சனி, 19 அக்டோபர், 2024

ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிலக்கு விடுப்பு! ஒடிசா அரசு அறிவிப்பு


விடுதலை நாளேடு

புவனேசுவரம், ஆக. 16– ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிலக்கு விடுப்பு வழங்கப்படுவதாக மாநில துணை முதலமைச்சர் பிராவதி அறிவித்துள்ளார். ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் அந்த மாநில துணை முதலமைச்சர் பிராவதி பரிதா கலந்துகொண்டார். அப்போது மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக மாதிரி கொள்கை வகுக்குமாறு ஒன்றிய அரசிடம் உச்சநீதிமன்றம் கடந்த 8.8.2024 அன்று கேட்டுக்கொண்டது.

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக சைலேந்திர திரிபாதி என்ற வழக்குரைஞா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த 8.8.2024 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து பெண்களை விலக்கி வைக்க வழிவகுக்கும். அது நடைபெற உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. அத்தகைய விடுப்பை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால், வேலை அளிப்பவா்கள் பெண்களை பணியமர்த்தாமல் அவா்களைத் தவிா்க்கக் கூடும்.

இது உண்மையில் அரசின் கொள்கை சாா்ந்த விவகாரமே தவிர, நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டிய விவகாரம் அல்ல. இந்தக் கோரிக்கை குறித்து ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைச் செயலர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வா்யா பாட்டீ ஆகியோரை மனுதாரரின் வழக்குரைஞா் அணுகலாம்.

இந்த விவகாரத்தை ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைச் செயலர் கொள்கை அளவில் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மாநிலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் ஆலோசித்து, மாதவிடாய் விடுப்பு அளிப்பது குறித்து மாதிரி கொள்கை வகுக்க முடியுமா என பாா்க்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.
நாடு முழுவதும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய்க்கு விடுப்பு அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், அது அரசின் கொள்கை வரம்புக்குள் வருவதாக தெரிவித்து மனுவை முடித்துவைத்தது

இந்நிலையில், ஒடிசா அரசு அரசு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனடங்களிலும் பணிபுரிகின்ற பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக