தச் சாத னையை கலைஞர் ஒரே ஒரு சொட்டு மையினால் நிகழ்த்தியுள்ளார் என்று முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மணலி கந்தசாமி கலைஞரை பாராட்டினார்.

15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம்

15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து, கிடைத்த உபரி நிலங்களை இலட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர் களுக்கு வழங்க வழிவகை செய்தது; தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல், “பணிக் கொடை” வழங்கும் திட்டம் கண்டது; விபத்து களால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைக் காப்பதற்காகத் தொழில் விபத்து நிவாரண நிதி திட்டம் உருவாக்கியது; குடும்பங்கள் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது.

மே நாள் நூற்றாண்டு விழாவும் மே தினப் பூங்காவும்

மே நாள் நூற்றாண்டு விழாவினையொட்டி 1990இல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மே தினப் பூங்கா” எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது முதலான பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்த திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறை வேற்றி வருகிறேன்.

ரூ.1,551 கோடியில் 20 நல வாரியங்கள் மூலம் நலத் திட்ட உதவிகள்

20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 16 இலட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்யப் பட்டுள்ளனர். மொத்தம் 18 இலட்சத்து 46 ஆயிரத்து 945 தொழிலாளர்களுக்கு 1,551 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளன.

ரூ.14.99 கோடியில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் நலத் திட்ட உதவிகள்
தமிழ்நாடு தொழிலா ளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 26 ஆயிரத்து 649 தொழிலாளர்களுக்கு 14 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப் பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளன.

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் வழங்கினார்

 



சென்னை, ஆக.15- நெடுஞ் சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நெடுஞ்சாலை துறை

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, நெடுஞ்சாலை துறை சார்பில் 414 இளநிலை வரை தொழில் அலுவலர்கள், 33 உதவி பொறியாளர்கள், 66 இளநிலை உதவியாளர்கள், 48 தட்டச்சர்கள், 6 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3, தணிக்கை உதவியாளர்கள் 4 பேர் என பல்வேறு பணியாளர் கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தின் (டி. என்.பி.எஸ்.சி.) வாயிலாக நேரடி நியமனத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 45 இள நிலை உதவி யாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர் கள், 7 பதிவுரு எழுத்தர்கள், 24 அலுவலக உதவி யாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நியமன ஆணை

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) வாயிலாக, நெடுஞ் சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்துக்கு 180 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர் களுக்கான பணி நியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக, தலைமை செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை நேற்று (14.8.2024) வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, 2022-2023 மற்றும் 2023-2024ஆம் நிதியாண்டு களில், தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஈட்டிய நிகர லாபத்தில், தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகை ரூ.8 கோடியே 78 லட்சத்துக்கான காசோலைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பொதுப் பணிகள். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (14.8.2024) வழங்கினார்.

சனி, 10 ஆகஸ்ட், 2024

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 13 ஆம் மாநில மாநாடு


விடுதலை நாளேடு

ஈரோட்டில் இன்று (10.8.2024) நடைபெறும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த

தந்தை பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேடையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், எம்.செல்லதுரை, எஸ்.முத்துரத்தினம், டி.கே.அபிஜித்,
பி.எம்.செந்தில்குமார், அய்.ஜான் ஜெரார்ட், ஞா.மலர்க்கொடி, இரா.இராசு ஆகியோர் உள்ளனர்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடக்கம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 


விடுதலை நாளேடு

சென்னை, ஆக.2 தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேற்று (1.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ னம் கடந்த 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் வெளிநாடுகளில் வேலைசெய்ய விரும்புவோருக்கு தேவையான பணிகளை செய்து வருகிறது. ஒன்றிய அரசின் குடிபெயர்வோர் சட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டு வெளிநாட்டு வேலைகளில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் www.omcmanpower.com என்ற இணையதளம் தனியார் டொமைனில் இருந்து தற்போது தமிழ்நாடு அரசின் டொ மைனுடன் www.omcmanpower.tn.gov.in என்ற புதிய இணையதளமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, வெளிநாடு செல்ல விரும்புவோர் இந்த புதிய இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 882 ஊதியம் விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

 


சென்னை, ஆக.2 அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.882 ஊதியமாக வழங்கப்படும் என்ற நிர்வாகத்தின் உத்தரவுக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் தொலை தூரங்களுக்குச் செல்லும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.535 மட் டுமே வழங்கப்பட்டது. இது குறைந்தபட்ச கூலி சட்ட விதி, போக்குவரத்து தொழி லாளர்களின் ஒப்பந்த விதிகள் உள்ளிட்டவற்றுக்கு முரணாக இருப்பதாக சிஅய்டியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வேலைநிறுத்த அறிவிக்கை மீதான சமரச பேச்சுவார்த்தையிலும் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப் படி ஊதியம் வழங்க வேண் டும் எனவும், இதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. இதன டிப்படையில், குறைந்தபட்ச கூலி சட்டப்படி விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளர் தனி இணை ஆணையரும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொது மேலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற வாரிய கூட்டத்தில் நிறை வேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அர சாணையின்படியும் ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களுக்கும், தொழில் நுட்ப பணியாளர்க ளுக்குமான குறைந்தபட்ச ஊதியத்தில் திருத்தம் செய் யப்படுகிறது. அதன்படி நாளொன்றுக்கு டிசிசி பணியாளர்களுக்கு ரூ.882-ஆம் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.872-ஆம் ஊதியமாக வழங்கப் பட வேண்டும்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்த உத்தரவுக்கு சிஅய்டியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “விரைவு போக்குவரத்துக் கழகத்தின் குறைந்தபட்ச கூலி உத்தரவை வரவேற்கிறோம். அதேநேரம், ஒப்பந்தப்படியான ஊதியத்தை விட இது குறைவாகும். எனவே, நிர்வாகம் ஒப்பந்தப்படியான ஊதியத்தை வழங்க வேண்டும்,” என்றனர்.