வியாழன், 4 மே, 2023

2,200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு: கிண்டி தொழிற்பேட்டையில் அடுக்குமாடி தொழில் வளாகம்

  

அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு

20

சென்னை, ஏப். 8-சென்னை கிண்டி திரு. வி.க. தொழிற்பேட்டையில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்து உள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப் பினர்கள் வைத்த விவாதத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆற்றிய பதில் உரை வருமாறு:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி அதிகவேலைவாய்பை வழங்குவதில் எங்கள் துறை முனைப்புடன் செயல்படு கிறது. 4 சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட் டம், பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத் தும் திட்டம் ஆகிய திட்டங் களில் ரூ.656.27கோடி மானியத்துடன் ரூ.1,817 கோடி வங்கி கடனுதவி வழங்கி 22 ஆயிரத்து 425 இளை ஞர்கள் புதிய தொழில்முனை வோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர். 

இதில் சுய வேலைவாய்ப்பு திட்டமான 'நீட்ஸ்' திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.163கோடிக்கு மேல் மானியம் வழங்கப்பட்டு ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 6,938 பெண்களுக்கும் 2,344 தாழ்த்தப்பட்ட சமூகத்தின ருக்கும், பழங்குடியினருக்கும். 1619 சிறுபான்மையினர், மாற்றுத்திற னாளிகளுக்கும் ரூ.320.11 கோடி மானியத்துடன் ரூ.993கோடி வங்கி கடனுதவி வழங்கி 10 ஆயி ரத்து 901 புதிய தொழில் முனை வோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு சாதனை மைல் கல்லாகும். 

சென்னை கிண்டி திரு. வி.க. தொழிற்பேட்டையில் டான்சிக்கு சொந்தமான இடத்தில் 200 தொழில்முனைவோருக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.175 கோடி செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் உருவாக்கப்படும். இத னால் 2,200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். குறு, சிறு நிறுவனங்களுக்காசு ஒசூரில் தாய்கோ வங்கிக் கிளை தொடங்கப்படும். 

- இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலையாணை அமைக்க குழு அரசாணை வெளியீடு

 

 சென்னை,ஆக.5- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலை யாணை உருவாக்குவதற்கான குழு அமைத்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால் அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் ஊதிய பிடித்தம், தண்டனை போன்றவை கோட்ட அளவில் மாறுபடும். இதை விடுத்து அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலை யாணையை உருவாக்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பும் அளித்திருந்தது. அதன்படி, போக்குவரத்து துறை செயலர் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, போக்குவரத்துக் கழகங்களுக்கு பொதுவான நிலையாணையை அமைப்பது தொடர்பாக நிர்வாகம்மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்குமாறு போக்குவரத்து கழக வழக் குரைஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழு உறுப்பினர்கள்

இதன் தொடர்ச்சியாக மாநகரபோக்குவரத்து கழகம், விரைவுபோக்குவரத்து கழகம், சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள், மாநகர போக்குவரத்து கழக தலைமை நிதி அலுவலர், கும்பகோணம் போக்குவரத்துக் கழக முதுநிலை துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஆகிய துறைசார் அலுவலர்களும், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை(எல்பிஎப்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் (சிஅய்டியு), தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் (டிடிஎஸ்எப்) ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது. இக்குழு, பொதுவான நிலையா ணையில் அடிப்படை சரத்துகளில் மாற்றம் செய்யாமல், ஒரே மாதிரியான நிலையாணையை தயார் செய்து அளிக் குமாறு அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது இனி 58

 

  

சென்னை,மார்ச்30- சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (29.3.2023) நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுவதாகவும், 58 வயதிலேயே பணி ஓய்வு அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதைத்தான் உறுப்பினர் சதன் திருமலைக்குமாரும் அவையில் பேசினார். முதலமைச்சருடன் கலந்து பேசி, போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகங்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இக்கழகங்கள் சீரழிந்ததற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். 2006-_11 திமுக ஆட்சியில் 48,898 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 38,399 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் 2016-_2021 வரையிலான 5 ஆண்டு ஆட்சியில் ஒரு நியமனம் கூட நடைபெறவில்லை. பணி ஓய்வையும் 60 வயதாக உயர்த்தினார்கள். அதனால் ஏற்படும் நிதி சுமை குறித்து கவலைப்படவில்லை.   இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 3 மே, 2023

திராவிடர் கழக தலைவர்ஆசிரியர் கி.வீரமணி உள்பட தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

  

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைப்பு : முதலமைச்சர் அறிவிப்பு

2

சென்னை, ஏப்.25  தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத் துகளின் அடிப்படையில், 12 மணிநேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித் துள்ளார். தி.மு.க. எப்போதும் தொழி லாளர் சமுதாய தோழனாக, தொண்ட னாக, காவல்அரணாக விளங்கும் என்பதற்கு, செயல்படுத்திய திட்டங்களே சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த ஏப்.12-ஆம் தேதி தாக்கல் செய்தார். பேர வைக் கூட்ட நிறைவு நாளான கடந்த 

21ஆ-ம் தேதி, பல்வேறு கட்சி உறுப்பினர் களின்எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நேற்று (24.4.2023) ஆலோசனை நடத்தினர்.

இந்த சூழலில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்), அந்திரிதாஸ் (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), ரவிகுமார் (விசிக) கே.ஏ.எம். அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஜவாஹிருல்லா (மமக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோர் நேற்று  (24.4.2023) இரவு நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

தலைவர்கள் வேண்டுகோள் 

அதில், ‘தமிழ்நாட்டில் 100-வது ஆண்டு மே தினத்தை கொண்டாடும் சூழ்நிலையில், இந்த சட்டத்திருத்தம் வந்திருப்பது, மே தின பின்னணியையே நிராகரிப்பதாக அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. எனவே, இந்த சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினையில் மக்கள் நலன், தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட் டுள்ளதாவது: தமிழ் நாட்டில் பெரும் முதலீ டுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்பை ஏற் படுத்தும் நோக்கிலும், சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா கடந்த ஏப்.21ஆ-ம் தேதிஅரசால் நிறைவேற்றப் பட்டது.

தொழிலாளர் நலனை பாதுகாக்கும் பல் வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் 24-ஆம் தேதி (நேற்று) ஆலோசனை நடத்தினர்.சட்டத்தில் உள்ள விதிகள் குறித்தும், மசோதாவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்கு போக்கு வரத்து வசதி உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் தொழிற் சங்க பிரதிநிதிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலை களுக்கு மட்டுமே நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் அரசின் பரி சீலனைக்கு பிறகே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழலிலும், தொழி லாளர் நலனில் சமரசம் செய்யப் படாது என்றும் அமைச்சர்கள் எடுத்துக் கூறினர். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப் புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண் டுள்ளது என்றும் எடுத்துக் கூறினர். இக்கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், இந்த மசோதாவை நடைமுறைப்படுத் தினால் தொழி லாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்கள்கருத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம், தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. தொழில் முன்னேற் றத்தை ஊக்குவிக்கும் அதே நேரம், தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பேணுவதும் அரசின் நோக்கமாகும்.

நாட்டில் தொழிற்சாலைகள் பெருக, அங்கு தொழில் அமைதி மிகவும் அவசியம். தொழி லாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து, திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. 

திமுக எப்போதும் தொழிலாளர் களின் சமுதாய தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக விளங்கும் என்பதற்கு, செயல் படுத்திய திட்டங்களே சான்று.கடந்த 2 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் நிலவும் தொழிற்சூழல் காரணமாகவே, தொடர்ச்சியாக பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்திய பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீ டுகள் செய்து, அதன்மூலம் நமது இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்புகளை பெற்று வரு கின்றனர்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்பு

இந்த அரசு ஒரு சட்ட மசோ தாவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ, அதுகுறித்து மக்களிடம் மாற்றுக் கருத்துகள் வந்தால், அதை ஆராய்ந்து, அதற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும். அந்த வகையில், சட்டப்பேரவையில் நிறைவேற் றப்பட்ட மசோதா மீதுபல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், தொழிற் சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. 

இவ் வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் அறிவிப்புக்கு தொமுச, அய்என் டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளன.

8 மணி வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்திய மசோதா திரும்பப் பெறப்பட்டது!

  

மே 7 இல் நடைபெறவிருக்கும் திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநில மாநாட்டில் முதலமைச்சருக்குப் பாராட்டு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

8 மணி வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்திய மசோதா திரும்பப் பெறப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தொழிலாளர் பணி நேரத்தை - சில தொழிற் சாலைகளில் தொழிலாளர்கள் விரும்பினால் 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம் என்று சட்ட மன்றத்தில் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவை திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் விடுத்த வேண்டு கோளை ஏற்று, நமது முதலமைச்சர் அதை நிறுத்தி வைப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அறிவித்தார்.

மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று நாம் உள்பட பலரும் வற்புறுத்தினோம்!

அதனை நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது, அதையே திரும்பப் பெற்று ரத்து செய்ய வேண்டும் என்று நாம் உள்பட பலரும் வற்புறுத்திக் கோரிக்கை வைத்தோம்.

அதனை இன்று (1.5.2023) நமது முதலமைச்சர் ஏற்று, மே நாள் கொண்டாட்டத்திற்கு முழு மகிழ்ச்சி அனைத்துத் தொழிலாளருக்கும் ஏற்படும் வகையில் அம்மசோதாவைத் திரும்பப் பெற்றதாக  - ரத்து செய்த தாக அறிவித்திருப்பதற்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு - வாழ்த்து - நன்றியைத் தொலைபேசியில் உடனடியாகத் தெரிவித்தோம். 

முதலமைச்சரும் நன்றி தெரிவித்தார்.  

திராவிடர் கழகத் தொழிலாளரணி 

மாநில மாநாட்டில் முதலமைச்சருக்குப் 

பாராட்டு விழா!

வருகிற 7 ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக தொழிலாளரணி மாநாட்டில் முதலமைச் சருக்குப் பாராட்டு விழாவும் இணைத்து நடத்திடுவோம் என்று அவர்களிடமே மகிழ்ச்சியோடு தெரிவித்தோம்.

உண்மையான மக்களாட்சி தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' ஆட்சியாகவே நடைபெறுகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டும் இது!

இது தொழிலாளருக்கு அளித்த  ஆக்கப்பூர்வ பரிசு - இவ்வாண்டு!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.5.2023 

செவ்வாய், 2 மே, 2023

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை: 88 வழக்குகள் பதிவு; 178 பேர் கைது

  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

8

சென்னை, ஏப்.22- வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் விரைவாக நடவடிக்கை எடுக் கப்பட்டு, 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது டன் 178 பேர் கைது செய் யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் நேற்று காவல் துறை, தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வதந்தி

மிகப்பெரிய மோதல் ஒன்று அரசின் வேக மான நடவடிக்கைகளால் எப்படி தவிர்க்கப் பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுதான், வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படு கிறார்கள் என்று பரப்பப்பட்ட வதந்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். தமிழ்நாட்டில், பீகார், அசாம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் தங்கள் தொழில்களில் ஈடுபடும்வண்ணம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையேதான், அந்த வதந்தி தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது.

அவசர ஆலோசனை கூட்டம்

இதுகுறித்து, என்னுடைய தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட் டது. இவ்வாறு வதந்திக் காட்சிப் பதிவுகளை பரப்புவோர்மீது உடனடி நடவடிக்கை மேற் கொள்ளுமாறு காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டேன். வடமாநிலங்களில் இரு பிரி வினரிடையே நடைபெற்ற மோதல் சம் பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போன்று சித்தரித்துக் காட்டியுள்ளதாகக் காவல் துறை இயக்குநர் உடனடியாக விளக்கம் தந்தார். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரும், காவல் துறையினரும், வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக உணவு விடுதிகள், கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் போன்றவற்றுக்குச் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் நாட்டில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என் பதைத் தெளிவுபடுத்தி, அவர்களது அச்சத் தைப் போக்கக்கூடிய வகையில் நடவடிக் கைகளில் ஈடுபட்டனர்.

பீகார் முதலமைச்சருடன் பேச்சு

பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமாரை நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப் பட்டு வரும் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு 7.3.2023 அன்று பீகார் முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு மாநில அரசு மேற் கொண்டுவரும் நடவடிக்கை குறித்துப் பேசியிருக்கிறார் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

பீகார் மாநில ஊரகவளர்ச்சித்துறை செயலாளர் பால முருகன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு வந்து சென்னை, திருப்பூர்,கோவை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு கலந்தாலோசனை செய்த தோடு, பீகார் மாநில தொழிலாளர்களையும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் குழுவினர் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு அதுகுறித்து பத்திரிகைகளுக்குப் பேட்டியும் அளித்திருக் கின்றனர். 

88 வழக்குகள் பதிவு

7.3.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் வடமாநிலத் தொழி லாளர்களைச் நானே நேரிடையாக சந்தித்து அவர்களின் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கை கள்குறித்து விளக்கி பேசினேன். இந்த விவகாரம் தொடர்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 178 பேர் கைது செய்யப்பட்டார்கள். குறிப்பாக, தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படையினர் தெலங்கானா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்ப வரை 6.3.2023 அன்று தெலங்கானாவிலும், பிரசாந்த் குமார் என்பவரை 11.3.2023 அன்று ஜார்கண்ட் மாநிலத்திலும், உபேந்திர சஹானி என்ப வரை 18.3.2023 அன்று பீகாரிலும் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். வதந்தி காட்சிப் பதிவுகளைப் பரப்பிய உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவர்மீதும் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதிமன்ற பிணை பெற் றுள்ளார்.

பிற மாநில அரசுகள் பாராட்டு 

அது மட்டுமின்றி, யூடியூப் சேனல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட் டுள்ளார். எதிர்காலத்தில் சமூக வலைத்தளங் களில் பரப்பப்படக்கூடிய வதந்திகளால் உல களவில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரு மளவில் இருக்கும் என்று பலராலும் கூறப் படுகின்ற நிலையில், வடமாநிலத் தொழி லாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிற மாநில அரசுகளும் மனந்திறந்து பாராட்டின. வந் தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த வடமாநிலத்தவர்களையும் நமது மாநிலத்தவராக கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவ டிக்கைகளையும் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுத்ததால்தான் தமிழ்நாட்டிலும், சில வடமாநிலங்களிலும் கொந்தளிப்பு எழாமல், அது தவிர்க்கப்பட்டது. 

-இவ்வாறு அவர்பேசினார்.

சென்னையில் 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

  

சென்னை, ஏப் 21 பீகாரை சேர்ந்த 20-க் கும் மேற்பட்ட குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் 'பேக்' (தோல் பைகள்) தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தைத் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு மட்டுமே வழங்கப்பட்டு 'பேக்' தைக்கும் வேலையில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். 

இது குறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், அரசு குழந்தைகள் நல குழுமத்தினர், காவல்துறையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுப் பட்டனர். 

இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள்  மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என் பதும் விசாரணையில் தெரியவந் துள்ளது.