புதுடில்லி, டிச.23- 20 அல்லது அதற்கு மேற்பட்டோர் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க போனஸ் சட்டம்-1965 வகை செய்கிறது. மாத சம்பளத்தில் ரூ.3,500-அய் உச்சவரம்பாக கொண்டு போனஸ் கணக்கிடப்படுகிறது. போனஸ் பெறுவதற்கான தகுதி உச்சவரம்பு, ரூ.10 ஆயிரம் மாத சம்பளமாக உள்ளது.
இந்நிலையில், இதில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று தாக்கல் செய்தார்.
அந்த திருத்தத்தில், போனஸ் தொகை கணக்கிடுவதற்கான உச்சவரம்பை ரூ.3,500-ல் இருந்து ரூ.7 ஆயிரமாகவும், போனஸ் பெறுவதற்கான தகுதி உச்சவரம்பை ரூ.21 ஆயிரமாகவும் உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், போனஸ் தொகை இரு மடங்காக உயரும் என்று பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
இந்த மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தம், 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.
எனவே, அப்போதிருந்து போனஸ் பலன்கள் கிடைக்கும் என்று பண்டாரு தத்தாத்ரேயா கூறினார். அப்போது சபையை நடத்திய துணை சபாநாயகர் தம்பிதுரை, இந்த திருத்தம் கொண்டு வந்ததற்காக, மத்திய அரசை பாராட்ட வேண்டும் என்று கூறினார்.
-விடுதலை,23.12.15