நம் நாட்டில் மூன்று விதமான முதலாளிகள் உள்ளனர்
1. பண முதலாளி 2. கல் முதலாளி 3. பிறவி முதலாளியாகிய ‘பிராமணன்!'
இந்த முதலாளி - தொழிலாளி என்ற பேதம் ஒழிக்கப்பட்டு தொழிலாளி பங்காளியாக வேண்டும்!
திராவிடர் கழக தொழிலாளரணியின் தனித்தன்மை இதுதான்!
தாம்பரம், மே 21 நாட்டில் மூன்று வகையான முதலாளி கள் இருக்கின்றனர்; பணத்தை மூலதனமாகப் போடும் முதலாளி; கடவுளாகிய கல் முதலாளி; பிறவி முதலாளி யான ‘பிராமணன்' - இந்த முதலாளித்தன்மை ஒழிந்து முதலாளி - தொழிலாளி என்ற நிலையே அகன்று அனைவரும் பங்காளி என்ற நிலையை அடைய வேண்டும்; இதுதான் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் தனித்தன்மை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாடு
நேற்று (20.5.2023) காலை சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை யாற்றினார்.
அவரது உரை வருமாறு:
திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டில் காலை நடைபெறும் கருத்தரங்கத்திற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மானமிகு தோழர் பேரவைத் தலைவர் மோகன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை பொருளாளர் மானமிகு மா.இராசு அவர்களே,
கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர்
கலி.பூங்குன்றன் அவர்களே,
கொடியேற்றி வைத்த பேரவை செயலாளர் தோழர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பாக உரையாற்றி, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தினைத் திறந்து வைத்த கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே,
தொ.மு.ச.வின் பொருளாளரும், உலகத் தொழிலாளர் அமைப்பின் சார்பில் சுவிட்சர்லாந்தில் தொழிலாளர் மாநாடு நடைபெறவிருக்கின்றது - அம்மாநாட்டில் தொ.மு.ச.வின் சார்பில் பங்கேற்கவிருக்கின்ற பெருமைக் குரிய நம்முடைய தோழர் நடராசன் அவர்களே, வேலுச்சாமி அவர்களே,
மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்குரிய சுயமரியாதை வீரர் பகுத்தறிவாளர் சண்முகம்!
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாகத் தொடக்கவுரையாற்றி இருக்கின்ற தொ.மு.ச. என்று சொல்லக்கூடிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்கத்தை, வெறும் தொழிற்சங்கமாக மட்டும் அவர் தலைமையேற்று நடத்தாமல், மற்றவர்கள் நடத்திய அந்த சிறப்புக் குன்றா மலும், மேலும் சிறப்பாக நடத்துவதோடு, சுயமரியாதை, பகுத்தறிவுள்ள ஓர் அணுகுமுறையை, எப்பொழுதும் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து - இயல்பாக ஒரு சுயமரியாதை வீரர், பகுத்தறிவாளர் என்ற முறையில் சிறப்பாக தொ.மு.ச.வை நடத்திக் கொண்டிருக்
கின்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்குரிய சுயமரியாதை வீரர் பகுத்தறிவாளர் சண்முகம் அவர்களே,
இந்நிகழ்வில் அடுத்து உரையாற்றவிருக்கக்கூடிய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, துணைப் பொதுச்செயலாளர்.சே.மெ.மதிவதனி அவர்களே, வெளி யுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களே,
தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கக்கூடிய குடந்தை குருசாமி அவர்களே, தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அருமைத் தோழர் முத்தையன் அவர்களே,
சிறப்புமிகுந்த மாநாட்டிற்குக் கடுமையாக உழைத்து, தொழிலாளரணியைக் கட்டிக் காத்து வருகின்ற தொழி லாளரணி செயலாளர் செயல்வீரர் சேகர் அவர்களே,
மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, தாய்மார்களே, நண்பர் களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்டுவரப்பட்ட சட்டம் நிறுத்தப்பட்டது;
அது பின்வாங்கப்பட்டது!
காலையில் மண்டபத்தில் நிகழ்ச்சி, மாலையில் பொதுவெளியில் மாநாடு! 12 மணிநேர வேலைத் திட்டம் வந்துவிடுமோ என்று அஞ்சிய நேரத்தில், அதனை உடனடியாகச் சரி செய்து, அப்படிப்பட்ட ஒரு திட்டம் எதுவுமில்லை; கொண்டுவரப்பட்ட சட்டம் நிறுத்தப் பட்டது; அது பின்வாங்கப்பட்டது - அதிலொன்றும் கவுர வப் பிரச்சினைக்கு இடமில்லை என்ற ஒரு சிறப்புத் தன்மையை நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
தாய்க்கழகத்தின் சார்பில், நன்றி தெரிவித்தேன்; மிகவும் மகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர்
மே தினத்தன்று, மே தினப் பூங்காவிலிருந்துதான் இறுதியான அறிவிப்பு வந்தது. ஏனென்றால், முதல் அறிவிப்பின்படி, நிறுத்தி வைத்திருந்தார்கள். ஒரு சட்டத்தை நிறுத்தி வைத்திருந்தால், அதற்கு முழுமையாக உயிர்ப் போகவில்லை என்று அர்த்தம். எந்நேரமும் உயிரோடுதான் இருக்கும். புற்றில் இருக்கின்ற பாம்பு வெளியில் வருகிறதா என்பது முக்கியமல்ல; பாம்பு இல்லவே இல்லை என்று தெரிந்தால்தான், நிம்மதியாகத் தூங்க முடியும். அந்த ‘அறவே இல்லை' என்பதை, தொ.மு.ச.வினுடைய மே தின நிகழ்வில்தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித் தார்கள். அப்படி அறிவித்தவுடன், நான் உடனே தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டி, தாய்க்கழகத்தின் சார்பில், நன்றி தெரிவித்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
ஏனென்றால், எவ்வளவு வேகத்தோடு எதிர்த் தோமோ, அந்த வேகத்தைவிட ஒருபடி வேகமாகவே நன்றி சொன்னோம். அப்பொழுது சொன்னேன் ‘‘வரும் 7 ஆம் தேதி திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது; அந்த மாநாட்டில், உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம்'' என்று சொன்னேன்.
அதற்குப் பிறகு, பல தவிர்க்க முடியாத காரணங்களால், அந்த மாநாடு 20 ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது.
இன்று மாலையிலும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறவிருக்கின்றன.
பகுத்தறிவைதான் தொழிலாளர்களுக்குப் போதிக்கவேண்டும்; சுயமரியாதையை சொல்லிக் கொடுக்கவேண்டும்!
ஒவ்வொரு மாநாட்டிலும், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை நூல்களாக நாம் வெளியிடுவோம். மே தினத்தையொட்டி அண்ணா அவர்களின் உரையை எடுத்துக்கொண்டால், பகுத்தறி வைத் தான் தொழிலாளர்களுக்குப் போதிக்கவேண்டும்; சுயமரியாதையை சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றுதான் அண்ணா அந்த உரையைத் தொடங்குவார். ஏனென்றால், அய்யாவிடம் கற்ற பாடம் அது.
அதேபோன்று, இன்றைக்கு ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தோம். அய்யா தந்தை பெரியாரை 90 ஆண்டு களுக்கு முன்பு கேரளாவிற்கு அழைத்து சிறப்பு செய்தார்கள்.
நாம் என்ன நினைக்கின்றோம், தமிழ்நாடு எப்படி பகுத்தறிவு பூமியோ, அதுபோல, கேரளமும் பகுத்தறிவுப் பூமி, பொதுவுடைமை பூமி என்று நினைக்கின்றோம். ஆனால், அங்கேதான் வைக்கம் போராட்டம் போன் றவை நடந்தன.
தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தார்; உலகளாவிய சிந்தனையாளராக, ஒப்பற்ற சுய சிந்தனையாளராக இருந்தார் என்பதை இன்றைக்கு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.
‘‘முதலாளித் தன்மை ஒழிக!’’
இதனுடைய தலைப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கும். ‘‘முதலாளித் தன்மை ஒழிக'' என்று சொல்கிறார் அய்யா.
தனிப்பட்ட நபர்கள்மீது நமக்குக் கோபம் கிடையாது. முதலாளி - தொழிலாளி என்கிற பெயரை வைத்துத்தான் தொழிற்சங்கங்கள் செயல் படுகின்றன. இந்தப் புத்தகத்தின் நன்கொடை ரூ.15 தான்.
அந்தப் புத்தகத்தினுடைய சிறப்பைப்பற்றி சொல்லுகிறேன், நாமெல்லாம் பிறக்காத காலத்தில், அல்லது பிறந்த குழந்தையாக இருக்கின்ற காலத்தில், தந்தை பெரியாருக்கு, கேரளாவில் சிறப்பு செய்திருக்கிறார்கள்.
திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், கொச்சியில் 5 ஆம் தேதி, ஆலப்புழாவில் 10 ஆம் தேதி, திருநெல் வேலியில் 23 ஆம் தேதி.
மூன்று இடங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளைத் தொகுத்து இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது.
அதில் இருக்கின்ற ஒரு பகுதியை உங்களுக்குச் சொல்கிறேன்.
‘‘முதலாளிகளின் வாழ்வுக்கும், செல்வம் சேர்ப்பிப்பதற்கும் மாத்திரம் தொழிலாளிகள் பாடுபடுகிறார்கள் என்பதில்லாமல், இந்த முதலாளி களைக் காப்பாற்றவும், தொழிலாளிகளை அடக்கவுமான காரியத்தின் செலவுக்கும், இந்தத் தொழிலாளிகளே பாடுபட்டு உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இத்தியாதி காரணங்களால் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களாகிய தொழிலாளிகளுடைய நிலைமை நாளுக்கு நாள் அடிமைத் தனத்திலும், தரித்திரத் திலுமே அமிழ்த்தப்படுகின்றது.
ஆதலால், தொழிலாளிகளது கஷ்டமும், துன்பமும், அடிமைத் தனமும், கவலையும், குறையும் நீங்கவேண்டுமானால் முதலாளித்தன்மை என்பது இல்லாமல் போயே ஆகவேண்டும்.''
முதலாளித்தன்மை இல்லாமல் போகவேண்டும் என்று சொல்கிறார்
தந்தை பெரியார்!
‘முதலாளி' இல்லாமல் போகவேண்டும் என்று சொல்லவில்லை; ‘முதலாளித்தன்மை' இல்லாமல் போக வேண்டும் என்று சொல்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.
மிக முக்கியமானது நம்முடைய இரண்டு சங்கங்கள் தனித்தன்மையோடு உருவானவை. தொ.மு.ச. பேரவைக்கு ரயில்வே தொழிலாளர் சங்க நிர்வாகியான ராகவானந்தம், செ.குப்புசாமி போன்றவர்கள் இப்படி வரிசையாகப் பொறுப்பில் இருந்த காலத்தில், அங்கே ஆஸ்தானப் பேச்சாளர்கள் என்று அதிகமாகப் போனது எங்களை மாதிரி இருக்கக் கூடியவர்கள்தான். மாணவர் பருவத்தில் அவர்கள் அழைத்த எல்லா இடங்களுக்கும் சென்று பேசுவோம்.
தமிழில் உள்ள சொல்லாட்சி என்பது
மிகவும் முக்கியமானது
வார்த்தைகளை நாம் அதிகமாக பயன்படுத்து கின்றோமே தவிர, தமிழில் உள்ள சொல்லாட்சி மிகவும் முக்கியமானது. எழுத்தாளர் - எழுத்தை ஆளக்கூடியவர்.
கிளார்க்காக இருக்கக்கூடியவர் - அவருக்கு எழுத்தர் என்று பெயர். அவர் எழுத்தாளர் அல்ல.
எழுத்தாளருக்கும், எழுத்தருக்கும் என்ன வித்தியாசம்?
எழுத்தர் எழுதுவார் அவ்வளவுதான்.
அதுபோன்று, தொழிலாளர் - முதலாளி.
முதலாளி - அவர் தொழிலுக்குரிய முதலைப் போடு கிறார். பெரியார் அய்யா அவர்கள் மிக எளிமையாகச் சொன்னார்.
ஒரு பெரிய வேற்றுமை பாராட்டவேண்டி - இரண்டு பேருக்குமிடையே ஒரு பகைமை இருந்தால்தான் சிறப்பு என்று நினைக்கவேண்டாம்.
இன்றைக்கு நம்முடைய அமைப்புகள் - இரண்டும் ஒன்றாக இருக்கின்றன.
தி.மு.க. - தி.க. தொழிற்சங்கங்களும்
இரட்டைக் குழல் துப்பாக்கிகள்!
திராவிடர் கழகத் தொழிலாளரணி - தொ.மு.ச. வும் எப்படி என்றால், எப்படி தி.மு.க.வும் - தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளோ, அதுபோல, தொழிற்சங்கங்களும் இரட்டைக் குழல் துப்பாக் கிகள்.
தொ.மு.ச. என்ன முடிவு எடுக்கிறதோ, அதை திராவிடர் தொழிலாளர் கழகமும் எடுக்கலாம். அதனால் தவறு ஒன்றும் இல்லை.
தொ.மு.ச. இருக்கும்பொழுது, தனியே திராவிடர் தொழிலாளர் கழகம் எதற்கு என்று கேட்கலாம்; அவர்கள் சொல்ல முடியாததை, சொல்ல சந்தர்ப்பம் இல்லாததை சேர்த்து நாங்கள் சொல்வோம், செய்வோம்; அதுதான் எங்களுக்குக் கூடுதல் வேலை.
அதேபோன்று கம்யூனிஸ்ட் நண்பர்களும். சி.அய்.டி. யூ.வாக இருக்கட்டும்; ஏ.அய்.டி.யூ.சி.யாக இருக்கட்டும் -எந்தத் தொழிற்சங்கத்திற்கும், திராவிடர் கழக தொழிற் சங்கம் போட்டியாக வரவேண்டும் என்று வரவில்லை.
அதற்கு என்ன காரணம் என்று சொன்னால், திராவிடர் கழக தொழிலாளரணி என்பது ஓர் அரசியல் கட்சி அமைப்பு இல்லை.
தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளரணிகள் என்பது ஓர் அரசியல் கட்சியின் அமைப்புகள்தான்.
‘‘எண்ணெய்ச் செலவே தவிர,
பிள்ளை பிழைக்கவில்லை.’’
அந்த அரசியல் இருப்பதினால்தான், இன்றைக்குத் திராவிட மாடல் அரசு இருக்கிறது. திராவிட மாடல் அரசு இருப்பதினால்தான், கருநாடகத்தில் கஜ கர்ணம் போட்டுப் பார்த்தாலும், கடைசியில் ‘‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை.''
‘திராவிட மாடல்’
ஆட்சிதான் வழிகாட்டி. தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது!
அங்கே புதிதாக ஒரு திருப்பம் ஏற்படுகிறது. நாம் இங்கே மாநாட்டினை நடத்திக் கொண்டிருக் கின்றோம்; கருநாடகாவில் பதவியேற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
இதற்கு யார் வழிகாட்டி என்றால், ‘திராவிட மாடல்' ஆட்சிதான் வழிகாட்டி. தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது.
திராவிடர் தொழிலாளர்களுக்கு நான் சொல் கிறேன் - நாம் இணை கோடுகள் போன்றவர்கள். தண்டவாளத்தின் இரண்டு இணை கோடுகள் போன்றவர்கள்.
நம் போன்று பட்டாங்கமாய், பகிரங்கமாய்
பல விஷயங்களைச் சொல்ல முடியுமா?
அவர்கள் செய்யாத, செய்ய முடியாத - ஏனென்றால், செய்ய முடியாத சூழ்நிலை - அரசியல் ரீதியாக அவர்கள் இருப்பதினால், வாக்கு வாங்குகிறவர்களால், நம் போன்று பட்டாங்கமாய், பகிரங்கமாய் பல விஷயங்களைச் சொல்ல முடியுமா?
பகுத்தறிவு, சுயமரியாதை என்பது அவர்களுடைய ரத்தத்தில் ஊறியது. அதை மாற்ற முடியாது. அதுதான் தனித்தன்மை. அதுதான் திராவிட மாடல். திராவிடன் என்று சொல்வதினுடைய அடிப்படை.
வயிறு முக்கியம்தான்;
அதைவிட மிக முக்கியம் மூளை!
ஆகவே, போட்டி கிடையாது. எப்படி என்று கேட்டால், கூலி உயர்வு - போனஸ், மற்ற பிரச்சினைகள் - அதில் அரசியல் கட்சி தொழிற்சங்கங்கள் எல்லாம் இருக்கும். அதுவும் தேவை. ஏனென்றால், தொழிலாளிக்கு வயிறு மிகவும் முக்கியம். அதற்குப் போதுமான வசதிகளை செய்து தரவேண்டும்.
பெரியார் என்ன சொன்னார் என்றால், வயிறு முக் கியம்தான்; அதைவிட மிக முக்கியம் மூளை என்றார்.
ஆகவே, திராவிடர் தொழிலாளர் கழகம் என்பது எந்த சங்கத்திற்கும் விரோதியோ, போட்டியோ கிடை யாது. மாறாக, ஒரு ஸ்பெஷலிஸ்ட் - பகுத்தறிவு ஸ்பெஷ லிஸ்ட் - சுயமரியாதை ஸ்பெஷலிஸ்ட்!
இவர் பொது மருத்துவர்; நீங்கள் நரம்பியல் மருத் துவரிடம் சென்று பாருங்கள்; சிறுநீரக மருத்துவரிடம் சென்று பாருங்கள் என்பார்கள்.
திராவிடர் தொழிலாளர் கழகம் தனித்தன்மையோடு இயங்கக்கூடியது
மற்ற தொழிற்சங்கங்கள் எல்லாம் பொது மருத்துவர் போன்றவை. திராவிடர் தொழிலாளர் கழகம் இருக்கிறதே, அது ஸ்பெஷலிஸ்ட் - பகுத்தறிவு ஸ்பெஷலிஸ்ட். தனித்தன்மையோடு இயங்கக்கூடியது.
உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், முதலாளி என்றால், நம்முடைய நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
வெளிநாட்டில் முதலாளி என்றால், முதல் போடுகிற ஒரே ஒரு ஆள்தான்.
நாட்டில் மூன்று வகையான முதலாளிகள்!
நம்முடைய நாட்டில் மூன்று வகையான முதலாளிகள் இருக்கிறார்கள் என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
அது என்னங்க, மூன்று வகையான முதலாளிகள் என்றால்,
ஒன்று, தொழிலுக்காக முதல் போடுகிறவர். சாதாரண வெற்றிலைக் கடை, மளிகைக்கடைக்கு முதல் போடு கிறவர்களிலிருந்து அம்பானி, அதானி, டாட்டா, பிர்லாக்கள் எல்லாம் முதலாளிகள்தான். நடமாடுகிற, முதல் போட்ட முதலாளிகள்.
அடுத்து இன்னொரு முதலாளி இருக்கிறார்; ஆந்திராவில் இருக்கிறார். அவர்தான் வெங்கடாசலபதி; அவர் கல் முதலாளி. அவர் நகரமாட்டார்; அவரிடம் சேரும் பணத்தைப் பார்த்து, அவரையே நகர்த்திக் கொண்டு வந்துவிட்டார்கள். எல்லா ஊர்களிலும் வசூல் செய்யவேண்டும் என்று.
அவர் எந்த வேலையும் செய்வதில்லை. சொந்த முதலீடும் செய்கிறவர் அல்ல. வருகின்றவர்கள் உண்டிய லில் போட்டுப் போட்டு, பணத்தை எண்ணுவதற்கு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர். ஆனால், சர்வ சக்தி உள்ள கடவுள் என்பார்கள் அவரை.
அதேபோன்று, நம்மாள் - தொழிலை ஆளுகின்றவர். தொழிலாளி. தொழில் என்கிற மூலதனம் நம்மாளிடம். முதல் போடுகின்ற மூலதனம் அவர்களிடம்.
ஒருவரிடம் உழைப்பு மூலதனமாக இருக்கிறது; இன் னொருவருக்குத் தொழில் நிதி மூலதனமாக இருக்கிறது. இரண்டும் சேருகிறது.
முதலாளியும் - தொழிலாளியும் சேர்ந்து, பிறக்கின்ற குழந்தைக்குப்
பெயர்தான் லாபம்!
அய்யாதான் சொல்வார், தொழிற்சங்கங்களை வெறுப்போடு பார்க்கவேண்டிய அவசியமில்லை. பகுத் தறிவுப்படி சிந்தித்தால், முதலாளியும் - தொழிலாளியும் சேர்ந்து, பிறக்கின்ற குழந்தைக்குப் பெயர்தான் லாபம். சரியாக இல்லை என்றால், நட்டம் என்றாகிறது. உடலில் கோளாறு என்றால், நட்டம்தான்.
லாபம் எனக்கு மட்டும்தான் என்று முதலாளி சொல்ல முடியுமா?
ஆகவே, லாபத்தில் பங்கு கொடு.
தொழிலாளி - முதலாளி என்ற வாக்கியத்தை மாற்றி, பங்காளி என்று ஆக்குங்கள்; கூட்டாளி என்று ஆக்குங்கள்.
தொழிலாளி என்றாலும், முதலாளி என்றாலும் பேதம் இருக்கிறது. அதனால், முதலாளித்தன்மை ஒழிய வேண்டும்.
அப்படி வந்தால், சமத்துவம் வந்துவிடும்.
இதுதான் மிக முக்கியம்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்துகள் எதுவுமே சோடை போனதில்லை
அந்த இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பது திராவிடர் தொழிலாளர் கழகம்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்துகள் எதுவுமே சோடை போனதில்லை. நம்முடைய சண்முகம் எம்.பி., அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது மிக அழகாகச் சொன்னார்.
பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று சொன்னால், 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடை பெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மான மாகக் கொண்டு வருகிறார் தந்தை பெரியார் அவர்கள்.
உலக வரலாற்றிலேயே அற்புதமான சாதனை!
அன்றைய காலகட்டத்தில் கலைஞருக்கு அய்ந்து வயது. அவர் 1924 ஆம் ஆண்டு பிறந்தவர். 5 வயது குழந்தையாக இருந்தவர், பிற்காலத்தில் அவரே முதலமைச்சராகி, தந்தை பெரியாருடைய தொண்டரே, அதே கொள்கையை நிறைவேற்றம் செய்த வரலாறு - உலக வரலாற்றிலேயே அற்புதமான சாதனை - தேடி னாலும் கண்டுபிடிக்க முடியாது. இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்'.
இது எப்பொழுதும் காலாவதியாகாது. சில கபோதிகள் வேண்டுமானாலும் காலாவதியாகிவிட்டது என்று சொல்லலாமே தவிர, கண் விழித்திருப்பவர்கள் சொல்ல மாட்டார்கள்.
இரண்டு முதலாளிகளைப்பற்றி சொல்லியாயிற்று. இன்னொரு முதலாளி இருக்கிறான்; அது யார் என்றால், பிறக்கும்பொழுதே நான் முதலாளி என்று சொன்னவன். பிறந்த ஜாதியினாலே நான் முதலாளி என்று சொன்ன வன்.
அதுதான் வருணாசிரம தர்மம் - இந்த நாட்டைத் தவிர, இந்திய நாட்டைத் தவிர, இந்து மதம் இருக்கின்ற நாட்டைத் தவிர, சனாதனம் இருக்கின்ற நாட்டைத் தவிர வேறு கிடையாது.
முதல் போடுகின்ற முதலாளி - அதற்கடுத்து கல் முதலாளி - அதற்கடுத்துப் பிறவி முதலாளி.
‘‘எப்படி பிறவி முதலாளி?'' என்று சந்தேகம் உங்களுக்கு வந்தால், நீங்கள் எங்கேயும் போகவேண்டாம் - சுருக்கமாக சொல்கிறேன். இதோ என் கைகளில் இருப்பது அசல் மனுதர்மம் நூல்.
இன்றைக்குப் போராட்டம் - அரசியல் ரீதியாக இந்தப் போராட்டம்தான்.
சனாதனத்திற்கு எதிரானது சமதர்மம்
மனுதர்மத்திற்கு எதிரானது - மனித தர்மம்.
சனாதனம் என்றால் என்ன?
சனாதனத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று சொல்கிறார்களே, அந்த சனாதனம் என்றால் என்ன? மனுதர்மம்தான் சனாதன தர்மம். அதுதான் அரசமைப்புச் சட்டமாக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்பொழுது இருக்கின்ற டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்குமேலாக இந்த இயக்கம் இந்தப் பணிகளை செய்துகொண்டிருக்கிறது?
இதனுடைய தனித்தன்மை என்ன?
பிறவி முதலாளி என்கிற மூன்றாவது முதலாளி இருக்கின்றானே, அவனுக்கு என்ன ஆதாரம் என்றால், எல்லாவற்றையும்விட நான்தான் முதலில் - என்னை மாற்ற முடியாது என்பதுதான்.
நேற்றைய பணக்காரன் இன்றைக்கு ஏழையாகலாம். பெரிய பெரிய கம்பெனி நடத்துகின்றவர்கள்கூட, திவாலாகிவிடலாம். நேற்று வரையில் கோ-ஏர் விமானம் ஓடிக்கொண்டிருந்தது; இன்றைக்கு ஓடவில்லை. முன்பெல்லாம் ராஜாக்கள் இருந்தார்கள்; இப்பொழுது ராஜாக்கள் இல்லை. சீட்டுக் கட்டில்தான் இஸ்பட் ராஜாக்கள் இருக்கிறார்கள். வேறு எங்கும் ராஜாக்கள் கிடையாது.
கடவுளுக்கு மேலே நாங்கள் என்று
பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்!
ராஜாக்கள் போயாகிவிட்டது; ஆனால், பிறவி முதலாளி என்று சொல்லிக் கொள்கிறார்களே, கட வுளுக்கு மேலே நாங்கள் என்று பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்.
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது -
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது -
மந்திரங்கள் எங்களுக்குக் கட்டுப்பட்டவை - ஆகவே, எங்களை முதலில் தொழுங்கள் என்று சொல்கிறார்கள். கடவுள் இரண்டாவதுதான் என்றார்கள். அதுதான் பிறப்பால் ‘பிராமணர்'' பிறவி முதலாளி - இது மனுதர்மத்தில் இருக்கின்ற பகுதி.
இதை சொல்லக்கூடியதே திராவிடர் தொழிலாளர் கழகம். இதை மற்ற தொழிற்சங்கங்கள் வெளிப்படை யாகவோ, பகிரங்கமாகவோ சொல்ல முடியாது.
இதைச் சொல்வதுதான் திராவிடர் தொழிலாளர் கழகத்தினுடைய வேலை. ஏனென்றால், வேரிலிருந்து வருபவர்கள் நாங்கள்.
தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம்!
‘‘நோய் நாடி, நோய் முதல் நாடவேண்டும்.'' எங்கே கிருமிகள் இருக்கின்றனவோ, அந்தக் கிருமிகளைக் கண்டுபிடித்து அழித்தால்தான், நோயை அழிக்க முடியும். இதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம்.
ஆகவே, திராவிடர் கழகம் என்பதே, தொழிலாளர் இயக்கம்தான்.
அந்த அடிப்படையில் நண்பர்களே, மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், மனுதர்மம்.
உலகத்தில் இப்படி ஒரு கொடுமையான பிறவிப் பேதம் வலியுறுத்தும் மனுதர்ம சட்டம் என்பதை வேறு எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
நாம் யார்மீதும் வெறுப்புப் பிரச்சாரம் செய்யவில்லை. சில பேர் இதை திசை திருப்புகிறார்கள். பாருங்கள், ‘பிராமணர்கள்'மீது வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று.
வெறுப்பில்லை;
அது மனித விருப்புப் பிரச்சாரம்!
இஸ்லாமியர்கள்மீது, கிறிஸ்தவர்கள்மீது அவர்கள் வெறுப்புப் பிரச்சாரம் செய்வதைக் கண்டித்தபொழுது, இங்கே இருக்கின்ற பார்ப்பனர்கள் நான்கு பேர் சேர்ந்துகொண்டு, ‘‘திராவிடர் கழகத்தில் பெரியார் பேசி யதை எடுத்து, அது வெறுப்புப் பிரச்சாரம்'' என்பார்கள். வெறுப்பில்லை. அது மனித விருப்புப் பிரச்சாரம்.
என்னிடம் ஒருமுறை இதயம் பேசுகிறது இதழுக்காகப் தாமரை மணாளன் என்பவர் பேட்டி கண்டபொழுது, ஒரு கேள்வி கேட்டார்.
‘‘நான் மனிதனை நேசிக்கிறேன்;
ஆகவே, பிராமணர்களை வெறுக்கிறேன்!’’
‘‘சார், நீங்கள் ஏன் ஆண்டி பிராமிணாக இருக் கிறீர்கள்?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
நான் இரண்டே வார்த்தையில் பதில் சொன்னேன், ‘‘நான் மனிதனை நேசிக்கிறேன்; ஆகவே, பிராமணர்களை வெறுக்கிறேன்'' என்றேன். ‘‘Prohuman, so Anti Brahmin'' என்றேன்.
மனிதர்கள் சமம் என்று நினைக்கின்றபொழுது,
ஒருவன் எப்படி பிராமணனாக இருக்க முடியும்?
இன்னொருவன் எப்படி சூத்திரனாக இருக்க முடியும்?
ஒருவன் எப்படி பார்ப்பானாக இருக்க முடியும்?
இன்னொருவன் எப்படி பறையனாக, பள்ளனாக, சக்கலியனாக இருக்க முடியும்?
சமத்துவம் என்று வருகின்றபொழுது, எப்படி ஒருவன் மேலானவன் - இன்னொருவன் கீழானவனாக இருக்க முடியும்?
எல்லோரும் சமமானவர்கள் என்று சொல்லும் பொழுது, ஒருவன் தொடக்கூடியவன்; இன்னொருவன் தொடக்கூடாதவன் என்று எப்படி இருக்க முடியும்?
இதுதான் மிக முக்கியம்.
சனாதனத்தைப்பற்றி மனுதர்மத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள்?
தொழிலாளிகள் வேறு;
சூத்திரர்கள் வேறு கிடையாது!
மனுதர்மம் 415 ஆவது சுலோகம்; 8 ஆவது அத்தியாயம்
‘‘தொழிலாளர்கள் ஏழு வகைப்படுவார்கள்.
யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்
பக்தியினால் வேலை செய்கிறவன்
தன்னுடைய தேவடியாள் மகன்
விலைக்கு வாங்கப்பட்டவன்
ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
குலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்
குற்றத்திற்காக வேலை செய்கிறவன்''
என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.
சூத்திரன் என்கிற வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தம். அப்படியென்றால், தொழிலாளிகள் வேறு; சூத்திரர்கள் வேறு கிடையாது.
தொழிலாளி = சூத்திரன்
சூத்திரன் = தொழிலாளி. இதுதான் சனாதனம்!
இதைத்தான் நாம் எதிர்க்கிறோம். இதை எதிர்ப்ப தற்காகத்தான் எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். தொழிற்சங்கம் என்ற முறையில் இந்தப் பணியை செய்கிறோம்.
அதற்கு என்ன நியாயம் என்றால், மனுதர்மத்தைத் தான் சாட்சிக்கு அழைக்கின்றேன். அந்த மனுதர்மத்தை எடுத்துச் சொல்லவேண்டும். சனாதனத்திற்கு அதுதானே சாசனம்.
சனாதனம் என்ற தத்துவத்திற்கு, நாம் எப்படி ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசமைப்புச் சட்டத்தை எடுத்துக்காட்டாகக் காட்டுகின்றோமோ, அதேபோல, சனாதன தத்துவம். தொழிலாளர்கள் இங்கே இருக்கிறீர்கள்; எல்லா இடங்களிலும் இதைச் சொல்லவேண்டும் நீங்கள்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்''
என்பதுதானே சமூகநீதி!
நாம் யார்மீதும் வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்கள் அல்ல; எல்லோரையும் கட்டித் தழுவுகிறோம். பார்ப்பனர்களுக்குரிய பங்கைக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். 3 சதவிகிதமாக அதை நீங்கள் அனுபவியுங்கள். நீங்கள் ஏன் 300 சதவிகிதம் கேட் கிறீர்கள்?
இதுதான் எங்களுடைய கேள்வி!
அனைவருக்கும் அனைத்தும் என்பதுதானே சமூகநீதி - ‘திராவிட மாடல்'.
எல்லோருக்கும் எல்லாம் - பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்.
அனைவருக்கும் அனைத்தும் என்றால், பார்ப் பனர்களுக்கும் சேர்த்துத்தான். உங்களுடைய பங்கை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக நீங்கள் கேட்கிறீர்களே, இது என்ன நியாயம்?
உலகத்தில் தொழிலாளர்களைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் - ஆனால், நம்முடைய நாட்டில், பிறவி முதலாளிக்கு இருக்கின்ற சக்தி எப்படிபட்டது என்றால், 413 ஆவது சுலோகத்தில் இருப்பது என்ன?
‘அவாளின்’ தொழிற்சங்க விதி!
‘‘பிராமணன், சம்பளம் கொடுத்தேனும், கொடுக் காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்.''
இந்த ‘அவாளின்' தொழிற்சங்க விதியை யாராவது ஏற்றுக்கொள்கிறீர்களா?
இதை சட்டமாகக் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறார்கள்; சிலர் தலையாட்டுகிறார்கள்; கூலிக்கு ஆட்களைப் பிடிக்கிறார்கள்; அதற்கு அண்ணாமலைகள் கிடைக்கிறார்கள்.
நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இது மானப் பிரச்சினையல்லவா?
மனிதர்கள் வெட்கப்படவேண்டிய விஷயமல்லவா?
சம்பளம் கொடுக்கவில்லை என்றால், சிவப்புக் கொடியை நட்டு விடுகிறோமே!
‘‘பிராமணன், சம்பளம் கொடுத்தேனும், கொடுக் காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்.
ஏனெனில், அவன் பிராமணனுக்கு ஊழியஞ் செய் வதற்காகவே, அவனது வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கின்றவன்'' என்கிறது மனு தர்மம்!
உங்களையெல்லாம்
சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே?
இதைக் கேட்டு வெட்கப்படவேண்டும் தோழர்களே! அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் கடைசியாக சென்னை - தியாகராயர் நகரில் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘நான் சாவதைப்பற்றி கவலைப்படவில்லை; உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகி றேனே? என்றுதான் கவலைப்படுகிறேன்’’ என்றார்.
இது எவ்வளவு ஆழமான வார்த்தை என்பதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.
அதற்கு அடுத்து அந்த சுலோகம் 414 ஆவது சுலோகம் - அதில் உள்ளவற்றைப் பாருங்கள்,
‘‘சூத்திரன், எஜமானனால் வேலையிலிருந்து நீக்கப் பட்டு இருந்தாலும், அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது.''
அம்பேத்கர் அதனால்தான் சொன்னார், நான்கு மாடி கட்டடத்தை கட்டிவிட்டு, அதற்குப் படிகட்டுகள் கிடையாது. கீழே இருப்பவன் மேலே ஏறிப் போக முடி யாது என்றால், என்ன அர்த்தம்? இதுதான் அம்பேத்கர் எழுதிய முதல் கட்டுரை.
மாபெரும் புரட்சியாளர்தான்
தந்தை பெரியார்
ஆகவே, ஜாதீயக் கொடுமையை, வருணாசிரமக் தர்மக் கொடுமையை எப்படி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.
இதைக் கண்டறிந்து சொன்ன மாபெரும் புரட்சி யாளர்தான் தந்தை பெரியார் என்கிற மாமனிதர்.
இன்றைக்கும் இதைச் சொல்வதற்கு இந்த இயக்கத்தை விட்டால், வேறு உண்டா?
நீங்கள் ஏன் சூத்திரர்கள்?
ஏன் இன்னொருவன் பிராமணன்?
முதலாளி நான்தான் என்றால், கைதட்டுவார்கள்; நீங்கள்தான் தொழிலாளி என்றால், கைதட்டுவார்கள்.
நீ ஏன் பிராமணன்? நான் ஏன் சூத்திரன்? என்றால், எல்லோரும் கைதட்டுவார்களா? என்றால், கொஞ்சம் பேர் கையை இழுத்துக் கொள்வார்கள்.
அதைச் சொல்வதற்குத் துணிவு வேண்டும்; அதற்குத்தான் திராவிடர் தொழிலாளர் கழகம் வேண்டும். அதுதான் அதனுடைய தனித்தன்மை.
அதைவிட இன்னொரு கொடுமையை சொல்கிறேன், மனுதர்மம் 417 ஆவது சுலோகத்தில்,
‘‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழு வகை தொழிலாளியான சூத்திரனிடமிருந்து அவனுடைய பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம்.
எஜமானன் எடுத்துக்கொள்ளத் தக்க பொருளை உடைய அந்த சூத்திரர், தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரர் அல்ல!''
இதன்படி உலகத்தில் அவன் பிறவி அடிமை - சொந்தமே கிடையாது.
ஆகவேதான், அவன் கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும் அவை பிராமணர்களுக்குச் சொந்தம்.
‘பிறவி முதலாளிகள்' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னது எவ்வளவு பொருத்தம்? எவ்வளவு சரியானது என்பது இப்பொழுது புரிகிறதா?
மனிதர்களாக ஆக்குவதும் - மாற்றுவதும்தான் திராவிடர் கழகத்தினுடைய தொழிலாளரணி!
எனவே, முதல் போட்ட முதலாளி - கல் முதலாளி - பிறவி முதலாளி - இந்த மூன்று முதலாளிகளையும், மனிதர்களாக ஆக்குவதும் - மாற்றுவதும்தான் திராவிடர் கழகத்தினுடைய தொழிலாளரணி. இந்தப் பணி எல்லா தொழிற்சங்கத்திற்கும் அடிப்படைப் பணி!
இந்த நாட்டில் மட்டுமே உள்ள நோய்க்கு - அந்த நோய்க்கு பெரியார் - பகுத்தறிவு - சுயமரியாதை - திராவிடம் என்பதுதான் விடியல்.
தன்மானத்தைப் பெறுங்கள் -
இனமானத்தைப் பெருக்குங்கள்!
அதே நோக்கில் தொழிலாளர்களே பிரச்சாரம் செய்யுங்கள் - தன்மானத்தைப் பெறுங்கள் - இனமானத்தைப் பெருக்குங்கள்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக