வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

இந்தியத் தொழிலாளர் -பெரியார்


தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடைய வனாகவிருக்கிறேன். பொதுவாய் நம் நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர் களைக் குறிக்கின்றதே யன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை. தொழிலாளன் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச் செய்து அத் தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும். தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உபகருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அது போல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வÞதுவும் அதற்கு உபகருவியாகவிருந்து, அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆக மாட்டார்கள். இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதேயல்ல. இவர்களாகவே கூலிக்கு அமர்ந்து கொண்டு அடிமைபோல் சொல்லுகிறதைச் செய்கிறதாகவும் சம்மதித்து, பிறகு எஜமானன் அதிக லாபம் அடைவதைப் பார்த்துப் பொறாமை கொண்டோ, தொழில் திறத்திற்கு என்று அல்லாமல் வயிற்றுக்குப் போதாது என்ற காரணத்தினாலோ தாங்கள் இல்லாவிட்டால் வேலை நடக்காது என்று நினைத்து தங்களுக்கு அதிகக்கூலி வேண்டும், தராவிடின் வேலை நிறுத்தம் செய்வோம், வேலை நிறுத்தம் செய்தபின் வேறு ஒருவன் அந்த வேலை செய்யவும் சம்மதிக்கமாட்டோம். முதலாளி எங்கள் வேலை நிறுத்தத்தால் நஷ்டமடையவேண்டும் என்கின்ற முதலியனக் காணப்படும் செயல்களையும் அதன் பலன்களையும்தான் தொழிலாளர் இயக்கமென்பதும், தொழிலாளர் இயக்கத்தின் வெற்றி தோல்வியாய்க் கருதப்படுவதுமாகவிருக்கிறது.

இதைக் கூலிக்காரர்கள் இயக்கம் என்றுதான் கூறலாம். இவ்வித இயக்கம் உண்மையில் நம் தேசத்திற்கோ, நம் தேச மக்களுக்கோ எவ்விதத்திலும் அனுகூலமான இயக்கம் என்று சொல்லமுடியாது. இது மேனாட்டு வழக்கத்தை அனுசரித்தது. அங்குள்ள முதலாளிகளும், கூலிக்காரர்களும் கீழ்நாட்டுப் பணத்தையும், பதவியையும் கொள்ளையடித்து அதை எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்கிற சண்டைதான் அங்கு தொழிலாளர் இயக்கமாய் விளங்குகின்றது. நம் நாட்டிலோ தொழிலாளி அதிகக்கூலி கேட்க  கேட்க முதலாளி, மக்கள் வாங்கும் பொருள்களின் மேல் அதிகவிலையை வைத்து, மக்களிடம் பொருள்பறித்து, சிறிது தொழிலாளர்களுக்குக் கொடுத்து மிகுதியைத் தான் எடுத்துக்கொண்டு முன்னிலும் தான் அதிக லாபம் சம்பாதித்தவனாகிவிடுகிறான். உதாரணமாக, ரயில்வே, டிராம்வே தொழிலாளர்களின் இயக்கங்களை எடுத்துக்கொள்வோம். சென்னை டிராம்வே, ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் எஜமானர்களான கம்பெனிக் காரர்களிடத்தில் அதிகக்கூலி கேட்டார்கள். எஜமானர்களும் முதலாளி களுமான கம்பெனிக்காரர்களோ கட்டணமாகிய டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தினார்கள்.

இவ்வகையில் ஜனங்களின் பணத்தைப் பறித்து தொழிலாளர்களுக்குக் கொஞ்சம்  கொடுத்துவிட்டு மேற் கொண்டும் தாங்கள் லாபம் அடைந்தார்கள். இதில் எவருடைய பொருள் நஷ்டமடைந்தது? முதலாளிகள் பொருளா? இம்மாதிரியான நடவடிக்கைகளை சுருக்கமாகக் கூறின் கூட்டுக்கொள்ளை என்றுதான் சொல்லவேண்டும். இவ்வித இயக்கங்களாலும், நடவடிக்கை களாலும் தேசம் ஒருபொழுதும் முன்னேற்ற மடையாது. ஏழைகளும் பிழைக்க முடியாது. இவ்வித இயக்கங்கள் நடத்தவதைவிட பொதுவுடைமைத் தத்துவங்கள் நடத்துவது குற்றமென்று சொல்ல முடியாது. இம்மாதிரி இயக்கங்கள் நாட்டின் உண்மைத் தொழில் அபிவிருத்திக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் கொஞ்சமும் உதவி செய்யாது. இதுமாத்திரமன்றி இவ்வியக்கங்களை நடத்தும் தொழிலாளர்களின் தலைவர் களோவென்றால் பெரும்பாலும் முதலாளிகளும் எஜமானர் களுமாகவேதான் இருக்கிறார்கள். தொழிலாளிகளின் கஷ்டமும் கூலிக்காரர்களின் கஷ்டமும் ஒரு சிறிதும் அறியாமல் தொழிலாளரின் உழைப்பினாலும், கூலிக்காரரின் அறியாமையி னாலும் பிழைக்கிற இவர்கள் இவ்வியக்கத்தை நடத்துகின்றனர். இது எப்படி முன்னுக்கு வரும்? இதுவரை நம் நாட்டில் தொழிலாளர் இயக் கங்கள் எவ்வளவு முன்னுக்கு வந்தன? எவ்வளவு மறைந்தன? எவ்வளவு வெற்றி யடைந்தன? எவ்வளவு தோல்வியடைந்தன? எவர் ஒழுங்காக நடத்தினர்? என்பதைக் கவனித்தால் இவற்றின் பலனை நன்கு அறியலாம்.

தொழிலாளிகளும், தொழிலாளர் இயக்கங்களும் இந்த நாட்டில் முன்னுக்கு வரவேண்டுமாயின், தொழிலாளர்கள் தாங்கள் கற்ற தொழிலைக்கொண்டு தாங்களே ஒரு தொழில் தங்களிஷ்டம்போல் செய்து தொழில் திறத்தையும் ஊழியத்தையும் அறிந்து அத்தொழிலின் பலன்களை நாட்டாருக்குக் கொடுத்து நாட்டாரை அனுபவிக்கச் செய்து, அதன் ஊதியமுழுவதும் தாங்களே அடையும்படியான நிலைமை நாட்டிற்கு என்று வருகின்றதோ அன்றுதான் தொழிலாளரின் நிலைமை முன்னேற்றமடையுமே அல்லாமல் கைத்தொழில் அழிக்கப்பட்டுப்போன காரணத்தால் முதலாளிகள் இயந்திரங்களை அதிகம் அமைத்து, திக்கற்றவர்களைக் கூலிக்கமர்த்தி, அவர்களிடம் கொடுமையான வேலை வாங்கி, அதன் பயனாய் கொள்ளை அடிப்பது போன்று லாபத்தைச் சம்பாதித்து அவை வேலைக்காரர்களும் பொதுஜனங்களும் அடையாதபடி நடுவிலிருந்துகொண்டு முதலடித்து

தானேஅனுபவித்து வருவதால் ஒருநாளும் முன்னேற்றமடைய முடியாது.

இதுவரை தொழிலாளரின் கதி இப்படியாயினும் இனி எதிர்காலத்திலாவது தொழிலாளர் தங்கள் குழந்தைகளையும் மற்றும் தொழில் வேண்டியவர்களும் தாங்கள் கற்கும் தொழிலைக் கொண்டு மற்றொருவர் பிழைக்கும் மார்க்கமான தொழிலாயில்லாமல் தாங்கள் செய்யும் தொழிலின் பலன்களை முற்றிலும் தாங்களே அனுபவிக்கும்படியான தொழில்களைக் கற்றுக் கொடுப்பதுடன் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் இயக்கங்களை முதலாளிகளும் எஜமானர்களும் தலைமை வகித்து நடத்தவிடாமல் தானேதன் கையைக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளியோ, அல்லது கூடுமானால் தன் கைக்கொண்டு வேலை செய்து அதன் முழுப்பலனையும் தானே அடையும் படியான உண்மையானதும் சுதந்திரமுடையதுமான ஒரு தொழிலாளியோ இயக்கத்தைத் தலைமை வகித்து நடத்தும்படி வந்தால், இன்றைக்கே இல்லாவிடினும் கூடிய விரைவிலாவது தொழிலாளிகளும், தொழிலாளரின் இயக்கங்களும் நாட்டிற்கு நன்மை பயக்கக் கூடியவைகளாக விளங்கும். இல்லாதவரையில் தலைவர்கள் என்போர் சுயநலத்தைப் பெருக்கிக் கொள்ளவோ, முதலாளிகள் கொள்ளை அடிக்கவோ, தொழிலாளிகள் என்போர் சண்டித்தனம் செய்து வயிறு வளர்க்கவோதான் முடியும்.

– குடிஅரசு, கட்டுரை, 28.06.1925

-விடுதலை நாளேடு, 2.8.25

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

தொழிலாளி – முதலாளி பேதம் ஒழிய…. தந்தை பெரியார் .

 


தொழிலாளர் “சங்கப் போராட்டம்” என்றால் முதலாளிகளை ஒழித்து, முதலாளி – தொழிலாளி என்ற பேதமில்லாமல் செய்வது என்றால் சரி, நியாயம்.  அதைவிட்டுவிட்டு கூலி உயர்வைக் கருதியே ஒரு சங்கம் இருக்கிறது என்றால் அதற்குப் போராட்டம் எதற்கு? ஸ்ட்ரைக்கு  நாச வேலை எதற்கு?

தோழர் கோவிந்தசாமி அவர்கள் பேசும்போது சொன்னார்கள், தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று. அது மிக நியாயம். நான் 5 வருடத்திற்கு முன்பிருந்தே மில் தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். போனஸ். போனஸ் உயர்வு என்பதெல்லாம் அநேகமாய் அதற்கப்புறமே பலம் பெற்று வளர்ந்து வருகிறது.

தொழிலாளிக்கும் முதலாளிக்கும் பங்கு

அதோடு மட்டுமல்ல; ஒரு வருஷத்திற்கு முன்பு சொன்னேன், தொழிலாளிக்கு லாபத்தில் பங்கு மாத்திரம் போதாது. முதலிலும் பங்கு இருக்கவேண்டும் என்று. அது எப்படி என்றால், ஒரு லட்சம் ரூபாய்  முதல் போட்டுஒரு ஸ்தாபனத்தை ரிஜிஸ்டர் செய்தால் அதில் தொழிலாளர்களுடைய பங்கு (Share) என்பது ஆக ரூ.25,000 ரூபாய் அவரது பொறுப்பு பங்கு என்று போடப்பட வேண்டும். ஆக 1,25,000 ரூபாய்க்கு பங்கு ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அந்தப்படி பங்கில் தொழிலாளியின் அவரது பொறுப்பு பங்குக்கு ஒரு வருஷத்தில் ரூ.5000 லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ரூ.5,000மும் சேர்ந்து அந்த ஆனரரி பொறுப்பு பங்கு ரூ.30,000க்குப் பதியவேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளி பாதுகாப்புப் பண்டாக அதைச் சேர்த்து வரவேண்டும்; இதன் அர்த்தம் என்னவென்றால் தொழிலாளி முதலாளிக்கு அடிமையல்ல;  வெறும் கூலிகள் அல்ல தொழிலாளிகளும் முதலாளிகளும் ஒருவருக்கொருவர் பங்காளிகள், கூட்டாளிகள் என்கிறதான முறையாகும். அப்போதுதான் இரு சாராருக்கும் சமபொறுப்பும் நாணயமும் ஏற்படும்.

அடிமை நிலை என்ன?

முதலாளியும் தொழிலாளியும் அடிமை என்கிற தன்மையில் இருப்பதால் தொழிலாளிக்கு தொழிலினிடத்திலும் தொழிற்சாலை இடத்திலும் பொறுப்பு இல்லை; கவலை இல்லை. கூலிக்கு மாரடித்து விட்டுப் போவோம் என்பது மாதிரி  பொறுப்பற்ற தன்மையில் கடிகாரத்தைப் பார்த்தவண்ணம் இருக்கிறான். அதே மாதிரி முதலாளிக்கும், தொழிலாளி ஓர் அடிமை – அந்த அடிமை தன்னுடைய ஜீவன் அவசியத்திற்கு வேலை செய்பவன். ஆதலால் அவன் சாகாமல் இருக்கும் அளவுக்குக் கூலிகொடுத்தால் போதும் என்று கருதி இவனைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறான். இவர்கள் இருவரின் பொறுப்பற்ற தன்மையால் நாட்டில் செழிப்பும், உற்பத்தி வளர்ச்சியும் கெடுகிறது. ஆதலால், இந்தப் பொறுப்பற்ற தன்மையும் ஒழிந்து முதலாளிக்கும் – தொழிலாளிக்கும் எஜமான் – அடிமை என்கிற தன்மை இல்லாமல் முதலாளியும் தொழிலாளியும் பங்காளிகள் கூட்டாளிகள் என்கிற  தன்மை ஏற்படும். நான் மேலே சொன்னபடி ஏற்பாடு செய்தால், முதலாளி – தொழிலாளி என்றால் ஒருவருக்கொருவர் நல்லுறவோடு இருக்கவேண்டுமே தவிர, ஒருவரை ஏமாற்றுவது என்பதாகவும் பழிவாங்கும் உணர்ச்சியுடனும் இருக்கக்கூடாது.

முன்னுதாரணம்

நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, என் விலாசத்திற்கே பங்கு இருந்தது. ஈ.வெ.ரா.
மண்டி விலாசத்திற்கு 10,000 ரூபாய் முதலீடு என்று வைத்துக்கொள்ளுங்கள். வேலைக்கு 3 குமாஸ்தாக்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். வருகிற லாபத்தை 3 பங்காகப் பிரித்துக்கொள்வது. அப்படிப் பிரித்ததில், ஒரு பங்கு மண்டிச் சொந்தக்காரரும், நிருவாகப் பொறுப்புடையவருமான
ஈ.வெ.ராவுக்கு; மற்றொரு பங்கு முதலீடு போடப்பட்ட ரூபாய் 10,000க்கு மூன்றாவது பங்கு. குமாஸ்தாக்களுக்கு நட்டம் வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். குமாஸ்தாக்கள் குடும்பச் செலவுக்குப் பத்திக்கொண்ட மாதம் ஒன்றுக்கு ரூ.15 வீதம் உள்ள தொகையைச் சிப்பந்திச் செலவு என்று பொதுச் செலவு எழுதிவிட்டு மீதியை அடுத்த வருஷ லாபத்தில் கழித்து விடுவேன். லாபம் கிடைத்தால் பங்கிட்டுக் கொடுத்துவிடுவேன். நாங்களெல்லாம் மண்டி நடத்துகிறபோது 40-50 வருஷங்களுக்கு முன் இப்படித்தான் நடந்தது. இதற்குக் கஷ்டக்கூட்டு என்று பெயர். என்னிடம் கஷ்டக் கூட்டுக்கு இருந்த நபர்கள் இப்போது தனி முதலாளிகள் ஆகி எனக்கு மேல் 3 பங்கு 4 பங்கு பணக்காரர்களாக இருக்கிறார்கள். அந்த மாதிரி தொழிலாளிக்குப் பங்கு கிடைக்க வேண்டும். அப்போது தான் தொழிலாளி உயர முடியும். அப்படிக்கு இல்லாமல் எவ்வளவு கூலி உயர்ந்தாலும் முதலாளி முதலாளிதான் தொழிலாளி தொழிலாளிதான்.

எந்நேரமும் சண்டை ஏன் ?

அப்படிக்கில்லாமல் முதலாளியும் தொழிலாளியும் எந்நேரமும் சண்டை போட்டுக் கொள்வது; இவன் அவனைக் கண்டால், ‘உர்’ என்கிறது; அவன் இவனைக் கண்டால் மிளகாய் கடித்த மாதிரி கரிந்து விழுவது; இரண்டு பேரும் தகராறு செய்து கொண்டு கோர்ட்டுக்குப் போவது; அது இழுப்பறித்துக் கொண்டு இருந்து கடைசியில், உதவாக்கரை சமாதானம் ஆவது. மறுபடியும் தகராறு, சண்டை, கோர்ட், சமாதானம் என்று இப்படியே இருந்தால் என்ன ஆவது? முதலாளி – தொழிலாளி இவர்கள் இருவரின் சண்டையும் எப்படியோ போகட்டும். இவர்களின் இந்தத் தகராறின் காரணமாய் நாட்டில் பொருள் உற்பத்தி குறைந்துவிட்டது. நாட்டுப் பொது நிலையில் கஷ்டம் ஏற்படுகிறது. இன்றைய பஞ்சநிலைக்கு, பண்டங்களின் தரங்குறைவுக்கு, கடுமையான விலை ஏற்றத்திற்கு இருவரிடமும் நாணயம் இல்லாததற்கு 100க்கு 90 பங்கு முதலாளி – தொழிலாளித் தகராறும் அவர்களது மனப்பான்மையும்தான்!

(10.9.1952 அன்று பொன்மலையில் தென்பகுதி ரயில்வேமென் யூனியன் துவக்க விழாவில் தந்தை பெரியார் நிகழ்த்திய பேருரையில் ஒரு பகுதி)

- உண்மை இதழ், 1-15.5.25

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணி உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

 


சென்னை, ஏப். 2- கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி பணி

அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தனது தாயார் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் அந்த வேலையை தனக்கு வழங்கக்கோரி விழுப்புரத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை அரசு ரத்து செய்து விட்டதால், தனக்கு அங்கன்வாடி பணியாளராக வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரான விக்ரமுக்கு 8 வார காலத்தில் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சமூக நலத்துறை செயலாளரான ஜெயசிறீ முரளிதரன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

கருணை அடிப்படையில்

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று (1.4.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சமூக நலத்துறை செயலர் ஜெயசிறீ முரளிதரன் ஆஜரானார். அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரான ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அங்கன்வாடி பணியாளராக கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே பணிநியமனம் வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அந்த அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என்றார். அதையடுத்து இந்த வழக்கில் சமூக நலத்துறைச் செயலர் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.15-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்- 

- விடுதலை நாளேடு, 2.4.25

கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10 சதவீதம் உயர்வு அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

 



சென்னை, மார்ச் 30- சட்டப் பேரவையில் 28.3.2025 அன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் நிறைவாக அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்து பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் நெசவாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வாயிலாக கைத்தறி தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் இழப்பில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் வளர்ச்சிக்காக பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன’’ என்றார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்:
தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் களின் அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 1.5 லட்சம் நெசவாளர்கள் பயன் அடைவார்கள்.
வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் பெடல் தறி சேலைகளுக்கான நெசவுக் கூலி ரூ.75.95 ஆகவும், வேட்டிகளுக்கு ரூ.64.38 ஆகவும் உயர்த்தி தரப்படும். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.3.75 கோடியை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

நெசவுக் கூலி உயர்வு
இதேபோல், விசைத்தறி வேட்டி, சேலைக்கான நெசவுக் கூலியும் உயர்த்தப்படுவதுடன், அதற்கான கூடுதல் செலவினம் ரூ.8.58 கோடியையும் அரசே ஏற்கும்.
இதுதவிர கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் புதிய ரகங்களை அறிமுகம் செய்ய ரூ.1.55 கோடி நிதியுதவி வழங்கப்படும். கைத்தறி துணிகள் விற்பனையை அதிகரிப்பதற்கு மாநில அளவிலான 5 சிறப்பு கண்காட்சிகள் ரூ.1.5 கோடியில் நடத்தப்படும்.

மாநில அளவிலான சிறந்த வடிமைப்பாளர் விருதுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு முதலிடத்துக்கு ரூ.1 லட்சம், 2-ம் இடத்துக்கு ரூ.75,000, 3-ம் இடத்துக்கு ரூ.50,000 தரப்படும். கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்க தனி உரிமை விற்பனை நிலையங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
ஜவுளி தொழில் குறித்த பன்னாட்டு கண்காட்சி ரூ.1.5 கோடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும். மேலும், 6 கூட்டுறவு நூற்பாலைகளின் தரத்தை மேம்படுத்த ரூ.6.3 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.

- விடுதலை நாளேடு, 30.3.25

புதன், 6 ஆகஸ்ட், 2025

2538 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

 Viduthalai நாளேடு, 06.07.25


தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.8.2025) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவி பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டமிடல்), இளநிலைப் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் / இளநிலை பொறியாளர்’ (திட்டமிடல்), பணி ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 2538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,  துணை முதலமைச்சர்   உதயநிதி ஸ்டாலின்,  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு,   குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர்.பிரியா, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன்,  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்  ஜெ.குமரகுருபரன்,  சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய்,   நகராட்சி நிருவாக இயக்குநர்  பி.மதுசூதன் ரெட்டி,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,  பேரூராட்சிகளின் இயக்குநர்  எம்.பிரதீப் குமார்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.