வியாழன், 18 டிசம்பர், 2025

தள்ளாடும் “மோடியின் குஜராத் மாடல்” 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடல்

அகமதாபாத், டிச.12 “மோடியின் குஜராத் மாடல்” ஆட்சியில், 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும்  10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன!

தொழில் நிறுவனங்கள் மூடல்!

பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வருகிறது. தற்போது மோடிக்கு நெருக்கமான பூபேந்திர படேல் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், குஜராத் பாஜக அரசின் மோசமான தொழிற் கொள்கையில் உள்ள தெளிவற்ற நிலைகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 10,950 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மூடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனை குஜராத் சட்டமன்றத்தில் அம்மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் பல்வந்த் சிங் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், “கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் 2023 வரை) குஜராத்தில் மொத்தமாக 10,950 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

2018-2019 இல் 2,752 நிறுவனங்களும், 2019-2020இல் 2,873 நிறுவனங்களும்,  2020-2021இல் 2,367 நிறுவனங்களும், 2021-2022 இல் 1,749 நிறுவனங்களும்,  2022-2023இல் 1,209 நிறுவனங்கள் என மொத்தம் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவின் தொழிற் கொள்கையின் விளைவு 5 ஆண்டு களில் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது சாதாரண விஷயம் அல்ல. தொழில் நிறுவனங்கள் மூடலுக்கு முக்கியக் காரணங்களாக, கடன் சுமை அதிகரிப்பு மற்றும் அதைத் திருப்பிச் செலுத்த முடியாதது ஆகியவையே கூறப்படுகின்றன.

தொழிலாளர்கள் வேலையிழப்பு!

தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பெருமளவு மூலதனமும் முடங்கியுள்ளது. குஜராத் பாஜக அரசாங்கம் நன்கொடைக்காக கார்ப்பரேட் தொழில்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தான் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை பின்னடைவுக்குக் காரணம்.

அதே போல சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அமல்படுத்தியதன் தாக்கம், போதிய அரசு ஆதரவின்மை, சந்தைப் போட்டி மற்றும் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை சிறு தொழில்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜக அரசு மழுப்பல் தொழில் துறைக்கு உதவுவதற்காகப் பல்வேறு கடன் மானியத் திட்டங்கள் மற்றும் மூலதன ஊக்க உதவிகள் வழங்கப்பட்டதாக குஜராத் பாஜக அரசு கூறினாலும், இந்த நிறுவனங்கள் மூடப்பட்டதற்குக் குறிப்பிட்ட கார ணங்களை அரசுத் தரப்பு தெளிவாக விளக்கவில்லை. எனி னும் தொழிற்கொள்கையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டி யதன் அவசியத்தை இப்புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன

-விடுதலை நாளேடு,12.12.25

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ‘பெல்’ ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!

 


அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு வலியுறுத்தல்

திருச்சி, டிச,14– திருவெறும்பூர் அருகே உள்ள ஒன்றிய பொதுத்துறை நிறு வனமான பெல் நிறு வனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பெல் முதன்மை வாயில் (மெயின் கேட்டு) முன்பு வாயிற் கூட்டம் நேற்று (13.12.2026) நடைபெற்றது.

திருவெறும்பூர் அருகே  ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம்  உள்ளது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர் இதில் பல தொழிலாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர். சில தொழிலாளர்கள் இறந்து விட்டனர். “

இந்நிலையில் தற்பொழுது சுமார் 500  தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நீண்ட நாள்களாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக திராவிடர் தொழிலாளர் கழகம் உள்ளிட்ட பல சங்கங்கள்  போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் பெல் நிறுவனம் அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இதனை தொடர்ந்து திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்தது.

அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த டிச. 5 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நான்கு மாதத்தில் பெல் நிர்வாகம் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு உரிய அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை உடனடியாக அமல்படுத்த கோரி நேற்று (டிச.13) காலை 7.30 மணியளவில் பெல் நிறுவனத்தின் முதன்மை வாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் வாயிற் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.முத்துக்குமார் தலைமை வகித்தார்.பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளரும் திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளருமான  மு.சேகர் முன்னிலை வைத்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.தீபன் சிறப்புரை ஆற்றினார்.   கூட்டத்தில் பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வராஜ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் உத்திராபதி, அம்பேத்கர் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கணபதி, டெமாக்ரடிக் டிரேட் யூனியன் பொதுச் செயலாளர் லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் இ.இராமர், சி.அய்டியு பொதுச் செயலாளர் இரா. பரமசிவன், பிஎம்எஸ் பொதுச் செயலாளர் ஜெயராமன், அய்என்டியுசி பொதுச் செயலாளர் அலெக்ஸ், அண்ணா தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வில்லியம் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு பெல் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்கள். நிறைவாக  சிஅய்டியு சங்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சிறப்புத்தலைவர் ம.ஆறுமுகம், காட்டூர் கிளைக்கழகத் தலைவர் அ.காமராஜ் உள்ளிட்ட கழகத் தோழர்களும் பெல் தொழிலாளர்கள் சங்கங்களின் பொறுப்பாளர்களும் பெல் ஒப்பந்த ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

-விடுதலை நாளேடு,14.12.25

செவ்வாய், 9 டிசம்பர், 2025

திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த வெற்றி! திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சட்டப் போராட்டம் வென்றது!

 

‘பெல்’ ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க
உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு!

திருச்சி, டிச.6 திராவிடர் தொழிலாளர் கழ கத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பான ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் தொடுத்த வழக்கில் வர லாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக, திருச்சி பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்‌இஎல்) நிறுவனத்தில்  நீண்ட காலமாகப் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடார் நேற்று (5.12.2025) வழங்கிய உத்தரவில், ஒன்றிய அரசின் தொழில் தீர்ப்பாயத்தின் 01.12.2022  தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக ‘பெல்’ வளாக ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் இந்த வழக்கை 2012 ஆம் ஆண்டில் தாக்கல் செய்தது. தொழிலாளர்களே இயக்கும் கூட்டுறவு அமைப்பாகப் பார்வைக்குத் தோன்றினாலும், அது உண்மையில் ‘பெல்’ நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும் போலியான அமைப்பு (Sham, Bogus & Camouflage arrangement) என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

40 ஆண்டு காலப் போராட்டம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் (‘பெல்’) தொழிற்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றியோரை நிரந்தரமாக்க வேண்டும்; நிரந்தரத் தொழி லாளர்களுக்குரிய பயன்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 30 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணை யாக அனைத்துப் பணிகளையும் செய்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தைத் தான் ‘பெல்’ நிர்வாகம் வழங்கி வந்ததே தவிர, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியத்தையோ, பிற பலன்களையோ வழங்கவில்லை.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முயற்சி

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்த ரமாக்கக் கோரி, திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இப் பிரச்சினை குறித்துப் பலமுறை அறிக்கைகள் விடுத்ததுடன், ‘பெல்’ நிர்வாகத்தைக் கண்டித்துப் பல கூட்டங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்குகொண்டு உரையாற்றி உள்ளார்கள். தமிழர் தலைவர் கி.வீரமணி, மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் திராவிடர் தொழிலாளர் கழகம் நடத்தியுள்ளது.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் பல்வேறு தொடர் போராட்டங்களின் வாயி லாக, கேண்டின் உணவு அருந்துவதற்கான சலுகை, தேநீர், பாலிஸ்டர் சீருடை, தேசிய விடுமுறைகள், அவை  தவிர 18 நாட்கள் தற்செயல் விடுப்பு, புத்தாண்டுப் பரிசுகள், சட்டப்படியான போனஸ் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட்டன. ‘பெல்’ நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வரக் காரணமான பெருந்தலைவர் காமராசர் படத்தை, அந் நிறுவனத்திற்குள்ளேயே வைக்க மறுத்த நிர்வாகத்தைக் கண்டித்து, தி.தொ.க. நடத்திய போராட்டத்தின் விளைவாகத் தான் இன்று காமராசர் படம் இந் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்தனை வெற்றிகளைப் பெற்றிருந்தா லும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தர மாக்குவதற்கு, ‘பெல்’ நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,   திராவிடர் தொழிலாளர் கழகத்துடன் இணைக்கப்பட்ட ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மு.சேகர், 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப்  பிறகும்?

தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு ‘பெல்’ நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், அப்போதும் ‘பெல்’ நிர்வாகம் அது குறித்துப் பரிசீலிக்கவில்லை.

அதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள ஒன்றியத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக உதவி தொழிலாளர் ஆணையரிடம் முறையிடக் கூறியதால், அங்கு சென்று சங்கம் முறையிட்டது. அங்கு ‘பெல்’ நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆணையிடப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், இவ்வழக்கை இந்தியத் தொழிலாளர் நலத் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைத்தார். அங்கிருந்து தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் நீதிபதி பிரசன்ன குமாரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக இடைக்காலத் தீர்ப்பு வழங்கினார். அதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தடையாணை பெற்றது ‘பெல்’ நிர்வாகம். மீண்டும் சென்னை  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் என பல மேல்முறையீடுகள், வழக்குகளுக்குப் பிறகு, 2022  டிசம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து, 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம்.

அந்த வழக்கில் தான் நேற்று (5.12.2025) இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போலியான மற்றும் மறைமுக
வேலைவாய்ப்பு அமைப்பு

அந்தக் கூட்டுறவு அமைப்பு உண்மையான ஒப்பந்த நிறுவனமல்ல; நிரந்தரப் பணியாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்க்க பயன்படுத்தப்பட்ட ‘‘நிழல்’’ அமைப்பு (Sham, & Bogus) என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பளம், பணிநேரம், கூடுதல் பணிநேரம், விடுப்பு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்தையும்  ‘பெல்’ நிறுவனமே நிர்வகித்துள்ளதை ஆவணங்கள் காட்டுகின்றன. ‘பெல்’ வழங்கிய அடையாள அட்டைகள், பணி நேர அட்டவணைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றுகள் அதனை உறுதியானதாக நிரூபித்துள்ளன. ‘பெல்’ நிர்வாகத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் தான்  இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர் என்றும், நிரந்தர பணித் தன்மையுள்ள வேலைகளான ஓட்டுநர், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற நிரந்தரப் பணிகளில் இத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்குச் சம்பளம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

ஹுசைன் பாய் எதிர் அலாத் தொழிற்சாலை (1978) மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி இந்தியா (2001) போன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, “பணியைக் கட்டுப்படுத்துபவரே உண்மையான முதலாளி” என்ற கொள்கையை நீதி மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மறைமுகமாகவும், போலியாகவும் இப் பணிகளை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டு, அந்தப் பணியாளர்களுக்கான பயன்களை வழங்கா மல், நிரந்தரப் பணியாளர்களாகவும் அங்கீ கரிக்காமல் இருந்த ‘பெல்’ நிர்வாகத்தின் செயல் தவறானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  வழக்கில் இருந்த இரண்டாவது பிரதிவாதியான கூட்டுறவு அமைப்பு முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

இத் தீர்ப்பின் படி, தகராறு எழுந்த தேதியன்று பணியில் இருந்த தொழிலாளர்கள் அைனவரும் நிரந்தரமாக்கப்படவேண்டும். பணியில் சேர்ந்த நாள் முதல் அவர்களின் பணிக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தகராறு தொடங்கிய தேதிமுதல் சம்பள வேறுபாடு (arrears) வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவை ‘பெல்’ நிறுவனம் 4 மாதங்களுக்குள் அமலாக்க வேண்டும் என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, பொதுத்துறை நிறுவ னங்களில் நிரந்தர ஆட்சேர்ப்பை தவிர்த்து, ஒப்பந்தத் தொழிலாளர்களை நீண்டகாலம் பயன்படுத்தும் முறைகளுக்கு வலுவான சட்டப் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற நிழல் ஒப்பந்தங்கள் போடும் நடைமுறைகளுக்கு எதிரான பிற வழக்குகளுக்கும் இது முன்னுதாரணமாக அமையும் என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வாதாடிய வழக்குரைஞர்களுக்கும்– ஆதரவு தெரிவித்த அமைச்சர்களுக்கும் நன்றி!

இவ்வழக்கில் பல்வேறு நிலைகளிலும் ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மூத்த வழக்குரைஞர்கள் இரா.விடுதலை, ஏ.தியாகராஜன், வழக்கு ரைஞர்கள் த.வீரசேகரன், கே.வீரமணி, கே.பாலசுப்பிரமணியன், ஆர்.அண்ணாமலை, எஸ்.நாகநாதன், ஜெ.துரைசாமி, வி.பிரபாகரன், டி.பிரதீப்ராஜா, எம்.நடராசன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் மிகச் சிறப்பாக வாதாடினர். தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இப் போராட்டத்திற்குப் பல்வேறு நிலைகளிலும் ஆதரவாக இருந்துள்ளனர்.

வழக்கின் வெற்றியைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் திருச்சியில் இன்று (6.12.2025) தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பொருளாளரும், காட்டூர் பகுதி திராவிடர் கழகத் தலைவருமான காமராஜ் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

திராவிடர் தொழிலாளர் கழகம் தொடுத்த சட்டப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, திருவெறும்பூரில் இந்தத் தீர்ப்பை விளக்கி விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறும் என்று திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு,6.12.25