தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்களில் நாளொன்றுக்கு 8 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 10 மணி நேரமாக மாற்றி தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதிகபட்சமாக வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களை வேலை வாங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, வார துவக்கத்தில் 10 மணி நேரம் வரை வேலை வாங்கினால் அடுத்துவரும் நாட்களில் வேலைநேரம் குறைந்து வார இறுதி நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு கிடைக்கும். அதற்கு அதிகமாக வேலைவாங்குவதென்றால் கூடுதலாக பணியாற்றும் நேர அளவுக்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடைவெளியின்றி அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டுமே வேலை வாங்கவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரின் வசதிக்காக இந்த மாற்றங்களை செய்வதாக தெலங்கானா அரசு அறிவித்திருப்பது, தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவே அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதமே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. அங்கு 9 மணி நேரமாக இருந்த அதிகபட்ச வேலைநேரத்தை 10 மணி நேரமாக கடந்த மாதம் மாற்றியதுடன், பெண் பணியாளர்களை இரவு பணியில் ஈடுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின்தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொழில்துறையினரின் வசதிக்கேற்ப சட்டத்தை மாற்றும்படி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்பேரில், மாநிலங்கள் இத்தகைய மாற்றங்களை செய்து வருகின்றன. தமிழகத்திலும் கடந்த 2023-ஆம் ஆண்டு 8 மணி நேரமாக இருந்த அதிகபட்ச வேலைநேரம் 12 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் வெளிநடப்பையும் மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்பையடுத்து, இச்சட்டத்தை வாபஸ் பெற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம், 12 மணிநேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, எல் அண்டு டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் போன்றோர் வலியுறுத்தியதையடுத்து தொழிலாளர் வேலை நேரம் குறித்து நாடு முழுக்க பெரும் விவாதம் நடந்தது. அவர்களது கோரிக்கையை ஒவ்வொரு மாநிலமாக தற்போது அமல்படுத்த தொடங்கி விட்டன. நாட்டின் வளர்ச்சிக்காகவும், தொழில்துறையினர் கூடுதல் லாபம் ஈட்டுவதற்காகவும் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விட்டதால், மாநில அரசுகளுக்கும் தற்போது நெருக்கடி ஏற்பட்டு வருவதையே நடந்துவரும் மாற்றங்கள் உணர்த்து கின்றன.
அதிகாரமும் பண பலமும் ஒன்றிணைந்து அசுர பலத்துடன் காய்களை நகர்த்தி வருவதால் நாடு முழுவதும் விரைவில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது உறுதியாகிவிட்டது. தொழிலாளர்களை பொறுத்த மட்டில், மாற்றங்களை எதிர்கொண்டு, அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதுடன் தங்கள் உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவர்கள் கையில்தான் உள்ளது.
– எம்.எஸ்.
நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 7.7.2025
-விடுதலை நாளேடு,7.7.25