ஞாயிறு, 15 நவம்பர், 2015

குறைந்தபட்ச ஊதியத்துக்கான ஆலோசனை குழு


சென்னை, ஜூலை 12- தொழி லாளர்களுக்கு அவரவர் பணிக் கேற்ற குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்காக நடைமுறையில் இருந்த ஆலோசனைக்குழுவின் பணிக்காலம் நிறைவு பெற்று விட்டதால் புதிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்.
அப்போதுதான் மாறி வரும் ஊதி யத்துக்கு ஏற்ப தொழிலாளர் களுக்கான குறைந்தபட்ச ஊதி யத்தை பெற்று அளிக்க முடியும் என்று தொழிலாளர் ஆணையர், தமிழக அரசை கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அவரது கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு கீழ் கண்ட முத்தரப்பு குழு அமைக் கப்படுகிறது.
அரசு தரப்பு உறுப்பினர்கள்
1. தொழிலாளர் ஆணையர் (ஆலோசனை குழு தலைவர்)
2. தொழிலாளர் துணை ஆணை யர் (குறைந்தபட்ச சம்பள பிரிவு)  ஆலோசனை குழு செயலாளர்
3. தொழிற்சாலைகள் தலைமை ஆய்வாளர் (ஆலோசனை குழு உறுப்பினர்)
வேலையளிப்போர் தரப்பு உறுப்பினர்கள்
1. ஆர்.கோடீஸ்வரன் செயலா ளர் இந்திய தொழில்வர்த்தக கூட்டமைப்பு
2. பி.செல்வராஜ் சிறீ காளீஸ் வரி பயர் ஒர்க்ஸ் பி லிமிடெட்
3. சிறீதரன் தலைவர் தமிழ்நாடு தேயிலை, ரப்பர் உற்பத்தியாளர் சங்க தலைவர்
4. எஸ்.விஜயகுமார் பாப்னா தென்னிந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு.
5. எஸ்.பயாஸ் அகமது அகில இந்திய தோல் தொழில்கள் மற் றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு
தொழிற்சங்கங்கள் தரப்பு
1. ஆர். சங்கரலிங்கம், இணை செயலாளர் அண்ணா தொழிற் சங்கம்
2. கே. ரவி, தமிழ்நாடு ஏ.அய்.டி. யூ.சி.
3. எஸ்.அருணாச்சலம், அண்ணா பொது தொழிலாளர் சங்கம். தூத்துக்குடி
4. எம்.குமார், சி.அய்.டி.யூ
5. பி.எழில்மணி இன்பராஜ் இந்திய குடியரசு கட்சி
- இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-விடுதலை,12.7.12

சம்பளக் கொள்ளைக் கொடுமை


- தந்தை பெரியார்

இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அர சியல் முறை ஏற்பட்ட பின் உண் டான கொடுமைகளில் எல்லாம் தலை சிறந்த கொடுமை சம்பளக் கொள்ளைக் கொடுமையேயாகும்.  இக்கொடுமைக்குப் பொறுப்பாளிகள் பிரிட்டிஷாரே என்று சொல்லிவிட முடியாது.  இந்தியர்களும் சிறப்பாக இந்திய அரசியல் கிளர்ச்சிகளும் மற்றும் இந்திய தேசியமுமே யாகும்.
பிரிட்டிஷார் தாங்கள் அந்நியர் என்னும் பிரிவிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், தேசியக் கிளர்ச்சியின் உள் தத்துவம் இன்னதென்று தெரிந்து அதற்கு இணங்கவும் தேசியவாதிகள் என்பவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவும் முற்பட்டதே பிரிட் டிஷ் அரசியல் தந்திரத்தால் இந்தியா வுக்கு ஏற்பட்ட கெடுதிகளுக்கெல் லாம் காரணம் என்று சொல்லலாம்.
இன்றைய தினம் உலகத்தில் எந்த தேசத்திலும்-எவ்வளவு செல்வம் பொருந்திய தேசத்திலும் உள்ள அரசாங்க உத்தியோகங்களில் இந்தி யாவில் இருந்துவரும் சம்பளக் கொள்ளைக் கொடுமை இல்லை என்றே சொல்லுவோம். இந்திய மக்களில் ஒரு மனிதனுடைய ஒரு நாளைய சராசரி வரும்படி 0-1-6 பை, என்று பொருளாதார நிபுணர்களால் கணக்கிடப்பட்டிருக்கின்றது.  இது இந்திய பொருளாதார நிபுணர்களும் இந்திய தேசிய வாதிகளும்  அவர் களது தலைவர்களும் ஆகிய எல் லோராலும் இது ஒப்புக் கொண்ட விஷயமாகும்.
ஆகவே ஒரு மனிதனுடைய சராசரி வரும்படி மாதம் 1க்கு 2-1-3-0 அல்லது 3 ரூபாய்க்கு உட்பட்டதே யாகும்.  மேலும் கூற வேண்டுமா னால் இவ்வளவிற்கும் கூட மார்க்க மில்லாமல் இதைவிட குறைவான வரும்படி சம்பாதிக்கின்றவர்களும் உண்டு.
இந்திய பொருளாதார நிபுணர்கள் என்பவர்களாலும் இந்திய தேசிய தலைவர்கள் என்பவர்களாலும் ஆதரிக்கப்படும் தேசியக் கைத்தொழில் என்பதின் மூலம் இந்திய மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வரும்படி தினம் 0-1-6 பை சில சமயங்களில் 0-1-0 அணா, சில சமங்களில் இதைவிடக் குறைவும் ஆகும். எப்படியெனில் சுயராஜ்யத்துக்கு மார்க்கம் என்று சொல்லப்படும் கதர் நூல் நூற்பதின் மூலம் நபர் ஒன்றுக்கு தினம் ஒரு அணா, ஒண்ணரை அணாத்தான் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  இதற்குக் காரணம் என்னவென்றால்.  இந்த வரும்படிகூட கிடைப்பதற்கு மார்க்க மில்லாமல் கஷ்டப்படும் - பட்டினி கிடக்கும் மக்கள் கோடிக்கணக்கா யிருக் கிறார்களாதலால்.  இதுவே கிடைத்தால் போதும் என்று சொல் லப்படுகின்றது.
இந்தப்படியான தினம் 0-1-6 பை. வரும்படி என்பதுகூட மாதம் 1000, 10000ரூபாய்கள் வரும்படி உள்ளவர் களின் சம்பாதனைத் தொகையையும் தினம் கால் அணா, அரை அணா வரும்படி உள்ளவர்களது சம் பாதனைத் தொகையையும் கூட்டி சராசரி வகுத்துவந்த தொகையே மேற்சொன்ன (0-1-6 பை)  வரும்படி யாகும்.  இதை அனுசரித்தே ஒரு மனிதனின் நித்திய வாழ்க்கைக்கு இன்றைய நிலையில் சராசரி தேவை எவ்வளவு ஆகுமென்று கணக்குப் பார்த்தால் மேற்கண்ட 0-1-6 பையே போதும் என்று சொல்லக் கூடிய அனுபவத்தில்தான் அதிகமான மக்கள் இருந்துவருகிறார்கள்.  இதை விடக் குறைந்த அளவிலும் ஜீவித்து வருகின்றவர்கள்  கோடிக்கணக்கில் இருந்து வருகிறார்கள். என்பது மிகைப்படுத்திச் சொல்வதாக ஆகாது.  இதற்கு காலநிலையும் அனுகூல மாய்த் தான் இருக்கிறது.
இன்று அரிசி ரூபாய் 1க்கு பட் டணம் படியில் 8 படி கிடைக்கின்றது.  இந்தியாவுக்குள் எந்த ஊரிலும் ரூபாய் 1க்கு 7 படிக்குக் குறைவில்லா மல் கிடைக்கலாம்.  ஒரு படி அரிசி போட்டுச் சமைத்தால் சராசரி மக்கள் 8 பேர் சாப்பிடலாம்.  இதில் அபிப் பிராயபேதமே இருக்கக்காரண மில்லை.  அப்படியானால் ஒவ்வொரு மனிதனின் மூன்று வேளை சாப் பாட்டுக்கும் சேர்த்து அரிசியும் மற்ற ஆகாரச்சாமான்களும் சேர்த்து கணக் குப்பார்த்தால் மேல் குறிப்பிட்டதான தினம் ஒண்ணரையணா வரும்படி சராசரி மக்களுக்கு போதுமான தென்றே சொல்லலாம்.  மற்ற படி துணி வீடு, வைத்தியம், படிப்பு ஆகி யவை களுக்கு இதில் பணம் மீதி யில்லை.  ஆனதினால் தான் இந்தியா வில் தரித்திரர்கள், ஏழைகள் அதிக மாக இருக்கிறார்கள் என்று சொல் லப்படுவதாகும்.
இப்படிப்பட்ட நிலை உள்ள இந்த தேசத்தில், அரசியல் உத்தியோகங் களில் சேர்ந்துள்ள ஜனங்களுக்கு மேற்படி 1-க்கு 100, 500, 1000, 2000, 5000, 10000, 20000 ரூபாய்கள் என்கின்ற கணக்கில் சம்பளங்கள் கொடுக்கப்படுகின்றன.  இந்தப்படி கொடுக்கப்படும் பணங்கள் மேல் கண்டபடி தினம் 1க்கு சராசரி ஒண்ண ரையணா வரும்படி உள்ள மக்களி டம் வரியாக வசூலித்தே கொடுக்கப் படுகிறது.
இவ்ளளவு அதிகப்படி யான சம்பளங்கள் ஏன் கொடுக்கப் பட வேண்டும் என்பதற்குச்சரியான காரணங்கள் ஏதும் சொல்லப்பட வில்லை.  சொல்லப்படவில்லை என் பது மாத்திரம் அல்லாமல் இந்தப்படி ஏன் கொடுக்கப் படுகின்றது என்று கூட சமீபகாலம் வரை எந்த தேசிய வாதிகளும் - தேசிய கிளர்ச்சிக்காரர் களும்-தேசியத்தலைவர்களும்-ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களும் கவலைகொண்டு கவனித்தவர்களும், கேட்டவர்களும் அல்ல .
மேலும் இவர்கள் அதிகச்சம்பளங்களைப் பற்றி கண்டிக்காமல் கவலைப் படாமல் இருந்தார்கள் என்று மாத் திரம் சொல்லுவதிற்கில்லாமல் இருக் கிற சம்பளம் போதாதென்றும் இன் னும் அதிகச் சம்பளம் வேண்டுமென் றும் கேட்டு வந்திருக்கிறார்கள் என்ப தற்கு வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன.
சம்பளக் கொடுமை ஒரு புற மிருக்க மற்றொரு புறம்,  இப்படிப் பட்ட சம்பளங்கள் உள்ள உத்தியோ கங்களும் நாளுக்கு நாள் பெருக்கப் பட்டு வந்து சுமார் 30, 40 வருஷங் களுக்கு முன் இருந்த சம்பளங்கள் 100-க்கு 100ரூ. வீதம் உயர்த்தியும், சில உத்தியோகங்களுக்கு 100-க்கு 300 வீதம் உயர்த்தியும் வந்திருப்பதுடன் இப்படிப்பட்ட உத்தியோகங்களின் எண்ணிக்கையும் 100க்கு 100வீதமும், சில விஷயங்களில் 100க்கு 300, 400 வீதமும் உயர்த்தப்பட்டு விட்டது.
உதாரணமாக மேல் நிலையில் ஹைக்கோர்ட் ஜட்ஜிகள் 5 பேர் இருந்து வந்ததற்கு பதிலாக இன்று 15,16 ஹைகோர்ட் ஜட்ஜிகளும்,  மந் திரிகள் 2 பேர் இருந்து வந்ததற்குப் பதிலாக 7 மந்திரிகளும் இது போலவே கீழ் நிலைகளிலும் ஜில்லா வுக்கு 2 முன்சீப்புகளுக்குப் பதிலாக 6,7 முன்சீப்புகளும், ஜில்லாவுக்கு 2 டிப்டிகலெக்டர்களுக்குப் பதிலாக 4 டிப்டி கலெக்டர்களும் இப்படியாக ஒவ்வொரு இலாகாவிலும் சம்பளத் துகையும், உத்தியோக எண்ணிக்கை யும் பெருக ஜனங்களுக்காக அர சாங்க நிர்வாகமும், உத்தியோகமும் சம்பளமும் என்று சொல்லுவதற்கே இல்லாமல் அரசாங்கத்துக்காவும், உத்தியோகஸ்தர்களுக்காகவும் அவர்களது சம்பளத் துக்காகவும் ஜனங்கள் இருக்க வேண்டிய வர்களாக ஆகிவிட்டார்.
இப்படியெல்லாம் அரசாங்க உத்தியோக சம்பளக்கொடுமை ஏற் பட்டும் மக்களுடைய கல்வி, அறிவு, நாணயம், ஒழுக்கம், ஒற்றுமை, கூட் டுறவு முதலிய அவசியமானவற்றில் ஏதாவது விருத்திகள் ஏற்பட்டிருக் கின்றதா என்று பார்த்தால் ஒரு துறையிலாவது உண்மையான விருத்திக்கு அறிகுறிகூட இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது.
அதுமாத்திரமல்லாமல் முன்பு இருந் ததைவிட அனேக துறைகளில் கீழ் நோக்கி இருக்கின்றது என்று சொல் வதற்குக்கூட பல காரணங்கள் இருந்துவருகின்றன.
இந்தப்படியாக உத்தியோகப் பெருக்கமும், சம்பள உயர்வும் சேர்ந்து இன்று நம் நாட்டில் உள்ள எல்லா மக்களையும் தங்கள் வாழ்க் கைக்கு உத்தியோகத்தையே எதிர் பார்க்கும்படிக்கும், செல்வம் சேர்ப்ப தற்குச் சம்பளத்தையே ஆதாரமாகக் கொள் ளும்படிக்கும் அதற்கே ஒவ்வொருவரும் தங்களைத் தயார் செய்துகொள்ளும்படியும் தூண்டி வருகின்றதே ஒழிய பாடுபட்டு வாழ எந்த மனிதனையும் தூண்டச் செய்ய வில்லை.  இந்திய மக்கள் ஒவ்வொரு வரும் இன்று சோம்பேறி வாழ்க்கை யில் வாழ ஆசைப்ப டுவதும் மொத்த ஜனத்தொகையில் சரீரத்தில் பாடு பட்டு வேலை செய்பவர்களைவிட சோம்பேறிகளே கணக்கில் மிகுந் திருக்க நேரிட்டதும் இதனாலேயே தான் என்பது நமது உறுதியான அபிப்பிராயமாகும்.
கல்வி இல்லாதவர்கள் எல்லாம் சரீரத்தில் பாடுபட வேண்டியவர்கள் என்றும் ஏதோ.  இரண்டு எழுத்து கூட்டிப் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லாம் அறிவினால் வேலைசெய்ய வேண்டுமே.  ஒழிய, சரீரத்தால் பாடு பட முடியாதவர்கள் என்றும் நினைக் கத்தக்க மனப்பான்மை ஏற்பட்டிருக் கின்றது.  எழுதப்படிக்கத் தெரியாத வர்களே பாடுபட வேண்டியவர்கள் என்பதாக ஆகிவிட்டதால் தொழில் முறை மேன்மையடையாமல் போக ஒரு காரணமாகிவிட்டது.  படித்த வர்கள் உத்தியோகத்தையே பிரதான மாகக் கருதி அதிலேயே பிரவேசித்து விட்டதால் போட்டி அதிகம் ஏற் பட்டு உத்தியோகத்தின் யோக்கி யதை குறைந்ததுடன் அதற்கு வேண் டிய ஒழுக்கம், நாணயம் நீதி முதலி யவைகளும் குறைய நேரிட்டு விட்டன.  இதன் பயனாய் ஜனங் களுக்கு இரண்டு விதக் கெடுதிகள் ஏற்பட்டு விட்டன.
ஒன்று அதிகவரிக் கஷ்டம் அதாவது ஏழைகள் பாடு படுபவர்கள் சம்பாதிக்கும் செல்வம்  எல்லாம் இச்சோம்பேறிக் கூட்டங் களுக்கு சம்பளத்திற்காக அழ நேரிட்டு வரிகளாகக் கொடுத்து வருவதும், இரண்டு, அரசாங்க நிர்வாக ஒழுக்கக் குறைவு ஏற்பட்டு ஜனங்களுக்குநீதி, சமாதானம், பத்திரம் ஆகிய வைகள் இல்லாமல் போனதும் ஆகும்.  ஆக இந்த இரண்டு காரியங்களே இன்று இந்திய மக்களின் வாழ்க்கைக்குப் பெருத்த கஷ்டமாக இருந்து வருகின்றன.
இவை இரண்டும் சரிப்பட்டு விடுமேயானால் அரசியலில் இந்தி யாவுக்கு எவ்வித குறையும் இல்லை என்று ஒருவாறு சொல்லலாம். ஆனால் இந்திய அரசியல் கிளர்ச் சியில் இந்த இரு குறைகள் நீங்கு வதற்குகாக இதுவரை எவ்வித கிளர்ச்சியும் செய்ததும் இல்லை, இன்றும் செய்யப்படுவதாகவும் தெரியவில்லை.  அது மாத்திர மல்லாமல் இதுவரை நடந்து வந்த அரசியல் கிளர்ச்சியானது பெரிதும் இவ்வித அதிக சம்பளம் பெறவும் யோக்கியமும், நாணயமுமாய் நடந்து கொள்ள முடியாத.  உத்தியோகங் களைப் பெருக்கி அவற்றைப் பெறவுமே செய்யப்பட்டு வந்திருக் கிறதே ஒழிய வேறில்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.
இந்தியாவில் இன்று பல அர சியல் கட்சிகள் இருக்கின்றன என்றா லும் அவற்றினுடைய முக்கிய மானதும் முதன்மையானதும் ஒன்றே ஆனதுமான உத்தேசமெல்லாம் இப் படிப்பட்ட சம்பளமும் உத்தியோக மும் பெருவதல்லாமல் வேறொன்றும் இல்லை என்பது உண்மையான அபிப்பிராயமாகும்.
நிற்க, உலகத்தில் இந்தியாவைப் போல் மற்றும் எத்தனையோ தேசங் கள் இருக்கின்றன.  அவற்றில் அரசி யல் கிளர்ச்சிகள் நடந்த வண்ண மாகவே இருக்கின்றன.  அரசாங் கத்தைக் கைப்பற்றி பூரண சுயேச்சை என்னும் பேரால் பொதுஜனங்களால் பல நாடுகளில் அரசாங்கம் நடை பெற்றும் வருகின்றன.  அப்படிப்பட்ட தேசங்களின் செல்வ நிலைமைகள் இந்தியாவைவிடப் பலமடங்கு உயர்ந்ததாகவும் இருக்கின்றன.  உதாரணமாக இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி வரும்படி தினம் ஒன்றுக்கு 0-1-6 ஆனால் இங்கிலாந்து அமெரிக்கா முதலிய நாட்டு மக்களின் சராசரி வருமானம் 1-8-0, 2-0-0 ரூபாய்களாகும் இந்த தேசத்தின் வரி வருமானம் வருஷம் 200 கோடி ரூபாய் ஆனால் இங்கிலாந்து தேசத்தின் வருமானம் வருஷம் ஒன்றுக்கு 1200 கோடி ரூபாய்களாகும்.  அப்படிப்பட்ட தேசங்களில் அர சாங்க உத்தியோகங்களின் சம்பளங் களைப் பார்த்தோமேயானால், நமது நாட்டு சம்பளத்தின் கொள்ளை போகும் முறையும், கொடுமையும் பாடுபடும் ஏழை ஜனங்களை பாடுபடாத சோம்பேறிகள் எப்படி வஞ்சிக்கிறார்கள் என்கின்ற உண் மையும் ஆகியவைகள் எளிதில் புலப்படும்.  இந்தியா வைசிராய் என்கின்ற உத்தியோகத்துக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயானால் இந்தியா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா முதலிய பல தேசங்களின் ஆட்சிக்கு மேலதிகாரியாய் இருந்து இந்திய வைசிராயையும், இன்னும் பல்வைசி ராய்களையும் நியமிக்கவும் நீக்கவும் அதிகாரமுள்ள பிரிட்டிஷ் தலைமை அதிகாரிக்கு மாதம் 5000 ரூ. சம் பளமேயாகும்.
பிரெஞ்சு தேசத்து குடிஅரசுத் தலைவருக்கு அதாவது அரசர் இல்லாமல் அரசருக்கு பதிலாய் இருந்து அந்த தேசத்துக்கும் மற்றும் அதன் ஆட்சிக்குக்கீழ்ப்பட்ட ஏனைய தேசங்களுக்கும் தலைவராக இருப்ப வருக்கு மாதம் 1க்கு 1500 ரூபாய் சம்பளமே கொடுக்கப்பட்டு வருகின் றது.   நம் நாட்டு நிர்வாக சபை அங்கத் தினர்கள் மந்திரிகள் ஆகியவர்கள் சம்பளங்கள் அமெரிக்கா கவர் னர்கள் சம்பளங்களை விட அதிக மாகவும், பிரிட்டிஷ் தலைமை அதி காரி நிர்வாக சபை அங்கத்தினர்கள் மந்திரிகள் ஆகியவர்கள் சம்பளங் களை விட 100க்கு 100 பங்கு 150 பங்கு அதிகமாகவும் இருந்து வருகின்றன.  மேல் நாட்டு அரசாங்கங்களின் வரி வரும்படி நம் நாட்டு வரி வரும் படியை விட 5, 6 மடங்கு அதிகமாக வும் அந்நாட்டு மக்களின் வரும்படி நம் நாட்டு மக்களின் வரும்படியை விட 20 பங்கு 30 பங்கு அதிகமாக வும் இருக்க உத்தியோக சம்பளங்கள் மாத்திரம் அந்நாட்டு சம்பளங்களை விட இந்தியாவில் பலமடங்கு அதிக மாய் இருந்தால் இந்த அரசாங்க நிர்வாகமும் உத்தியோக சம்பளமும் தேசத்தின் நிலைமையும் ஜனங் களுடைய சேமலாபங்களையும் அனுசரித்து நடத்தப்படுகின்றது என்று எப்படி சொல்லக்கூடும்?  ஆகவே இன்றைய தினம் நமது நாட்டில் உள்ள எல்லாவித அரசியல் கிளர்ச்சிகளையும் தகர்த்து ஒழித்து எறிந்து விட்டு இந்துக்கொள்ளை போன்ற சம்பளக் கொடுமையை ஒழிப்பதற்கு முயற்சித்தால் அதுவே இந்திய நாட்டு ஏழைமக்களுக்குச் செய்த அளவிட முடியாத நன்மை யாகும்.
மந்திரிகளுக்கு மாதம் 5000 ரூ சம்பளம் என்கின்ற திட்டம் இல்லா திருக்குமானால் நமது நாட்டு காங் கிரஸ், மிதவாதி சங்கம், ஜஸ்டிஸ் கட்சி ஆகியவைகளின் ஒழுக்கமும் நாணயமும் இவ்வளவு கேவலமாக வும் இழிவாகவும் போயிருக்காது என்பதுடன் நிர்வாகங்களும் இவ் வளவு பொறுப்பற்ற முறையில் ஏற்பட்டிருக்காது, கட்சிகளின் மற்றக் கொள்கைகள் எப்படி இருந்தாலும் அரசியல் ஆதிக்கம் கைக்கு வந்தால் தங்கள் அதிகாரத்துக்குள் இருக்கப் பட்ட உத்தியோகங்களின் சம்பளங் களை நாட்டின் தகுதிக்கு ஏற்ற இன்ன அளவுக்கு குறைத்து விடுகின்றோம் என்றும் தங்கள் அதிகாரத்துக்குள் கட்டுப்படாத சம்பளங்களைக் குறைக்க அதிகாரம் பெறுவதற்கு கிளர்ச்சி செய்கின்றோம் என்றும் சொல்லி அந்நிபந்தனையின் மேல் எந்தக்கட்சி புறப்பட்டாலும் அத் துடன் நமக்கு எந்தவிதப் பிணக்கும் இருப்பதற்கில்லை.  அன்றியும் அக் கொள்கைகள் ஈடேற அவற்றுடன் ஒத்துழைக்கவும் ஆட்சேபனை இல்லை.
ஜஸ்டிஸ்கட்சிகூட தாங்கள் மறு படியும் மந்திரிகளாய் வரநேரிட்டால் மந்திரிகள் சம்பளம் எந்தக் கார ணத்தை முன்னிட்டும் 1000 ரூபாய்க்கு மேற் போகாமல் அதற்குள்ளாகவே குறைத்துக்கொள்ளுகிறோம்.  என்றும் இந்த விகிதமே மற்ற உயர்ந்த சம்பளங்களையும் குறைத்து விடுகி றோம் என்றும் சொல்லி அந்தப்படி நடக்க முன்வருவார்களானால் அதற்காகவே அதை அன்றைய நிலைக்குத் தீவிரக்கட்சி என்று கூட சொல்லிவிடலாம் அன்றியும் அது வெற்றி பெறும் என்பதிலும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.  அப்படிக்கில்லாமல் அதாவது சம் பளத்தில் குறைத்துக் கொள்ளாமலும் மற்ற உயர்ந்த சம்பளங்களைக் குறைக்காமலும் இருந்து கொண்டு இவர்கள் ஜனங்களுக்கு எவ்வித நன்மை செய்கிறோம் என்று சொல் வதாய் இருந்தாலும் இவர்களுக்கு ஜன சமுக ஆதரவு கிடைப்பது கஷ்டமான காரியமேயாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது நாட்டைப்பற்றி பொறுப்பிருந்து உண்மையாய் அது தேசத்து மக் களுக்கு உழைப்பதாயிருக்குமானால் தீண்டாமையை விலக்குவேன் என்ப தாலும் தீண்டாத ஜாதியார்களைக் கோவிலுக்குள் அழைத்துச் செல் கிறேன் என்பதாலும் இந்தியா பூராவும் கதர்மயம் ஆக்கிவிடுவேன் என்பதாலும் ஜனங்களை ஏமாற்றி விடலாம் என்கின்ற எண்ணத்தை விட்டுவிட்டு இந்தக் கொள்ளையாம் சம்பளக் கொடுமையை அடியோடு ஒழித்துவிடுவோம், நாங்களும் மந்திரி களாக நேர்ந்தால் மேற்படி 1000 ரூபாய்க்கு கீழாகவே சம்பளம் பெறு வோம் என்று உறுதிகூறி விட்டு வரப் போகும் தேர்தலில் தலைகாட்டட் டும். அப்படிக்கில்லையானால் அது எவ்விதத் திலும் பயனுள்ளதென்றோ நாணயமானது என்றோ சொல்லிக் கொள்ள சிறிதும் யோக்கியதை அற்ற தாகி விடும். ஆதலால் அரசியலின் பேரால் வாழ்க்கை நடத்த எண்ணி இருக்கிறவர்கள்-தேர்தலில் நின்று பயனடையக் கருதி இருக்கின்ற வர்கள் இதைக் கவனித்து நடந்து கொள்ளுவார்களாக.
- புரட்சி  - தலையங்கம்  - 17.6.1934
=விடுதலை,4.10.15

கேள்விக் குறியாகி விட்ட வேலை வாய்ப்பு?

புதிய வேலை வாய்ப்புகளை குறிப்பாக உற்பத்தித் துறையில் உரு வாக்காமல், கோடிக்கணக்கான திறன் மிக்கவர்களை கொண்டுவருவது என்பது தீர்வாகாது என்று டில்லி அய்.அய்.டியைச் சேர்ந்த  ஜயன் ஜோஸ் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் கையாள்கிறது. விரிவாக அறிவிப்பு வெளியாகிறது. ஆனால், திட்டத்தின் நோக்கம் குறைந்துள்ளது. புதிய இலக்கின்படி, 2022 ஆண்டுக் குள்ளாக 40 கோடி (400 மில்லியன்) அளவில் திறமையாளர்கள் உருவாக் கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள் ளது.
திறமைமிக்கவர்களுக்கான இடை வெளியைக் குறைப்பதற்கு இந்த இலக்கு போதுமானதாக இருக்கும் என்று அரசு கருதுகிறது. அதோடு கூடுதலானவர்கள் பணிவாய்ப்பைப் பெறுவதிலும் வாய்ப் பாக இருக்கும் என்றும் கருதுகிறது. ஆனால், கோடிக்கணக்கிலான திறமை யானவர்களுக்கு பணிவாய்ப்பை உறுதிப் படுத்தி உள்ளதா? ஆனால், இதுவரை அதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை.
அய்.டி.அய். போன்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அல்லது திறன் மேம் பாட்டு மய்யங்களில் வழமையான பயிற்சி  அவர்களுக்கு அளிக்கப்பட்டுள் ளது. மத்திய அரசின் தொழிலாளர் பணியகத்தின் சார்பில் 2014ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டு இந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி, வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் விழுக்காடு ஒட்டு மொத்தமாக 14.5 ஆகும். அதில்  2.6 விழுக்காட்டளவில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படாமல் உள்ளனர்.
அப்படித் திறமையுள்ளவர்கள் குறைந்துவருவது என்பது வேலை வாய்ப்பின்மைக்கு காரணமாக அமைந்து விடுகிறது எனும்போது, கைவேலைகளாக உள்ள தோல்தொழில், கட்டடங்களில் தண்ணீர்க்குழாய் அமைத்தல், சுற்றுலா அல்லது போக் குவரத்துகளில் வாகனங்கள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை வெளிப்படுததக்கூடிய பணிகள் அனைத்திலும் வேலைவாய்ப்பின்மை இருந்துவருகிறது.
அதிலும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், நான்கில் ஒரு பங்கினராக  பொறியியல் பட்டயம் பெற்றவர்களில் கட்டடவியல் மற்றும் கணினி தொடர்பான கல்வி முடித் துள்ளவர்கள் வேலைவாய்ப்புகளின்றி இருக்கின்றனர். ஆடை உற்பத்தித் துறைகளில் பயிற்சி பெற்றவர்கள் 17 விழுக்காட்டளவிலும், எந்திரங்களை இயக்குவதில் தேர்ச்சி பெற்ற திறன் மிக்கவர்களில் 14 விழுக்காட்டளவிலும் பணிவாய்ப்பு ஏதுமின்றி உள்ளனர்.
டில்லியில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தைச் சேர்ந்த  ஜயன் ஜோஸ் தாமஸ் கூறுகையில், இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு சூழ்நிலைகுறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். தற் பொழுது இருக்கின்ற தொழில்களில் திறமையானவர்களிடையே இடைவெளி உள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் கூறுவது என்ன வெனில், திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளித்திட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆகவே, திறமைன வர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன்மூலம் தொழில்துறைக்கு உதவியதாக இருக்கும். அதேபோல், தொழில் வளர்ச்சிக் கொள் கையில் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். அதன்மூலமே கோடிக்கணக் கானவர்களுக்கு உரிய அளவில் பணிவாய்ப்பு உருவாகும் என்றார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தொழில்துறைகளில் 1.2 கோடி பேர் இணைந்து வருகிறார்கள் என்று கூறப் படுகிறது. ஆனால், இருபதாண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சிகுறித்து   தேசிய மாதிரி புள்ளிவிவர நிறுவனத் தின் ஆய்வு மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும்  55 இலட்சம்பேர் மட்டுமே புதிதாக பணிகளில் சேர்ந்து வருகின்றனர் என்று தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் பணியகம் அளித் துள்ள தகவல்களின்படி, உயர்கல்வி பெற்றவர்களிடையே வேலைவாய்ப் பின்மை அதிகரித்துக்கொண்டு வரு கிறது. ஒட்டு மொத்தமான வேலை வாய்ப்பின்மையில் 15 வயதுக்கு மேற் பட்டவர்களில் 2.6 விழுக்காடாகவும், முதுநிலை பட்டதாரிகளில் 8.9 விழுக் காடாகவும், பட்டதாரிகளில் 8.7 விழுக் காடாகவும், பட்டயம் அல்லது சான் றிதழ் கல்வி பெற்றவர்களில் 7.4 விழுக் காடாகவும் இருக்கிறது.
படித்தவர்கள் நல்ல ஊதியத்தை எதிர்பார்க்கிறார்கள், அதனாலேயே நல்ல ஊதியத்துடன் கூடிய வேலையைத் தேடிக்கொண்டு  நீண்டகாலமாக வேலையில்லாமல் இருந்துவருகிறார்கள்.
தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களாக தேர்வு செய்யப்படும்போது போதிய பயிற்சி இல்லாதவர்களாகவும், போதுமான அனுபவம் இல்லாதவர்களாகவும் இருப்பவர்கள் பணியில் அமர்த்தப் படுகிறார்கள். அய்.டி.அய். படித்தவர் களில் கூட ஊதியப் பிரச்சினைகளால் பணிகளில் அமர்த்தப்படுவதில்லை.
திறமையானவர்கள்குறித்து கலி போர்னிய பல்கலைக்கழகத்திலிருந்து சாந்தா பார்பராஸ் ஆஷிஷ் மேத்தா திறமை இடைவெளிப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துள்ளார். அவரு டைய ஆய்வு முடிவின்படி, திறமை குறித்த அளவீடு என்பதே திறமையைப் பொருத்ததாக இல்லாமல் வணிகமாகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மாதிரி புள்ளிவிவர நிறு வனத்தின் ஆய்வு அறிக்கையின்படி, சராசரியாக நகர்ப்புறங்களில் பட்டயக் கல்வி பெற்றவர்களில் ஆண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.524 ஊதியமும், பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.391 ஊதியமும் வழங்கப்பட்டுவருகிறது. பள்ளிக்கல்வி பயின்றவர்களில் 45 விழுக் காட்டினருக்கு மேல் ஆண்களாகவும், 28 விழுக்காட்டினருக்கு மேல் பெண்களாகவும் இருக்கிறார்கள்.
பட்டதாரிகளுடன் பட்டயக்கல்வி பெற்றவர்களை ஒப்பிடுகையில் 56 விழுக்காடு ஆண்கள் குறைவாகவும், 54 விழுக்காடு பெண்கள் குறைவாகவும் உள்ளனர்.
இந்த புள்ளிவிவரத்தகவல்கள் பணி வாய்ப்பு அளிப்பவர்களாக இருப்ப வர்கள் தங்களின் பணியாளர்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என் பதை உணர்த்துபவையாக இருக் கின்றன. மேலும், கல்வித்துறையில் எதைத் தேர்வு செய்வது என்பதில் குடும்பத்தினருக்கு வழிகாட்டுபவை யாகவும் இருக்கின்றன.
_ டைம்ஸ் ஆப் இந்தியா, 20.7.2015
-விடுதலை ஞா.ம.25.7.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

15 துறைகளை தாராளமாக திறந்து விடுவதா? ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கம் உட்பட எதிர்ப்பு

புதுடில்லி, நவ. 13 -வங்கித்துறை , ஊடகம், பாது காப்பு உள்ளிட்ட 15 துறைகளை திறந்து விட்டு நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி அளித் துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கட்சியின் அரசியல் தலைமைக் குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டில் அந்நிய நேரடிமுதலீடுகள் வரவேண்டுமென் பதற்காக பிரதமர் விதிகளைத் தளர்த்தி தாராளமயமாக் கியுள்ளதாக அறிவித்துள்ளதற்கு அரசியல் தலைமைக்குழு கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஒரே பிராண்டு சில்லறை வர்த்தகம், வங்கித்துறை, கட்டுமானம், ஊடகம், விமானப்போக்குவரத்து, பாதுகாப்புத் துறை, தோட்டத்துறை உள்ளிட்ட 15 துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகள் நேரடியான வழியில் அனுமதிக்கப் பட்டுள்ளன. 32 புதிய முதலீடு மய் யங்கள் அந்நிய நேரடி முதலீடுகளை விரைவாக அனுமதிக்கும்.
அந்நிய முதலீடுகளின் வரம்பானது 3000 கோடிகளிலிருந்து 5000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி செய்திசேனல்களிலும் வானொலியிலும் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காடு வரை அதி கரிக்கப்பட்டுள்ளது தீங்கு விளைவிப்ப தாகும். ஏனெனில் இது அந்நிய ஊடக ஏகபோகங்கள் செய்தி ஊடகங்களை முழுமையாக கட்டுப்படுத்த வழி வகுக்கும். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரையொட்டி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இன் னும் மோசமாக இவை அமைச்சர வையின் ஒப்புதல் இன்றி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது நமது நாடா ளுமன்ற ஜனநாயகத்தை முழு மையாக முடக்கு வதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பிரதமரின் தன்னிச் சையான முடிவுகளுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
லண்டன், ஜி-20,மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடிஅடுத்தடுத்த வெளி நாட்டுப் பயணம் செல்லவிருப்பதை யொட்டி இந்த அறிவிப்புகள் வந்துள்ளன. பிரதமர் மோடி அந்நிய முதலீட்டை கவர்ந்திழுக்கவே இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் சந்தைகளும் வளங்களும் அந்நிய முத லீடுகள் அதிகமான லாபம்அடைய வேண்டி திறந்துவிடப்பட்டுள்ளன. பெரும்பான்மையான இந்தியமக்கள் அதிக பொருளாதாரச் சுமைகளினால் அவதியுறும்போது இப்படி கொள்ளை யடிக்க உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமான பொருள்களின் விலைகள் கட்டுபடுத்தப்படாமல் அதிகரித்துக்கொண்டே செல் கிறது. விவசாய நெருக்கடியும் ஆழ மாகிக் கொண்டே இருக்கிறது. குறைந்த பட்ச ஆதரவு விலைகள் உயர்த்தப் பட்டுள்ளன.
மிகவும் குறைவே அவை உற்பத்தி செலவைகூட எதிர்கொள்ள போது மான தாக இல்லை. இது விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவையும் கடந்த 2014 தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நமது இந்திய மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் கவனம் செலுத்துமாறு அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக் கையில் கூறியுள்ளது.
மோடி அரசின் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டு அனு மதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஅய் டியு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, ஊடகம் மற்றும் ஒலிபரப்புத்துறை ஆகியவற் றில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது எந்த வகையிலும் தேசத்தின் பொருளா தாரத்திற்கு பயன் தராது மாறாக இந்நட வடிக்கை வேலை இழப்புகளை உருவாக்கி தொழிற்சாலைகள் மூடு வதையும் உள்நாட்டு திறன்களை நசி வடையச் செய்வதையும் ஏற்படுத்தும். இந்த நடவடிக்கை அதிகமான வேலை வாய்ப்புகளை அழிக்குமே அன்றி உருவாக்காது. மேலும் முக்கியமான துறைகளில் அந்நிய நேரடி முதலீடு களை அனுமதிப்பது அவற்றை கார்ப் பரேட்டுகள் ஆதிக்கம் செய்வதற்கு வழிவகுக்கும் அபாயத்தை கொண்டுள் ளது. எனவே தேசத்தையும் நாட்டு மக் களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் இது போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை கைவிடுமாறு சிஅய்டியு அரசைக் கேட்டுக் கொள் கிறது.
அரசு வேளாண்மைத்துறை கால் நடை வளர்ப்புத்துறை மற்றும் தோட் டத்துறை உள்ளிட்ட 15 துறைகளில் 100 விழுக்காடு அந்நியநேரடி முத லீட்டை அனுமதித்துள்ளதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமை யாக எதிர்க்கிறது.இந்த நடவடிக்கை தொலை நோக்கில் நாட்டின் இறை யாண்மை உரிமைகளை பாதிப்பதோடு நாட்டை ஏகாதிபத்தியத்திற்கு அடி பணிந்ததாக மாற்றி விடும். இந்த பிற்போக்கான நடவடிக்கை நாட்டின் உழைக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக் கும் மிகவும் துயரங்களையும் சிரமங் களையும் அளிக்கும். கடன் சுமையால் ஏராள மான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் நெருக் கடியிலுள்ள விவசாயிகளை மேலும் சுரண்டுவதற்கு வழி வகுக்கும்.அந்நிய நேரடி முதலீடுகள் நாட்டின் வளர்ச் சிக்கு வழிவகுக்கும் என்பதற்கு நேரடியான எதிர்மறை அனுபவங்கள் உள்ள நாடுகள் உள்ளன. ஜிம்பாவே, கென்யா, நமீபியா, தென் ஆப்பிரிக்கா, கௌதமாலா, அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் நாட்டு அனுபவங்கள் அந்நிய நேரடி முதலீடுகளை வரைமுறையற்று அனுமதித்தால் அந்நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி அனுபவங்கள் இங்கும் நிகழலாம் என்பதை எச்சரிக் கையாக கொள்ள வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு
இதுபோல், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தொழிலாளர்கள் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்க், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் பொதுச்செயலாளர் வர்ஜேஷ் உபாத்யாயா, பிரதமர் மோடிக்கும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கும் தனித்தனியாக எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டைஅனுமதிப்பது சில்லறை வியாபாரிகளை வேலை யின்றி அலைய வைத்து விடும். பாது காப்பு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும் நல்லதல்ல.
எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதைச் செய்ய தவறினால், தெரு வில் இறங்கி போராட்டம் நடத் துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
.விடுதலை,13.11.15