!

சாம்சங் தொழிலாளர் பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளமைக்கு அமைச்சர்கள் மற்றும் சிஅய்டியு நிர்வாகி களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:
சிறீபெரும்புதூர் சாம்சங் நிறுவனத்தில், ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்தைப் பதிவு செய்தல், விடுப்புச் சலுகைகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில், தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு, தொழி லாளர் நலத்துறைக்கும், தொழிற்துறைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி யிருந்ததன் பேரில், நேற்று (15.10.2024) நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டது.
தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த சிஅய்டியு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு மேற்கொண்ட தீவிரமான முயற்சி களின் காரணமாக, தொழிலாளர்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்ட பல முக்கியமான கோரிக்கைகள் சாம்சங் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி, இருதரப்பிலும் நல்ல எண்ணங்களையும், நல்ல உறவுகளையும் ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே ஒரு உடன்படிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தொழில் அமைதிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் தமிழ்நாடு, தொடர்ந்து அந்த நற்பெயரை நிச்சயம் தக்கவைக்கும். அதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். தொழிலாளர் நலன் காக்க வேண்டும், தொழில்வளம் பெருக வேண்டும் என்ற இரண்டு நோக்கங்களை, தமது இரண்டு கண்களாகப் பாவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்.
தமிழ்நாடு தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்; தொழிலாளர் நலன் காண தொடர்ந்து உறுதுணையாய் நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக