இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறு வாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயி லைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடிக் கிடையிலும், 1093 ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப் பலன்களை வழங்கும்பொருட்டு ரூ.29.38 கோடியினை வழங்கியது, ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் வசிக்க ஏதுவாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்பிற்கு என ரூ.13.46 கோடி வழங்கியது, தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களின் தினக் கூலியை ரூ.438/- ஆக உயர்த்தி ஆணையிட்டது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக ஊழியர் நலன் காக்க முதலமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார்.
இந்த ஆண்டு வெகு மதி வழங்க அரசு வெளியிடப் பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி நட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்கள் 10% வெகுமதி மட்டுமே பெற தகுதியானவர்கள்.
சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு இரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% வெகுமதி வழங்கப்படுகிறது.
வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணி யாளர்களுக்கும் ஒரே அளவில் 20% வெகுமதி வழங்க முதலைமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கும் ரூ.5.72 கோடி செலவில் 20% வெகுமதி (போனஸ்) வழங்கப்படும். இதனால் 3939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.
அனைத்துத் தொழிலாளர்களையும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காகக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து, அவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகக் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம் என்பதைச் சட்டம் வரையறை செய்யவில்லை. ஏனெனில், அது மாநிலத்துக்கு மாநிலம், பகுதிக்குப் பகுதி, தொழிலுக்குத் தொழில் வேறுபடக் கூடியது என்பதால் குறிப்பிட்டு வரையறை செய்ய முடியாது.
ஆனால் ஊதியம் என்பதை, “தொழிலாளர்களுக்கு அவர் செய்த வேலைக்கு மறுபயனாக, அவரது முதலாளியால் வழங்கப்படும் சம்பளம் அல்லது பணத்தால் அளவிடக்கூடிய வெகுமதி ஊதியம்” என வரையறை செய்துள்ளது. வீட்டு வாடகைப்படி, விடுமுறைச் சம்பளம், மின்சாரம், தண்ணீர், மருத்துவ வசதிகளின் பணமதிப்பு மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்களுக்குச் செலுத்த வேண்டியத் தொகை போன்றவை ஊதியத்தில் அடங்கும்.
ஊதியத்தை, வழங்கப்படும் முறை, தன்மை மற்றும் நிர்ணயிக்கும் அளவுகோல் அடிப்படையில் வாழ்க்கை ஊதியம் (Living Wage), நியாயமான ஊதியம் (Fair Wage) மற்றும் குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) என மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். வாழ்க்கை ஊதியம் என்பது ஒரு மனிதன் கண்ணியமாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்குத் தேவையான அளவு வழங்கப்படும் ஊதியமாகும். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுடன், ஒருவரது குடும்பத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் அவரது தொழிற்திறனை வளர்த்துக்கொள்ள ஆகும் செலவை ஈடுகட்டும் வகையில் இருப்பது வாழ்க்கை ஊதியமாகும்.
நியாயமான ஊதியம் என்பது வாழ்க்கை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஊதியம். நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது. தொழிலாளியின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கண்ணியமான வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியமாகும். நியாயமான ஊதியத்தின் மிகக் குறைவான அளவிலிருந்து தொடங்குவது குறைந்தபட்ச ஊதியமாகும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை; தனது சக்திக்கு மீறியது என வழங்காமல் இருக்க முடியாது; மேலும் ஒரு தொழிலுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்போது நிறுவனத்தின் நிதி நிலைமை, ஊதியம் வழங்கும் சக்தி, அரசாங்கத்தின் கொள்கை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளக் கூடாது. ஒரு உரிமையாளர் லாபம் அடைந்தாலும், நஷ்டம் அடைந்தாலும் நிர்ணயிக்கப்பட்டக் குறைந்தபட்ச ஊதியத்தைத் தொழிலாளர்களுக்குக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் கணக்கீடு செய்யும் முறை
1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் கருத்தரங்கம் (Indian Labour Conference – ILC), அமர்வு 15 – ல், குறைந்தபட்ச ஊதியம் என்பது தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. மேலும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கீடு செய்யும் பொழுது, கீழ்க்கண்ட ஐந்து முக்கியக் காரணிகளைக் கருத்தில் கொள்ளப் பரிந்துரைத்தது.
1. ஒரு தொழிலாளிக்கு 3 நுகர்வு அலகுகள் (consumption unit - 1+1+0.5+0.5) - தொழிலாளர் தவிர்த்து, ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் எனக் கணக்கில் கொள்ள வேண்டும்; குடும்பத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வருவாய் கணக்கில் கொள்ளப்படாது.
2. ஒரு நபருக்கு, 2700 கலோரி சக்தியைப் பெறும் அளவு உணவுத் தேவைகள் கணக்கிடப்பட வேண்டும்.
3. ஒரு தனிநபருக்கு, 18- யார்டு அளவுத் துணி, ஆடைத் தேவைக்காகக் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு வருடத்திற்கு, நான்கு நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 72 யார்டுத் துணி தேவைப்படும்.
4. அரசாங்கத்தின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச வாடகையை, ஊதியத்தை நிர்ணயிப்பதில் கருத்தில் கொள்ள வேண்டும்.
5. எரிபொருள், மின்சாரம் மற்றும் இதர பொருட்களின் செலவிற்குக் குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் கணக்கிட வேண்டும்.
1988 ஆம் ஆண்டு முதல், குறைந்தபட்ச ஊதியம் என்பது தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (Consumer Price Index – Industrial Workers) இணைக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் ராப்டகோஸ் (Raptakos Brett) தொழிலாளர்கள் வழக்கில் மேற்சொன்ன காரணிகள் தற்போதுள்ள சூழலுக்குப் போதாது என்றும், குழந்தைகளின் கல்வி, மருத்துவம், குறைந்தபட்ச பொழுதுபோக்கு, பண்டிகை – திருவிழாக்கள், வயதானவர்கள் மற்றும் திருமணங்கள் போன்றவற்றிற்குக் குறைந்தபட்ச ஊதியத்தில் 25 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் (National Floor Level Minimum Wage – NFLMW)
1996 ஆம் ஆண்டு, முதன்முதலாக தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் (National Floor Level Minimum Wage – NFLMW) ரூபாய் 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 1998 -ல் ரூபாய் 40; 1-12 -1999 ஆம் தேதி முதல் ரூ.45; 1-9-2002 ஆம் தேதி முதல் ரூ.50; 01-02-2004 ஆம் தேதி முதல் ரூ.66; 01-09-2007 ஆம் தேதி முதல் ரூ.80; 1-11-2010 ஆம் தேதி முதல் ரூ.100; 1-04-2011 ஆம் தேதி முதல் ரூ.115; 1-07-2013 ஆம் தேதி முதல் ரூ.137; 1-7-2015 ஆம் தேதி முதல் ரூ.160; 1-7-2017 ஆம் தேதி முதல் ரூ.176; இறுதியாக 2019 ஆம் ஆண்டு ரூ.178 ஆக உயர்த்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டு 17 சதவீத உயர்வும் , 2017 - ல் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், 2019 ஆம் ஆண்டு வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 2016 முதல், மத்திய அரசுப் பணிகளில் புதிதாக நுழையும் ஒருவருக்கு ரூபாய் 18 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுவால், உணவு மற்றும் 5.50 மீட்டர் ஆடைக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.9218; எரிபொருள், மின்சாரம், தண்ணீர் செலவினங்களுக்கு ரூ.2304 (25%); திருமணம், பொழுதுபோக்கு, திருவிழாக்களுக்கு ரூ.2,033.38 ( 22 %); ஆக மொத்தம் ரூ.13555. 88; இதில் திறன் வளர்ப்புக்கு ரூ. 3388.97 (25 சதவீதம்); வீட்டு வாடகை 524.07 உட்பட ரூ.18000 குறைந்தபட்ச ஊதியமாக 01.01.2016 முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: பக்கம் 65 - ஏழாவது ஊதியக்குழு அறிக்கை).
இந்தக் கணக்கீடுகள் பெரும்பாலும் 1992 ஆம் ஆண்டு இருந்த காரணிகள் அடிப்படையில் இருக்கின்றன. அதிலும்கூட, வீட்டு வாடகைக்கு ரூ.524 என்பது பொருத்தமற்றது. இந்த வாடகைக்கு இந்தியாவில் வீடுகள் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயம். சிறு நகரங்களில் கூட, குறைந்தபட்சம் ரூ.3000க்கு மேல் வீட்டு வாடகை வசூலிக்கப்படுகிறது. டெல்லி, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் இன்னும் கூடுதலான வீட்டு வாடகை செலுத்த வேண்டி இருக்கிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், ஏழாவது ஊதியக்குழு, ILC மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, குறைந்தபட்சம் ரூ.26,000 வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள அரசு தனது புதிய தொழிலாளர் கொள்கையில் கேரளாவில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.600 ஆக இருக்கும் வண்ணம், மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 2019 ஆம் ஆண்டு, டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலோடு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி உள்ளது. டெல்லி அரசின் அறிவிப்பின்படி, திறனற்ற பணிகளுக்கு (Unskilled) மாதம் ரூ.14,842; பகுதித் திறன் தேவைப்படும் பணிகளுக்கு (Semi Skilled) ரூ.16,341; திறன்மிகு பணிகளுக்கு (skilled) ரூ.17,991; பட்டப்படிப்பு படித்த திறன்மிக்க தொழிலாளர்களுக்கு ரூ.19, 572 என்று குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துள்ளது. இந்த உயர்வை எதிர்த்து முதலாளிகளின் அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். முதலாளிகளுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்ததால், டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அப்போதைய விலைவாசி நிலையைக் கருத்தில் கொண்டு இந்த உயர்வுக்கு அக்டோபர் மாதம், 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. டெல்லி அரசின் குறைந்தபட்ச ஊதியம், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் மூன்று மடங்குக்கு மேல் அதிகம்.
கடந்த ஜனவரி மாதம், 2019 ஆம் ஆண்டு, முனைவர் அனுப் சத்பதி தலைமையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதில் முக்கியப் பரிந்துரையாக, இந்தியாவை சமூகப் பொருளாதார மற்றும் தொழிலாளர் சந்தைச் சூழலின் அடிப்படையில் ஐந்து பகுதிகளாகப் பிரித்து தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது; தொழிலாளியின் குடும்பத்திற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட மூன்று நுகர்வு அலகுகளை 3.6 ஆக அதிகரித்தல்; ஜூலை 2018 நிலவரப்படி, ஒரு நாளைக்கு ரூ.375 அல்லது மாதத்துக்கு ரூ.9750-ஐ குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிப்பது போன்ற முக்கியப் பரிந்துரைகளைச் செய்தது. இந்த அறிக்கையின் படி தமிழகத்தில் (Region -3) ஒரு நாளைக்கு ரூ.414.40 நிர்ணயிக்கப்பட வேண்டும். (Source: Report of the Expert Committee on Determining the Methodology for Fixing the National Minimum Wage). ஆனால் மத்திய அரசு இந்த அறிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது குறித்து, வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கின்றன. ஒருபுறம், இது தொழிலாளர்களின் கௌரவமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கும், வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்கும் உதவும்; தொழிலாளர்களிடம் அதிக பணப்புழக்கம் இருப்பதால் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் காரணமாக இருக்கும்; கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்யப் பணம் இருப்பதால் திறமையானப் பணியாளர்களைப் பெற உதவும் என்ற கண்ணோட்டமும்; மறுபுறம் போதிய நிதி உதவிகள் இல்லாமல் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது தொழில்களுக்குப் பேரழிவைத் தரும்: வேலையின்மை உயரக்கூடும்; ஊதிய உயர்வை ஈடுகட்டப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையைத் தொழில் நிறுவனங்கள் உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்படுவதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற மாறுபட்ட கண்ணோட்டமும் இருக்கிறது. இரண்டு வாதங்களையும் புறந்தள்ள முடியாது. அதனால் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும்பொழுது, இரண்டையும் - தொழிலாளர்கள் மற்றும் தொழில், பாதுகாக்க வேண்டியது அவசியம்.
கோவிட் 19-ன் தாக்கத்தால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) நடத்திய கணக்கெடுப்பில், ஏப்ரல் மாதத்தில் 12.2 கோடி பேர் வேலையிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள 5,000 பேரிடம் பிழைப்பாதாரம் பாதிப்பு குறித்து நடத்திய கணக்கெடுப்பில் (Sample Survey), 67% பேர் வேலை இழந்துள்ளதாக கண்டறிந்துள்ளது. வேலையிழப்பு இதுவரை இல்லாத அளவில் கூடுதலாக இருக்கிறது; வேலையில்லாச் சூழலில் முதலாளிகளிடம் ஊதியத்தைக் கேட்க முடியாத நிலை தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது. மேலும் பல இடங்களில் ஏற்கெனவே வாங்கிவந்த ஊதியத்தில் 10 முதல் 40 சதவீதம் வரை குறைவாக கொடுக்கப்படுகின்றது. இதுபோல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் தொழிலாளர் வர்க்கத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு கனவாகவே இருக்கிறது.
தற்போதைய சூழலில், ILC மற்றும் 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கீடு செய்தால் குறைந்தது மாதம் ரூ.26000-க்கு மேல் வரும். மேலும், 1992 ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால், வீடுகளுக்கு கேபிள் தொலைக்காட்சி வசதி, இருசக்கர வாகனம், அலைபேசி, இணையசேவை, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, கணினி போன்றவை அத்தியாவசியத் தேவைகளாக மாறிவிட்டன. தமிழகத்தில், அரசே பல பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளது. அதனால் மின்சாரம், எரிபொருள், அலைபேசி கட்டணம் போன்ற செலவினங்கள் கூடியுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கிட்டால் 2016-இல் நிர்ணயிக்கப்பட்ட ரூ.18000 என்பது கண்டிப்பாக தேவைகளை முழுக்க பூர்த்திச் செய்யப் போதுமானதாக இருக்காது எனத் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
ஊதியம் என்பது தொழிலாளர்கள் உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்யவும், மேம்படுத்தவும் அவர்களின் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவும் போதுமானதாக இருக்க வேண்டும். 2017 - ல் ரூ.176 ஆக இருந்த தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம், 2019 ஆம் ஆண்டு ரூ.178 ஆக உயர்த்தப்பட்டது. இது, தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே மத்திய அரசு, மத்திய அரசுப் பணியில் இல்லாத தொழிலாளர்களுக்கும் கௌரவமாக வாழ உரிமை உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு மாதம் குறைந்தபட்சம் ரூ.18000 (ஒரு நாளைக்கு ரூ.692) என்பதைத் தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், தினசரி ரூ.692 என ஊதியத்தை நிர்ணயம் செய்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மத்திய அரசு திகழ வேண்டும்.
நீடித்த வளர்ச்சி இலக்கு 8.7-ஐ (Sustainable Development Goal 8:7), அடைய, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது மிகவும் அவசியமானதாகும். கட்டாய வேலை, நவீன அடிமைத்தனம் கொத்தடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் முறை போன்ற பிரச்சினைகளை, 2025 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டுவர, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.
புவனேசுவரம், ஆக. 16– ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிலக்கு விடுப்பு வழங்கப்படுவதாக மாநில துணை முதலமைச்சர் பிராவதி அறிவித்துள்ளார். ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் அந்த மாநில துணை முதலமைச்சர் பிராவதி பரிதா கலந்துகொண்டார். அப்போது மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக மாதிரி கொள்கை வகுக்குமாறு ஒன்றிய அரசிடம் உச்சநீதிமன்றம் கடந்த 8.8.2024 அன்று கேட்டுக்கொண்டது.
பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது தொடா்பாக சைலேந்திர திரிபாதி என்ற வழக்குரைஞா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த 8.8.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து பெண்களை விலக்கி வைக்க வழிவகுக்கும். அது நடைபெற உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. அத்தகைய விடுப்பை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால், வேலை அளிப்பவா்கள் பெண்களை பணியமர்த்தாமல் அவா்களைத் தவிா்க்கக் கூடும்.
இது உண்மையில் அரசின் கொள்கை சாா்ந்த விவகாரமே தவிர, நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டிய விவகாரம் அல்ல. இந்தக் கோரிக்கை குறித்து ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைச் செயலர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வா்யா பாட்டீ ஆகியோரை மனுதாரரின் வழக்குரைஞா் அணுகலாம்.
இந்த விவகாரத்தை ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைச் செயலர் கொள்கை அளவில் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மாநிலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் ஆலோசித்து, மாதவிடாய் விடுப்பு அளிப்பது குறித்து மாதிரி கொள்கை வகுக்க முடியுமா என பாா்க்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா். நாடு முழுவதும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய்க்கு விடுப்பு அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், அது அரசின் கொள்கை வரம்புக்குள் வருவதாக தெரிவித்து மனுவை முடித்துவைத்தது
இந்நிலையில், ஒடிசா அரசு அரசு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனடங்களிலும் பணிபுரிகின்ற பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை, அக். 16 - தொழிற்சங்க உரிமை மற்றும் தொழி லாளர்களின் கூட்டுப்பேர உரிமை தொடர்பான கோரிக்கைகள் ஏற்கப் பட்டதைத் தொடர்ந்து, ‘சாம்சங் இந்தி யா’ தொழிலாளர்கள், வியாழக்கிழ மை (அக்டோபர் 17) முதல் பணிக்குத் திரும்புகின்றனர். ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் பேரவைக் கூட்டம், காஞ்சிபுரத்தில் புதனன்று (அக்.16) நடைபெற்றது. அரங்கம் நிரம்பி வழியும் அளவிற்கான எண்ணிக்கை யில் தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்ட இந்தப் பேரவையில், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் இ.முத்துக்குமார், கே.சி.கோபி குமார், ஸ்ரீதர், ஆர். கார்த்திக், சாம்சங் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எல்லன், பொருளாளர் ஆர். மாதேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரின் அறி வுறுத்தலின்கீழ், அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களாக சாம்சங் நிர்வாகம் - தொழிலாளர் நலத்துறை - சிஐடியு தொழிற்சங்கம் இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை தலைவர்கள் விளக்கினர். தொழிலாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளித்தனர். அதனைத் தொடர்ந்து, முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு, 1500-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கடந்த 37 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதென்று முடிவு செய்தனர். தங்களின் போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்கட்டும், தொழிற்சங்க ஒற்றுமை ஓங்கட்டும் என்று விண்ணதிர முழக்கங்களையும் எழுப்பினர். தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தங்களின் வழக்கமான பணிக்குத் திரும்புகின்றனர்.
அ. சவுந்தரராசன் பேட்டி
பேரவைக்குப் பிறகு, சிஐடியு தொழிற்சங்கத் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் கூறியதாவது: “சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத் திற்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நான்கு பேர் பங்கேற்றனர். தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், எங்களது கோரிக்கை குறித்து கேட்டனர். அதற்கு, நாங்கள் ஏற்கெனவே கொடுத்துள்ள கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தோம். மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில், சாம்சங் நிர்வாகத்தினர் எங்களோடு அமர்ந்து பேச முன்வரவில்லை என்றாலும் பரவாயில்லை; தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு அவர்கள் வரவேண்டும்; நாங்கள் கொடுத் திருக்கும் கோரிக்கை மனுவுக்கு பதிலை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும்; அதன்பிறகு, சமரச பேச்சுவார்த்தை நடக்கட்டும்; இதில் என்ன பதில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்; ஒருவேளை எந்த முடிவுக்கும் வரவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லட்டும். இது தான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது; இதுதான் சட்டத்தின் வழிமுறை; இதைக்கூட ஒரு நிர்வாகம் எப்படி செய்ய மறுக்க முடியும்? என்றெல்லாம் எங்கள் தரப்பு வாதங்களை வலுவாக வைத்தோம். அதன்பிறகு, சாம்சங் நிர்வாகத்துடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் என்ன பேசப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், இறுதியில் எங்கள் தரப்பில் வைத்த கோரிக்கையை நிர்வாகத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
எங்களது மற்றொரு கோரிக்கை, வேலை நிறுத்தத்தை ஒட்டி எந்தப் பழிவாங்கும் நட வடிக்கையும் இருக்கக்கூடாது என்பதாகும். ஒரு விதத் தயக்கத்திற்கு பிறகு இதையும் ஏற்றுக் கொண்டனர். தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும் போது சுமூகமான நிலை ஏற்பட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் தொழி லாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தொழி லாளர்கள் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன் தான் நடந்து கொள்வார்கள் என்று எங்கள் தரப்பில் தெரிவித்தோம். இவை அனைத்தையும் அறிவுரைகள் என்ற பெயரில் தொழிலாளர் நலத்துறை அலுவலர் கொடுத்தார். அதன்மீது, ஆலை நிர்வாகத்தில் இருந்து வந்தவர்களும் தொழிலாளர்கள் சார்பில் பங்கேற்ற நாங்களும் ஒப்புக் கொள்கிறோம் என்று கையெழுத்திட்டோம். அதன்பிறகு, இதுதான் அறிவுரை என்று தொழி லாளர் நலத்துறை அலுவலர் ஒரு கையெழுத் திட்டார். இது முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் உருவான ஒரு அறிவுரையாகும். இது கிட்டத்தட்ட ஒப்பந்தத்திற்கு சமம். இதையடுத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவுகளை, புதனன்று (அக்.16) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் தொழிலாளர்களிடம் விளக்கமாக கூறினோம். இந்த கூட்டத்தில் தொழிலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும், எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதில் அளித்தோம். அதற்கு பிறகு, போராட்டத்தை திரும்பப்பெறலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். இதையடுத்து, அக்டோபர் 17 ஆம் தேதி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புகிறார்கள்” என்றார்.
இ. முத்துக்குமார்
இ. முத்துக்குமார் பேசுகையில், “சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் 37 நாட்களாக நடை பெற்ற மகத்தான வேலை நிறுத்தம் நல்ல முறையில் முடிந்திருக்கிறது. பொதுவாக ஒரு போராட்டம் என்றால், அதுவும் வேலை நிறுத்தம் என்றால் மிகப்பெரிய அளவில் வன்முறை, கலவரம் இருக்கும். தீர்ப்பாயம், நீதி மன்றத்திற்கு எல்லாம் செல்லும். ஆனால், இந்த தொழிலாளர்கள் போராட்டம் உறுதிமிக்க தொழிற்சங்க நேர்த்தியுடன் நடைபெற்றது. இந்த போராட்டத்தை உலகே வியந்து பார்க்கிறது. இந்த போராட்டத்தின் முடிவும் தொழிலாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இந்தப் போராட்டம், தொழிற் சங்க இயக்கம் தனது அடிப்படையான கூட்டுப் பேர உரிமை, சம வேலைக்கு சம வாய்ப்பு பெறும் உரிமை, நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் உரிமைகளை முறை யாக அனுபவிக்கும் உரிமை தொழிலாளர் களுக்கு உள்ளது என்பதை உறுதிசெய்திருக் கிறது” என்றார்.
சாம்சங் தொழிலாளர் பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளமைக்கு அமைச்சர்கள் மற்றும் சிஅய்டியு நிர்வாகி களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு: சிறீபெரும்புதூர் சாம்சங் நிறுவனத்தில், ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்தைப் பதிவு செய்தல், விடுப்புச் சலுகைகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விவகாரத்தில், தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு, தொழி லாளர் நலத்துறைக்கும், தொழிற்துறைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி யிருந்ததன் பேரில், நேற்று (15.10.2024) நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டது.
தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த சிஅய்டியு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு மேற்கொண்ட தீவிரமான முயற்சி களின் காரணமாக, தொழிலாளர்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்ட பல முக்கியமான கோரிக்கைகள் சாம்சங் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி, இருதரப்பிலும் நல்ல எண்ணங்களையும், நல்ல உறவுகளையும் ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே ஒரு உடன்படிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தொழில் அமைதிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் தமிழ்நாடு, தொடர்ந்து அந்த நற்பெயரை நிச்சயம் தக்கவைக்கும். அதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். தொழிலாளர் நலன் காக்க வேண்டும், தொழில்வளம் பெருக வேண்டும் என்ற இரண்டு நோக்கங்களை, தமது இரண்டு கண்களாகப் பாவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும். தமிழ்நாடு தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்; தொழிலாளர் நலன் காண தொடர்ந்து உறுதுணையாய் நிற்கும்.
- கே.ஜி.சுப்பிரமணியன் தொழிற்சாலைகள் சட்டம் - 1948.
1948 ஆம் ஆண்டிற்கு முன்னரும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளருக்காக சட்டங்கள் இருந்தன. 1949 முதல் இந்தச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. தொழிற்சாலை என்றால் கட்டடம் இருக்கவேண்டும் அதற்குள் வேலை செய்யவேண்டும் என்பதில்லை. திறந்தவெளியில் வேலை நடந்தாலும் அது தொழிற்சாலை ஆகும். உதாரணமாக உப்பளத்தில் 20-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தால் அது தொழிற்சாலை ஆகும்; தொழிற்சாலை சட்டம் பொருந்தும். அதே போல் வயலில் கரும்பு வளர்ச்சிக்கு, திட்டங்களை வகுத்துக் கொடுத்தும், மேற்பார்வையிட்டும், அவற்றை கரும்பாலைக்கு வழங்கவும் ஈடுபட் டுள்ள பணியாளர்கள், தொழிலாளர்கள் அல்ல, அது தொழிற்சாலை வளாகம் அல்ல எனவே தொழிற்சாலை சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது. இவ்வாறாக தொழிற்சாலையில் பல் வேறு பிரிவுகள் இருக்கின்றன. இவை இடத்திற்குத் தகுந்தவாறும் தொழிலின் தன்மைக்குத் தகுந்தவாறும் அவ்வப்போது பொருந்தும், மாறுபடும். எனவே தொழிலாளர்களுக்குத் தேவையான சில பகுதிகளைப் பார்ப் போம்.
சட்டத்தின் நோக்கம்:
தொழில் மற்றும் தொழிற்சாலை பணி சம்பந்தப்பட்ட ஆபத்துக்களிலி ருந்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகள் சட்டம் 1948-இல் இயற்றப்பட்டது. தொழிற் சாலைகளில், வேலை நிலைகளை ஒழுங்குபடுத்துவதும், தொழிலாளர்க ளுக்குப் போதுமான் சுகாதார வசதிகள், வேலை நேரக் கட்டுப்பாடு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு, நலப்பணிகள், வாராந்திர விடுமுறை, ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்வதும் இச்சட் டத்தின் நோக்கமாகும். 1,4,1949- முதல் இந்தச்சட்டம் நடை முறைக்கு வந்தது. கடைசியாக இந்தச் சட்டம் 1987-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
பொருத்தம்: தொழிற்சாலைகள் சட் டம் ஒரு மத்திய அரசுச் சட்டமாகும். இந்தியா முழுவதற்கும் பொருந்தும் இச்சட்டம் மாநில அரசால் அமலாக்கப்படுகிறது.
உரிமையாளர்: தொழிற் சாலையின் நடவடிக்கையில் இறுதியான கட் டுப்பாடு யாருக்கு இருக்கிறதோ அவர் உரிமையாளர் ஆவார்.
1. ஒரு நிறுவனத்தை பொருத்த மட்டில் அதனுடைய ஒரு பங்குதாரர் உரிமையாளராகக் கருதப்படுவார்.
2. தனிப்பட்டவர்கள் சேர்ந்த ஒரு சங்கத்தை பொருத்தமட்டில் அதனுடைய அங்கத்தினர்கள் உரிமையாளராகக் கருதப்படுவார்,
3. ஒரு நிறுவனத்தைப் பொருத்த மட்டில் அதனுடைய இயக்குளர்களில் ஒருவர் உரிமையாளராகக் கருதப்படுவார்.
4. மத்திய அரசு அல்லது மாநில அரசின் அல்லது உள்ளாட்சித் துறையின் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தொழிற்சாலையைப் பொருத்தமட்டில் அதனுடைய நடவடிக்கைகளை நிர்வகிக்க நியமிக்கப்படுபவர் உரிமையாளராகக் கருதப்படுவார்.
தொழிலாளி: வேலையளிப்பவரால் நேரடியாகவோ அல்லது அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ. ஒரு பிரதிநிதி அல்லது ஒப்பந்தக்காரர் மூலமாகவோ ஊதியத்துடனோ ஊதியம் அல்லாமலோ ஒரு உற்பத்தி பணியில் ஈடுபடுத்தப்படுபவர் இச் சட்டப்படி தொழிலாளி ஆகிறார். உற்பத்தி சம்பந்தப்பட்ட இயந்திரங்களை அல்லது வேலையிடங்களை துப்புரவு செய்பவரும், உற்பத்தி சம்பந்தமான வேறு வேலை செய்யும். நபரும் தொழிலாளிதான். ஆயினும் இதே தொழிலில் ஈடுபடும் இந்திய அரசின் முப்படையைச் சேர்ந்தவர்கள் தொழிலாளிகள் என்று கருதப்பட மாட்டார்கள்.
ஆபத்து நிறைந்த செய்முறை: ஆபத்து நிறைந்த செய்முறை என்பது அதில் ஈடுபட்டுள்ள அல்லது அதனுடன் தொடர்புள்ள நபர்களுடைய உடல் நலத்திற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் செயல் முறையை அல்லது பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளை மாசுபடுத்தக் கூடிய செய்முறையைக் குறிப்பதாகும்.
வாராந்திர வேலை நேரம் : 18 வயதான தொழிலாழியை வாரத்திற்கு 48 மணி நேரத்துக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கவோ அல்லது பணி செய்யுமாறு கோரவோ கூடாது.
வாராந்திர விடுமுறை; ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்தப் பகுதிக்கான வாரத்தின் முதல் நாளை வாராந்திர விடுமுறையாகக் கொள்ள உரி மையுண்டு. விதி விலக்கினால் அவ்வாறு வாராந்திர விடுமுறை அளிக்கப் பட வில்லையெனில் அந்த மாதத்திலோ அல்லது உடனடியாக அதை அடுத்து வரும் இரண்டு மாதத்திற்குள்ளோ இழந்த நாட்களுக்கு சமமான நாட்களை ஈட்டு விடுமுறையாக அளிக்கப்படவேண்டும்.
நாளொன்றுக்கு 9 மணிக்கு மேல் ஒரு வளர்ச்சியடைந்த தொழிலாளியை வேலை செய்ய அனுமதிக்கலாகாது. ஆனால் தலைமை ஆய்வாளர் முன் அனுமதியுடன் ஷிப்ட் மாற்றங்க ளுக்காக உயர்ந்தளவு நாள் வேலை நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்யக் கோரப்படலாம்.
ஓய்வு இடை வேலை; ஒரு வளர்ச்சியடைந்த தொழிலாளி ஒரு நாளில் அய்ந்து மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யலாகாது அரை மணி நேரம் ஓய்வு இடை வேளையின்றி தொடர்ச்சியாக 5 மணி நேரத்திற்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.
மிகை நேரப்பணி ஓய்வு இடை வேளை உட்பட ஒரு வளர்ச்சிய டைந்த தொழிலாளியின் மொத்த பணிக்காலம் ஒரு நாளில் 10½ மணிக்கு மேல் நீடிக்கக் கூடாது. தலைமை ஆய்வாளர் எழுத்து மூலம் அனுமதித்தால் சிறப்பு நிலைகளில் 12 மணி வரை நீடிக்கலாம்.
இரவு நேர ஷிப்ட்: தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் ஷிப்ட் நடு இரவினை தாண்டுவதாக அமைவது. ஒரு நாள் விடுமுறை என்பது ஷிப்ட் பணி முடிந்த தொடர்ச்சியான 24 மணி நேரத்தைக் குறிக்கும்.
நடு இரவுக்குப் பின்னர் பணி செய்த கால அளவை முந்தைய தினக் கணக்கில் சேர்க்கவேண்டும்.
மிகை நேர வேலைக்கு கூடுதல் ஊதியம்: இச்சட்டத்தின் படி ஒரு தொழிலாளி ஒரு நாளுக்கு 9 மணி நேரத்திற்கு மேல் அல்லது ஒரு வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் அவருக்கு கூடுதல் நேரத்திற்கு சாதாரண ஊதிய விகிதத் தைப் போல் இரு மடங்கு தொகை ஊதியமாக அளிக்கப்பட வேண்டும்.
வேலை அடிப்படையில் ஊதியம் வழங்கும் தொழிலாளியாக இருந்தால் கடந்த மாதத்தில் அதே மாதிரி வேலைக்கு வாங்கிய சராசரி முழு நேர ஊதியம் கால அடிப்படை ஊதியமாக கருதப்பட்டு அந்த அடிப்படையில் கூடுதல் நேர ஊதியம் கணக்கிடப்படும்.
கடந்த மாதத்தில் அதே மாதிரி வேலை செய்யாதவராக இருந்தால் மிகை நேர வேலை செய்யும் வாரத்தில் அவரது சராசரி ஊதியம் எவ்வ ளவோ அதை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
சாதாரண ஊதிய விகிதம்: இச்சட் டத்தின் படி சாதாரண ஊதிய விகிதம் என்பது அடிப்படை சம்பளம், படி கள், மற்றும் தள்ளுபடியுடன் அளிக் கப்படும் உணவு தானியங்கள் பொருள்கள் ஆகியவற்றின் மதிப்பும் அடங்கும். போளசும் மிகை தேர ஊதியமும் இந்த விளக்கத்தில் அடங்காது
மிகை நேர வேலைக்குக் கட்டுபாடுகள்: மிகை நேர வேலை உட்பட ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளி 60 மணிக்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. மேலும் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேல் மிகை நேர வேலை அனுமதிக்கப்படக்கூடாது. தலைமை ஆய்வாளர் அனுமதி பெற்றால் மூன்று மாத காலத்தில் 75 மணிக்கு மேற்படாமல் மிகை நேர வேலை அளிக்கப்படலாம்.
இரட்டிப்பு வேலைக்குக் கட்டுப்பாடு: ஏற்கெனவே ஒரு தொழிற்சாலையில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு வளர்ச்சி பெற்ற தொழிலாளி வேலை செய்திருந்தால், அதே நாளில் மற்றொரு தொழிற்சாலையில் அவர். வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது. வளர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை நேரத்தைப் பற்றிய முன் அறிவிப்பு: வளர்ச்சி பெற்ற தொழிலாளிகளைப் பற்றிய பதிவேட்டினை ஒவ்வொரு தொழிற்சாலையின் மேலாளர் வைத்திருக்க வேண்டும். ஆய்வாளர் வேலை நேரத்தின் எந்தக் காலத்திலும் இதைப் பார்வையிட வசதியாக இருக்கவேண்டும்
1. வளர்ச்சியடைந்த தொழிலாளியின் பெயர்
2. அவருடைய பணியின் தன்மை
3. அவர் சார்ந்துள்ள குழு ஏதேனும் இருந்தால் குழுவைப் பற்றிய விபரம்
4. அவருடைய குழுவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட ஷிப்ட் ஏற்பாடுகள்
5. தேவைப்படும் வேறு விவரங்கள் எந்த ஒரு தொழிற்சாலையிலும் பதிவேட்டில் பெயர் குறிக்கப்படாத தொழிவாளி வேலை செய்யவோ அல்லது அனுமதிக்கப்படவோ கூடாது.
பெண்களுடைய வேலைக்கு மேலும் கட்டுப்பாடு; பெண் தொழிவாளர்கள் இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.
மாநில அரசு மேற்கண்ட நேர கட் டுப்பாடுகளை அரசிதழ் அறிக்கையின் மூலம் மாற்றலாம். ஆயினும் எக்காரணத்தைக் கொண்டும் பெண் களை இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது.
கடைசி மாற்றம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்போ அல்லது வாராந்திர விடுமுறைக்குப் பின்போ தான் ஷிப்ட் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
கச்சாப் பொருள்களுக்குச் சேதம் ஏற்படலாம் என்ற காரணத்தால் மீன் பதப்படுத்தப்படும் அல்லது மீன்களை டப்பாக்களில் அடைக்கும் சம்பந்தமான தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்கள் விஷயத்தில் அரசு மேற்கண்ட விதியிலிருந்து விலக்கு அளிக்கலாம்.
எந்த தொழிற் கூடத்திற்குள்ளாவது ஆய்வுப் பணியாளர்கள் தொழிலா ளர்களின் உடல் நலத்திற்கும், பாது காப்பிற்கும் ஆபத்து விளைவித்ததாக அல்லது விளைவிக்கக் கூடியதாகக் கருதும் எந்த பொருளையோ, அல்லது ரசாயணப் பொருளையோ கண்டு விட்டால் அவர்கள் அதனை அகற்றுவதற்கோ அல்லது அதனை எந்த நடைமுறை அல்லது பரிசோதனைக்கும் உட்படுத்துமாறு பொறுப்பாளர்களுக்கு உத்திரவிடலாம். பரிசோதனைக்காக அத்தகைய பொருளை அல்லது ரசாயணப் பொருளை கையகப்படுத்திக் கொள்ளலாம்.
இளம் தொழிலாளர்களுக்கு வேலையளித்தல்: இளம் தொழிலா எர்களின் சுரண்டலை தவிர்ப்பதும் அவர்களின் பாதுகாப்பிற்கு வகை செய்வதும் சம்பந்தப்பட்ட விதிகளின் நோக்கமாகும்.
இளம் தொழிலாளர் வேலைக்குத் தடை: 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த ஒரு தொழிற்சாலையிலும் வேலைக்கு அமர்த்துவதை இச்சட்டம் தடை செய்கிறது.
ஒவ்வொரு சிறுவனும் இளம் தொழிலாளியும் வேலை செய்யத் தகுதி உள்ளவர் என்ற மருத்துவச் சான்றிதழ் பெற்று அதைக் குறிக்கும்.அடையாள அட்டையை வைத்திருக் கவேண்டும், சான்றிதழ் வழங்குவதற்கு முன் சிறுவனுக்கு 14 வயது முழுமை அடைந்து விட்டதா என்பதையும் வேலை செய்வதற்குரிய உடற்தகுதி உண்டா என்பதையும் உறுதி செய்துக் கொள்ளவேண்டும். அதேபோன்று இளந்தொழிலாளராக இருந்தால் 15 வயது முழுமையடைந்து விட்டதா என்பதையும் ஒரு முழு நாள் வேலை செய்வதற்குறிய தகுதி உண்டா என்பதையும் உறுதி செய்து கொண்டு மருத்துவர் சான்றிதழ் வழங்கவேண்டும்.
ஒரு முறை வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ் 12 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
பதினேழு வயது அடையாத எந்த ஆண் அல்லது பெண் இளந்தொழிலாளி வயது வந்தவர் என்ற முறையில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் எந்தத் தொழிற் சாலையிலும் காலை 6 மணிக்கும் மாலை 7 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் வேலை செய்யுமாறு அனுமதிக்கப்படலாம். அந்த நேரத்திலாவது மற்ற நேரத்தில் அவர்களை வேலை செய்யக் கோரவோ அனுமதிக்கவோ கூடாது.
எந்தத் தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைத் தொகுப்பு அல்லது குறிப்பிட்ட பிரிவுத் தொழிற்சாலைக ளைப் பொறுத்த வரையில் மேற் சொன்ன வரை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. தேசிய. நலன் கருதி ஆபத்தான நெருக்கடி நிலை ஏற்பட்டாலொழிய சாதாரண காலங்களில் எந்த பெண் இளந்தொழி லாளியையும் மாலை 10 மணிக்கு காலை 5 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் எந்த நிலையிலும் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.
சிறுவர்களின் வேலை நேரம் எந்த, ஒரு தொழிற்சாலையிலும் நாளொன்றுக்கு 41 /2 மணி நேரத்திற்கு மேல் இருத்தலாகாது. இரவு நேரத்தில் அவர்களை வேலையிலமர்த்தலாகாது. இரண்டு ஷிப்டுகளில் மட்டும் அதுவும் ஒன்றோடொன்று இடையூ டாதவற்றில் அல்லது ஒவ்வொன்றும் 5 மணி நேரத்திற்கு மேல் பரவலாகாத வகையிலும் உள்ள ஷிப்டுகளில் தான் சிறுவர்கள் வேலையிலமர்த்தப்பட வேண்டும்.
வாராந்திர விடுமுறை பற்றிய சிறுவர்களுக்கும் பொருந்தும். இந்த விதியிலிருந்து எந்த ஒரு சிறுவனுக்கும் விலக்கு அளிக்கப்பட மாட்டாது.
ஒரு நாளில் ஒரு சிறுவன் ஒரு தொழிற்சாலையில் ஏற்கெனவே வேலை செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு தொழிற்சாலை' யில் வேலை செய்யுமாறு கோருவதோ அல்லது வேலை செய்ய அனு மதிப்பதோ கூடாது.
எந்த தொழிற்சாலையிலும் எந்த பெண் குழந்தைத் தொழிலாளியையும் காலை 8 மணிக்கும் மாலை 7 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டுமே வேலை செய்யக் கோரலாம் அல்லது அனுமதிக்கப்படலாம்.
சிறுவர்கள் ஒவ்வொரு நாளிலும் வேலை செய்யக் கோரப்படும் அல்லது அனுமதிக்கப்படும் வேலை நேரத்தைப் பற்றிய அறிக்கை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவும், அது ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சரி வர பராமரிக்கப்படவும் சட்டத்தில் விதி செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்கள் பற்றிய பதிவேடு: சிறு வர்கள் பற்றிய பதிவேடு ஒன்றை தொழிற்சாலை மேலாளர் வைத்திருக் கவேண்டும். வேலை நேரத்தின் எந்தக் காலத்திலும் ஆய்வாளர் பார்வைக்கு கிடைக்கும் படி அத்தகைய பதிவேடு வைக்கப்பட்டிருக்கவேண்டும். பதிவேட்டில் பின்வரும் தகவல்கள் இடம் பெற்றிருக்கவேண்டும்.
1. தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொரு குழுந்தைத் தொழிலாளியின் பெயர்
2 அவருடைய வேலையின் தன்மை
3. அவர் சார்ந்துள்ள குழு
4. அந்தக் குழு ஷிப்ட் வேலையிலி ருந்தால் அவருடைய குழுவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலை நேரம்.
5. மருத்துவ தகுதிச் சான்றிதழின் எண்
குழந்தைத் தொழிலாளருடைய பதி வேட்டில் பெயர் மற்றும் இதர விவ ரங்கள் இடம் பெற்றிருந்தாலொழிய எந்த ஒரு குழந்தைத் தொழிலாளியும் எந்த ஒரு தொழிற்சாலையிலும் வேலை செய்ய கோருவதோ அல்லது அனுமதிப்பதோ கூடாது.
இளம் வயதினரை வேலைக்கு அமர்த்துவதற்கான மேற்கண்ட விதிகள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் சட்டம் 1938-இல் காணப்படும். விதிகளுக்குக் கூடுதலானவையே தவிர அவற்றை நீக்கும் அல்லது மாற்றும் முறையில் அமைக்கப்பட்டவை அல்ல. - உண்மை இதழ், 01-15.08.1998