செவ்வாய், 30 மே, 2023

அமைப்புசாரா தொழிலாளர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தல்

 

 சென்னை, ஏப்.28 தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர் துறையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 18 தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நல வாரி யங்களில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களான கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனம் ஆகியவைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாரியங்களில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

தொழிலாளர்கள் தங்களது பதிவு விண்ணப்பங்களை www.tnuwwb.tn.gov.என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு தியாகராயர் நகரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக தொலை பேசி 044-28342776 மூலமாகவோ தொடர்பு  கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., உரை தொடர்ச்சி வருமாறு:( 2)

  

 நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வந்தாலும் -

ஆசிரியர் காட்டும் வழியில்தான் இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் - அதிலிருந்து எப்பொழுதும் மாறாதவர்கள்!

13

தாம்பரம், மே 24  தந்தை பெரியார் அவர்களின் வழியில் நாங்கள் வந்தாலும், ஆசிரியர் அவர்கள் காட்டும் வழியில்தான் இன்று நாங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து எப் பொழுதும் மாறாதவர்கள். அப்படியே இருக்கக் கூடியவர்கள் என்றார் தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள்.

திராவிடர் தொழிலாளர் கழக 

4 ஆவது மாநில மாநாடு

கடந்த 20.5.2023 அன்று காலை சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டினைத் தொடங்கி வைத்த தொ.மு.ச. பேரவையின்   பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண் முகம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நான் அன்றைக்கே எச்சரித்தேன்!

உதாரணத்திற்கு ஹூண்டாய் கம்பெனி - முதன் முதலில் கொரியன்ஸ் இங்கே வரும்பொழுது, நாங்கள் எல்லா பணிகளையும் ரோபோக்களை வைத்துத் தான் செய்வோம் என்று சொன்னார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன், ‘‘இவன் நம்மிடம் உள்ளவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு, நம்மை ஏமாற்றி விட்டுச் சென்றுவிடுவான்'' என்றேன்.

தலைவர் சொன்னார், அந்த ஒப்பந்தம் வேண் டாம் என்று.

மிகவும் கஷ்டப்பட்டு, ‘ஒன்-தேட் ரோபோ' என்று வந்தது. நம்முடைய ஆட்சியும் போயிற்று. இப்பொழுது நூற்றுக்கு நூறு சதவிகிதம் ரோபோக் களை வைத்துப் பணி நடைபெறுகிறது.

தொழிற்சாலைகள் இங்கே வந்தால், நம்முடைய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவேண்டும்!

எத்தனை லட்சம் கார்கள் இங்கே தயாரிக்கப்பட்டு, நம்முடைய அனைத்து சாதனங்களையும் பயன் படுத்திக்கொண்டு, அவர்கள் பணம் பெருக்கிக் கொள்கின்றனர். 

ஆகவே, தொழில் வருவது பெரிதல்ல; தொழிற் சாலைகள் இங்கே வந்தால், நம்முடைய இளைஞர் களுக்கு வேலை கிடைக்கவேண்டும்.

எதற்காக நாங்கள் போக்குவரத்துத் துறையில் ஆட்களை போடுங்கள்; மின்சார வாரியத்தில் ஒப் பந்தக்காரர்களை நிரந்தரப்படுத்துங்கள்; சர்க்கரை ஆலையில் செய்யுங்கள்; சிவில் சப்ளையில் செய் யுங்கள் என்று சொல்கிறோம் என்றால், பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள், அய்.டி.அய்., படித்தவர்கள் போன்றவர்கள்தானே இருக்கிறார்கள்; அதற்குமேல் எங்கே படிக்கிறார்கள்? இவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று சொன்னால், இந்த அமைப்புகள் கொடுத்தால்தான், நம் மக்களுடைய பொருளாதார வளர்ச்சி உயரும் என்பதற்காக அதற் கென்று ஒரு அஜெண்டாவை போட்டு, தொடர்ந்து அரசோடு நாங்கள் சண்டை போட்டு வருகின்றோம். அதுகுறித்துகூட இப்பொழுது ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஊழியர்களுக்கு ஒரு கேண்டீன்; தொழிலாளர்களுக்கு இன்னொரு கேண்டீன்

நம்மைச் சார்ந்தவர்கள், ஒரு தொழிற்சங்கத்தைப் பார்க்கும்பொழுது, தொழிலாளர்களைப் பாகுபாடு படுத்திப் பார்க்கக் கூடாது; அவர்களும் நம்மோடு உள்ளவர்கள்தான். ஒரு பெரிய கம்பெனி இங்கே இருந்தது. அந்தக் கம்பெனியில், அலுவலக ஊழியர் களுக்கு ஒரு கேண்டீன்; தொழிலாளர்களுக்கு இன் னொரு கேண்டீன்.

ஊழியர்கள் யார் என்று கேட்டால், தொழிலாளி களுடைய  பிள்ளைகள்தான் அங்கே ஊழியர்களாக இருக்கிறார்கள். அவன் என்னமோ பார்ப்பான் போலவும், இவர்கள் என்னவோ சூத்திரர்கள் போல வும் இரண்டு பேரும் தனித்தனியே சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற பாகுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்து, மறுபடியும் மறுபடியும் - என்னதான் நம்மைப் போல் உள்ளவர்கள் எல் லாம் அதையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டுப் போனாலும், வயலில் களை முளைப்பதுபோன்று, இதுபோன்ற விஷயங்கள் உள்ளே வந்து கொண்டி ருக்கின்றன. இதுபற்றி நான் பேசவேண்டும் என்றால், இப்படிப்பட்ட மாநாட்டில்தான் என்னால் பேச முடியும்; வேறு எங்கும் என்னால் பேச முடியாது.

அதற்குப் பிரச்சார பீரங்கி

அதற்கு முக்கிய காரணம் என்னவென்று சொன் னால், நீங்கள்தான் அதற்குப் பிரச்சார பீரங்கி.

நீங்கள் ஒரு கோரிக்கை வைத்து, அதனால் ஊதிய உயர்வு கிடைக்கின்றது என்பதைவிட, நம்முடைய கொள்கைகள் அந்தத் தொழிலாளர்களின் மத்தியில் உணர்வாகப் போய்ச் சேரவேண்டும்.

பல இடங்களில், 40 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியவுடன், பெற்ற அப்பா - அம்மாவையே மதிக்கமாட்டேன் என்கிறான். அவனுக்கு பி.எஃப் எவ்வளவு பிடிக்கவேண்டும் என்றே தெரியவில்லை.

இதற்காக நாங்கள் சண்டை போட்டு, 2014 ஆம் ஆண்டிலிருந்து, ஒருமுறை ஒருவருக்கு பி.எஃப். தொகை பிடித்துவிட்டால், அவனுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் கார்டு ஒன்றை வாங்கிக் கொடுத்தோம். இப்பொழுது அவன் எந்தக் கம்பெனிக்கு வேலைக் குச் சென்றாலும், அந்த அக்கவுண்ட்டுக்குப் பணம் வரும்.

அதற்கு என்ன காரணம்?

1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை...

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வைப்பு நிதியில், 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ‘க்ளைம்' செய்யாமலே அந்தப் பணம் நிதித்துறையில் இருக்கிறது.

காரணம் என்ன?

நம்முடைய தொழிலாளியின் அலட்சியம்தான்!

‘ரிட்டன்ட் ஆஃப் தி கேப்டல்’

இதையெல்லாம் நாம் எடுத்துச் சொல்கிறோம். ஓய்வூதியம் வாங்கிக் கொடுத்தோம்; அதில் ‘ரிட் டன்ட் ஆஃப் தி கேப்பிட்டல்' என்று ஒன்று இருந்தது. ஓய்வூதியதாரர்களிடம் ரூ.100 பிடிப்பார்கள். 10 ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன், அந்த ஓய்வூதிய தாரர் இறந்து போனவுடன், அவருடைய வாரிசுதாரர் களிடம் கொடுப்பார்கள்.

ஓய்வு பெற்ற ஒருவர் என்னிடம் வந்தார்; ஓய்வூ தியதாரர் ஒருவர் இறந்துவிட்டார் என்று சொன்னார். 

சரி, அவருக்கு  ஆர்.ஓ.சி. கிடைத்ததா?

கிடைக்கவில்லை என்றார்.

சரி, வாங்க என்று அவரை அழைத்துக்கொண்டு போய்,  வைப்பு நிதி ஆணையரை சந்தித்துப் பேசி னேன்.

அவரோ, சார், இதுபோன்ற ஒரு க்ளைமே வரவில்லை என்றார்.

உடனே நான், அந்த அசோசியேசனைச் சேர்ந்த வர்கள் அனைவரையும் அழைத்து, எத்தனை ஓய் வூதியதாரர்கள் இறந்து போயிருக்கிறார்களோ, அவர் களுடைய குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, அந்தப் பணத்தை வாங்கிக் கொடுங்கள் என்று சொன்னேன்.

உரிமையைப் பெற்றுக்கொள்வதில், 

யாரும் கவலைப்படுவதே இல்லை

அதற்குப் பிறகு வைப்பு நிதி ஆணையர் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, ‘‘சார், நீங்கள் வந்துவிட்டுச் சென்ற பிறகு, மாதம் 10 க்ளைம் வருகிறது; நாங்களும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்'' என்று சொன்னார்.

ஏனென்றால், அது நம்முடைய உரிமை. அந்த உரிமையைப் பெற்றுக்கொள்வதில், யாரும் கவலைப்படுவதே இல்லை.

எதற்காகப் பயப்படவேண்டும்?

யாரிடமும் அடிமையாக இருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? 

நேற்றுகூட நான் முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு பேசினேன். 8 மணிநேரம் வேலை செய்கிறோம்; நல்ல சம்பளம் வாங்குகிறோம். குடும்பத்தை நடத்துகின்றோம். கொஞ்சம் மிச்சத்தை அரசியலுக்கும் பயன்படுத்துகின்றோம். யாரிடமும் அடிமையாக இருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பயப்படவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அவன்தான் தொழிலாளி.

அப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதை செய்யவில்லை என்று சொன்னால், நம்மை மற்றவர்கள் அடிமையாக்குவது என்பது சர்வ சாதாரணம்.

ஆகவே, பல்வேறு கோணங்களில், சனாதனம்   ஒரு பக்கம் - கும்பகோணத்தைவிட்டு அய்யரையெல்லாம் ஒழித்துவிட்டாலும்கூட, இன்னும் சில அய்யர்கள் வந்து உள்ளே நுழைகிறான். அந்த அய்யர்களை கவனிக்கவேண்டி இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் சென்று, புரோகிதம் செய்ய வரமாட்டேன் என்று சொன்ன அய்யர்கள் - இன்றைக்கு என்ன செய் கிறார்கள் என்றால், ஆதிதிராவிடர் சமூகத்தினர் இருக்கின்ற காலனியில்கூட புரோகிதம் செய்கிறேன் என்று வருகிறான்.

அவன் அங்கே வருவது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. நம்மாள்தான் இளிச்சவாயன். 

‘‘அய்யோ, சாமியே இங்கே வந்துட்டாருங்க; அத னால், அவருக்கு வேண்டியதை இன்னும் கொஞ்சம் கொடுங்கள்'' என்கிறான்.

அய்யர்களுக்கு வேண்டியது வருமானம்.

நாம் எப்படி தடுமாறுகின்றோம்; அந்த நிலை யிலிருந்து எப்படியெல்லாம் போகிறோம் என்பதை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆட்களைப் போடவேண்டியதில்லை என்று சொல்கிறார்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்

அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் மேலே அமர்ந்துகொண்டு, அடித்தட்டு மக்கள் - சி.என்.டி. ஓர்க்கர்ஸ் என்று சொல்வார்கள் - அவர்கள் எல்லாம் தேவையில்லை - நாங்கள் கம்ப்யூட்டரிலேயே வேலை செய்துவிடுவோம். ஆட்களைப் போட வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள்.

நேற்று முன்தினம் ஓர் அறிக்கை வந்திருக்கிறது - அய்.ஏ.எஸ். அதிகாரிகள், யு.பி.எஸ்.சி.லிருந்துதான் வேலைக்கு ஆட்களை எடுக்கவேண்டும்; சர்வீஸ் கமிசனிலிருந்துதான் எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக, அறிவார்ந்த அறிவாளிகளை தாங்களே தேர்வு செய்து, அவர்களை இணை செயலாளர் அளவிற்கு, அவர்களைக் கொண்டு வரலாம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளே புகுத்துகின்றார்கள் என்று சொன்னால், யாரைக் கொண்டுவரப் போகிறார்கள்?

யு.பி.எஸ்.சி. தேர்வில் - தாழ்த்தப்பட்டவர்களுக்கு இத்தனை சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இத்தனை சதவிகிதம் என்று நம்முடைய மக்களுக்குக் கிடைக்கும்.

இவர்களே தேர்ந்தெடுத்தால், நமக்கு என்ன கிடைக்கும்?

ஒன்றும் கிடைக்காது.

அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே, இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங் கள் நம்மைச் சுற்றி சுற்றி வளைத்து, வளைத்து வந்துகொண்டிருக்கின்றன.

ஜாக்கிரதையாகவும் - பாதுகாப்பாகவும் 

நாம் இருக்கவேண்டும்! 

ஆகவே, நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பாதுகாப்போடு இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

ஊதியம் பெறுவதோ அல்லது பஞ்சப்படியை பெறுவதோ அல்லது போனசைப் பெறுவதோ என்பது பெரிய விஷயமே அல்ல. ஒன்றுபட்ட சக்தி இருக்குமேயானால், நீ கேட்பது நிச்சயம் கிடைக்கும்.

அதைத்தான் தந்தை பெரியார் சொன்னார், ‘‘கூலி கேட்காதே, அது ஒரு கேவலமானது; பங்கைக் கேள்'' என்று சொன்னார். 

இன்றைக்கு அது நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது.

என்னுடைய ஊரில் நிறைய நிலச்சுவான்தாரர்கள் தான். சனிக்கிழமை தோறும் கூலி போடுவார்கள்; என்னுடைய அப்பா, மதியமே கூலி வாங்கிக் கொண்டு போகச் சொல்லிவிடுவார். 

இன்னும் சில மிராசுதாரர்கள், இரவு 9 மணிவரை யிலும் கூலி கொடுக்கமாட்டார்கள்; அவர்களிடம் சென்று நான் கேட்பேன், ‘‘ஏன் இப்படிச் செய் கிறீர்கள்?'' என்று.

‘‘உனக்கு ஒன்னுந்தெரியாது மாப்பிளே, கூலி கொடுத்தால் உடனே கள்ளுக்கடைக்குச் சென்று விடுவான்'' என்று சொல்லுவார்கள்.

நீங்கள் அவர்களின் வீட்டின் வாசலில் நிற்கின்ற காலம் வரும் என்றேன்!

நான் சொல்லுவேன், ‘‘இன்றைக்கு அவனை உன்னுடைய வாசற்படியில் நிற்க வைக்கிறீர்கள்; ஒரு காலம் வரும், நீ அவனுடைய வாசல்படியில் நிற்கவேண்டிய காலம் வரும்'' என்று சொன்னேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 98 வயது; அவருடைய மகன் அழைத்ததால், நான் சென் றிருந்தேன். அவரைப் பார்த்தேன், ‘‘நீ என்னைக்கு வாயைத் திறந்தாயோ, காலையில் அவனுடைய வீட்டிற்குமுன் நின்று வேலைக்கு வாப்பா என்று கூப்பிடுகிறேன். அவன் வேலைக்கு வந்தவுடன், அவனுக்கு டிபன் வாங்கிக் கொடுக்கிறேன்; 8 மணிக்கு சாப்பிடுகிறான். பிறகு, டீ, வடை வாங்கிக் கொடுக்கிறேன். பகல் 12 மணியோடு வேலை முடிந்து விட்டது என்ற டிமாண்ட் செய்கிறான் என்றார்.

அவனுக்கு அந்த சக்தி இருக்கிறது. ஒரு விவ சாய கூலித் தொழிலாளி, 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால்தான், 4 மணிநேரம் வேலை செய்வேன் என்று டிமாண்ட் செய்கிறான்.

ஆனால், படித்துவிட்டு நீங்கள், ஒப்பந்தப் பணிக்குச் செல்கிறீர்கள்; கேசுவலுக்குச் செல்கிறீர்கள். அந்த சக்தியை இழந்து ஏன் நீங்கள் இருக்கிறீர்கள்.

நான் ஊருக்குச் செல்லும்பொழுது, அந்தக் கூலித் தொழிலாளி, இப்படி கேட்கிறான், அப்படிக் கேட் கிறான் என்று சொல்லும்பொழுது, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

ஒரு காலத்தில் அவர்களை எவ்வளவு தொல்லை கொடுத்தீர்கள். அதற்குப் பதிலடி இப்பொழுது கொடுக்கிறார்கள்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’’

வயலில் நீ இறங்கி வேலை செய்; சங்க காலத்தில் எப்படி இருந்தது; ‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்'' என்றுதானே சொன்னார்கள்.

எல்லோரும் வேலை செய்து, வரக்கூடியதை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டிய ஒரு சமத்துவம் தான் திராவிட நாட்டில் இருந்தது.

அப்படிப்பட்ட நாட்டில், பாகுபாட்டை ஏற்படுத்தி, பிரித்து, நான் உயர்ந்தவன் - நீ தாழ்ந்தவன் என்று போனதினுடைய விளைவை எல்லோரும் அனு பவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அமைச்சரிடமும் சொல்லியிருக்கிறேன்!

அமைச்சரிடம்கூட நான் சொல்லியிருக்கிறேன், ‘‘நிரந்தர வேலைகளையெல்லாம் ஒப்பந்தக்காரர் களிடம் கொடுத்தீர்கள் என்றால், ஒரு காலத்தில் ஒப்பந்தத் தொழிலாளி, கட்டி வைத்து உன்னை அடித்து உதைத்துவிட்டுச் செல்லுவான்; அவன்மேல் நீங்கள் வழக்குக்கூட போட முடியாது.

நிரந்தரப் பணியாளர் என்றால், அவனுக்கு சார்ஜ்சீட் கொடுக்கலாம்; வேலையிலிருந்து நீக்கலாம்; ஆனால், ஒப்பந்தத் தொழிலாளியை வேலையை விட்டு நீக்கினால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது; உதைதான் வாங்குவீர்கள்'' என்  றேன்.

ஆகவே, இப்படிப்பட்ட சின்னச் சின்ன இடர்ப் பாடுகள்; நம்மீது பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல்கள் வருகின்றன. அந்தத் தாக்குதல் களையெல்லாம் நாம் சமாளிக்கவேண்டும்.

சட்ட ரீதியாக இருக்கக்கூடிய பிரச்சினைகள், குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எப்படி ஒழிப்பது? ஓய்வூதியத்தை எப்படி உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.

மற்ற இடத்தில் பேச முடியாததை, இந்த இடத்தில் நான் பேசியிருக்கின்றேன்!

ஆனால், இதையும் நாம் கவனிக்கவேண்டிய சூழ்நிலைகள் இருக்கின்றது என்பதை, மற்ற இடத் தில் பேச முடியாததை, இந்த இடத்தில் நான் பேசியிருக்கின்றேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது, மோகன் உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டேன்.

உடனே மோகன் அவர்கள், ‘‘ஆசிரியர் சொல்லி அனுப்பிவிட்டார்; சண்முகத்தின் கருத்து என்னவோ, அதுதான் உங்கள் கருத்தாக இருக்கவேண்டும்'' என்று சொல்வார்.

ஆசிரியர் அவர்கள் காட்டிய வழியில்தான் இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்!

எனக்கு அது ஒரு பெரிய பெருமையாகும். ஏனென்று சொன்னால், தந்தை பெரியார் அவர்களின் வழியில் நாங்கள் வந்தாலும், ஆசிரியர் அவர்கள் காட்டிய வழியில்தான் இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து எப்பொழுதும் மாறாதவர்கள். அப்படியே இருக்கக் கூடியவர்கள்.

ஆகவே, நான் அனைவரையும் கேட்டுக்கொள்வது, நம்முடைய செல்வங்களுக்கு பகுத்தறிவுச் சிந்தனையையும், சுயமரியாதை உணர்வையும் ஊட்டவேண்டும். அப்படி நாம் செய்தால்தான், நாம் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் என்பது வரும். அது இல்லாதவரை, வெறும் பணம் பண்ணுகின்ற ஏடிஎம்மாக இருந்தால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

எங்களுடைய உறவினரைப் பார்க்க அமெரிக்காவிற்குச் சென்றேன்; அங்கே சென்றதும், நம்மை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு, அவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். ஏனென்றால், அங்கே சுதந்திரமாகப் போக முடியாது என்பதால்.

அவர்களும் காலையில் செல்கிறார்கள், மாலையில்தான் வருகிறார்கள். அந்த அளவிற்கு உழைக்கிறார்கள்.

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் உழைக்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், ‘‘உழைப்போம்; கொஞ்சம் சேர்த்து வைப்போம்; பின்னர் வந்தாவது, தமிழ்நாட்டிற்குச் சென்று சுதந்திரமாக இருப்போம்'' என்கிற ஏக்கத்தோடு அவர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நம்முடைய உரிமைகளை, நாம் என்றும் 

விட்டுக் கொடுக்கக் கூடாது!

ஆகவே, நம்முடைய உரிமைகளை, நாம் என்றும் விட்டுக் கொடுக்காமல், மற்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் நீங்கள் அனைவரும் இருப்பீர்கள் உறுதி. ஆனால், உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அதைச் சொல்லி, அவர்களையும் உங்கள் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல்; அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்று சொல்லி,

உங்களுக்கு என்றும் நான் 

உறுதுணையாக இருப்பேன்!

இந்த மாநாட்டை நான் மனமார எங்கள் பேரவையின் சார்பில் வாழ்த்துவதோடு, அய்யா ஆசிரியர் தலைமையில் இயங்கக்கூடிய நீங்கள் வீரர்கள்; கொஞ்சம்கூட சோடை போகாதவர்கள். தொடர்ந்து உங்களுடைய பணிகளைத் தொடர்வீர்கள். உங்களுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன் என்று கூறி, வாழ்த்தி, விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தொ.மு.ச. பேரவையின்   பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள் உரையாற்றினார்

திங்கள், 29 மே, 2023

வருங்கால வைப்பு நிதி திட்டம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசம்

  

புதுடில்லி,மே4 - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) அதிக ஓய்வூதியத்தை பெறு வதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலக் கெடு ஜூன் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இபிஎப்ஓ சந்தாதாரர்கள் அதிக ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து நபர்களும் அதிக ஓய்வூதியத்தை பெறுவ தற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 26 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான வசதி 3-ஆம் தேதியுடன் முடிகிறது. அதிக ஓய்வூதியம் கோரி சந்தா தாரர்களிடமிருந்து இதுவரையில் 12 லட்சம் விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு இபிஎப்ஓ அறிக் கையில் தெரிவித்துள்ளது.

கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் பல கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக இபிஎப்ஓ இந்த நடவடிக்கையை எடுத் துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர்/உறுப்பினர்கள் எதிர் கொள்ளும் எந்தவொரு சிரமத்தையும் எளிதாக்கும் வகையில் அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்குவதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இபிஎப்ஓ தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வு ஊதிய ஆணைகள்: முதலமைச்சர் வழங்கினார்

  

 12

சென்னை, மே 7- தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தமிழ்நாடு அரசு ஆட்சி பொறுப் பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர் கல்வி உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டைகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களை பாராட்டி கேடயங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (6.5.2023) நடை பெற்றது. 

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியுள்ள பயனாளிக ளுக்கும் மாதாந்திர ஓய்வூதிய தொகை யாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரு கிறது. அதன்படி, முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர்களுக்கு 12 வகையான திட்டங் களின் கீழ் தற்போது 34 லட்சத்து 62 ஆயிரத்து 92 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 

தற்போது பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய முதியோர் உதவித்தொகைக் கான அனுமதி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள 64 ஆயிரத்து 98 பேர் மற்றும் புதிதாக 35 ஆயிரத்து 902 பேர் என மொத்தம் ஒரு லட்சம் பேர் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் வகையில் (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி முதல்-அமைச்சர் ஆணையிட்டார். அதன் அடிப்படையில் ஒரு லட்சம் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில், 10 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கி அந்த திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இவர்கள் அனைவரும் ஜூன் மாதம் முதல் உதவித்தொகையை பெறத் தொடங்குவார்கள். 

புதுமைப்பெண் திட்ட பற்றுஅட்டை 

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில் நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக்கிட 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி களில் 6 முதல் 12ஆ-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவி களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை 5.9.2022 அன்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தை களின் விருப்ப தேர்வுகளின்படி அவர் களின் மேற்படிப்பை தொடர ஊக்கு வித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்க ளின் சமூக மற்றும் பொருளாதார பாது காப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் முதற் கட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 210 மாணவிகளும், 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்ட 2-ஆம் கட்டத்தின் மூலம் மேலும் 94 ஆயிரத்து 507 மாண விகளும் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 717 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்காக இதுவரை மொத்தம் ரூ.121.18 கோடி மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்று (6.5.2023) நடந்த நிகழ்ச்சியில் 10 மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித் தொகைக்கான வங்கி பற்று அட்டை களை முதல்-அமைச்சர் வழங்கினார். 

நான் முதல்வன் திட்டம் 

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கென தொழில் துறை யின் தேவை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும் நான் முதல்வன் திட்டத்தை 1.3.2022 அன்று முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2022--2023ஆ-ம் ஆண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. கல்லூரி பாடத்திட்டத்தில் வழங்கப்படும் வழக்கமான பாடப்பிரிவு களுடன் சேர்த்து மாறிவரும் தொழில் நுட்ப உலகிற்கேற்ப திறன் படிப்புகளை வழங்குவதே நான் முதல்வன் திட்டம் ஆகும். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியுடன் பிரத்யேக திறன்சார் பாடங்களை வடிவமைத்து, அவர்கள் கல்லூரி பாடத் திட்டத்துடனேயே சேர்த்து அவர்கள் படிக்கும் கல்லூரி களில் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். 

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 483 பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 972 மாணவர்களும், 842 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 338 மாணவர் களும் பயன டைந்துள்ளனர். 

இப்பயிற்சிகளின் மூலமாக மா ணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை பெற்று தருவதற்கான முகாம்கள் கல் லூரி வளாகங்களிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பொறியியல் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் 2022--2023ஆ-ம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 682 இறுதி யாண்டு மாணவர்களுக்கு, சீமென்ஸ், டஸ்சால்ட், மைக்ரோசாப்ட், அய்.பி. எம்., சிஸ்கோ ஆட்டோடெஸ்க் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவும், எல் அன்டு டி, டி.சி.எஸ்., இன்போசிஸ், என்.எஸ்.இ. போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 

இதன் பலனாக, தமிழ்நாடு முழுவ தும் இதுவரை நடந்துள்ள வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக 59 ஆயி ரத்து 132 மாணவர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற் றுள்ளது. 

மேலும், இத்தகைய வேலை வாய்ப்பு முகாம்கள் இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ளது. கலைக் கல் லூரி மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத் தின் மூலமாக 2 லட்சத்து 48 ஆயிரத்து 734 இறுதியாண்டு மாணவர் களுக்கு முன்னணி நிறுவனங்களின் பயிற்றுநர் மற்றும் பாடங்களுடன் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன. இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் இது வரை நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 62 ஆயிரத்து 634 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள் ளது. மேலும் வேலைவாய்ப்பு முகாம் கள் ஜூன் மாத இறுதிவரை நடை பெறவுள்ளது. 

மேலும், சி.அய்.அய்., டிட்கோ, சிப்காட், எம்.எஸ்.எம்.இ., எல்காட், டிஷ்.எம்ப்ளாய்மென்ட், ஸ்டார்ட்அப் டிஎன், கைடன்ஸ் டிஎன், எப்அய் சிசிஅய், நாஸ்காம் போன்ற அமைப்பு களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மேலும் பல லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற் றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று (6.5.2023) நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பயின்று திறன் பயிற்சி முடித்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் உயர்ந்த ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்த வர்களில் 5 பேருக்கு முதல்-அமைச்சர் கேடயங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார். அவர்களில் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் ஊதியம் பெறும் இளைஞர்களும் இடம் பெற்றிருந்தனர். புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலமாக பயன் அடைந்த மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மேடைக்கு வந்து, அவர்கள் பெற்ற நன்மைகளை எடுத்துக் கூறி தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். 

மின் ஊழியர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்

  

 12

சென்னை, மே 11 மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

தமிழ்நாடு  மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 10.5.2023 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1.12.2019 நாளன்று பெறுகின்ற ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு, நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக் கின்றன. அதேபோல, 1.12.2019ஆம் நாளன்று, பத்து ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலு வலர்களுக்கும் பணிப்பலனாக 1.12.2019 நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சத வீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இது நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 527 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இவ்வூதிய உயர்வின் மூலம் ஏற்படும் நிலுவைத்தொகை, 2019ஆம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை 31.3.2022 வரை,மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் இரண்டு தவணைகளாகவும், 1.4.2022 முதல் 31.5.2023 வரை வழங்க வேண்டிய நிலுவைத்தொகை இரண்டு தவணை களாக வழங்கவும் முடிவு செய்ததை, நிர்வாகமும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால், கூடுதலாக ரூ.623 கோடி வாரியத்திற்கு செலவுகள் ஏற்படும். இந்த ஊதிய உயர்வு மூலம் பயன் பெறக்கூடிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை 75,978. 10  ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிப் பலனாக 3 சதவீதம் பெறும் பணியா ளர்களின் எண்ணிக்கை, 62,548. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களுக்கான அரசு தொ.மு.ச. மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

 

 5

சென்னை, மே 19  ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து தொமுச செயல்பட வேண்டும் என்று தொமுச மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25-ஆவது பொதுக்குழு மற்றும் பொன்விழா மாநாட்டின் நிறைவு நாள் (18.5.2023) நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

திமுக, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கமாக உள்ளது. ஜாதிய ரீதியாக அடக்கப்பட்ட மக்கள், திமுகவில் தனித்தனியாக இயங்கி வந்த சங்கங்களைஇணைத்து மத்திய சங்கமாக உருவாக்கியவர் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலை ஞர்தான். அதற் கான குழு அமைத்து அக்குழு பரிந்துரையின் பேரில்தான் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை என்ற அமைப்பு 1970இ-ல் உருவானது. கடந்த 2001 முதல் தொமுச.வில் மு.சண்முகம் பொதுச்செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சண்முகம் உள்ளிட்டோரின் செயல் பாட்டால்தான் 2008ஆ-ம் ஆண்டு தொமுச பேரவைக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரம் கிடைத்தது. தொமுச பேரவை நடவடிக்கையால் 19 மாநிலங் களில் இணைப்பு சங்கங்கள் உருவாகி யுள்ளன. ஒடிசாவில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அம்மாநில அரசுசிறந்த தொழிற்சங்கமாக தொமுசவை தேர்வு செய்து பரிசு வழங்கியுள்ளது. 

தொழிலாளர் நலன் மீது கவனம்

1969ஆ-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், தொழிலாளர் மீது தனி கவனம்செலுத்தி, தொழிலாளர் நலத்துறையை தனியாக பிரித்து, தனிஅமைச்சகத்தை உருவாக் கினார். அதே ஆண்டு மே 1-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நடைமுறைப்படுத்தியது கலைஞரின் சாதனை. பல தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம்பெறச் செய்தார். தொழிலாளர்களுக்கு பணிக்கொடை திட்டத்தையும், தொழில் விபத்து நிவாரண திட்டத்தையும் அறிமுகப் படுத்தினார். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துடன், விவசாய தொழி லாளர், மீனவர், கிராம கோயில் பூசாரிகள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரை சேர்த்து 36 அமைப்பு சாரா நலவாரியங்களை உருவாக்கியதும் திமுகவின் சாதனைதான்.

திமுக ஆட்சியில்தான் உடல் உழைப்பு தொழிலாளர் சட்டப்பிரிவில், பல வாரியங்கள் உருவாக்கப் பட்டன. போக்குவரத்து ஓய்வூதியம், பஞ்சப்படி வழங்கப்பட்டது. மின் வாரிய  ஒப்பந்த தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் பணி நிரந்தரம் தந்தது திமுக அரசுதான். குறைந்த பட்ச போனஸ் 8.3 சதவீதம், அதிகபட்சம் 20 சதவீதம் என ஒன்றிய அரசை அறிவிக்கச்செய்தது கலைஞர் தான். அந்த வழியில்தான், திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் நலவாரியங் களில் கடந்த அதிமுக அரசு விட்டுச் சென்ற ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டு, 6.71 லட்சம் பேருக்கு நலத்திட்ட உத விகள் வழங்கப்பட் டுள்ளன. தற்போது, கடை, நிறுவனங் களில் இருக்கை வசதி ஏற்படுத்த சட்டத்திருத்தம் செய்யப்பட் டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர் களுக்கு ஊதிய முரண்பாடுகள் களைந்து ஊதிய உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இந்த பேரவை அமைப்பில் தான் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் ஜனநாயக முறைப்படி நடை பெறுகிறது.

தொழிலாளர் தோழர்கள் தங்கள்உழைப்புடன் சேர்த்து உடல் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். அதுதான் அவர்களுக்கு நீங்கள் தர வேண்டிய மாபெரும் சொத்து. நம் அரசு, தொழிலாளர் நலன் காக்க செய்துள்ள திட்டங்கள், சாதனைகளை அனைத்து தொழிலாளர்களிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பும், கடமையும் தொமுச தோழர்களிடம் தான் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து செயல்பட வேண்டும். உங்களின் ஒருவனாக என் றைக்கும் நான் இருப்பேன்.

 இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

  

சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை, மே 22- பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில், வியா பாரம் செய்ய கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்து உள்ளார்.

சென்னை மாவட்ட ஆட் சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது, பிற் படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன் னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற் றும் வியாபாரம் செய்ய பொது கால கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் போன்ற கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட் டோர், பொருளாதார மேம் பாட்டுக் கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில், கடனுதவி பெற விண்ணப்பதாரர் பிற் படுத்தப்பட்டோர், மிக பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தவராக இருத் தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும் பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படு கிறது. ஆண்டு வட்டிவிகிதம் 6% முதல் 8% வரை. பெண் களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5%. நுண் கடன் வழங்கும் திட்டத் தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ.1.25 லட்சம் வரை யும் குழு ஒன்றுக்கு அதிகபட் சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4%.

மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த் தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட் டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நுண் கடன் வழங்கும் திட்டத் தின் கீழ் ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங் கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5% ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு சங்கங்களில் உறுப்பின ராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6%.

சென்னை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தின் 2ஆவது மாடியில் செயல்படும் பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவுச் சங்கங்க ளின் மண்டல இணைப் பதி வாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண் ணப்பம் பெற்றுக் கொள்ள லாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங் களை பூர்த்தி செய்து ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண் டும்.

எனவே, மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங் களைப் பெற்று உரிய ஆவணங் களுடன் சமர்ப்பித்து பயன் பெறலாம். 

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

செவ்வாய், 23 மே, 2023

தாம்பரம் தொழிலாளரணி 4வது மாநாடு - காணொலி


 

தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., உரை (1,2)

 தந்தை பெரியாரின் கொள்கைகள், கருத்துகள் ‘‘ஆழமானவை, நேர்மையானவை, எதைப்பற்றியும் அஞ்சாதவை!’’

 

யாரும் சாதிக்க முடியாததை இந்த இயக்கம் சாதித்திருக்கின்றது

அரசு ஊழியர்களைப்போல - போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றோம்!

14

தாம்பரம், மே 23 போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்களுக்கு, அரசு ஊழியர்களைப்போல ஓய்வூதி யத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றோம்; போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஏறத்தாழ 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய்வரை ஓய்வூதியம் கிடைப்பதற்கு வழிவகை செய்த இயக்கம் நம்முடைய இயக்கம் என்றார் தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள்.

திராவிடர் தொழிலாளர் கழக 

4 ஆவது மாநில மாநாடு

கடந்த 20.5.2023 அன்று காலை சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டினைத் தொடங்கி வைத்த தொ.மு.ச. பேரவையின்   பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண் முகம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அறிவுப்பூர்வமாக எதிர்க்கவேண்டும்; இன்னொன்று அனைவரும் ஒற்றுமையோடு எதிர்க்கவேண்டும்

அதை எதிர்ப்பது எப்படி?

ஒன்று, அறிவுப்பூர்வமாக எதிர்க்கவேண்டும்; இன் னொன்று அனைவரும் ஒற்றுமையோடு எதிர்க்க வேண்டும். தொழிலாளர்களின் மனதில், அந்தக் கருத்துகளை உருவாக்கவேண்டும். இவற்றையெல்லாம் செய்து நாம் அதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த எண்ணங்கள் உங்களுக்கு வரவேண்டும் என்பது தான் இந்த மாநாட்டில் நான் சொல்ல விரும்புவது.

தொ.மு.ச. பேரவையில் இருக்கக்கூடியவர்களின் எண்ணங்கள் வேறு; திராவிடர் தொழிலாளர் கழகத்தில் இருக்கக்கூடியவர்களின் எண்ணங்கள் என்பது வேறு. இதை நான் நன்றாகத் தெரிந்தவன் என்பதால்தான், இங்கே நான் திறந்த மனதோடு பேசுகின்றேன்.

நாம் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டும்

நம்மைப் பொறுத்தவரையில் இந்தப் பாகுபாடு களைக் களைவதற்கு நாம் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

நான் ஏறத்தாழ 1982 ஆம் ஆண்டிலிருந்து தொ.மு.ச. பேரவையில் இருந்து வருகின்றேன். 1989 ஆம் ஆண்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கழகம் ஆட்சிக்கு வந்தது.

தலைவரிடம் சென்று, சில விஷயங்களைப்பற்றி அவரிடம் சொல்வோம். கொள்கை ரீதியாக, ஓர் உதாரணத்திற்கு சர்க்கரை ஆலைகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவித பதவி உயர் வும் இல்லை. ஆனால், அவர்கள் காலையில் ஒரு மணிநேரம் -மாலையில் ஒரு மணிநேரம்தான் பணி; மீதி நேரம் எல்லாம் ஒர்க்ஷாப்பிலேதான் அமர்ந்திருப்பார்கள்.

அங்கே இருக்கின்ற பிட்டர் சொல்கின்ற வேலைகளையெல்லாம் அவர்கள் செய்வார்கள்.

துப்புரவு பணியாளர் என்ற பெயர் துடைத்தெறியப்படும்

நான் தலைவரிடம் சொன்னேன், இதுபோன்று நிறைய பேர் இருக்கிறார்கள்; அவர்களையெல்லாம் ஒர்க்ஷாப்பிலே உதவியாளர்களாக நியமித்தால், துப்புரவுப் பணியாளர் என்ற அந்தப் பெயரை மாற்றம் செய்து, மெக்கானிக் என்ற பெயர் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கும். துப்புரவு பணியாளர் என்ற பெயர் துடைத்தெறியப்படும் என்று சொன்னேன்.

நான் இதைச் சொல்வதற்குக் காரணம் என்ன வென்றால், கரூரைச் சேர்ந்த செல்வம் என்கிற அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் இருந்தார். அவருடைய அப்பா, கரூர் முனிசிபாலிட்டியில் துப்புரவு தொழிலாளி.

அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி என்னிடம் சொல்வார், ‘‘அப்பா என்னோடு வரமாட்டேன் என்கிறார்; நானும் அங்கே செல்ல முடியவில்லை; ஏனென்றால், அவர் துப்புரவு தொழிலாளியாக இருக்கிறார்'' என்று வேதனையோடு சொன்னார்.

இதைத் தலைவரிடம் சொன்னோம்; தலைவர் அதனை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டு, உடனடியாக அந்த சமத்துவத்தை உருவாக்கிக் கொடுத்ததினால், இன்றைக்கு அத்துணை பேரும் ஃபோர்மேனாகி, ஓய்வு பெறுகிறார்கள்.

நாம் ஒரு விரிந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம்!

வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொடுத் தோம்; போனசை வாங்கிக் கொடுத்தோம் என்பது மட்டுமல்ல; நம்மைப் பொறுத்தவரையில் நாம் ஒரு விரிந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம்.

கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட அத்துணை  பொதுத் துறை நிறுவனங்கள், தனியார்த் துறை நிறுவனங்கள், அந்த வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம் பெறுகிறார்கள். அந்த ஓய்வூதியம் எவ்வளவு என்றால், 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரையில்தான்.

ஆனால், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களுக்கு, அரசு ஊழியர்களைப்போல ஓய்வூதியத் தைப் பெற்றுத் தந்திருக்கின்றோம்.

அரசு ஊழியர்களைப்போல, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு...

அரசு ஊழியர்களைப்போல, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஏறத்தாழ 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய்வரை கிடைக் கின்றது.

நெய்வேலி நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய தொழிலாளி, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி, ஓய்வு பெறும்பொழுது, 3 ஆயிரம் ரூபாய் பென்சன் கிடைக்கிறது.

3 ஆயிரம் ரூபாய்க்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கவேண்டும். நாமும், அவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்பவர் கள்தான். சட்டம் ஒன்றுதான். ஆனால், இதை எப்படி சாதிக்க முடிந்தது? எப்படி சாத்தியமானது?

எல்லோரும் கோரிக்கை வைக்கிறார்கள்; 9 ஆயிரம் ரூபாயாவது பென்சன் கொடுங்கள் என்று ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். 3 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் இல்லை என்று சொல்கிறது ஒன்றிய அரசு.

ஆனால், தமிழ்நாட்டில் கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளி ஒருவர், ஓய்வு பெறும்பொழுது பாதி சம்பளம் அளவிற்கு ஓய்வூதியமாகக் கிடைக்கக்கூடிய ஏற்பாட்டை செய்திருக்கின்றோம் என்று சொன் னால், நாம் மற்றவர்களைவிட எந்த அளவிற்கு உயர்ந்திருக்கின்றோம் என்று பார்க்கவேண்டும்.

யாரும் சாதிக்க முடியாததை 

இந்த இயக்கம் சாதித்திருக்கின்றது

ஆனால், நாம் என்ன நினைக்கின்றோம் - ஒரு டி.ஏ. வரவில்லை என்றால், ஒரு முழம் நீளத்திற்கு வாட்ஸ் அப்பில் செய்தியைப் போடுகிறோம் - அடுத்த முறை தி.மு.க.விற்கு ஓட்டு போடமாட்டோம் என்று.

ஆனால், நம்மைவிட குறைவான ஓய்வூதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள்; துரை.சந்திரசேகரன் இங்கே இருக்கிறார்; நெய்வேலியில் பணி யாற்றியவர்கள் - ஓய்வு பெற்றவர்கள் எவ்வளவு ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். யாரும் சாதிக்க முடியாததை இந்த இயக்கம் சாதித்திருக்கின்றது.

ஒருமுறை பேராசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ‘‘கூட்டுறவில் பணியாற்றுபவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாக ஓய்வூதியம் கொடுக்கவேண் டும்; அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சொல்'' என்று சொன்னார்.

அன்றைய காலகட்டத்தில் ஞானதேசிகன் நிதிச் செயலாளராக இருந்தார்.

கூட்டுறவு வங்கியில் பணியாற்றுபவர்களுக்கு அவர்கள் வாங்குகின்ற ஊதியத்தைவிட, 4 ஆயிரம் ரூபாய் அதிகமாக அரசு ஓய்வூதியமாகக் கொடுக் கிறது.

இவையெல்லாம் எப்படி முடிகிறது? நாம் சிந்திப்ப தால் அதெல்லாம் முடிகிறது.

அதுபோலவே சிவில் சப்ளையில் பணியாற்று பவர்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தவறு பொதுமக்களுடையதுதான்!

திராவிடர் கழகத்தினுடைய தீர்மானங்களைப் படித்தேன். 1929 ஆம் ஆண்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாடு செங்கல்பட்டில் நடைபெறும் பொழுது, தந்தை பெரியார் அவர்கள் ஒரு தீர்மானம் போட்டார்.

பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று. ஆனால், அது நிறைவேறியது எப்பொழுது?

1989 ஆம் ஆண்டு தலைவர் கலைஞரால் நிறைவேற்றப்பட்டது.

எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு?

60 ஆண்டுகளுக்குப் பிறகு.

சாதாரண ஓர் உரிமையைப் பெறுவதற்கு 60 ஆண்டுகாலம் நாம் தொடர வேண்டி இருக்கிறது. அது யாருடைய தவறு? அய்யாவினுடைய தவறும் கிடையாது; எங்களுடைய தவறும் கிடையாது. தவறு பொதுமக்களுடையதுதான்.

ஏன்?

அவ்வப்பொழுது ஆட்சியைக் கலைத்து, மாற்றி மாற்றி வாக்களிப்பதினால்தான்.

அந்த ஒரு தொடர்ச்சி... இல்லாமல் இருந்ததுதான்.

இப்பொழுது சொல்கிறீர்களே, எனக்கு டி.ஏ. வரவில்லை என்று சொன்னால், தி.மு.க.விற்கு வாக்களிக்கமாட்டோம் என்று.

அதுபோன்று நிதானம் இல்லாத ஒரு போக்கு கூடாது - இது நம்முடைய அரசு - நம்முடைய அரசு இருந்தால் - சுவர் இருக்குமேயானால், சித்திரம் எழுதலாம். சுவரே இல்லாவிட்டால், எப்படி சித்திரம் எழுத முடியும்?

இதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கே சகோதரி உரையாற்றும்பொழுது சொன் னார்கள், ஓவம் டைம், இன்சன்டிவ் என்று. அதிலிருந்து கொஞ்சம் நாங்கள் மாறுபடுகின்றோம்.

எனக்கு வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறது 8 மணிநேரம். அப்படி ஒழுங்காக நான் 8 மணிநேரம் வேலை செய்து என்னுடைய சம்பளத்தை வாங்கிக் கொண்டு போகிறேன்.

இன்னொரு சகோதரர் குடும்பத்திற்கு

வேலை கிடைக்கும்

இன்னொரு ஒரு மணிநேரம் கூடுதலாக வேலை செய்தால், அதனால் உற்பத்தி அதிகமாகும்; முதலா ளிக்கு லாபம் வரும். எனக்கும் இருமடங்கு சம்பளம் வரும். வீட்டில் அனாவசியமான செலவும் வரும்.

ஆனால், அதை நான் செய்யமாட்டேன் என்று சொன்னால், இன்னொரு சகோதரர் குடும்பத்திற்கு வேலை கிடைக்கும்.

இப்படி நாம் யாராவது நினைக்கின்றோமா?

‘பெல்' நிறுவனத்தில், 120 ராடு வெல்டிங் அடித் தால், 8 மணிநேர சம்பளம். 20 ராடு கூடுதலாக வேலை செய்தால், இரண்டு மணிநேரம் ஓட்டி.

நீ ஏன் கூடுதலாக அடிக்கிறாய்?

உனக்குத்தான் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது அல்லவா! அங்கே ஒப்பந்தத் தொழி லாளர்கள் இருப்பார்கள் - அவர்களுக்கு அந்தப் பணியை செய்யச் சொல்லி, அந்த சம்பளத்தை வாங்கிக் கொடுக்கின்ற எண்ணம் வரவில்லை.

இதெல்லாம் முதலாளிகளுக்கு சாதகமாகப் போகின்றது; நிர்வாகத்திற்கு சாதகமாகப் போகின்றது என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

43 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்து நிரந்தரப்படுத்தியது தி.மு.க. அரசு!

போக்குவரத்துக் கழகத்தில் கேசுவல் லேபர்ஸ் இருந்தார்கள், ஆசிரியர் அய்யாவிற்கும் தெரியும்.

2006 ஆம் ஆண்டிற்கு முன்பாக, சற்றேறக்குறைய 20 ஆயிரம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில், மாண்புமிகு நேரு அவர்கள் அமைச்சராக இருந்தார். அவரிடம் சொன்னேன்.

‘‘இது ஒரு பெரிய தொல்லையாக இருக்கிறதே, அரசுக்கு'' என்றேன்.

‘‘என்ன செய்யலாம்'' என்று அவர் கேட்டார்.

‘‘6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெறுகிறவர்களை நாம் கணக்கெடுப்போம். அவர்களை ரிசர்வ் என்று நாம் ரெக்கிரியூட் செய்துவிடுவோம். தற்காலிக மாகக்கூட இருக்கட்டும்; எப்பொழுது நிரந்தரப் பணி வருகிறதோ, அப்பொழுது நிரந்தம் செய்துவிடு வோம். கேசுவல் என்கிற தொல்லையே இருக்காது; எல்லோருக்கும் வேலை கிடைக்கும்'' என்றேன்.

அப்படித்தான் 43 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்து நிரந்தரப்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

அவுட் சோர்சிங்கில்தான் நாங்கள் 

ஆட்களை எடுப்போம் என்கிறார்கள்!

ஆனால், அதனை இப்பொழுது சில அதிகாரிகள், ‘‘‘அவுட் சோர்சிங்கில்'தான் லாபம் உண்டு. அவுட் சோர்சிங்கில்தான் நாங்கள் ஆட்களை எடுப்போம்'' என்று சொல்கிறார்கள்.

நான் சொன்னேன், ‘‘நீ அவுட் சோர்சிங்கில் ஆட்களை எடுத்தாலும், உன்னை நான் சும்மா விடமாட்டேன்; நீ குறைந்தபட்சம் ஊதியம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்குச் சென்றேன் என்றால், நீ புதிதாக ஆட்களை தேர்ந்தெடுத்து, எவ்வளவு சம்பளமாகக் கொடுக்கப்போகிறாயோ,  அதைவிட அதிகமாக நீ கொடுக்கவேண்டி வரும்; அப்பொழுது நீ மாட்டிக் கொள்வாய்'' என்று சொன் னேன்.

‘‘பரவாயில்லை, நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல் வதை நாங்கள் பார்க்கின்றோம்'' என்றனர்.

உடனே தொழிலாளர் நலத் துறை அமைச்சரிடம் சென்று,  ஆய்வு செய்யச் சொன்னபொழுது, இப் பொழுது கிடந்து தவிக்கிறார்கள்.

இதெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் இருக்கக் கூடியது.

இன்னொன்று, தொழில் எப்படி இருக்கின்றது?

நாம் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவேண்டும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் 

சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

அயல்நாடுகளில் குடிசைத் தொழிலாக இருப்பதை - குறிப்பாக கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில், குடிசைத் தொழிலாக இருப்பதை, இங்கே ஒரு பெரிய இன்டஸ்ட்ரீயாக மேக்கப் செய்து, அதில் நிறைய இளைஞர்களை வேலைக்குச் சேர்த்து - கொஞ்ச நாள்களில் அந்த இளைஞர்கள் எல்லாம் தெருவிற்கு வந்துவிடுகிறார்கள்.

ஏன் இப்படி? என்பதை தொழிற்சங்கத் தலை வர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தற்காலிகத் தொழிலை 

நிரந்தரத் தொழில் என்று ஏமாறுகிறார்கள்!

இவையெல்லாம் ஒரு தற்காலிகமான தொழிலாக இருக்கின்றன; ஆனால், அதனை நிரந்தரத் தொழில் என்று நம்பி வருகிறார்கள்.

உதாரணத்திற்கு, நோக்கியா - நோக்கியா என்பது ஓர் அலைபேசி சாதனம். அந்தக் கம்பெனியில் ஏறத்தாழ 26 ஆயிரம் பேர் வேலை செய்தார்கள். கொஞ்ச நாள் ஆனவுடன், 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி பாக்கி; 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வரி பாக்கி. நோக்கியா கம்பெனியை, மைக்ரோ சாப்ட்வேர் கம்பெனிக்கு விற்றுவிட்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் இந்தக் கடன் இல்லை.

இங்கே வந்தார்கள், வரித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தார்கள்; கம் பெனியை மூடிவிட்டுப் போனார்கள்.

கடன் வசூல் ஆனதா?

அந்தத் தொழிலாளிகளின் நிலைமை என்னாயிற்று?

யாரிடமும், எந்தப் பதிலும் இல்லை.

மறுபடியும் அதேபோல, சில தொழில்கள் - நிரந்தரத்தன்மை இல்லாத தொழில்கள் உள்ளே வருகின்றன. அப்படிப்பட்ட தொழில்களில் யார் ஏமாந்து போகிறார்கள்? படித்தவுடன் வேலை கிடைக்கவேண்டும்; வேலை கிடைத்துப் போகும் பொழுது, தொழில் எப்படி இருக்கும்  என்பதைக் கண்டுபிடிக்காமலேயே அங்கே போய்விடுகிறார்கள்.

நான் அன்றைக்கே எச்சரித்தேன்!

உதாரணத்திற்கு ஹூண்டாய் கம்பெனி - முதன் முதலில் கொரியன்ஸ் இங்கே வரும்பொழுது, நாங்கள் எல்லா பணிகளையும் ரோபோக்களை வைத்துத் தான் செய்வோம் என்று சொன்னார்கள்.

(தொடரும்)