திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிஎஃப் கணக்கு… கவனிக்க வேண்டிய 10 முறைமைகள்!


மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.

நாமினி!
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம்.  வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது  பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.
பென்ஷன்!
பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.
மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது  வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.
இடையில் பணம் எடுத்தல்!
பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும்.    இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின்   திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கை முடிப்பது!
பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.
இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)
பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் ஆன்லைன்!
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
எதற்கு எந்தப் படிவம்?
பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
புகார் தெரிவிக்க!
பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.
டிடிஎஸ்!
பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ்  (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில்  உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும். http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541
நிரந்தரக் கணக்கு எண்!
பிஎஃப் அமைப்பு UAN(Universal  Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.
இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே  வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.
இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”
Advertisements

பி.எப்., தொகை விபரங்கள் அறிய எளிய நடைமுறை அறிமுகம்


சென்னை, ஆக.8 சம்பளம் பெறும் ஊழியர்கள், பி.எப்., நிலவரம் அறியவும், தொகை பெறவும், 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மாத சம்பளம் பெறும் ஊழியர்களிடம், பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதில், 4.5 கோடி சந்தாதாரர்கள், 45 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த சேமிப்பு கணக்கு விபரங்கள், முந்தைய ஆண்டு செலுத்திய தொகை, அதற்கான வட்டி மற்றும் இருப்பு விபரங்கள் ஆகியவை, ஊழியர்களுக்கு, நிறுவனம் மூலம், பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.

தற்போது, 'இ--கவர்னன்ஸ்' முறையில், எளிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 'ஆன்ட்ராய்டு' போன் மூலம், இ.பி.எப்.ஓ., என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத் தின் இணையதளத்தில் நுழைந்தால், சந்தாதாரருக்கு வழங்கப்பட் டுள்ளன, யு.எ.என்., எண் மூலம் தங்கள் வைப்பு நிதி பாஸ் புக்கை காணலாம். கடைசியாக செலுத்தப்பட்ட, பி.எப்., தொகை மற்றும் இருப்பு தொகை விபரங்களையும் பெற முடியும். தற்போது, பி.எப்., தொகை திரும்ப பெறுதல் மற்றும் கடன் பெற, இந்த செயலி வழியாக விண்ணப்பிக்கும் வகையில், நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.
-விடுதலை,8.8.17

“பணியிட பாலியல்” துன்புறுத்தல்கள் குறித்து 70 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில்லை




அய்தராபாத், ஆக.6 பணியிடங் களில் அளிக்கப் படும் பாலியல் துன் புறுத்தல்கள் குறித்து, 70 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில் லை என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

அய்தராபாத்தில் தெலங்கானா மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சார்பாக, 2013ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட பணியிட பாலியல் துன்புறுத் தல்கள் தடுப்புச் சட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் தேசிய மகளிர் ஆணைய செயலாளர் சத்பீர் பேடி பேசியதாவது: பணியிடங்களில் அளிக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து, 70 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில்லை. அதேபோல், சட்டத்தில் இருக்கும் தங்களுக்குச் சாதகமான அம்சத்தை பயன்படுத்தி, சிலர் அத்தகைய துன்புறுத்தல்களை அளிக்கும் நபர்களை மிரட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

பெண்களை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கு ஏராளமான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களிலோ, திட்டங்களிலோ, எந்த குறைபாடும் கிடையாது.

அதுகுறித்த விழிப்புணர்வுதான் பெண்களிடையே இல்லை. எனவே, அந்த சட்டங்கள், திட்டங்கள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் சத்பீர் பேடி.

ராகுல் கார் மீது தாக்குதல்: பாஜக பிரமுகர் கைது 

தனேரா, ஆக.6 குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாஜக இளை ஞரணியைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை

பார்வையிடுவதற்காக பனஸ்கந்தா மாவட்டம், தனேரா நகருக்கு ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவரது கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், பாஜகவினரும்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சூழலில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜெயேஷ் டார்ஜி (எ) அனில் ரதோட் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பனஸ்கந்தா மாவட்ட காவல் துறைக் கண் காணிப்பாளர் நீரஜ் பட்குஜார் கூறியதாவது: ராகுல் காந்தி பயணித்த காரில் கல்லை வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜெயேஷ் டார்ஜி என்பவரைக் கைது செய்துள்ளோம். விசாரணையின்போது காங்கிரஸ் கட்சியினர் ஜெயேஷின் பெயரைக் குறிப்பிட்டனர். அதனடிப்படையில் அந்த நபரைக் கைது செய்திருக்கிறோம். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் நீரஜ் பட்குஜார். இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள ஜேயேஷ் டார்ஜி பாஜகவின் இளைஞரணியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இதுகுறித்து அக்கட்சியின் பனஸ்கந்தா மாவட்ட பொதுச் செயலர் பிருத்விராஜ் கத்வாடியா கூறியதாவது: பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணியின் செயலர்தான் ஜெயேஷ் டார்ஜி.

ராகுல் காந்தி கார் மீது கல்லை வீசித் தாக்குதல் நடத்தியது அவர்தான். தாக்குதல் நடத்திய மேலும் சிலரது பெயர்கள் அடங்கிய பட்டியலை காவல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறோம் என்று பிருத்விராஜ் கத்வாடியா தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு தேர்வு 

புதுடில்லி, ஆக.6 நாட்டின் 13ஆவது குடியரசு துணைத் தலை வராக முன்னாள் மத்திய அமைச் சர் வெங்கய்ய நாயுடு  தேர்ந்தெ டுக்கப்பட்டார்.
அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமான வாக்கு களைப் பெற்று வாகை சூடினார். புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
நடுத்தர விவசாயக் குடும் பத்தில் இருந்து வந்து, நாட்டின் உயரிய அரியணையில் அமரப் போகும் வெங்கய்ய நாயுடுவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கப் போகும் அவரது தலைமையின் கீழ் புதிய தேசம் மலரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அந்தத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமக்கு வாக் களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள வெங்கய்ய நாயுடு, அரசியல் சாசனத்தைக் கட்டிக் காத்து கண்ணியத்தை நிலைநாட்டுவேன் என்று உணர்வுப்பூர்வமாக உறுதி யளித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், சனிக் கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வெங்கய்ய நாயுடு காலை 10.05 மணிக்கு வாக்க ளித்தார்.  மாலை 5 வாக்குப் பதிவு முடிந்த பிறகு, பதிவான வாக் குகள் எண்ணப்பட்டு, இரவு 7 மணியளவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.

அதில், மொத்தம் பதிவான 771 வாக்குகளில், வெங்கய்ய நாயுடு 516 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த் துப் போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குளை மட்டுமே பெற்றார்.
-விடுதலை,6.8.17