மும்பை, ஜன. 8- எதிர்கால பாதுகாப்பிற்கு உதவக்கூடிய, பி.பி. எப்., எனப்படும் பொது சேமநல நிதி, பரவலாக நாடப் படும், முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது.
பொது சேமநலநிதி முதலீட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ஆண்டுதோறும் குறைந்த பட்சம், 500 ரூபாயாவது இந்த கணக்கில் செலுத்தி வர வேண்டும் என்பதாகும். இவ்வாறு ஓராண்டுக்கு மேல் குறைந்த பட்ச தொகை செலுத்த தவறினால், அந்த, பி.பி.எப்., கணக்கு செயலிழந்ததாகி விடும்.
பொது சேமநலநிதி கணக்கு செயலிழக் காமல் இருக்க, மறக்கா மல் ஆண்டுதோறும் குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்டும். கணக்கு செயலிழப்பதால், அதுவரை முதலீடு செய்த தொகையை இழக்கும் நிலை ஏற்படாது. ஆனால், அதில் தொடர்ந்து பணம் செலுத்த முடியாது.
மேலும், கணக்கு செயலிழந்தால், பொது சேமநலநிதி தொடர்பான சலுகைகளையும் பெற முடியாது. உதாரணமாக, உறுப்பினர்கள் கணக்கு துவங்கிய மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் நிதியாண்டு வரை, 25 சதவீத தொகையை கடனாக பெற்றுக்கொள்ளலாம். கணக்கு செயலிழந்தால் இந்த வசதி கிடையாது.
அதேபோல், ஏழாம் நிதியாண்டு நிறைவுக்குப்பின், பகுதி அளவு தொகையை விலக்கிக் கொள்ளும் வசதியை யும் பயன்படுத்த முடியாது. முன்கூட்டியே கணக்கை முடித்துக்கொள்ளவும் அனுமதி இல்லை.
ஆனால், செயலிழந்த, பொது சேமநலநிதி கணக்கை புதுப்பித்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வங்கி கிளை அல்லது அஞ்சல் அலுவலகத்தில் எழுத்து வடிவில் இதற்கான கோரிக்கையை அளிக்க வேண்டும். அதோடு, கணக்கு செயலிழந்த காலத்திற்கான குறைந்தபட்ச தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும். அதன் பிறகு கணக்கு சரிபார்க்கப்பட்டு, மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும்.
- விடுதலை நாளேடு, 8.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக