திங்கள், 19 ஜூன், 2023

‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்! - தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உரை

 இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ அரசு நடைபெறுவதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்!

 

 ‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்!

தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு!

கண்ணியமிக்க மனிதர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்!

திராவிடர் கழகத் தொழிலாளர்களின் 4 ஆவது மாநில திறந்தவெளி மாநாட்டில் 

10

தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உரை தாம்பரம், மே 31  ‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்!  தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு! இன்றைக் குத் ‘திராவிட மாடல்’ அரசு நடைபெறுவதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்! கண்ணியமிக்க மனிதர்கள் திரா விடர் கழகத் தோழர்கள்! என்றார் தமிழ்நாடு  தொழிலா ளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள்.

திராவிடர் கழகத் தொழிலாளரணியின்

 4 ஆவது மாநில மாநாடு

கடந்த 20.5.2023 அன்று தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தொழிலாளர் அணியின் 4 ஆவது மாநில திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

திராவிடர் கழகத் தொழிலாளர் அணியின் 4 ஆவது மாநில மாநாட்டிற்குத் தலைமையேற்று இந்நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய தமிழர் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சென்றிருக்கக் கூடிய மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களே,

சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்.ஆர்.ராஜா அவர்களே,

எனக்கு முன் ஒரு சிறப்பானதொரு உரையை ஆற்றி அமர்ந்திருக்கக்கூடிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் அய்யா மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

மரியாதைக்குரிய மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

நன்றியுரையாற்றவிருக்கின்ற அண்ணன் முத்தையன் அவர்களே,

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றி அமர்ந் துள்ள திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும், என் பாசத்திற்குரிய அருமை அண்ணனுமான துரை.சந்திர சேகரன் அவர்களே,

பொருளாளர் அண்ணன் குமரேசன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் பாசத்திற்குரிய அன்புத்தம்பி மானமிகு வீ.அன்புராஜ் அவர்களே,

பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே,

மானமிகு அண்ணன் குணசேகரன் அவர்களே, அமைப்புச்செயலாளர்கள் செல்வம் அவர்களே, பன்னீர் செல்வம் அவர்களே, ஊமை.ஜெயராமன் அவர்களே, இரா.செந்தூர்பாண்டியன் அவர்களே,

மற்றும் என்னோடு வருகை தந்திருக்கின்ற சேர்மன் இப்ராகிம் அவர்களே, செயலாளர் தம்பி செல்வம் அவர்களே,

திராவிடர் கழகத்தினுடைய 

அன்புச் சொந்தங்களே!

இங்கே நீண்ட நேரமாக அய்யா ஆசிரியர் அவர் களுடைய உரையைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே அமர்ந்திருக்கக் கூடிய திராவிடர் கழகத்தினு டைய அன்புச் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

எப்பொழுதுமே நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய பெயரைப் போட்டு அழைத்தாலும், நான் தவறாமல் வருவதற்கு என்ன காரணம் என்றால், அவர் எனக்கு சொந்தக்காரர்.

நான் இப்படி சொல்வதால், எப்படி சொந்தம் என்று வேறு கணக்குப் போடாதீர்கள்.

தந்தை பெரியாருக்கு நான் சொந்தக்காரன் என்றால், ஆசிரியர் அவர்களுக்கும் நான் சொந்தக்காரன்தான். எங்களையெல்லாம் சொந்தக்காரர்களாக ஆக்குவதற் காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் இத்தனை ஆண்டுகாலமாகப் போராடி இருக்கிறார்.

தந்தை பெரியார் விதைத்த விதைதான்!

நான் இவ்வளவு பெரிய மேடையில், வேட்டி - சட்டை அணிந்து இவ்வளவு கம்பீரமாக வந்து நிற்கிறேன் என்று சொன்னால், தந்தை பெரியார் விதைத்த விதை தான்.

தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்கள், இன்றைக்குத் ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்துகிறார் என்று சொன்னால், அதற்குத் தந்தை பெரியார் அவர்கள்தான் காரணம். வேறு யாரும் காரணமல்ல.

இன்றைக்குப் பெரியாருடைய மறு உருவமாக இருக்கக்கூடிய நம்முடைய ஆசிரியர் அய்யா தமிழர் தலைவர் அவர்கள்தான் அதற்குக் காரணம்.

இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ அரசு நடைபெறுவதற்குக் காரணம் 

தந்தை பெரியார்தான்!

ஆகவே, இன்றைக்குத் ‘திராவிட மாடல்' அரசு, சமூகநீதி அரசு தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுகிறது என்று சொன்னால், அதற்குத் தந்தை பெரியார்தான் காரணம் என்று நான் சொல்கிறேன்.

ஆசிரியர் அய்யா அவர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்.

ஏனென்றால், ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வயது 90 தாண்டியது என்று சொன்னார்கள்.

ஆசிரியர் அய்யா மேல் எனக்குப் பாசம் அதிக முண்டு: பொறாமையும் அதிகம் உண்டு.

ஏனென்றால், 90 வயதில், 20 வயது இளைஞனைப் போல இங்கே அமர்ந்திருக்கின்றார். அதைப் பார்க்கும் பொழுது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

17 வயதிலேயே, 227 இடங்களில் கூட்டங்கள்

ஆசிரியர் அய்யா அவர்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன் - அவர் 12 வயதில் காரைக்குடிக்குப் பக்கத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் மாவட்ட மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார்.

17 வயதில், 227 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கின்றார்.

அந்த வயதில், அவர் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறார் என்றால், 23 ஆயிரத்து 422 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்.

அதைப் பார்த்து நான் அசந்து போனேன். ஆசிரியர் அய்யா அவர்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

56 முறை சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்.

தந்தை பெரியார், யாரையெல்லாம் கைதூக்கிவிட வேண்டும் என்று நினைத்தாரோ - ஒடுக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப் பட்ட மக்கள் என்று, யாரையெல்லாம் கைதூக்கிவிட வேண்டும் என்று விரும்பினாரோ, அதைத் தொடர்ந்து நடமாடும் பெரியார் அய்யாவாக இருக்கக்கூடியவர்தான் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள்.

எனக்கு 90 வயது என்றால், ‘‘நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு வேறு வேலையில்லை'' என்று சொல்லி, நான் போய் படுத்துக்கொள்வேன்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரைப் போல் அமர்ந்திருக்கின்றார் நம்முடைய ஆசிரியர்!

ஆனால், ஆசிரியர் அய்யா அவர்களைப் பாருங்கள், 94 வயதில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் எப்படி அமர்ந்திருந்தாரோ, அதேபோல அமர்ந்திருக்கின்றார். அந்த அளவிற்குச் சிறப்புமிகுந்த மனிதர்.

தண்ணீர் தராத கருநாடகத்திற்கு 

நாம் ஏன் மின்சாரம் தரவேண்டும் என்று போராடியவர் ஆசிரியர்!

56 முறை சிறைச்சாலைக்குப் போனதில், எங்களுக்கு ஒரு பெருமை என்னவென்றால், கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர், கடலூரில் நடைபெற்ற ஒரு பெரிய போராட் டத்தில் கலந்துகொள்கிறார்.

அந்தப் போராட்டம் என்னவென்றால், கருநாடக அரசாங்கம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரவில்லை. தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்காத கருநாடகத்திற்கு ஏன் நாம் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொடுக்கவேண்டும் என்று நெய்வேலியிலேயே போராட்டம் நடத்தினார்.

நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்!

அப்படிப்பட்ட ஆசிரியர் அய்யா அவர்கள், இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்துப் பேச வைத்தமைக்காக நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி யடைகிறேன். உள்ளபடியே நான் பெரியாரைப் பார்த்ததில்லை; பழகியதில்லை; பேசியதில்லை.

பெரியாரை நான் எங்கே பார்க்கிறேன் என்றால், பெரியாராக நம்முடைய ஆசிரியர் அய்யா அவர் களைத்தான் நான் பார்க்கிறேன்.

இந்த நேரத்தில் ஒரு கருத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்திய வரலாற்றில் கி.மு. - கி.பி.!

இந்திய வரலாற்றில், ஏசு நாதர் பிறந்த பொழுது, அவர் பிறந்த நாளைக் குறிப்பிட்டு, ஏசு பிறந்ததற்குப் பின்னால், அது கி.பி. - ஏசு பிறப்பதற்கு முன்னால், அது கி.மு.

வரலாற்றில் படித்திருப்போம் கி.மு. என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால்; கி.பி. என்றால், கிறிஸ்து பிறப்பதற்குப் பின்னால் என்று வைத்திருக்கிறோம்.

தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு.!

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு என்று வைத்துக் கொள்வதில் தவறில்லை.

தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு எப்படி இருந்தது என்றால், தாழ்த்தப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலை மக்கள் சாலை களில் நடக்க முடியாது; செருப்புப் போட்டுப் போக முடியாது; உணவுக் கூடங்களில் சாப்பிட முடியாது; கோவிலுக்குள் போக முடியாது; உணவு விடுதியில் சாப்பிட முடியாது; பேருந்துகளில் ஒன்றாகப் போக முடியாது. இன்றைக்கும் சில இடங்களில் போக முடிய வில்லை. குளத்தில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதுதான் தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால்.

தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால், ஆண்டான் - அடிமை; இருப்பவன் - இல்லாதவன்; ஏழை - பணக்காரன்; உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்கிற வர்க்க வேறுபாடுகளை களைந்தெறிவதற்காக தன் வாழ் இறுதி மூச்சுநாள் வரை போராடினார்; அவருடைய கடைசி காலகட்டத்தில் மூத்திரப் பையைக்கூட மேடைக்கு மேடை தூக்கிச் சென்று, ஒடுக்கப்பட்ட மக்கள், அடக்கப் பட்ட மக்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காகப் போராடினார் தந்தை பெரியார் அவர்கள்.

அத்தனை உரிமைகளையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், கோவிலுக்குள் செல்லலாம்; பேருந்துகளில் ஒன்றாகப் போகலாம்; ரயிலில் ஒன்றாகப் போகலாம்; குளத்தில் தண்ணீர் எடுக்கலாம்; பெண்கள் ரவிக்கை அணியலாம்; பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரலாம்; மாமனார், மாமியார் முன் பெண்கள் அமரலாம். இன்றைக்கு இத்தனை உரிமைகளையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அதனால்தான் சொன்னேன், தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் - தந்தை பெரியார் பிறப்பதற்குப் பின்னால் என்று.

இதை நான் எந்தப் புத்தகத்தையும் பார்த்துப் படிக்க வில்லை; நானே மனதில் நினைத்ததை சொன்னேன். என் மனதில் பெரியார் என்றால் யார்? என்று சிந்தித்தேன். அப்பொழுதுதான் இது உதயமானது என் மனதில்.

நான் இந்த மேடையில் இவ்வளவு கம்பீரமாக நிற்கி றேன் என்றால், பெரியார் பிறந்ததற்குப் பின்னால்தான் இந்த உரிமை எனக்குக் கிடைத்திருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்!

ஆகவே அப்படிப்பட்ட பெரியார் பிறந்த மண்ணில் இந்த மாநாடு நடைபெறுவது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெரியார் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார். கோவிலுக்குள் எந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளே செல்லக்கூடாது என்று சொன்னார்களோ, அதை ஒழிக்கவேண்டும் என் பதற்காக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தைக் கொண்டு வந்தார்.

1929 தந்தை பெரியாரின் தீர்மானமும் - 1989 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞரின் சட்டமும்!

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில், பெண்களுக்கு சமூகநீதி வேண்டும்; பெண்களுக்கும் சமத்துவம் வேண்டும்; பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார் தந்தை பெரியார் அவர்கள்.

1989 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என்கிற சட்டத்தை நிறை வேற்றினார்.

பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 

50 சதவிகித இட ஒதுக்கீடு

இன்றைக்கு இருக்கின்ற நம்முடைய முதலமைச்சர், தன்னுடைய தந்தையைவிட ஒருபடி மேலே சென்று, உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெண்களுக்கு வழங்கவேண்டும் என்கிற உத்தரவைப் போட்டிருக்கிறார்.

இதெல்லாம் வருவதற்கு யார் காரணம்?

தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால், அவரு டைய தியாகம், அவருடைய உழைப்பு, அவர் விரும் பியபடி இன்றைக்கு இந்நிலை வந்திருக்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது என்பதை நான் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைக்கு நடக்கின்ற மாநாட்டைப் பொறுத்த வரையில், இது தொழிலாளரணி என்கிற மாநாடு என்பதால், நம்முடைய அமைச்சர், தொழிலாளர் நலன் காக்கின்ற துறையில் இருக்கின்ற அமைச்சராக இருக்கின்ற கணேசன் கலந்துகொள்ளாமல் இருந்தால், அது சரியாக இருக்குமா? கட்டாயம் உரிய நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்கிற காரணத்தினால்தான் நான் கலந்துகொண்டிருக்கின்றேன்.

‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்!

இந்தத் தொழிலாளர் அணி மாநாட்டில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள், சோவியத் நாட்டிற்குச் சென்று, அங்கே மே தின பேரணியைக் கண்டு களித்து, நாட்டிற்குத் திரும்பியவுடன், ‘மகாகணம் பொருந்திய', ‘திரு', ‘திருமதி' என்பதையெல்லாம் விட்டுவிட்டு, ‘‘தோழர்'' என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், தொழிலாளர்கள் எப்படி வாழவேண்டும்? எப்படி இருக்கவேண்டும்? என்கிற விதைகளை இந்த மண்ணிலே தூவிச் சென்றிருக்கின்றார்.

‘‘தொழிலாளர் நலத் துறை’’ என்பதை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர்

அந்த அடிப்படையில்தான் தந்தை பெரியாருடைய லட்சியங்களையும், கொள்கைகளையும் தன்னுடைய மனதில் ஏந்தியிருக்கின்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், 1969 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனேயே, தொழில், தொழிலாளர் நலன், கூட்டுறவுத் துறை என்று இருந்த அந்தத் துறையை மாற்றி, தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக, ‘‘தொழிலாளர் நலத் துறை'' என்பதை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அதற்குப் பிறகு இந்தியாவிற்கெல்லாம் முன்னோடி யாக பல்வேறு அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியங்களை - அது உப்புத் தொழிலாளர் வாரியமாக இருந்தாலும் சரி, முடிதிருத்துநர் வாரியமாக இருந்தாலும் சரி, பனை மரம் ஏறுகின்ற தொழிலாளர் வாரியமாக இருந்தாலும் சரி, ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் நல வாரியமாக இருந்தாலும் சரி, வீட்டு வேலை செய்கின்ற வர்களின் நல வாரியமாக இருந்தாலும் சரி - பல்வேறு நல வாரியங்களை உருவாக்கி, அவர்களுக்கெல்லாம்  நலத்திட்டங்களை உருவாக்கித் தந்தவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை 

உடனடியாக நீக்குங்கள் என்றார் தளபதி

எல்லாவற்றையும்விட, நம்முடைய முதலமைச்சர், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், சமூகநீதி  ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் அவர்கள், ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்று, தொழிலாளர் துறை அமைச்சராக என்னை நியமித்தவுடன் என்னை அழைத்து, ‘‘கணேசன், தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டில் என்னென்ன பிரச்சினைகள் இருந்ததோ, அவற்றையெல்லாம் நீங்கள் நீக்கவேண்டும்; தேவைப்பட்டால் என்னுடைய கவனத் திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று சொன்ன அடிப்படையில், உடனடியாக அதனை ஆய்வு செய்தோம்; அப்படி பார்க்கும்பொழுது ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை இருந்தது 10 ஆண்டுகாலத்தில்.

ஒருவருக்கு விபத்து நடந்து 11 ஆண்டுகளாக பணம் கிடைக்கவில்லை. நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் கொடுத்தோம்.

24 மணிநேரத்தில் 50 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு...

ஆக, அந்த ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு, மூன்று மாதக் காலத்தில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து, முதலமைச்சரின் கவனத் திற்குக் கொண்டு சென்று, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஒரே நாளில் 50 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைச் சேர்த்தது ‘திராவிட மாடல்' அரசு. ஒரு நாளில் என்றால், முதலமைச்சர் எப்பொழுது கொடுத்தாரோ, அதிலிருந்து 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்குப் பணம் போய்ச் சேர்ந்தது.

அதற்குப் பிறகு, 2 மாதங்கள் கழித்து, மீதம் இருந்த 57 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருக்கரத்தால் அவர்களுக்கு சேரவேண்டிய தொகையை சேர்த்த அரசாங்கம்தான் நம்முடைய தளபதி அரசாங்கம் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக வாரியங்களில் இருந்த உறுப்பினர்கள் லட்சக்கணக்கானோர் ஒன்றும் நடை பெறவில்லை என்று சலித்து விட்டார்கள்.

ஒன்றரை ஆண்டு காலத்தில், 13 லட்சத்து 47 ஆயிரத்து 468 பேர் புதிதாக வாரியங்களில் உறுப்பினராக சேர்ந்தனர்!

ஆனால், நம்முடைய தளபதி அண்ணன் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதுமுதல் 30.4.2023 ஆம் தேதிவரை ஒன்றரை ஆண்டு காலத்தில், 13 லட்சத்து 47 ஆயிரத்து 468 பேர் புதிதாக வாரியங்களில் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள்.

ஏனென்றால், இந்த ஆட்சியில் நடக்கும்; கிடைக்கும்  என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்கள் இணைந்திருக்கின்றார்கள்.

 லட்சத்து 4 ஆயிரத்து 372 பேருக்கு 

நிலுவைத் தொகை!

11 லட்சத்து 4 ஆயிரத்து 372 பேருக்கு நிலுவைத் தொகையை வழங்கியிருக்கின்றோம்.

842 கோடியே 40 லட்சத்து 13 ஆயிரத்து 638 ரூபாயை இந்த இரண்டு ஆண்டுகாலத்தில், குடும்ப ஓய்வூதியம், தனி நபர் ஓய்வூதியம், விபத்து, மரணம், கல்வி இதுபோன்ற கொடுக்கப்படாமல் இருந்த நிலுவைத் தொகைகளைக் கொடுத்தோம். 5 ஆண்டுகள், 6 ஆண்டுகள், 7 ஆண்டுகளாக இருந்த நிலுவைத் தொகை களையெல்லாம் கொடுத்தோம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, கரூரில் நடைபெற்ற விபத்தொன்றில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். முதல மைச்சர் அவர்கள் உடனடியாக என்னை அழைத்து, அதுகுறித்து விசாரிக்கச் சொன்னார்.

உடனே கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டேன். அதுகுறித்து விசாரிக்கச் சொன்னேன்; இங்கே இருக்கின்ற அதிகாரி களை எல்லாம் அழைத்துப் பேசினேன்.

48 மணிநேரத்தில்...

விபத்தில் இரண்டு பேர் இறந்துவிட்டார்கள்; அவர் களின்  குடும்பத்திற்குப் பணம் கிடைப்பதற்கு எத்தனை நாள் ஆகும்? என்றேன்.

இயல்பாக குறைந்தபட்சம் 6 மாதத்திலிருந்து ஓராண்டு ஆகும். முயற்சி எடுத்தால், மூன்று மாதத்தில் வாங்கலாம் என்று சொன்னார்கள்.

ஆனால், இது ‘திராவிட மாடல்' அரசு, தளபதியினு டைய அரசு - அங்கே இருக்கின்ற மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்துப் பேசி, 48 மணிநேரத்தில் அந்தத் தொகையைக் கொடுக்கவேண்டும் என்று உத்தரவுப் போட்டேன்.

இறந்தவர்களை அடக்கம் செய்த 24 மணிநேரத்தில், இப்பொழுது இருக்கின்ற கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்களுடைய வீட்டிற்குச் சென்று அந்தத் தொகையை வழங்கினார்.

இதுதான் ‘திராவிட மாடல்' அரசு. 24 மணிநேரத்தில் அந்தத் தொகைப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

ஒரு மாத காலத்திற்குள்...

15 நாள்களுக்கு முன்புகூட ஓர் ஆய்வுக் கூட்டம் போட்டோம்; அக்கூட்டத்தில் சொன்னேன், ‘‘எந்த ஒரு தொழிலாளியும், கஷ்டப்படுகின்ற தொழிலாளி, உழைக் கின்ற தொழிலாளியினுடைய எந்த ஒரு நலத் திட்டமும், குறைந்தபட்சம் இந்த மாத இறுதிக்குள் எல்லாம் முடிவடைந்துவிட்டது என்கிற ரிப்போட்டைக் கொடுக்க வேண்டும்'' என்று அரசாங்கம் சொல்லியிருக்கிறது.

அந்த அளவிற்கு தளபதியினுடைய அரசாங்கம் விறு விறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக் கிறது.

கடந்தகால ஆட்சிக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்!

குறிப்பாக, கடந்தகால ஆட்சிக்கும், ‘திராவிட மாடல்' ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.

தொழிலாளியின் வீட்டு ஆண் மகனுக்கு 3 ஆயிரம் ரூபாய்; பெண் பிள்ளைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.

இப்பொழுது எவ்வளவு தெரியுமா?

பெண் பிள்ளைக்கு திருமணம் என்றால், ரூ.5 ஆயிரத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தியிருக்கின்றோம்.

மகப்பேறுக்கு 3 ஆயிரம் என்று இருந்ததை, இப்பொழுது 18 ஆயிரம் ரூ£யாக உயர்த்தியிருக்கின்றோம்.

தொழிலாளருடைய பிள்ளைகள் படிப்பதற்கான உதவித் தொகை பட்டப் படிப்பிற்கோ, பிளஸ் 1, பிளஸ் டூ-விற்கோதான் கொடுப்பார்கள். இப்பொழுது 6, 7, 8, 9 ஆம் வகுப்புப் படித்தாலும் ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லியிருக்கின்றோம்.

அதேபோல், 10, 11, 12 ஆம் வகுப்புப் படித்தால், ரூ.2,400 கொடுக்கச் சொல்லியிருக்கின்றோம்.

பட்டப் படிப்பு படித்தால், 4 ஆயிரம் ரூபாய், 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றோம்.

கட்டடத்தில் வேலை செய்யும் தொழிலாளி இறந்து விட்டால், அவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கின்றோம்.

இயற்கை மரணம் அடைந்தால் ஏற்கெனவே இருந்த ரூ.50 ஆயிரத்தை உயர்த்தி, ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கின்றோம்.

திடீரென்று விபத்தில் இறந்துவிட்டால், ஏற்கெனவே இருந்த ஒரு லட்சம் ரூபாயாக இருந்ததை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்திக் கொடுத்திருக்கின்றோம்.

எல்லாவற்றையும்விட இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் - கட்டுமானத் தொழில் பணிகளைச் செய்கின்ற தொழிலாளர்கள் - பெயிண்டிங், சித்தாள், கம்பி கட்டுகிறவர்கள், கொத்தனார் பணி செய்கின்றவர்கள் அந்தக் கட்டடத்தைக் கட்டியிருப் பார்கள்.

அந்த வழியே செல்லும்பொழுது, இந்தக் கட்டத்தை நான்தான் கட்டினேன். 13 ஆவது மாடிக்கு நான்தான்  கம்பி கட்டினேன்; 20 ஆவது மாடியில் நான்தான் ஜல்லியைக் கொண்டு போய் கொடுத்தேன்; கயிற்றைக் கட்டிக்கொண்டு இந்தக் கட்டடத்திற்கு நான்தான் பெயிண்ட் அடித்தேன் என்று சொல்வார்கள். 

தலைவர் என்னை அழைத்துப் பேசும்பொழுது சொன்னேன், ‘‘அய்யா, முதலாளிகள் சொல்வார்கள், இது என்னுடைய கல்யாண மண்டபம், இது என்னுடைய மால், இது என்னுடைய வீடு என்று சொல்வார்கள்; ஆனால், அதைக் கட்டிய கொத்தனாரும், சித்தாளும், பெயிண்டரும், கார்ப்பரேட்டரும் இவற்றைப் பார்த்து விட்டு, ஏங்கிச் செல்கிறார்கள் என்ற அப்பொழுது சொன்னேன், அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்னேன்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் வீடுகள்!

கருணை உள்ளோட்டத்தோடு மாண்புமிகு முதல மைச்சர் அவர்கள் சொன்னார், எந்தக் கட்டத்தை, எந்தத் திருமண மண்டபத்தைக் கட்டினார்களோ, அவர்கள் வீடில்லாமல் வீதியில் இருக்கக்கூடாது; ஒரு குடும்பத் திற்கு என்று 10 ஆயிரம் தொழிலாளிகளுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் வீடு கட்டச் சொல்லி, இலவசம் என்று அறிவித்தவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

‘பெல்’ தொழிலாளர் பிரச்சினைகளை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்செல்வேன்!

இப்படிப்பட்ட ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்து ‘திராவிட மாடல்' அரசை நடத்திக் கொண்டிருக்கின்றார். எனவே, எந்தத் தொழிலாளிக்கும், இங்கே உரையாற்றிய பொழுது நம்முடைய அய்யா சொன்னார், ‘பெல்' தொழிற்சாலையில் பிரச்சினைகள் இருப்பதாகச் சொன்னார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிச்சயமாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்ணியமிக்க மனிதர்கள் 

திராவிடர் கழகத் தோழர்கள்!

ஒரே ஒரு கருத்தைச் சொல்கிறேன் - திராவிடர் கழகத் தோழர்களைப் போன்று உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

ஏனென்றால், நீங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியையும் கேட்பதில்லை; சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கேட்பதில்லை, அமைச்சர் பதவியையும் கேட்பதில்லை; எந்தப் பதவியையும் கேட்பதில்லை. இங்கே அமர்ந்திருக்கின்ற நம்முடைய அண்ணன் சந்திரசேகரன் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்காக 5 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு போங்கள் என்று சொல்லிக் கொடுத்தால், அதைத் திருப்பிக் கொடுத்து விட்டுப் போகக்கூடியவர். அத்தகைய கண்ணியமிக்க மனிதர்கள்தான் இங்கே இருக்கின்றார்கள் என்று சொன் னால், அதுதான் திராவிடர் கழகத்தின் தொண்டர்கள். 

தந்தை பெரியாரின் மறு உருவம் 

நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்!

இந்த நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக, விளிம்பு நிலை மக்களுக்காக என்றென்றும்  குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய, குறிப்பாக தந்தை பெரியாரின் மறு உருவமாக இருக்கின்ற, பெரியா ராக நடமாடிக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களை வணங்கி, விடைபெறு கிறேன்!

நன்றி, வணக்கம்!!

- இவ்வாறு தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.

ஞாயிறு, 18 ஜூன், 2023

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

 

1

சென்னை, மே 17- தமிழ்நாட்டில் அரசு அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப் படுகின்ற அகவிலைப்படி 1.4.2023 முதல் 38 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங் களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வரு வாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதி களைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப் புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி, தற்போது 38 விழுக்காடாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 விழுக்காடாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.  இதனால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.  இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். 

மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர் வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அக விலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்.

திங்கள், 12 ஜூன், 2023

100 நாள் வேலை திட்டம் : முதலமைச்சர் நேரில் விசாரிப்பு


 25

திருச்சி, ஜூன் 10- திருச்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி னார். அப்போது, கூலி எவ்வளவு கிடைக்கிறது? எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்? என்று அந்த பெண்களுடன் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச் சியாக உரையாடினார்.

திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.6.2023) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, லால்குடி அருகே உள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டும் பணிகளை செய்துகொண்டிருந்த பெண்க ளிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையா டினார்.

அப்போது, முதலாவதாக அந்த பெண்களிடம் மு.க.ஸ்டாலின் ஊர் பெயரை கேட்டார். அதற்கு பெண்கள் தங்களுடைய ஊர் பெயர் ஆலங்குடி என்று கூறினார்கள். கூலி எப்படி கிடைக்கிறது? தொடர்ந்து, 100 நாள் வேலை திட்ட பெண்களிடம், மு.க.ஸ்டா லின் உரையாடினார்.

அந்த உரையாடல் வருமாறு:-

மு.க.ஸ்டாலின் கேள்வி:- கூலி, சம்பளம் எல்லாம் எப்படி கிடைக்கிறது?

பெண்கள் பதில்:- ரூ.285 கொடுக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்:- பணம் எப்படி கொடுக் கிறார்கள்? வங்கி மூலம் கொடுக்கிறார் களா?

பெண்கள்:- வங்கி மூலமாக வருகிறது.

மு.க.ஸ்டாலின்:- உங்களுடைய சூப்பர் வைசர் யார்? அவர் மூலமாக பணம் வருகிறதா?

பெண்கள்:- ஆமாம்... 

மு.க.ஸ்டாலின்:- எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்?

பெண்கள்:- தொடர்ந்து வேலை செய்கி றோம்.

மு.க.ஸ்டாலின்:- தொடர்ந்து என்றால் எத்தனை நாட்கள் என்று சொல் லுங்கள்?

பெண்கள்:- 100 நாட்கள் வேலை செய்கிறோம் சார்.

மு.க.ஸ்டாலின் (சிரித்தவாறு):- 100 நாட்கள் எப்படி வேலை செய்யமுடியும்!

 பெண்கள்:- உங்களை இதுவரை நேரில் பார்த்ததே இல்லை சார். இப்போது, உங்களை பார்த்ததில் ரொம்ப சந் தோசம். 

மு.க.ஸ்டாலின்:- ஆட்சி திருப்தியாக இருக்கிறதா?

பெண்கள்:- ரொம்ப சந்தோசமாக இருக்குது சார்.

மு.க.ஸ்டாலின்:- ஏதாவது குறை இருந் தால் சொல்லுங்கள்.

பெண்கள்:- குறை எதுவும் இல்லை. நினைத்ததை நிறைவேற்றிவிட்டீர்கள் சார். மிகவும் சந்தோசம். சொன்னதை எல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

மு.க.ஸ்டாலின்:- எத்தனை பேர் இங்கு வேலை செய்கிறீர்கள்?

பெண்கள்:- 75 பேர் வேலை செய்கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- இந்த வேலையை எத் தனை நாளாக செய்கிறீர்கள்?

பெண்கள்:- இன்று (நேற்று) முதல் செய் கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- இன்றைக்கு தான் ஆரம்பித்தீர்களா? ஏற்கெனவே எங்கு வேலை செய்தீர்கள்?

பெண்கள்:- பக்கத்துல இருக்கும் இடத் தில் வேலை பார்த்தோம்.

மு.க.ஸ்டாலின்:- சரிம்மா, சந்தோசம்., வரட் டுமா....

இவ்வாறு உரையாடல் நடந்தது. இதையடுத்து, பள்ளி சென்று திரும்பு வதற்கு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது கிராமங் களில் பேருந்து வசதி இல்லை, வீடு கட்டுவதற்கு இட வசதி தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை அந்த பெண்கள் உள்பட விவசாய தொழிலாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து விட்டு, நிறைவேற்றி தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.


தனியார் நிறுவனங்களில் பணியாற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

Viduthalai  June 12, 2023  அரசு, தமிழ்நாடு,

 13

சென்னை, ஜூன் 12 ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் 

‘நான் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (10.6.2023) நடைபெற்றது. இந்த முகாமில் மாநில அளவில் தேர்வு செய்யப் பட்ட 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் பின்னர் அவர் பேசியது:

 கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்குத் தகுதியான வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களுக்காக இதுவரை நடத்தப் பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் பொறியியல் கல்லூரிகளில் 64,943 பேர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 78,196 பேர் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த மாதம் இறுதிவரை இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும் என்றார் அவர்.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் செயின்ட் கோபின், மைக்ரோ சாப், மிஸ்டர் கூப்பர், டெக் மகேந்திரா, ஆதித்யா பிர்லா, பைஜீஸ், பிளிப்காட், ஹெச்டிஎப்சி, இந்தியா சிமென்ட்ஸ், பாக்ஸ் கான், முத்தூட் பைனான்ஸ், சுதர்லேன்ட், ஸ்டார்ஹெல்த் போன்ற முன்னணி நிறுவனங்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட 1,425 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். 

நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைச் செயலர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, ‘நான் முதல்வன்’ திட்ட முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் ஜெய பிரகாசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.


நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் தொடக்கம்


 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும்

2

திருவனந்தபுரம், மே 17- வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் என்பது கேரளத்தில் உள்ள மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் திலும் மகாத்மா அய்யங்காளி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்திலும் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு பலனளிக்கும்.

நாட்டிலேயே முதன்முறையாக இந்த தொழிலாளர் களுக்கு என நலநிதியம் உருவாக்கப்படுகிறது. ஓய்வூ தியம், திருமண உதவித்தொகை, படிப்பு உதவி உள் ளிட்டவை இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாது காப்பையும் நலனையும் இந்த நலநிதியம் உறுதி செய்கிறது. 

வேலை உறுதித் திட்டங்களில் அங்கம் வகிக்கும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நலநிதியத்தின் மூலம் பயனடை வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நல நிதியத்தின் தொடக்கவிழா 15.5.2023 அன்று பாலக்காடு கோட்டை மைதானத்தில் நடை பெற்றது. முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி  வைத்தார். 

உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தலைமை வகித்தார். அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு அம லாகும் 100 நாள் செயல்திட்டத்தில் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் அய்யங்காளி நகர்ப்புற  வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த வர்கள் நலநிதியில் உறுப்பினராக சேர்க்கப்படு வார்கள். பதிவு செய்த தொழிலாளி செலுத்தும் மாதாந்திர பங்கான ரூ.50க்கு  இணையான தொகை அரசால் நலநிதி யத்துக்கு வழங்கப்படும். இந்த தொகை ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர்களின் பிற நலப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

18 வயதுக்கு மேற்பட்டோரும் 55 வயதுக்கு உட்பட்டோரும் உறுப்பினராகலாம். விண்ணப் பித்த ஆண்டு அல்லது அதற்கு முந்தைய  இரண்டு ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் குறைந்தது 20 நாட்கள் வேலையில் ஈடுபட்டவர்கள் உறுப் பினராகலாம்.

நல நிதியின் பலன்கள்

60 வயது வரை தொடர்ந்து பங்களிப்பு செலுத்திய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் பங்களிப்பு செலுத்திய உறுப்பினரின் இறப்புக்கு குடும்ப  ஓய்வூதியம். நோய் அல்லது விபத்து காரண மாக ஒரு உறுப்பினர் இறந்தால் நிதி உதவி. 

வேலை செய்ய இயலாமை காரணமாக நிதியத்தில் உறுப்பினர் நீக்கம் செய்யப்பட்டால், உறுப்பினர் செலுத்திய பங்களிப்பு நிர்ண யிக்கப்பட்ட வட்டியுடன் திரும்ப கிடைக்கும். தீவிரமாக நோய்வாய்ப்பட்ட உறுப்பினர்களின் சிகிச்சைக்கான நிதி உதவி. பெண் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் மகள்களின் திருமணம் மற்றும் பெண் உறுப்பினர்களின் குழந்தை பிறப்புக்கு நிதி உதவி, உறுப்பினர்களின் குழந்தை களின் கல்வித் தேவைகளுக்கு நிதி உதவி கிடைக்கும். 

2005 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டம் நாட்டில் நிறுவப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக 200 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. பாலக்காடு மாவட்டம் அப்படிப் பட்ட மாவட்டங்களில் ஒன்று. இந்த பாலக்காட்டில்தான் நாட்டி லேயே முதல் வேலை உறுதித் தொழிலாளர் நல நிதி வாரியத்தின் திறப்பு விழா நடைபெறு கிறது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவும், திட்டத்தின் தரத்தை உறுதிப் படுத்தவும் முழுமையான சமூக தணிக்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் கேரளா. நகரங்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அய்யங் காளி வேலை உறுதியளிப்புத் திட்டத்தைத் தொடங்கி நாட்டிற்கு முன்னுதாரணமாக விளங்கும் இந்தியா விலேயே முதல் மாநிலம் கேரளா.

ஒன்றிய அரசின் நிதி குறைப்பு

 இத்திட்டத்திற்கு போதிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல், தொடர்ந்து குறைத்து வருகிறது. 2020-2021இல் இத்திட்டத்திற்கு 1,11,719 கோடி ஒதுக்கப்பட்டது. 2021-2-22இல் திட்டச் செலவு ரூ.1,06,489 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2022-2023இல் இது மேலும் குறைக்கப்பட்டு ரூ.1,01,038 கோடியாக இருந்தது. நடப் பாண்டு, ரூ.60,000 கோடியாக வெட்டி சுருக்கப்பட்டது. 

கேரள அரசின் தொடர் தலையீட்டின் ஒரு பகுதி யாக கேரளாவில் வேலை உறுதித் திட்டத்தை நாட் டிற்கு முன்மாதிரியாக செயல்படுத்த முடிந்துள்ளது.

இன்று மாநிலத்தில் 20.67 லட்சம் குடும்பங்களில் 24.95 லட்சம் தொழிலாளர்கள்  உள்ளனர். அவர்களில் 15.51 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 17.59 லட்சம் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். சராசரியாக 63 வேலை நாட்கள் கிடைத்துள்ளன. 4.49 லட்சம் (29  சதவிகிதம்) குடும்பங்களுக்கு 100 நாட்களும் முழுமையாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூக பழங்குடியின குடும்பங்களுக்கு நாடு முழுவதும் சராசரியாக 52 வேலை நாட்கள் வழங்கப்பட்ட நிலை யில் கேரளாவில் 86 வேலை நாட்கள் வழங்கப்பட்டன. 

மேலும், பழங்குடி யின குடும்பங்களுக்கு 100 வேலை நாட்கள் தவிர, பழங்குடியினர் மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி 100 வேலை நாட்கள் முதல் 200 வேலை நாட்கள் வரை சேர்த்து நாட்டிற்கு முன் மாதிரியாக பழங்குடியினர் பிளஸ் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. 

இதனுடன், கேரளாவில் நகர்ப்புறங் களுக்கு அய்யங்காளி நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ்  3,18,463 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 41,11,753 பணி ஆணைகள் உரு வாக்கப்பட்டன. மாநிலத்தில் 100 வேலை நாட்களை நிறைவு செய்யும் அனைத்து குடும்பங்களுக்கும் பண் டிகை கால உதவித்தொகையாக ரூ.1000 தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாநிலத்தில் இத்திட்டத்தில் பணி புரியும் 90 சத விகிதம் பேர் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள். 100 சதவீதம் கால்நடை மேய்ப்பவர்கள் பெண்கள். இந்த பெரும் பகுதி தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசு வேலை உறுதித் தொழிலாளர் நல நிதிச் சட் டத்தை நிறைவேற்றியுள்ளது.  அதன் நிர்வாகத்திற்காக நலநிதி வாரியமும் நடைமுறைக்கு வருகிறது.

2025-க்குள் வறுமை இல்லா கேரளம்: பினராயி விஜயன்

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், 2025-ஆம் ஆண்டுக்குள் கேரளா ஏழைகள் இல்லாத மாநிலமாக மாறும் என்று கூறினார். அதற்கான முயற்சிகள் நிறைவடைந்துள்ளன. 64,000 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அந்த இலக்கு நவம்பர் 2025க்குள் எட்டப்படும். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 600 வாக்குறுதிகளில் 580 வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். ஒன்றிய அரசு சில விசயங்களுக்கு பெயரளவுக்கான தொகையை வழங் குகிறது. ஒன்றிய அரசு கேரளத்துக்கு வழங்க வேண்டிய தொகையில் ரூ.300 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. கேரளாவில் கடந்த 7 ஆண்டுகளில் 3.9 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் முதலமைச்சர் பினராயி விஜயன்.


ஞாயிறு, 11 ஜூன், 2023

மே தினம் என்றால் என்ன? – தந்தை பெரியார்

 

மே தினம் என்றால் என்ன? – தந்தை பெரியார்

2023 கட்டுரைகள் பெரியார் மே 1-15,2023

தோழர்களே!

மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை.

ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.

இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொருத்ததாகும்.

இங்கிலாந்து, பிரஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அநேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.

மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி
யென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல், பிறவி பேதத்தையே மாற்ற, கிளர்ச்சியும் புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி – முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட, மேல் ஜாதி – கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும்.

ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டுவிட்டன.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்பவரின் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.

அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.
இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத. சாஸ்திர பூர்வமாகவே உண்டு.

இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் — அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களேதான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளி-களாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளி
களாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி – முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளி-களாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடு-கின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.

ஆகவே, ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி- தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க இல்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்துப் பேசிவிடுவதனாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விஷயமாய்ப் பேசி விடுவதனாலேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கு பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகிறேன்.
இந்த முதலாளி_ தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர்- கருப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி- முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும்.

ஆகையால், இதில் வெள்ளையர் – கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி- முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி – முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.

இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் முதலாளி – தொழிலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி என வகுக்கப்பட்டிருப்பது ஓரளவு மாறி வருகின்றது.

இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அநேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப்பட்டு இருக்கிறது – செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய, மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய, மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்குப் பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே, நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்குச் சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

(காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில்
தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை)

– “குடிஅரசு’’ சொற்பொழிவு – 12.05.1935