செவ்வாய், 9 டிசம்பர், 2025

திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த வெற்றி! திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சட்டப் போராட்டம் வென்றது!

 

‘பெல்’ ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க
உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு!

திருச்சி, டிச.6 திராவிடர் தொழிலாளர் கழ கத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பான ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் தொடுத்த வழக்கில் வர லாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக, திருச்சி பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்‌இஎல்) நிறுவனத்தில்  நீண்ட காலமாகப் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடார் நேற்று (5.12.2025) வழங்கிய உத்தரவில், ஒன்றிய அரசின் தொழில் தீர்ப்பாயத்தின் 01.12.2022  தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக ‘பெல்’ வளாக ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் இந்த வழக்கை 2012 ஆம் ஆண்டில் தாக்கல் செய்தது. தொழிலாளர்களே இயக்கும் கூட்டுறவு அமைப்பாகப் பார்வைக்குத் தோன்றினாலும், அது உண்மையில் ‘பெல்’ நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் இயங்கும் போலியான அமைப்பு (Sham, Bogus & Camouflage arrangement) என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

40 ஆண்டு காலப் போராட்டம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் லிமிடெட் (‘பெல்’) தொழிற்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றியோரை நிரந்தரமாக்க வேண்டும்; நிரந்தரத் தொழி லாளர்களுக்குரிய பயன்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 30 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணை யாக அனைத்துப் பணிகளையும் செய்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தைத் தான் ‘பெல்’ நிர்வாகம் வழங்கி வந்ததே தவிர, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியத்தையோ, பிற பலன்களையோ வழங்கவில்லை.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முயற்சி

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்த ரமாக்கக் கோரி, திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இப் பிரச்சினை குறித்துப் பலமுறை அறிக்கைகள் விடுத்ததுடன், ‘பெல்’ நிர்வாகத்தைக் கண்டித்துப் பல கூட்டங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்குகொண்டு உரையாற்றி உள்ளார்கள். தமிழர் தலைவர் கி.வீரமணி, மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் திராவிடர் தொழிலாளர் கழகம் நடத்தியுள்ளது.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் பல்வேறு தொடர் போராட்டங்களின் வாயி லாக, கேண்டின் உணவு அருந்துவதற்கான சலுகை, தேநீர், பாலிஸ்டர் சீருடை, தேசிய விடுமுறைகள், அவை  தவிர 18 நாட்கள் தற்செயல் விடுப்பு, புத்தாண்டுப் பரிசுகள், சட்டப்படியான போனஸ் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட்டன. ‘பெல்’ நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வரக் காரணமான பெருந்தலைவர் காமராசர் படத்தை, அந் நிறுவனத்திற்குள்ளேயே வைக்க மறுத்த நிர்வாகத்தைக் கண்டித்து, தி.தொ.க. நடத்திய போராட்டத்தின் விளைவாகத் தான் இன்று காமராசர் படம் இந் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்தனை வெற்றிகளைப் பெற்றிருந்தா லும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தர மாக்குவதற்கு, ‘பெல்’ நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,   திராவிடர் தொழிலாளர் கழகத்துடன் இணைக்கப்பட்ட ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மு.சேகர், 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப்  பிறகும்?

தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு ‘பெல்’ நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், அப்போதும் ‘பெல்’ நிர்வாகம் அது குறித்துப் பரிசீலிக்கவில்லை.

அதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள ஒன்றியத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக உதவி தொழிலாளர் ஆணையரிடம் முறையிடக் கூறியதால், அங்கு சென்று சங்கம் முறையிட்டது. அங்கு ‘பெல்’ நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆணையிடப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், இவ்வழக்கை இந்தியத் தொழிலாளர் நலத் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைத்தார். அங்கிருந்து தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் நீதிபதி பிரசன்ன குமாரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக இடைக்காலத் தீர்ப்பு வழங்கினார். அதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தடையாணை பெற்றது ‘பெல்’ நிர்வாகம். மீண்டும் சென்னை  உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் என பல மேல்முறையீடுகள், வழக்குகளுக்குப் பிறகு, 2022  டிசம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து, 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம்.

அந்த வழக்கில் தான் நேற்று (5.12.2025) இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போலியான மற்றும் மறைமுக
வேலைவாய்ப்பு அமைப்பு

அந்தக் கூட்டுறவு அமைப்பு உண்மையான ஒப்பந்த நிறுவனமல்ல; நிரந்தரப் பணியாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்க்க பயன்படுத்தப்பட்ட ‘‘நிழல்’’ அமைப்பு (Sham, & Bogus) என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பளம், பணிநேரம், கூடுதல் பணிநேரம், விடுப்பு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்தையும்  ‘பெல்’ நிறுவனமே நிர்வகித்துள்ளதை ஆவணங்கள் காட்டுகின்றன. ‘பெல்’ வழங்கிய அடையாள அட்டைகள், பணி நேர அட்டவணைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றுகள் அதனை உறுதியானதாக நிரூபித்துள்ளன. ‘பெல்’ நிர்வாகத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் தான்  இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர் என்றும், நிரந்தர பணித் தன்மையுள்ள வேலைகளான ஓட்டுநர், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற நிரந்தரப் பணிகளில் இத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்குச் சம்பளம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

ஹுசைன் பாய் எதிர் அலாத் தொழிற்சாலை (1978) மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி இந்தியா (2001) போன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, “பணியைக் கட்டுப்படுத்துபவரே உண்மையான முதலாளி” என்ற கொள்கையை நீதி மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மறைமுகமாகவும், போலியாகவும் இப் பணிகளை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டு, அந்தப் பணியாளர்களுக்கான பயன்களை வழங்கா மல், நிரந்தரப் பணியாளர்களாகவும் அங்கீ கரிக்காமல் இருந்த ‘பெல்’ நிர்வாகத்தின் செயல் தவறானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  வழக்கில் இருந்த இரண்டாவது பிரதிவாதியான கூட்டுறவு அமைப்பு முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.

இத் தீர்ப்பின் படி, தகராறு எழுந்த தேதியன்று பணியில் இருந்த தொழிலாளர்கள் அைனவரும் நிரந்தரமாக்கப்படவேண்டும். பணியில் சேர்ந்த நாள் முதல் அவர்களின் பணிக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தகராறு தொடங்கிய தேதிமுதல் சம்பள வேறுபாடு (arrears) வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவை ‘பெல்’ நிறுவனம் 4 மாதங்களுக்குள் அமலாக்க வேண்டும் என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, பொதுத்துறை நிறுவ னங்களில் நிரந்தர ஆட்சேர்ப்பை தவிர்த்து, ஒப்பந்தத் தொழிலாளர்களை நீண்டகாலம் பயன்படுத்தும் முறைகளுக்கு வலுவான சட்டப் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற நிழல் ஒப்பந்தங்கள் போடும் நடைமுறைகளுக்கு எதிரான பிற வழக்குகளுக்கும் இது முன்னுதாரணமாக அமையும் என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வாதாடிய வழக்குரைஞர்களுக்கும்– ஆதரவு தெரிவித்த அமைச்சர்களுக்கும் நன்றி!

இவ்வழக்கில் பல்வேறு நிலைகளிலும் ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மூத்த வழக்குரைஞர்கள் இரா.விடுதலை, ஏ.தியாகராஜன், வழக்கு ரைஞர்கள் த.வீரசேகரன், கே.வீரமணி, கே.பாலசுப்பிரமணியன், ஆர்.அண்ணாமலை, எஸ்.நாகநாதன், ஜெ.துரைசாமி, வி.பிரபாகரன், டி.பிரதீப்ராஜா, எம்.நடராசன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் மிகச் சிறப்பாக வாதாடினர். தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இப் போராட்டத்திற்குப் பல்வேறு நிலைகளிலும் ஆதரவாக இருந்துள்ளனர்.

வழக்கின் வெற்றியைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் திருச்சியில் இன்று (6.12.2025) தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பொருளாளரும், காட்டூர் பகுதி திராவிடர் கழகத் தலைவருமான காமராஜ் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

திராவிடர் தொழிலாளர் கழகம் தொடுத்த சட்டப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, திருவெறும்பூரில் இந்தத் தீர்ப்பை விளக்கி விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறும் என்று திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு,6.12.25

செவ்வாய், 28 அக்டோபர், 2025

62 பேர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 


சென்னை, செப்.27-  தமிழ்நாடு முதலமைச்சர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 38 நபர்களுக்கும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 18 நபர்களுக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 நபர்களுக்கும், என மொத்தம் 62 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 23 மீன்துறை சார் ஆய்வாளர், 12 உதவியாளர் மற்றும் 3 இளநிலை கணக்காளர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணை யத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொழிற்நுட்பர் (இயக்குபவர்) பணியிடத்திற்கு 15 நபர்களும், விரிவாக்க அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு 3 நபர்களும், என மொத்தம் 18 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கி
னார்.

நியமனம் செய்யப்பட்ட 18 நபர்கள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிவர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribe) சிறப்பு நியமனம் அடிப்படையில் 2 உதவிப் பேராசிரியர். 1 பண்ணை மேலாளர் (Farm Manager), 3 குறிப்பான் (Marker), என மொத்தம் 6 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் டாக்டர் ந. சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் க.வீ. முரளீதரன்,  பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் / ஆவின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணை வேந்தர் (பொறுப்பு) முனைவர் இர. நரேந்திரபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

- விடுதலை நாளேடு,27.09.25

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்


 சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும் அனைத்து நிறுவ னங்களிலும் உள்ளக புகார் குழுக்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

உள்ளூர் புகார் குழுக்கள்

பெண்களின் பாதுகாப் புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மூலம் ‘உள்ளூர் புகார் குழு’ அமைக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற வற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன் புறுத்தல்களை தடுக்க ‘உள்ளக புகார் குழுக்கள்’ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இக்குழுவை குறைந்த பட்சம் 4 உறுப்பி னர்களை கொண்டு அமைக்க வேண்டும். அதில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நிறுவனங்களி லும் பெண்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும். புகார் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை

இந்த குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் புகார் குழுவை அமைக்காமல் இருந்தாலோ, புகாரின் அடிப்படையில் நடவ டிக்கை மேற்கொள்ளப் படாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழுவை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத் தியுள்ளார்.

-விடுதலை நாளேடு, 08.04.2025

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

இந்தியத் தொழிலாளர் -பெரியார்


தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடைய வனாகவிருக்கிறேன். பொதுவாய் நம் நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர் களைக் குறிக்கின்றதே யன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை. தொழிலாளன் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச் செய்து அத் தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும். தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உபகருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அது போல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வÞதுவும் அதற்கு உபகருவியாகவிருந்து, அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆக மாட்டார்கள். இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதேயல்ல. இவர்களாகவே கூலிக்கு அமர்ந்து கொண்டு அடிமைபோல் சொல்லுகிறதைச் செய்கிறதாகவும் சம்மதித்து, பிறகு எஜமானன் அதிக லாபம் அடைவதைப் பார்த்துப் பொறாமை கொண்டோ, தொழில் திறத்திற்கு என்று அல்லாமல் வயிற்றுக்குப் போதாது என்ற காரணத்தினாலோ தாங்கள் இல்லாவிட்டால் வேலை நடக்காது என்று நினைத்து தங்களுக்கு அதிகக்கூலி வேண்டும், தராவிடின் வேலை நிறுத்தம் செய்வோம், வேலை நிறுத்தம் செய்தபின் வேறு ஒருவன் அந்த வேலை செய்யவும் சம்மதிக்கமாட்டோம். முதலாளி எங்கள் வேலை நிறுத்தத்தால் நஷ்டமடையவேண்டும் என்கின்ற முதலியனக் காணப்படும் செயல்களையும் அதன் பலன்களையும்தான் தொழிலாளர் இயக்கமென்பதும், தொழிலாளர் இயக்கத்தின் வெற்றி தோல்வியாய்க் கருதப்படுவதுமாகவிருக்கிறது.

இதைக் கூலிக்காரர்கள் இயக்கம் என்றுதான் கூறலாம். இவ்வித இயக்கம் உண்மையில் நம் தேசத்திற்கோ, நம் தேச மக்களுக்கோ எவ்விதத்திலும் அனுகூலமான இயக்கம் என்று சொல்லமுடியாது. இது மேனாட்டு வழக்கத்தை அனுசரித்தது. அங்குள்ள முதலாளிகளும், கூலிக்காரர்களும் கீழ்நாட்டுப் பணத்தையும், பதவியையும் கொள்ளையடித்து அதை எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்கிற சண்டைதான் அங்கு தொழிலாளர் இயக்கமாய் விளங்குகின்றது. நம் நாட்டிலோ தொழிலாளி அதிகக்கூலி கேட்க  கேட்க முதலாளி, மக்கள் வாங்கும் பொருள்களின் மேல் அதிகவிலையை வைத்து, மக்களிடம் பொருள்பறித்து, சிறிது தொழிலாளர்களுக்குக் கொடுத்து மிகுதியைத் தான் எடுத்துக்கொண்டு முன்னிலும் தான் அதிக லாபம் சம்பாதித்தவனாகிவிடுகிறான். உதாரணமாக, ரயில்வே, டிராம்வே தொழிலாளர்களின் இயக்கங்களை எடுத்துக்கொள்வோம். சென்னை டிராம்வே, ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் எஜமானர்களான கம்பெனிக் காரர்களிடத்தில் அதிகக்கூலி கேட்டார்கள். எஜமானர்களும் முதலாளி களுமான கம்பெனிக்காரர்களோ கட்டணமாகிய டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தினார்கள்.

இவ்வகையில் ஜனங்களின் பணத்தைப் பறித்து தொழிலாளர்களுக்குக் கொஞ்சம்  கொடுத்துவிட்டு மேற் கொண்டும் தாங்கள் லாபம் அடைந்தார்கள். இதில் எவருடைய பொருள் நஷ்டமடைந்தது? முதலாளிகள் பொருளா? இம்மாதிரியான நடவடிக்கைகளை சுருக்கமாகக் கூறின் கூட்டுக்கொள்ளை என்றுதான் சொல்லவேண்டும். இவ்வித இயக்கங்களாலும், நடவடிக்கை களாலும் தேசம் ஒருபொழுதும் முன்னேற்ற மடையாது. ஏழைகளும் பிழைக்க முடியாது. இவ்வித இயக்கங்கள் நடத்தவதைவிட பொதுவுடைமைத் தத்துவங்கள் நடத்துவது குற்றமென்று சொல்ல முடியாது. இம்மாதிரி இயக்கங்கள் நாட்டின் உண்மைத் தொழில் அபிவிருத்திக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் கொஞ்சமும் உதவி செய்யாது. இதுமாத்திரமன்றி இவ்வியக்கங்களை நடத்தும் தொழிலாளர்களின் தலைவர் களோவென்றால் பெரும்பாலும் முதலாளிகளும் எஜமானர் களுமாகவேதான் இருக்கிறார்கள். தொழிலாளிகளின் கஷ்டமும் கூலிக்காரர்களின் கஷ்டமும் ஒரு சிறிதும் அறியாமல் தொழிலாளரின் உழைப்பினாலும், கூலிக்காரரின் அறியாமையி னாலும் பிழைக்கிற இவர்கள் இவ்வியக்கத்தை நடத்துகின்றனர். இது எப்படி முன்னுக்கு வரும்? இதுவரை நம் நாட்டில் தொழிலாளர் இயக் கங்கள் எவ்வளவு முன்னுக்கு வந்தன? எவ்வளவு மறைந்தன? எவ்வளவு வெற்றி யடைந்தன? எவ்வளவு தோல்வியடைந்தன? எவர் ஒழுங்காக நடத்தினர்? என்பதைக் கவனித்தால் இவற்றின் பலனை நன்கு அறியலாம்.

தொழிலாளிகளும், தொழிலாளர் இயக்கங்களும் இந்த நாட்டில் முன்னுக்கு வரவேண்டுமாயின், தொழிலாளர்கள் தாங்கள் கற்ற தொழிலைக்கொண்டு தாங்களே ஒரு தொழில் தங்களிஷ்டம்போல் செய்து தொழில் திறத்தையும் ஊழியத்தையும் அறிந்து அத்தொழிலின் பலன்களை நாட்டாருக்குக் கொடுத்து நாட்டாரை அனுபவிக்கச் செய்து, அதன் ஊதியமுழுவதும் தாங்களே அடையும்படியான நிலைமை நாட்டிற்கு என்று வருகின்றதோ அன்றுதான் தொழிலாளரின் நிலைமை முன்னேற்றமடையுமே அல்லாமல் கைத்தொழில் அழிக்கப்பட்டுப்போன காரணத்தால் முதலாளிகள் இயந்திரங்களை அதிகம் அமைத்து, திக்கற்றவர்களைக் கூலிக்கமர்த்தி, அவர்களிடம் கொடுமையான வேலை வாங்கி, அதன் பயனாய் கொள்ளை அடிப்பது போன்று லாபத்தைச் சம்பாதித்து அவை வேலைக்காரர்களும் பொதுஜனங்களும் அடையாதபடி நடுவிலிருந்துகொண்டு முதலடித்து

தானேஅனுபவித்து வருவதால் ஒருநாளும் முன்னேற்றமடைய முடியாது.

இதுவரை தொழிலாளரின் கதி இப்படியாயினும் இனி எதிர்காலத்திலாவது தொழிலாளர் தங்கள் குழந்தைகளையும் மற்றும் தொழில் வேண்டியவர்களும் தாங்கள் கற்கும் தொழிலைக் கொண்டு மற்றொருவர் பிழைக்கும் மார்க்கமான தொழிலாயில்லாமல் தாங்கள் செய்யும் தொழிலின் பலன்களை முற்றிலும் தாங்களே அனுபவிக்கும்படியான தொழில்களைக் கற்றுக் கொடுப்பதுடன் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் இயக்கங்களை முதலாளிகளும் எஜமானர்களும் தலைமை வகித்து நடத்தவிடாமல் தானேதன் கையைக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளியோ, அல்லது கூடுமானால் தன் கைக்கொண்டு வேலை செய்து அதன் முழுப்பலனையும் தானே அடையும் படியான உண்மையானதும் சுதந்திரமுடையதுமான ஒரு தொழிலாளியோ இயக்கத்தைத் தலைமை வகித்து நடத்தும்படி வந்தால், இன்றைக்கே இல்லாவிடினும் கூடிய விரைவிலாவது தொழிலாளிகளும், தொழிலாளரின் இயக்கங்களும் நாட்டிற்கு நன்மை பயக்கக் கூடியவைகளாக விளங்கும். இல்லாதவரையில் தலைவர்கள் என்போர் சுயநலத்தைப் பெருக்கிக் கொள்ளவோ, முதலாளிகள் கொள்ளை அடிக்கவோ, தொழிலாளிகள் என்போர் சண்டித்தனம் செய்து வயிறு வளர்க்கவோதான் முடியும்.

– குடிஅரசு, கட்டுரை, 28.06.1925

-விடுதலை நாளேடு, 2.8.25

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

தொழிலாளி – முதலாளி பேதம் ஒழிய…. தந்தை பெரியார் .

 


தொழிலாளர் “சங்கப் போராட்டம்” என்றால் முதலாளிகளை ஒழித்து, முதலாளி – தொழிலாளி என்ற பேதமில்லாமல் செய்வது என்றால் சரி, நியாயம்.  அதைவிட்டுவிட்டு கூலி உயர்வைக் கருதியே ஒரு சங்கம் இருக்கிறது என்றால் அதற்குப் போராட்டம் எதற்கு? ஸ்ட்ரைக்கு  நாச வேலை எதற்கு?

தோழர் கோவிந்தசாமி அவர்கள் பேசும்போது சொன்னார்கள், தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று. அது மிக நியாயம். நான் 5 வருடத்திற்கு முன்பிருந்தே மில் தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். போனஸ். போனஸ் உயர்வு என்பதெல்லாம் அநேகமாய் அதற்கப்புறமே பலம் பெற்று வளர்ந்து வருகிறது.

தொழிலாளிக்கும் முதலாளிக்கும் பங்கு

அதோடு மட்டுமல்ல; ஒரு வருஷத்திற்கு முன்பு சொன்னேன், தொழிலாளிக்கு லாபத்தில் பங்கு மாத்திரம் போதாது. முதலிலும் பங்கு இருக்கவேண்டும் என்று. அது எப்படி என்றால், ஒரு லட்சம் ரூபாய்  முதல் போட்டுஒரு ஸ்தாபனத்தை ரிஜிஸ்டர் செய்தால் அதில் தொழிலாளர்களுடைய பங்கு (Share) என்பது ஆக ரூ.25,000 ரூபாய் அவரது பொறுப்பு பங்கு என்று போடப்பட வேண்டும். ஆக 1,25,000 ரூபாய்க்கு பங்கு ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அந்தப்படி பங்கில் தொழிலாளியின் அவரது பொறுப்பு பங்குக்கு ஒரு வருஷத்தில் ரூ.5000 லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ரூ.5,000மும் சேர்ந்து அந்த ஆனரரி பொறுப்பு பங்கு ரூ.30,000க்குப் பதியவேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளி பாதுகாப்புப் பண்டாக அதைச் சேர்த்து வரவேண்டும்; இதன் அர்த்தம் என்னவென்றால் தொழிலாளி முதலாளிக்கு அடிமையல்ல;  வெறும் கூலிகள் அல்ல தொழிலாளிகளும் முதலாளிகளும் ஒருவருக்கொருவர் பங்காளிகள், கூட்டாளிகள் என்கிறதான முறையாகும். அப்போதுதான் இரு சாராருக்கும் சமபொறுப்பும் நாணயமும் ஏற்படும்.

அடிமை நிலை என்ன?

முதலாளியும் தொழிலாளியும் அடிமை என்கிற தன்மையில் இருப்பதால் தொழிலாளிக்கு தொழிலினிடத்திலும் தொழிற்சாலை இடத்திலும் பொறுப்பு இல்லை; கவலை இல்லை. கூலிக்கு மாரடித்து விட்டுப் போவோம் என்பது மாதிரி  பொறுப்பற்ற தன்மையில் கடிகாரத்தைப் பார்த்தவண்ணம் இருக்கிறான். அதே மாதிரி முதலாளிக்கும், தொழிலாளி ஓர் அடிமை – அந்த அடிமை தன்னுடைய ஜீவன் அவசியத்திற்கு வேலை செய்பவன். ஆதலால் அவன் சாகாமல் இருக்கும் அளவுக்குக் கூலிகொடுத்தால் போதும் என்று கருதி இவனைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறான். இவர்கள் இருவரின் பொறுப்பற்ற தன்மையால் நாட்டில் செழிப்பும், உற்பத்தி வளர்ச்சியும் கெடுகிறது. ஆதலால், இந்தப் பொறுப்பற்ற தன்மையும் ஒழிந்து முதலாளிக்கும் – தொழிலாளிக்கும் எஜமான் – அடிமை என்கிற தன்மை இல்லாமல் முதலாளியும் தொழிலாளியும் பங்காளிகள் கூட்டாளிகள் என்கிற  தன்மை ஏற்படும். நான் மேலே சொன்னபடி ஏற்பாடு செய்தால், முதலாளி – தொழிலாளி என்றால் ஒருவருக்கொருவர் நல்லுறவோடு இருக்கவேண்டுமே தவிர, ஒருவரை ஏமாற்றுவது என்பதாகவும் பழிவாங்கும் உணர்ச்சியுடனும் இருக்கக்கூடாது.

முன்னுதாரணம்

நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, என் விலாசத்திற்கே பங்கு இருந்தது. ஈ.வெ.ரா.
மண்டி விலாசத்திற்கு 10,000 ரூபாய் முதலீடு என்று வைத்துக்கொள்ளுங்கள். வேலைக்கு 3 குமாஸ்தாக்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். வருகிற லாபத்தை 3 பங்காகப் பிரித்துக்கொள்வது. அப்படிப் பிரித்ததில், ஒரு பங்கு மண்டிச் சொந்தக்காரரும், நிருவாகப் பொறுப்புடையவருமான
ஈ.வெ.ராவுக்கு; மற்றொரு பங்கு முதலீடு போடப்பட்ட ரூபாய் 10,000க்கு மூன்றாவது பங்கு. குமாஸ்தாக்களுக்கு நட்டம் வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். குமாஸ்தாக்கள் குடும்பச் செலவுக்குப் பத்திக்கொண்ட மாதம் ஒன்றுக்கு ரூ.15 வீதம் உள்ள தொகையைச் சிப்பந்திச் செலவு என்று பொதுச் செலவு எழுதிவிட்டு மீதியை அடுத்த வருஷ லாபத்தில் கழித்து விடுவேன். லாபம் கிடைத்தால் பங்கிட்டுக் கொடுத்துவிடுவேன். நாங்களெல்லாம் மண்டி நடத்துகிறபோது 40-50 வருஷங்களுக்கு முன் இப்படித்தான் நடந்தது. இதற்குக் கஷ்டக்கூட்டு என்று பெயர். என்னிடம் கஷ்டக் கூட்டுக்கு இருந்த நபர்கள் இப்போது தனி முதலாளிகள் ஆகி எனக்கு மேல் 3 பங்கு 4 பங்கு பணக்காரர்களாக இருக்கிறார்கள். அந்த மாதிரி தொழிலாளிக்குப் பங்கு கிடைக்க வேண்டும். அப்போது தான் தொழிலாளி உயர முடியும். அப்படிக்கு இல்லாமல் எவ்வளவு கூலி உயர்ந்தாலும் முதலாளி முதலாளிதான் தொழிலாளி தொழிலாளிதான்.

எந்நேரமும் சண்டை ஏன் ?

அப்படிக்கில்லாமல் முதலாளியும் தொழிலாளியும் எந்நேரமும் சண்டை போட்டுக் கொள்வது; இவன் அவனைக் கண்டால், ‘உர்’ என்கிறது; அவன் இவனைக் கண்டால் மிளகாய் கடித்த மாதிரி கரிந்து விழுவது; இரண்டு பேரும் தகராறு செய்து கொண்டு கோர்ட்டுக்குப் போவது; அது இழுப்பறித்துக் கொண்டு இருந்து கடைசியில், உதவாக்கரை சமாதானம் ஆவது. மறுபடியும் தகராறு, சண்டை, கோர்ட், சமாதானம் என்று இப்படியே இருந்தால் என்ன ஆவது? முதலாளி – தொழிலாளி இவர்கள் இருவரின் சண்டையும் எப்படியோ போகட்டும். இவர்களின் இந்தத் தகராறின் காரணமாய் நாட்டில் பொருள் உற்பத்தி குறைந்துவிட்டது. நாட்டுப் பொது நிலையில் கஷ்டம் ஏற்படுகிறது. இன்றைய பஞ்சநிலைக்கு, பண்டங்களின் தரங்குறைவுக்கு, கடுமையான விலை ஏற்றத்திற்கு இருவரிடமும் நாணயம் இல்லாததற்கு 100க்கு 90 பங்கு முதலாளி – தொழிலாளித் தகராறும் அவர்களது மனப்பான்மையும்தான்!

(10.9.1952 அன்று பொன்மலையில் தென்பகுதி ரயில்வேமென் யூனியன் துவக்க விழாவில் தந்தை பெரியார் நிகழ்த்திய பேருரையில் ஒரு பகுதி)

- உண்மை இதழ், 1-15.5.25

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணி உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

 


சென்னை, ஏப். 2- கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி பணி

அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தனது தாயார் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் அந்த வேலையை தனக்கு வழங்கக்கோரி விழுப்புரத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை அரசு ரத்து செய்து விட்டதால், தனக்கு அங்கன்வாடி பணியாளராக வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரான விக்ரமுக்கு 8 வார காலத்தில் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சமூக நலத்துறை செயலாளரான ஜெயசிறீ முரளிதரன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

கருணை அடிப்படையில்

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று (1.4.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சமூக நலத்துறை செயலர் ஜெயசிறீ முரளிதரன் ஆஜரானார். அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரான ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அங்கன்வாடி பணியாளராக கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே பணிநியமனம் வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அந்த அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என்றார். அதையடுத்து இந்த வழக்கில் சமூக நலத்துறைச் செயலர் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.15-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்- 

- விடுதலை நாளேடு, 2.4.25

கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10 சதவீதம் உயர்வு அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

 



சென்னை, மார்ச் 30- சட்டப் பேரவையில் 28.3.2025 அன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் நிறைவாக அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்து பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் நெசவாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வாயிலாக கைத்தறி தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் இழப்பில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் வளர்ச்சிக்காக பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன’’ என்றார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்:
தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் களின் அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 1.5 லட்சம் நெசவாளர்கள் பயன் அடைவார்கள்.
வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் பெடல் தறி சேலைகளுக்கான நெசவுக் கூலி ரூ.75.95 ஆகவும், வேட்டிகளுக்கு ரூ.64.38 ஆகவும் உயர்த்தி தரப்படும். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.3.75 கோடியை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

நெசவுக் கூலி உயர்வு
இதேபோல், விசைத்தறி வேட்டி, சேலைக்கான நெசவுக் கூலியும் உயர்த்தப்படுவதுடன், அதற்கான கூடுதல் செலவினம் ரூ.8.58 கோடியையும் அரசே ஏற்கும்.
இதுதவிர கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் புதிய ரகங்களை அறிமுகம் செய்ய ரூ.1.55 கோடி நிதியுதவி வழங்கப்படும். கைத்தறி துணிகள் விற்பனையை அதிகரிப்பதற்கு மாநில அளவிலான 5 சிறப்பு கண்காட்சிகள் ரூ.1.5 கோடியில் நடத்தப்படும்.

மாநில அளவிலான சிறந்த வடிமைப்பாளர் விருதுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு முதலிடத்துக்கு ரூ.1 லட்சம், 2-ம் இடத்துக்கு ரூ.75,000, 3-ம் இடத்துக்கு ரூ.50,000 தரப்படும். கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்க தனி உரிமை விற்பனை நிலையங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
ஜவுளி தொழில் குறித்த பன்னாட்டு கண்காட்சி ரூ.1.5 கோடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும். மேலும், 6 கூட்டுறவு நூற்பாலைகளின் தரத்தை மேம்படுத்த ரூ.6.3 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.

- விடுதலை நாளேடு, 30.3.25

புதன், 6 ஆகஸ்ட், 2025

2538 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

 Viduthalai நாளேடு, 06.07.25


தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.8.2025) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவி பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டமிடல்), இளநிலைப் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் / இளநிலை பொறியாளர்’ (திட்டமிடல்), பணி ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 2538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,  துணை முதலமைச்சர்   உதயநிதி ஸ்டாலின்,  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு,   குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர்.பிரியா, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன்,  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்  ஜெ.குமரகுருபரன்,  சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய்,   நகராட்சி நிருவாக இயக்குநர்  பி.மதுசூதன் ரெட்டி,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,  பேரூராட்சிகளின் இயக்குநர்  எம்.பிரதீப் குமார்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

புதன், 23 ஜூலை, 2025

10 மணி நேர வேலை: புதிய நெருக்கடி

 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்களில் நாளொன்றுக்கு 8 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 10 மணி நேரமாக மாற்றி தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதிகபட்சமாக வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களை வேலை வாங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, வார துவக்கத்தில் 10 மணி நேரம் வரை வேலை வாங்கினால் அடுத்துவரும் நாட்களில் வேலைநேரம் குறைந்து வார இறுதி நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு கிடைக்கும். அதற்கு அதிகமாக வேலைவாங்குவதென்றால் கூடுதலாக பணியாற்றும் நேர அளவுக்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இடைவெளியின்றி அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டுமே வேலை வாங்கவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரின் வசதிக்காக இந்த மாற்றங்களை செய்வதாக தெலங்கானா அரசு அறிவித்திருப்பது, தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவே அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதமே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. அங்கு 9 மணி நேரமாக இருந்த அதிகபட்ச வேலைநேரத்தை 10 மணி நேரமாக கடந்த மாதம் மாற்றியதுடன், பெண் பணியாளர்களை இரவு பணியில் ஈடுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின்தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொழில்துறையினரின் வசதிக்கேற்ப சட்டத்தை மாற்றும்படி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்பேரில், மாநிலங்கள் இத்தகைய மாற்றங்களை செய்து வருகின்றன. தமிழகத்திலும் கடந்த 2023-ஆம் ஆண்டு 8 மணி நேரமாக இருந்த அதிகபட்ச வேலைநேரம் 12 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் வெளிநடப்பையும் மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்பையடுத்து, இச்சட்டத்தை வாபஸ் பெற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம், 12 மணிநேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, எல் அண்டு டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் போன்றோர் வலியுறுத்தியதையடுத்து தொழிலாளர் வேலை நேரம் குறித்து நாடு முழுக்க பெரும் விவாதம் நடந்தது. அவர்களது கோரிக்கையை ஒவ்வொரு மாநிலமாக தற்போது அமல்படுத்த தொடங்கி விட்டன. நாட்டின் வளர்ச்சிக்காகவும், தொழில்துறையினர் கூடுதல் லாபம் ஈட்டுவதற்காகவும் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விட்டதால், மாநில அரசுகளுக்கும் தற்போது நெருக்கடி ஏற்பட்டு வருவதையே நடந்துவரும் மாற்றங்கள் உணர்த்து கின்றன.

அதிகாரமும் பண பலமும் ஒன்றிணைந்து அசுர பலத்துடன் காய்களை நகர்த்தி வருவதால் நாடு முழுவதும் விரைவில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது உறுதியாகிவிட்டது. தொழிலாளர்களை பொறுத்த மட்டில், மாற்றங்களை எதிர்கொண்டு, அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதுடன் தங்கள் உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவர்கள் கையில்தான் உள்ளது.

– எம்.எஸ்.

நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 7.7.2025

-விடுதலை நாளேடு,7.7.25

செவ்வாய், 22 ஜூலை, 2025

அரசுப் பணியாளர்களை அரவணைக்கும் தமிழ்நாடு அரசு விபத்தில் இறந்தாலோ, ஊனமுற்றாலோ ரூ.1 கோடி கிடைக்கும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு

 



முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 7 வங்கிகளுடன் ஒப்பந்தம்

சென்னை, மே 20 அரசு ஊழியர் களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன் னோடி வங்கிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. இதன்மூலம், அரசு ஊழியர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தாலோ, விபத்தால் நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்துக் காப்பீடு தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு சலுகை

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. இன்றைய காலகட்டத்தில், பொது சந்தையில் இந்த காப்பீடுகளை பெற தனிநபர்கள் பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. இந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பெரும் செலவை தவிர்த்து, ஆயுள் காப்பீடு, தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவற்றை அவர்கள் கட்டணமின்றி பெற அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக முன்னோடி வங்கிகளிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் பலனாக, பல சலுகை களை வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.

ரூ.1 கோடி நிதி

மேலும், ‘அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தாலோ, விபத்தால் நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீடு தொகையாக ரூ.1 கோடி நிதி, விபத்தில் உயிரிழந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டிய மகளின் திருமண செலவுக்காக ஒரு மகளுக்கு தலா ரூ.5 லட்சம் என 2 மகள்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி, விபத்தால் உயிரிழந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மகளின் உயர்கல்விக்கான உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வரையும், பணிக்காலத்தில் அரசு அலுவலர்கள் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சமும் வங்கிகள் வழங்கும் என்று சட்டப்பேரவையில் தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் தங்களது ஊதிய கணக்கை பராமரித்து வரும் பட்சத்தில், எந்தவித கட்டணமும் இல்லாமல் இந்த சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் முன்வந்துள்ளன. இது மட்டுமின்றி, தனிநபர் வங்கி கடன், வீட்டு கடன், கல்வி கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கவும் இந்த வங்கிகள் முன்வந்துள்ளன.

ஒப்பந்தம்

இதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் அரசு சார்பில் கருவூலம், கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்கள் இடையே நேற்று (19.5.2025) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் முருகானந்தம், நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன், நிதித் துறை செயலர் (செலவுகள்) எஸ்.நாகராஜன், கருவூலம், கணக்குகள் துறை இயக்குநர் சாருசிறீ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உடனடி நடவடிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ‘களஞ்சியம்’ செயலி மூலமாக அரசு ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் ஊதியர் கணக்கு வைத்துள்ள வங்கிக் கணக்குகளில் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை உறுதி செய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 20.5.25

திங்கள், 21 ஜூலை, 2025

அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு தொடர்பான புதிய அரசாணை வெளியீடு

 


சென்னை, மே 30 அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு

இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ஆம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த விடுப்பு கடந்த 2021 ஜூலை 1 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதுள்ள விதிகள்படி மகப்பேறு விடுப்புக்காலம் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

தகுதி காண் பருவ பணிக்காலம்

இதனால், அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்துக்குள் முடிக்க முடியாமல் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசு பணியில் உள்ள மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்” என அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் அறிவிப்புக்கிணங்க ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தின்போது எடுத்துக் கொள்ளும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சிறப்பு அல்லது தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்ட தகுதிகாண் பருவ பணிக்காலம் கடந்த ஏப்.28-ஆம் தேதி முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஏப்.28-ஆம் தேதிக்கு முன் தகுதிகாண் பருவ பணிக்காலம் முடிந்திருந்தால் இந்த சலுகை பொருந்தாது இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்.பி.அய். விதிகள்
வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது

அமைச்சர் பெரியகருப்பன்

நகைக்கடன் குறித்த ஆர்.பி.அய். விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆர்பிஅய் விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது எனக் கூறிய அவர், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகைக்கடன் தரப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு,30.05.2025

செவ்வாய், 27 மே, 2025

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)

 

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)

தொழிலாளர் நலச் சட்டங்கள் - 4

• கே.ஜி. சுப்பிரமணியன்

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946

ஒரு தொழிற் துவக்கிய பிறகு முறையாகத் தொழிற்சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட பின் அந்தத் தொழிற்சங்கமானது அதல் தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிலையாணைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்குமிடையே பலப் பிரச்சினைகள், குறிப்பாக வேலை நிபந்தனைகள் பற்றி அடிக்கடி இருதரப்பிலும் தொழில் தகராறுகள் ஏற்படும். அப்படிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கு ஆணை சட்டம் பெரிதும் பயன்படுகிறது. பம்பாய் தொழிற் தகராறுகள் சட்டம் 1938-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பின்னர் 1943, 1944, 1945-ஆம் ஆண்டுகளில் முத்தரப்பு அமைப்பாகிய இந்தியத் தொழிலாளார் மாநாடுகளில் விவாதித்து தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் 1946-ஆம் ஆண்டு நிலையானைகள் சட்டம் இயற்றப்பட்டது.

சட்டத்தின் நோக்கங்கள்

தொழிற்சாலை நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு எடுத் துக் கொள்வதற்குரிய நிபந்தனைக ளைத் தெளிவுபடுத்துவதற்கும் ஏற்க னவே அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் மேற்கண்ட நிபந்தனைகளைத் தெரி யப்படுத்துவதும் இச்சட்டத்தின் நோக்கமாகும்.

2. வேலை நீக்கம், தொழிலாளர்கள் செய்யும் தவறான செயல்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் இவைகள் பற்றிய விளக்கம்.

3.நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் எல்வா தொழிலாளர்களுக்கும் ஒரு மாதிரி வேலை நிலைகளை உருவாக் குதல்

4. நிர்வாகம் தொழியாளர்கள் இருவர்களின் உரிமைகளையும் பொறுப்புக்களையும் விளக்குதல்,

தொழில் நிறுவனம்

1. 1948-ஆம் ஆண்டின் தொழிற் சட்டத்தின் பிரிவு (ளம்) குறிப்பிட்டுள்ள தொழிற் சாலைகள்,

2. 1800-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே சட்டப் பிரிவு 2(4)கீழ் வருகிற இரயில்வே நிறுவனங்கள்

3. பொது மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்.

4 சரங்கங்கள், பாலங்கள், எண்ணெய்க் கிணறுகள்.

5. உள்துறை நீர்வழிப் போக்கு ரத்துக் கழகங்கள்.

6. துறைமுகங்கள், கப்பல் துறைகள், கப்பல் தங்குமிடங்கள்.

7. மலைத் தோட்டங்கள்.

8. கால்வாய்கள், மற்றும் கட்டிடம் கட்டும் நிறுவனங்கள்.

9. மின் உற்பத்தி மற்றும் அதைப் பங்கீடு செய்யும் நிறுவனங்கள்.

10. தொழில் நிறுவன உரிமையாள ரிடம் நிறுவனத்தின் வேலையை முடிப்பதற்குத் தேவையாக வேலை யாட்களை வேலைக்குச் சேர்ந்துக் கொள்ளும் ஒப்பந்தக்காரரின் நிறுவனங்கள்.

11. 1955-ஆம் ஆண்டு சட்டத்தின் பத்திரிகை நிருபர்கள் (லேவை அமைப்பு, நிபந்தனைகள் மற்றும் பல தரப்பட்ட அமைப்புகள்) சட்டம் செயல்படுத்தப்படும் பத்திரிகை நிறு வனங்கள்.

12: 50 பணியாட்களுக்கும் அதற்கு மேலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பீடி மற்றும் சுருட்டுத்தொழில் நிறுவனங்களையம் குறிக்கும்

"வேலையளிப்பவர்"  ஒரு தொழிற்சாலையில் உரிமையாளரா கவோ அல்லது முதலாளியாகவோ இருக்கின்றவரையும் அல்லது அரசு நிறுவனங்களைப் பொருத்தவரையில் அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரையோ அல்லது அப்படி அலுவலர் இல்லாத இடத்தில் அந்தத்துறையின் தொழில் நிறுவனத்தில் உரிமையாளரின் மேற்பார்வைப் பொறுப்பேற்றுள்ள யரையும் குறிக்கும்.

வேலையாள்: 1. ஒரு தொழில் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மேற் பார்வையாளர், எழுத்தர், தொழில் நுட்ப பணியாளர்களும் இச்சட்டத்தின் படி வேவையால் எனப்படுவர் 

2. மாதச் சம்பளம் ரூ.500/- மேல் பெறும் மேற்பார்வையாளர்களும் நிர்வாகிகளும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும், சிவில் சட்ட விதிகளுக்கு உட்பட்ட அரசு இலாக்காக்களிலும் துறைகளிலும் பாதுகாப்புத் துறைகளிலும் இரயில்வே சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டவர்களும் தொழிலாளாகளாக கருதப்படமாட்டார்கள்.

நிலையாணைகள்: தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிபந்தனைகள் பற்றிய விதிகள் தான் நிலையாணைகள் ஆகும். பணி நிபந்தனைகளின் தன்மை கீழ்க்கணடவாறு தெளிவாக்கப்பட்டுள்ளது.

1. தொழிலாளர்களின் வகைகள் நிரந்தரம், தற்காலிகம், வேலை கற்பவர், மாற்றாள் முதலியன

2. வேலைக்காலம் விடுமுறைகள் ஊதிய விகிதங்கள், ஊதியும் வழங்கும் நாட்கள்

3. ஷிட்டு வேலைமுறை

4.வேலைக்கு வருதல், தாமதமாக வருதல்

5. விடுப்பு எடுப்பது நிபந்தனைகள், முறைகள்,

6. ஆலையின் நுழை வாயிலில் வேலைக்குச் செல்லும்போதும் ஆலையிலிருந்து வேலை முடித்து வரும் வழியில் சோதனைகள் செய் தல்,

7. சில பகுதிகளை தற்காலிகமாக நிறுத்துதல், திறத்தல், இவைகள் 'சம்பந்தமாக எழுகின்ற பிரச்சினைகள்.

8. வேலை நீக்கம் - வேலையை விட்டுச் செல்லுதல்

9. தவறான செயல்களுக்கு காரணமான சூழ்நிலை, அதற்கான தண்டனைகள்,

10.தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்குப் பரிகாரம்,

11.அரசால் குறிப்பிடக் கூடிய இதர விசயங்கள்.

தொழிலாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள், அங்கு தொழிற்சங்கம் செயல்பட்டால் அதன் பெயரையும் தெரிவித்து இச்சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாக நிர்வாகம் தனது நிறுவனத்திற்கான நிலையாணைகளை தயாரித்து 5 நகல்களை சான்று அளிக்கும் அதிகாரிக்கு அனுப்பவேண்டும்.

சான்று அளிக்கும் முறை

நிர்வாகத்தினரிடமிருந்து பெற்ற 5 நகல்களில் ஒன்றை, அங்கு தொழிற் சங்கம் செயல்பட்டால் அதற்கு அனுப்பி வைப்பார். சங்கம் இல்லையெனில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நகல் ஒன்றை சான்றளிக்கும் அதிகாரி அனுப்பிவைப்பார். 15 நாட்களுக்குள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். ஏதாவது ஆட்சேபம் இருந்தால் சான்று அளிக்கும் அதிகாரி இருதரப்பினரது கருத்துக்களையும் அறிந்த பின்னர் மாதிரி நிலையாணைகளின் அடிப்படையில் உள்ளதா என அறிந்த பின்னர் தேவையான மாற்றங்களை செய்து நேர்மையான நிபந்தனைகளா மற்றும் நியாயமானதா என்று சீர்தூக்கிப் பார்த்து சான்று அளிப்பார். நிலையாணைகள் சான்றளித்த 7 நாட்களுக்குள் அதன் நகல்களை நிர்வாகம், மற்றும் தொழிற்சங் கங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

மேல் முறையீடு:

இத்தகைய சான்று அளித்ததினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் 30 நாட்க ளுக்குள் மேல்முறையீடு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு அதிகாரி சம்பந்தப்பட்ட அரசுகளினால் நியமிக்கப்படலாம். மேல் முறையீடு அதிகாரியின் முடிவு இறுதியானது. அவர் சான்றளிக்கும் அதிகாரியின் உத்தரவை உறு திப்படுத்தியோ அல்லது மாற்றங்கள் செய்தோ உத்தரவு இடுவார். இந்த உத்தரவு செய்த 7 நாட்களுக்குள் சான்று வழங்கும் அதிகாரிக்கும் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் மேல் முறையீடு அதிகாரி அனுப்பி வைப்பார்.

மேல் முறையீடு செய்யப்படாவிடில் சான்று அளிக்கும் அதிகாரிகள் உத்தரவு கிடைத்த 30 நாட்கள் முடிவடைந்த பிறகு சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கும். மேல் முறையீட்டு அதிகாரியின் உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குப் பிறகு அல்லது உத்தரவின் படி செயல்படத் தொடங்கும்.

சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் நகலை யாரும் நகல் பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு அதிகாரியிடமிருந்து பெறலாம்.

நிலையாணைகளில் மாற்றம் செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கை

சான்று அளிக்கும் அலுவலர் சான்ற ளித்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பின் நிறுவனமோ அல்லது தொழிற் சங்கமோ அல்லது ஒரு தொழிலாளியோ மேற்கண்ட சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளில் மாற்றம் செய்ய விரும்பினால், சான்றளிக்கும் அலுவலருக்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு. சான்றளிக்கும் அலுவலர் ஏற்கனவே முறையாக என்னென்ன நடைமுறைகளை கடைப்பிடித்தாரோ அதே முறைகளைக் கடைப்பிடித்து நிலையாணைகளை மாறுதல் செய்யும் நடவடிக்கையில் செயல்படுவார். சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

நிலையாணைகளை நடைமுறைப் படுத்துவதில் நிறுவனத்தினருக்கோ அல்லது தொழிலாளருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். நீதிமன்றம் இரு தரப்பினரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும். இந்தத் தீர்ப்பு இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும்.

நிர்வாகத்தின் கடமை: நிலையா ணைகளை ஆங்கிலத்திலும் பெரும் பாலான தொழிலாளர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலும் நன்கு தெரியும்படி விளம்பரப் பலகையில் எழுதி அனைத்துத் தொழிலாளர்களும் நுழையும் இடத்தில் நிறுவனத்தினுள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

சான்றளிக்கும் அலுவலர்கள்: சென் னையில் தொழிலாளர் நலத் துணை ஆணையர்கள் 1ஆவது வட்டம் மற்றும் 2-ஆவது வட்டமும், தொழிலாளர் நல துணை ஆணையாளர் திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் பணிபுரிபவர்கள் தொழிற்சங்கப் பதிவாளராகவும் சான்றளிப்பவர்களாகவும் இயங்கி வருகின்றனர்.

தண்டனைகள்: ஒரு நிறுவனமானது' நிலை ஆணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றளிக்கும் அதிகாரிக்கு அனுப்பி சான்றினைப் பெறாவிட்டாலும், சான்று பெற்ற நிலையாணைகளை குறிப்பிட்டபடி விளம்பரப்படுத்தாமல் இருந்தாலும், சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலும் அதிகபட்ச தண்டனையாக ரூ.5000/- அய்யாயிரம் வரை அபராதமாக நிர்வாகத்தினர் மேல் விதிக்கலாம்.

உண்மை இதழ் 16-30-6-1998