• Viduthalai
சென்னை, மார்ச் 29- மத்திய தொழிற்சங்க கூட்ட மைப்பினர் அறிவித்த 2 நாள் பொது வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழ்நாட்டில் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. வங்கிச் சேவைகளும் பாதிக்கப் பட்டன.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று (28.3.2022) தொடங்கினர்.
ஒன்றிய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், சிஅய்டியு, அய்என்டியுசி, எம்எம் எஸ், ஏஅய்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளன. இதனால், பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் போராட் டத்துக்கு ஆதரவு தெரி வித்திருந்தன. பெரும்பாலான தொழிற்சங்கங்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழி லாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். போக்கு வரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர் களும் போராட்டத்தில் பங்கேற்றதால் பாதிப்பு அதிகமாக இருந்தது.
‘ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது’ என ஒன்றிய, மாநில அரசுகள் எச்சரித்தபோதும்கூட நேற்று பொது வேலை நிறுத்தம் தீவிரமாக நடந்தது. தமிழ்நாட்டில் 8 அரசு போக்கு வரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழி லாளர்கள் பணியாற்றி வருகி றார்கள். அவர்களில் பெரும்பாலான ஓட்டுநர், நடத்துநர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் தமிழ்நாடு முழு வதும் சுமார் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. அண்ணா தொழிற்சங்கத் தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வில்லை என்று அறிவித்து இருந்தனர். ஆனால், நேற்று காலை அந்த சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இதனால் தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. அரசுப் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பேருந்துகள் ஓடவில்லை
சென்னையில் 80 சதவீத மாநகர பேருந் துகள் ஓடவில்லை. இதனால், பேருந்து நிறுத்தங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்து நின்றனர். வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆட்டோ, டாக்சிகளில் 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலித் தனர். பலர் சரக்கு வாகனங்களில் ஏறிச் சென்றனர். சிலர் நடந்தே சென்றனர்.
வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழி யர்களும் பங்கேற்றுள்ளதால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டது. வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் தியாகராய நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கி இணையதள சேவைகள் பாதிப்பின்றி வழக்கம்போல செயல்பட்டன. ஏடிஎம் மய்யங் களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கப் பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
வேலைநிறுத்தம் காரணமாக, நாள் ஒன்றுக்கு ரூ.1.60 லட்சம் கோடி மதிப்பிலான ஒரு கோடி காசோலைகள் என்ற அளவில் 2 நாளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவர்த்தனைகள் நாடு முழுதும் பாதிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போ ராட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்க வில்லை.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய அரசு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை மய்ய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளர் எஸ்.சுந்தர மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இதேபோல, எல்அய்சி அலுவலகம் முன்பாக அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் சென்னை பகுதி-1 தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் செந்தில்குமார், முகவர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
சென்னையில் 21 இடங்களில் மறியல்
அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல் உட்பட சென்னையில் 21 இடங்களில் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் உடனே கலைந்து போக செய்ததால் பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்படவில்லை. இதேபோல தமிழ்நாடு முழுவதும் சுமார் 165 இடங்களில் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. தமிழ் நாட்டில் ரயில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 37 ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 323 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 155 இடங் களில் ஆர்ப் பாட்டமும் 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் 5 இடங்களில் அலுவலக முற்றுகை போராட்டமும் நடந்ததாக காவல்துறை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக தொழிற்சங்கமான தொமுச பொருளாளர் நடராஜன் கூறும்போது, ‘‘பேருந்துகள் இயக்கப் படாததால் பொது மக்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். போராட்டத்தின் வடிவை மாற்ற வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், இன்று (29ஆம் தேதி) 60 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக