திங்கள், 21 ஏப்ரல், 2025

திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழுக்கு முதலிடம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 விழுக்காடு முன்னுரிமை தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

 


விடுதலை நாளேடு
இந்தியா

சென்னை, ஏப்.18- தமிழ்நாடு அரசு பணி நியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழிக் கல்வி பாடத் திட்டத்தில் படித்தவர் களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளி யிடப்பட்ட அரசாணை எண்.82, பத்தி 4-இல் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பதிலாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாற்றி அமைத்து அரசு ஆணையிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு:-

இதர மொழிகளை பயிற்று மொழியாக படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த முன்னுரிமை ஒதுக் கீட்டுக்கு தகுதியுடை யவர்கள் இல்லை. பள்ளிக்கு செல்லாமல், நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் முன் னுரிமை வழங்கப்பட தகுதி யுடையவர்கள் அல்லர்.

கல்வித் தகுதி சான் றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தேர்வு முகமைகள், பணி நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர் களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். தமிழ் பாடத் திலும் மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள் வது தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைகள் நட வடிக்கை மேற்கொள்ளும்.

இந்த 20 சதவீத முன் னுரிமை ஒதுக்கீடா னது நேரடி பணி நியமனத் துக்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும் (முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 வகையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறுசேரியில் ரூ.1882 கோடியில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நவீன தரவு மய்யம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

சென்னை, ஏப்.18- செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலான ரூ.1,882 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள தரவு மய்யத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 ஆய்வறிக்கை

தமிழ்நாடு, இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-2025-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு 2024-2025-ம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

நவீன தரவு மய்யம்

அந்த வகையில், தரவு மய்யங் களுக்கான முன்னணி மய்யமாக உள்ள தமிழ்நாட்டினை,தரவு மய்ய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாகவும், நாட்டின் தரவு மய்ய தலைநகராகவும், மாற்றம் செய்வதற்காக தொலை நோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு தரவு மய்யக் கொள்கையை 26.11.2021 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பலனாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.

அந்த வகையில், சிபி டெக்னாலஜீஸ் நிறுவனம், ஒருங்கிணைந்த இணையச்சேவை தீர்வுகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், தரவு மய்ய உள்கட்டமைப்பு, கிளவுட், நெட்வொர்க் சேவைகள் மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் 40 மெகாவாட் மின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங் களுடன், ஒரு அதிநவீன தரவு மய்யத்தை நிறுவியுள்ளது

முதலமைச்சர் திறந்து வைப்பு

முதற்கட்டமாக, இத்திட்டத்தில் ரூ.1,882 கோடி முதலீடு செய்யப்பட் டுள்ளது. 1,000 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இந்த அதிநவீன தரவு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.4.2025) திறந்து வைத்தார்.

2027-ம் ஆண்டிற்குள், சென்னையில், ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தொழில் முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத்துறைச் செயலாளர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் தாரேஸ் அகமது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், சிபி டெக்னாலஜீஸ் நிறுவத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜு வெஜேஸ்னா, செயல் இயக்குநர் விஜயகுமார், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

100 நாள் திட்ட நிலுவை தொகை ரூ.4 ஆயிரம் கோடியை விடுவிக்காத ஒன்றிய அரசு மீது வழக்கு தொடர விவசாயிகள் முடிவு

 

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

தஞ்சை ஏப்.18  100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத் தில் முடிந்த பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை உடனே ஒன்றிய அரசு விடுவிக்க வேண் டும். இல்லா விட்டால், உச்ச, உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

100 நாள் வேலை

கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காக, கிராமங் களில் அனைத்து வகையான தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்துவதற்காக 100 நாள் வேலை உறுதி சட்டம் 2005ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தற்போது வரை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத் தின் கீழ் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு நாள்தோறும் ரூ.319 கூலியாக வழங்கப்படுகிறது. பணி நாட்களில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள், தொழிலாளர்களுடன் பணி செய்யும் பகுதியைப் ஒளிப்படம் எடுத்து, ஆட்சியர், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அவ்வப்போது அனுப்பி, வேலைக்கான பணியை உறுதி செய்து வருகின்றனர்.

வழக்கு தொடர முடிவு

இதனால், இந்த திட்டத்தின் கீழ் பணிகள் முழுமையாக நடைபெற்று வந்ததுடன், கிராமப் புற தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு வந்தது. இந்நிலையில், 2024, நவம்பர் மாதம் முதல் இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்கள், முடிந்த பணிகளுக்கான தொகையைப் பெறாமல் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து, கணபதியக்ர ஹாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, பல மாதங்களாக கூலித் தொகையைப் பெற முடியாததால், தங்களுக்கு கூலித் தொகையை வழங்கக் கோரி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும், இந்த திட்டத்தின் கீழ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, ஒன்றிய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடு விக்காவிட்டால், உச்ச, உயர் நீதிமன்றங்களில் விரைவில் வழக்குத் தொடரப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழைத் தொழிலாளர்கள்

இதுதொடர்பாக, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் கூறியது: தமிழ்நாட்டில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் 1,02,000 மாற்றுத்திறனாளிகள் உட்பட 92 லட்சம் ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 80 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத் தவர்கள்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 2024-2025-ஆம் நிதி ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு ஒன்றிய அரசு 2024 நவம்பர் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் வரை 5 மாதங்களாக ரூ.4,034 கோடியை இதுவரை விடுவிக்காமல் இருப்பது எதேச்சாதிகாரமானது, வருத்தத் திற்குரியது, கண்டனத்திற்குரியது.

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டம் 2005ன் படி, பணிகள் முடித்ததில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டப்படியாக தொழிலாளிகளுக்கு கூலித் தொகையை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 5 மாதங் களாக வழங்காமல் இருப்பது, தொழிலாளர்களை உதாசீனப் படுத்துவதற்கு சமமாகும்.

கால தாமதம்

வெயிலில் உழைத்தவர்களின் உழைப்பை சிறிது கூட கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அரசு, விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கால தாமதத்திற்குரிய வட்டி யுடன் சேர்த்து, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருவது ஏற்புடையதில்லை.

எனவே, தமிழக அரசு. இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் சார்பில் உயர், உச்ச நீதிமன்றங்களில் விரைவில் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை

 


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

ரூ.8 லட்சமாக உயர்வு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை, ஏப்.11- விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை ரூ.8 லட்ச மாக உயர்த்தப் படுவதாக அமைச்சர் சி. வி. கணேசன் தெரிவித்தார்.

முதியோர் இல்லங்கள்

சட்டமன்றத்தில் தொழிலாளர் திறன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக் கையின்போது அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலா ளர்களின் திறனை மேம்படுத்த, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை,தச்சு வேலை, மின் பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல தொழில் இனங்களில் 7 நாட் கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதியத்து டன் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.45 கோடியே 21 லட்சம் செலவில் வழங்கப்படும்.

கட்டுமானத் தொழி லாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மய்யங்கள் ரூ.20 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்படும். ஆதரவற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்காக சென்னையில் 2 முதியோர் இல்லங்கள் தொடங்கப் படும்.

மரண உதவித் தொகை

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முறையான பட்டப்படிப்பு, முறையான பட்ட மேற் படிப்பு, தொழிற் கல்வி பட்டப் படிப்பு மற்றும் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு போன்ற உயர் கல்வி பயில தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

கல்வி உதவித் தொகை

பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு பி.எச்டி. பயிலும்போது ஒரு கல்வி ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் படும். இவ்வாறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.

 

வியாழன், 10 ஏப்ரல், 2025

10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்

 

விடுதலை நாளேடு

சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும் அனைத்து நிறுவ னங்களிலும் உள்ளக புகார் குழுக்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

உள்ளூர் புகார் குழுக்கள்

பெண்களின் பாதுகாப் புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மூலம் ‘உள்ளூர் புகார் குழு’ அமைக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற வற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன் புறுத்தல்களை தடுக்க ‘உள்ளக புகார் குழுக்கள்’ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இக்குழுவை குறைந்த பட்சம் 4 உறுப்பி னர்களை கொண்டு அமைக்க வேண்டும். அதில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நிறுவனங்களி லும் பெண்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும். புகார் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை

இந்த குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் புகார் குழுவை அமைக்காமல் இருந்தாலோ, புகாரின் அடிப்படையில் நடவ டிக்கை மேற்கொள்ளப் படாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழுவை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத் தியுள்ளார்.