
ஈரோடு, அக்.7 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் (100 நாள் வேலை) பணியாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கிராமப்புற ஏழை விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களின் தற்காலிக நிவாரணமாகவும் அவர்களின் முக்கிய வேலை வாய்ப்பாகவும் இருப்பது 100 நாள் வேலை திட்டம்தான். இந்தத் திட்டத்தின் மூலம் ஓராண்டில் ஒரு நபருக்கு 100 நாள்கள் மட்டுமே வேலை அளிக்கப்படுகிறது.
இந்த வேலையில் பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ. 148. அதாவது, 1.20 கன மீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ. 148 கிடைக்கும். அதன்படி ஏரி, குளம் தூர் வாருதல், நீர் வழித்தடங்களை புனரமைப்பு செய்தல், புதிய பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வன வளத்தைப் பெருக்கும் வகையில் மரக்கன்று நடுதல் ஆகிய வேலைகளைச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவது மட்டுமின்றி இயற்கை வளமும் நீர் ஆதாரமும் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதில் எதுவும் நடந்தபாடில்லை.
மேலும், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 50 நாள்கள் வேலையைச் சேர்த்து 150 நாள்கள் வேலை வழங்க மத்திய அரசு அனுமதியளித்தது. கிராமப்புறங் களில், மாணவர்கள் காலையிலேயே பள்ளிக்குச் செல்வதுபோல் 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள் அணிவகுத்துச் செல் வதைக் காண முடியும். இவர்கள் வேலை செய்வதற்கான ஊதியத்தை மூன்று, நான்கு மாதங்களாக தரவில்லை. ஒரு சிலருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலான ஊதியத் தொகை இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மலைவாழ் மக்கள் நல்வாழ்வு சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் 75 சதவீதம் அள வுக்கு விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலையின்றி தவித்த பெண்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை நாடியுள்ளனர். மத்திய அரசு 100 நாள் வேலையை 150 நாள் வேலையாக மாற்றியமைத்தது. ஒவ்வொரு நபருக்கும் ரூ.120 முதல் ரூ. 150 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்களுடைய கைக்கு வேலை செய்ததற்கான ஊதியம் சென்று சேரவில்லை. விவசாயம் இன்றி வயிற்றுப் பிழைப்புக்காக அனைவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வேலை பார்த்து வரும் நிலையில், அர சாங்கம் இந்த குறைந்த ஊதியத்தைக் கூட 3 மாதங்களுக்குமேல் தராமல் இருப்பது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.
- விடுதலை நாளேடு,7.10.19