செவ்வாய், 9 ஏப்ரல், 2019

வ.வசந்தி பணி ஓய்வு பெறுகிறார்!

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் 37 ஆண்டுகள் பணியாற்றி 11.4.19ல் பணி ஓய்வு பெறுகிறார். அவரை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி 10.4.19 பிற் பகல் 3.30 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெறுகிறது.

வியாழன், 4 ஏப்ரல், 2019

தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை

டில்லி,ஏப்.3, தனியார் நிறுவன ஊழியர்கள் பணி ஓய்வுபெற்ற பிறகு உரிய ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000யை உச்சவரம்பாக கொண்டு அதன் அடிப்படையில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.  இது தொடர்பான வழக்கில் வெறும் ரூ. 15,000யை அடிப்படை ஊதியமாக கருதாமல் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுபெறும் போது கடைசியாக பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து  EPFO தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எனவே, இனி வரும் காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் கடைசி முழு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஓய்வூதியம் பெற உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

அதன்படி இந்த உத்தரவிற்கு முன்பு ஒரு தனியார் நிறுவன ஊழியர் 33 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி சம்பளமாக ரூ.50,000 பெற்று ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால் அவர் ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.5,180 பென்சன் கிடைக்கும். ஆனால் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு அந்த நபருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்க வழி பிறந்துள்ளது. அதே போல ஒரு நபர் தன்னுடைய கடைசி சம்பளமாக ரூ.1,00,000 பெற்று இருந்து ரூ.33 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

- விடுதலை நாளேடு, 3.4.19

ஏப்.18-இல் செயல்படும் நிறுவனங்கள் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

சென்னை, ஏப்.2 மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி இயங்கும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்குமான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை நாளாக அரசு அறிவித் துள்ளது.

இதை மீறி ஏப்ரல் 18-ஆம் தேதி செயல்படும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 2.4.19